• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Origin Story of Kal Garudan

கல் கருடன் உருவான கதை :- (மிகவும் அற்ப்புதமான பதிவு)

' செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன் ’ என்றும், ‘ காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழனின் அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது.

கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் செங்கட்சோழன் .

நெடுநெடு’வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப் பட்டன.

புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடைக்கப்பட்ட சில பாறைகள், யானைகள், குதிரைகள் பறவைகளின் கற் சிற்பங்கள் மட்டுமின்றி, அழகிய பெண்களின் சிற்பங்களும், ஓரிரு மன்னர்களின் சிற்பங்களும் கூடத் தென்பட்டன.

அந்தத் தமிழகத்து மன்னர்களின் சிற்பவரிசையில் தனது சிற்பமும் கூட நிற்பதைக் கவனித்தவன், முகத்தில் முறுவல் ஒன்று நெளிந்தது.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயில வட நாட்டிலிருந்தும்கூட சீடர்கள் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரண மிருக்கவே செய்கிறது" என்று முணுமுணுத்துக் கொண்டவன், பிரதான மாகத் தெரிந்த குடிலை நெருங்க முற்பட்டான்.

பிரதானக் குடிலின் முன்பாக தரையில் கருங்கல்லால் தளமிடப்பட்டு நடுவில் உயரமான கம்பமொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.

மன்னன் அந்தக் கல்தளத்தில் கால்களைப் பதித்து இரண்டொரு அடிகள் நடக்கு முன்பாக, குடில்களின் கதவுகள் திறக்கப்பட்டு ஏந்திய பந்தