• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

parama ekadasi 13=10=2020.

kgopalan

Active member
parama ekadasi.
பரம ஏகாதசி 13.10.20
ஸ்ரீ யுதிஷ்டிர மகாராஜா இவ்வாறு வினவினார்.

ஓ மேன்மையான இறைவனே, புருஷோத்தம எனப்படும் லீப் வருட மாதத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி ஏன் பரம ஏகாதசி என அழைக்கப்படுகின்றது? அதன் சிறப்பு என்ன? அதனை எவ்விதமாக சிறப்புறஅனுஷ்டிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை அடியேனுக்கு உரைக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அதற்கு விளக்கமளிக்கிறார். ஓ யுதிஷ்டிரனே, இந்தப் பரம ஏகாதசி மிகவும் சிறப்பானது. அதனை முறையாக அனுஷ்டிப்போருக்கு சிறந்த புவி வாழ்வும் இறுதியில் பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து முக்தி நிலையையும் அளிக்க வல்லது. கார்த்திகை மாதத்தின் சுக்ல பக்ஷ ஏகாதசியை எவ்விதம் அனுஷ்டிக்கிறார்களோ அவ்விதமேதான் செய்ய வேண்டும்.

இந்த ஏகாதசியன்று உயிரினங்களிலேயே உயர்ந்த நரோத்தம் என அழைக்கப்படுகிற என்னை மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் ஆராதிக்க வேண்டும்.
இது விஷயமாக காம்பீல்ய நகரத்திலே ஒரு சிறந்த முனிச்ரேஷடரிடமிருந்து நான் தெரிந்து கொண்ட ஒரு அற்புதமான சரித்திரத்தைக் கேட்பாயாக.

சிறந்த பதிவிரதையான பவித்ரா என்ற மனைவியுடன் காம்பீல்ய நகரிலே சுமேதா என்ற தவசீலனான ஒரு பிராம்மணன் வசித்து வந்தான். கடந்த பிறவிகளின் பாப கர்மங்களினாலே அவன் மிகவும் வறியவனாக வாழ வேண்டி வந்தது. பலரிடம் யாசித்தும் அவனால் தேவையான அளவு உணவுப் பொருள்களைப் பெற முடியவில்லை.

அவர்களுக்குத் தேவையான உணவோ உடைகளோ நல்ல இருப்பிடமோ இல்லை. இருந்த போதிலும் அந்த ஏழ்மை நிலையிலும் அவனுடைய அற்புதமான குணவதியான இளம் மனைவி கண்ணும் கருத்துமாக சுமேதாவைக் கவனித்துத் தொண்டு புரிந்திருந்தாள். விருந்தினர் வந்தால் அவர்களுக்குத் தன்னுடைய உணவைக் கொடுத்து மகிழ்வாள் அவள்.

அப்போதும் அவள் தாமரை மலர் முகம் வாட்டமடையாது. ஆனால் இதனால் அவள் மேனி நலிந்து போனாலும் கணவனிடத்திலே கொண்ட அன்பு சிறிதும் குறையாது இருந்தது.
இவற்றை கண்டு தன் துரதிர்ஷடத்தை நொந்து கொண்ட சுமேதா மனைவியிடம் தான் தனவந்தர்களிடம் எவ்வளவோ கெஞ்சி யாசித்தும் தேவையான பொருட்களைப் பெற முடியவில்லையே என்ன செய்வேன் என்று புலம்பினான்.

நம்முடைய துன்பங்கள் தீர என்னதான் வழி? எப்படிப் போக்கிக் கொள்வது? தேவையான பொருளின்றி நம்மால் ஒரு சரியான வாழ்க்கையை நடத்த முடியாமலே உள்ளதே. வெளிதேசங்களுக்காவது சென்று பொருளீட்டி வரமுடியுமா என்று பார்க்கிறேன். அதற்கு என்னை அனுமதிப்பாயாக என்பதாக மனைவியிடம் கூறினான் சுமேதா.

அவ்விதமான ஒரு முயற்சியால் விதிப்படி எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருளினை நான் அடைந்திட முடியும் என்பதாகத் தோன்றுகிறது. முயற்சி செய்யாமல் ஒருவன் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாதல்லவா?

ஊக்கமுடைய முயற்சி மங்களமானது என்று சான்றோர் கூறுவர். உற்சாகமாக முயற்சிகள் செய்பவன் நிச்சயமாக வெற்றியடைவான். என் விதி இப்படித்தான் என்று சும்மா இருப்பவன் சோம்பேறி எனப்படுவான்.

கணவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட மனைவி பவித்ரா கண்களில் கண்ணீருடன் கூப்பிய கரங்களுடன் அன்பாக மரியாதையுடன் கணவனிடம் பின் வருமாறு சொன்னாள். அன்பரே, உங்களை விட உயர்ந்தவரோ சிறந்த கல்விமானோ இருப்பதாகத் தெரியவில்லை.

மிகுந்த துன்பங்களில் இருந்த போதும் மற்றவர் நலனைக் கருத்தில் கொண்டிருக்கும் உத்தமர்கள்கூட தாங்கள் கூறியது போலவே கூறியிருப்பர். இருந்த போதும் சாத்திரங்கள் ஒருவனது செல்வ வளம் அவன் கடந்த பிறவிகளில் செய்த தானதர்மங்களைப் பொறுத்தே அமைகிறது என்பதாகக் கூறுகின்றன. இவ்வாறு கடந்த பிறவிகளின் தான தர்ம பூர்வ புண்யபலன் அற்றோர் மேருமலை அளவிற்கான தங்க மலையின் மீது இருந்தாலும் அவன் ஏழையாகவே வாழ்வான் என்றும் பகர்கின்றன.

பாரமார்த்திக ஞானம், ஆன்மிகக் கல்வி, தேவையான செல்வம், சிறந்த குணம் பொருந்திய குடும்ப நபர்கள் இவ்வாறான மங்களங்கள் அனைத்தையும் ஒருவன் கடந்த பிறவிகளில் செய்த அளவிறந்த தான தர்ம பலனாலேயே அடைகிறான். ஒருவன் செய்திடும் நன்மைகள் அனைத்தும் பன்மடங்காக அவனிடம் திரும்புகிறது. விதாதா எனும் அதிர்ஷ்ட தேவதை வகுத்தபடியே அனைத்தும் நடைபெறுகிறது.

ஒருவனுடை கல்வியோ, திறமையோ அல்லது ஊக்கம் மட்டுமே ஒருவனுக்கு வாழ்வில் வெற்றியைத் தேடித் தருவதில்லை. வித்யாதானம், பூதானம், திரவிய தானம் போன்றவை ஒருவனுடைய எதிர்காலத்தில் பன்மடங்காய் அவனை வந்தடைகின்றன. இருதய சுத்தமாக அன்பாக

அளிக்கப்படும் தான தர்மங்கள் பன்மடங்காய் மீண்டு வரும். நம்மைப் படைத்த அந்த மகாசக்தி எவ்வாறு நம்மை ஆசிர்வதிக்கிறாரோ அத்தனையும் ஒருவனுடைய வாழ்வில் உறுதியாய் கிடைத்திடும். கடந்த பிறவிகளிலே தர்மமாய் பகிராத ஒன்றை ஒருவரும் அடைந்திடுவதே இல்லை.
ஓ பிராமணோத்தமர்களில் சிறந்தவரே, இதனால் நீரோ நானோ சென்ற பிறவிகளில் சத்பாத்ரங்களுக்கு தான தர்மங்கள் ஒன்றும் அளித்திடவில்லை என்று தெரிய வருகிறது.

அதனால்தான் ஏழ்மையில் வாடி நிற்கிறோம். எனது அன்புக்குரிய கணவராகிய தாங்கள் என்னை விட்டுப் பொருள் தேடுவதற்காக நீங்கலாகாது. தங்களை விட்டு நான் எவ்வாறு ஒரு கணம்கூட வாழ்ந்திடுவேன்?
சமூகத்தில் கணவரைப் பிரிந்த ஒரு பெண்ணை தாய் தந்தையரோ, மாமன் மாமியோ, மற்ற குடும்ப உறுப்பினரோ கூட வரவேற்பதில்லை. நீ துரதிர்ஷ்டசாலி கணவனைப் பிரிந்து விட்டாய் என்று தூஷணை செய்வார்கள்.
பதிவ்ரதையானவள் கணவனை சேவைகளால் மகிழ்வித்தலே உன்னதமான இன்பமாகவும் கடமையாகவும் வாழ்வின் ஒழுக்கமாகவும் கருதுவாள். வரும் காலங்களில் நமக்கு என்ன விதித்து உள்ளதோ அதனை சேர்ந்தே இன்பமாய் அனுபவிப்போம். என்றெல்லாம் பலவாறும் கூறி சமாதானப்படுத்தினாள் பவித்ரா.

மனைவியின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டு சரி, சொந்தக் கிராமத்திலேயே இருந்து விடலாம் எனத் தீர்மானித்தார் சுமேதா.

இவ்வாறு நாட்கள் கடக்கையில் ஒரு நாள் மகரிஷி கௌண்டின்யர் அவர்களது கிராமத்திற்கு இல்லத்திற்கு வருகை புரிந்தார். கணவன் மனைவி இருவரும் அவரை தரிசித்துப் பணிந்தனர்.

மிகுந்த மரியாதையுடன் சிரம் தாழ்த்தி அவரை வணங்கி உங்களை இங்கு வரவேற்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதாய் கூறினர். அவருக்கு நல்லதொரு ஆசனத்தை அளித்து மகரிஷிகளில் உன்னதமான தங்கள் விஜயத்தால் எங்கள் வாழ்க்கை புனிதமடைந்தது.

நாங்கள் மிகவும் கடன் பட்டிருக்கின்றோம் என்றெல்லாம் பலவாறும் உபசார மொழிகளைக் கூறினர். பின்னர் அவர்களது சக்திக்கேற்ப உணவு தயாரித்து அன்புடன் கௌண்டின்ய மகரிஷிக்குப் போஜனம் செய்வித்தனர்.

பின்னர் சுமேதாவின் மனைவியான பவித்ரா மகரிஷியிடம் எங்கள் ஏழ்மை நிலை எதனை மேற்கொண்டால் அகலும்? கடந்த பிறவிகளில் தர்ம கார்யங்களில் ஈடுபட்டு புண்ணியம் பெற இயலாதவர்களும் இப்போது சிறந்த குடும்பம், வசதி, கல்வி போன்றவற்றை பெற்றிட யாது செய்திட வேண்டும் எனக் கேட்டார். என் கணவன் என்னை விட்டுவிட்டு வேறு தேசம் சென்று யாசித்து வருவதாகக் கூறிக் கொண்டுள்ளார்.

ஆனால் நான் அவரிடம் இங்கேயே இருக்குமாறு வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் முற்பிறவிகளில் போதுமான அளவிற்குத் தான தர்மங்கள் செய்யாத காரணத்தால் இப்போது ஏழ்மை நிலையில் உள்ளோம் என்று பலவாறும் நான் எடுத்துரைக்க அதனால் அவர் இங்கேயே தங்கி உள்ளார். தகுந்த நேரத்தில் தாங்கள் இப்போது எழுந்தருளியிருக்கின்றீர்கள். இனி எங்கள் ஏழ்மை நிலை முடிவிற்கு வரும் என்ற நிச்சயமான ஒரு நம்பிக்கை எங்களுக்குள் உதித்துள்ளது என்றும் கூறினார்.


பிராம்மணோத்தமரே, நாங்கள் விரதங்கள் கடைபிடிக்க வேண்டுமா, தீர்த்த யாத்திரை புரிய வேண்டுமா, வேறு ஏதேனும் கிரியைகள் புரிய வேண்டுமா, எங்கள் ஏழ்மை நிலை அகல நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு எடுத்துரைத்து வழிகாட்டி அருள வேண்டும் என்பதாகவும் உருகி வேண்டினார்.

அந்தப் பொறுமை மிகுந்த பெண்மணி பணிவாக வேண்டியதை மௌனமாகச் செவிமடுத்த கௌண்டின்ய மகரிஷி ஒரு கணம் கண்களை மூடி தியானித்து பின்னர் கூறினார் மேன்மையான அந்த இறைவன் ஸ்ரீஹரிக்கு உகந்த ஒரு தினம் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருந்து அவனை ஆராதித்தால் அனைத்துப் பாபங்களும் தொலைந்து ஏழ்மையால் ஏற்பட்ட எல்லாத் துன்பங்களும் அகன்றுவிடும் என்று பதில் அளித்தார்.

லீப் வருட மாதமாகிய புருஷோத்தம மாதத்தில் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி விரத உபவாசம் அனைத்து வளங்களையும் நல்குவதோடு இறுதியில் முக்தியையும் பெற்றுத் தரும். அன்றைய மாலைப் பொழுதில் அவனை ஆராதித்து பஜனைப் பாடல்களைப் பாடுவதோடு ஆடவும் வேண்டும். இரவு பூராவும் அவன் புகழைப் பாடி ஆனந்தமாக ஆட வேண்டும்.

இத்தகைய மகிமை பொருந்திய இந்த ஏகாதசி விரதம் ஒரு சமயம் குபேரனால் அனுஷ்டிக்கப்பட்டது. மகாராஜா ஹரிச்சந்திரன் இதனை அனுஷ்டித்து இழந்த மனைவி மகன் நாடு அனைத்தையும் திரும்பப் பெற்றார். அதற்குப் பின்னர் அவர் வாழ்வில் துன்பம் ஏதுமே நிகழவில்லை.

எனவே அகன்ற கண்களை உடைய மாதரசியே நீங்களும் இத்தகைய பரம ஏகாதசி விரதத்தை இரவு முழுதும் கண்விழித்து ஸ்ரீஹரியை ஆராதித்து அவன் புகழைப் பாடி ஆடித் தகுந்த முறையில் மேற்கொண்டீர்களானால் உங்கள் துன்பங்கள் அனைத்துமே விலகி விடும்.

பாண்டுவின் புத்திரனாகிய ஓ யுதிஷ்டிரனே, இவ்வாறாக கௌண்டின்ய மகரிஷி அன்புடனும் பெரும் கருணையுடனும் பரம ஏகாதசி விரதத்தின் மகிமையை பவித்ரா என்ற அந்தப் பெண்மணிக்கு எடுத்துரைத்தார். மேலும் மகரிஷி சுமேதாவிடம் கூறினார். மறுநாள் துவாதசி முதல் பாஞ்சராத்ரி விரதத்தையும் முறைப்படி மேற்கொள்ள வேண்டும்.

நீயும் மனைவியும் இருவரின் பெற்றோரும் தினமும் அதிகாலையில் ஸ்னானம் செய்து ஐந்து நாட்கள் வரை உங்கள் சக்திக்கு ஏற்ப விரதம் இருந்திட வேண்டும். இதனால் நீங்கள் புனிதமடைந்து ஸ்ரீஹரியின் வாசஸ்தலத்தை அடைவீர்கள்.

இந்த ஐந்து நாட்களில் ஒரு பகுதியை மட்டும் கடைபிடிப்பவன் சொர்க்கத்தைப் பெறுவான். சத்பிராம்மணர்களுக்குத் தகுந்த விதத்தில் போஜனம் செய்வித்தவன் அனைத்துத் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், பூதவகைகளுக்கும் அன்னமிட்ட புண்ணியத்தை அடைகிறான்.
கற்றறிந்த சான்றோருக்கு எள் கலயத்தைத் தானமளித்தவன் அதில் எத்தனை எள் இருக்கிறதோ அத்தனை வருடங்கள் சொர்க்க போகத்தை அனுபவிப்பான்.
கலயம் நிறைய பொன் போன்ற நெய்யை தானமளிப்பவன் பூலோகத்தின் சகல சுகங்களையும் அனுபவித்துப் பின்னர் சூர்ய லோகத்தை அடைகின்றான்.

இந்த ஐந்து தினங்களிலும் பிரம்மசரியம் கைக்கொண்டவன் சொர்க்க இன்பத்தைப்பெற்று இந்திர லோகத்தில் அப்ஸரஸ்களுடன் சுகித்திருப்பான்.

ஓ சுமேதா மற்றும் பவித்ரா, நீங்கள் இருவரும் இகலோக சௌபாக்யங்களைக் குறைவின்றி அடைய இந்த பாஞ்சராத்ரி விரதத்தையும் அனுஷ்டித்துப் பலனடைவீர்களாக. அதன் பின்னர தேவலோக வாசமும் உங்களுக்குக் கிட்டும்.

இத்தகைய அற்புதமான அறவுரையைக் கேட்ட அந்தப் பிராம்மணத் தம்பதிகள் உரிய விதத்தில் பரம ஏகாதசியையும் பாஞ்சராத்ரி விரதத்தையும் மேற்கொண்டனர்.

அதன்பின்னர் சீக்ரத்திலேயே அரண்மனையிலிருந்து அழகான இளவரசன் அவர்களை நாடி வந்தான். பிரம்மாவின் உத்தரவின் பேரில் அவர்களுக்குத் தங்குமிடமாக அழகான தோர் மாளிகையைப் பரிசாக அளித்தான். அவர்களுடைய மேன்மையான விரதத்தைப் பாராட்டி அவர்களுடைய வாழ்க்கைக்காக ஒரு கிராமத்தையே அவர்களுக்குக் கொடுத்து தனது அரண்மனைக்குத் திரும்பினான். இவ்வாறாக சுமேதாவும் பவித்ராவும் இந்த உலகில் எல்லா சுகங்களையும் அனுபவித்து இறுதியில் வைகுண்ட வாசம் பெற்றனர்.

இவர்களைப் போன்றே இந்த பரம ஏகாதசி விரதத்தையும் பின்னர் பாஞ்சராத்ரி விரதத்தையும் சிரத்தையுடன் மேற்கொள்வோர் இந்த சுமேதா பவித்ரா தம்பதிகளைப் போன்றே இகலோக சௌபாக்யங்களைக் குறைவின்றிப் பெறுவதோடு இறுதியில் ஸ்ரீஹரியின் இருப்பிடமான வைகுண்ட வாசத்தையும் பெற்று இன்புறுவர்.

ஓ யுதிஷ்டிரா இந்த பரம ஏகாதசி உபவாச மகிமையைக் கணக்கிடவே முடியாது. கங்கையில், புஷ்கர் ஏரியில் தீர்த்தமாடுவதற்கு ஒப்பானது. பசுக்களை தானம் கொடுப்பதற்கும் வைதிக சனாதன தர்ம அனுஷ்டானங்களுக்கும் ஒப்பானது. மற்ற எல்லா விரதங்களையும் மேற்கொண்டால் பெறும் பலனை அளித்திட வல்லது. கயாவில் முன்னோர்களுக்காகச் செய்யப்படும் பலன்களையும் கொடுக்க வல்லது.

சமூக அமைப்பில் எவ்வாறு அனைத்து வர்ணங்களிலும் பிராம்மணன் உயர்ந்தவரோ, எப்படி அனைத்து விலங்கினங்களுக்குள் பசு உயர்ந்ததோ, தேவர்களுக்குள் எப்படி இந்திரன் உயர்ந்தவரோ அதைப்போன்று அனைத்து மாதங்களுக்குள் இந்த லீப் மாதம் போன்ற புருஷோத்தம மாதம் உயர்வுள்ளது. இந்த மாதத்தில் ஐந்து இரவுகள் என்று பொருள்படும் பாஞ்சராத்ரி விரத அனுஷ்டானம் பரம ஏகாதசியுடன் சேர்த்து மேற்கொள்ளும்போது ஒருவனது அனைத்து மகா பாபங்களையும் போக்கிட வல்லது. ஐந்து இரவுகளும் விரதமிருக்க முடியாமல் போனாலும் முடிந்த வரை இந்த மாதத்தில் மேற்கொள்வது சிறப்பு

மனிதப் பிறவியை அடைந்த ஒருவன் சரிவர ஸ்னானாதிகள் செய்து ஸ்ரீஹரிக்கு மிகவும் பிரியமான இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்து கொண்ட ஒருவனுக்கு ஒப்பாகி துயரங்களை அனுபவிக்க நேரிடும். இந்த அரிய மானிடப் பிறவியில் ஒருவன் இத்தகைய விரதங்களை ஏற்று சுத்தப் படுத்திக்கொண்டு புண்ணிய பலத்தை அதிகரித்துக்கொண்டு இந்த ஜட உலகின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் இந்த பரம ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு பயனடைய வேண்டும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் உரைக்கிறார். ஓ பாபங்களற்ற யுதிஷ்டிரனே. நீ வேண்டியபடி இந்த பரம ஏகாதசி மகிமையை உனக்கு வெளிப்படுத்தினேன். நீ இதனை முறையாக மேற்கொண்டு பலன் அடைவாயாக.

இந்த இரு அதிகப்படி மாதங்களின் ஏகாதசிகளை எவன் ஒருவன் சரியாக ஸ்னானங்கள் புரிந்து மேற்கொள்கிறானோ அவன் சொர்க்கங்களில் இன்புற்று முடிவில் வைகுண்ட ப்ராப்தத்தையும் பெறுவான். அப்படி அவன் செல்லும்போது அவனை அனைவரும் புகழ்வர். தேவர்களால் தொழப்படுவான்.

ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்ட இந்த பரம ஏகாதசி மகிமைகள் இவ்வாறு முடிவடைகின்றன. சுபம்.

இந்த உபவாசத்தை அனுஷ்டிக்க, முடிக்க உண்டான விதிகள்.
ஆன்ம லாபத்திலும் மேலும் உயர்விலும் நாட்டமுள்ள ஒருவன் இந்த ஏகாதசியின் போது தானியங்களை உண்ணக் கூடாது. இந்த உலகிலே ஒவ்வொரு பாப கர்மங்களின் எச்சமானது இந்தத் தானியங்களின் உள்ளே நிலை கொண்டுள்ளது. ஒவ்வொரு கவளம் தானிய உணவை உண்ணும்போதும் பல லட்சக் கணக்கான பிராமணர்களை வதைத்துக் கொன்ற பாபம் சேர்கிறது. ஏகாதசி அன்றாவது அதனை உண்பதை நிறுத்த வேண்டும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோர் அனைத்துப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனர். ஒருபோதும் அவர்களுக்கு நரகவாசம் இல்லை. மாயையினால் இதனைப் பற்றி அக்கறையில்லாமல் இருப்போர் பாபிகளாகவே வலம் வருவர். எதிர்பாராமல் ஒருவன் இதனை அனுஷ்டிக்க நேர்ந்தால் கூட அவனுடைய பாபங்கள் நசித்து அவன் வைகுந்தத்தை அடைகிறான்.

ஏகாதசி விதிகள்

கலப்படமாக இன்றி இந்த ஏகாதசி விரதம் மிகவும் தூய்மையான ஒன்றாக இருக்கவேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
விரதம். என்ன செய்திட வேண்டும்?
தானிய வகைகள் பருப்பு வகைகள் ஏற்கக் கூடாது. கடுகு கூடாது. பெருங்காயம் கூடாது. எள் கூடாது (ஸடில ஏகாதசியில் மட்டும் தானம் செய்யலாம். ஏற்கலாம்)

தானியங்களுடன் சேர்ந்த உணவு வகைகள் கூடாது. உணவை தானியம் தொட்ட கையால் கூட தொடக் கூடாது. அவ்வாறானால் எதனை உண்ணலாம்?

பழங்கள், கிழங்குகள், கொட்டைகள், பால். ஆனாலும் முழு உபவாசமே சிறந்தது. தண்ணீர் அருந்தலாம். நிர்ஜல உபவாசம் என்று தீர்மானித்துவிட்டால் அதனையும் அருந்தக் கூடாது.
மிளகு, மலை உப்பு, சீரகம் தவிர இதர மசாலா பொருட்கள் கூடாது. தக்காளி, காலிப்ளவர், கத்தரிக்காய், கீரைகள் போன்ற கறிகாய்களையும் தவிர்க்க வேண்டும்.

மறுநாள் துவாதசியில் (ஏகாதசி விரத முடிவு)
(சரியான விதத்தில் ஏகாதசி விரதம் முடிக்கப்பட வேண்டும் என்பது இன்றியமையாதது).
துவாதசி அன்று சூர்யோதயத்திற்குப் பின்னர் துவாதசி திதி நேரத்தில் கால் பங்கு முடிவடைந்த பிறகு ஆனால் துவாதசி திதி கடப்பதற்குள் விரதத்தை முடித்திட வேண்டும்.

காலை ஸ்னானம் முடித்த பின்னர் உபவாசத்தை இறைவனிடம் இவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்.
ஓ கேசவா, இருளில் வீழ்ந்துபட்ட ஒரு ஜீவனால் மேற்கொள்ளப்பட்ட இந்த உபவாசத்தை அங்கீகரித்து ஏற்றிட வேண்டும். என் ஐயனே உன்னுடைய அறிவின் சுடரை, கடாட்சத்தை என்மீது செலுத்துவாயாக.


மகாதுவாதசி:
ஏகாதசி திதியும் துவாதசி திதியும் சூர்யோதயத்தை முன்னிட்டு அமைந்திடும் விதங்களைப் பொறுத்து (இது ஆறு விதங்களாக அமையக்கூடும்) இந்த ஏகாதசி விரதம் துவாதசியிலும், துவாதசி பாரணை மறுநாளிலும் அமையும். இந்த மாதிரியான த்ரயோதசி நாடகள் வித்யாஸப்படுத்தி நாம் தெரிந்து கொள்வதற்காக மகாதுவாதசி எனப்படும். அதன்படி விரத முடிவினை மேற்கொண்டிட வேண்டும்.
ஹரி ஓம் தத் ஸத்
 

Latest ads

Back
Top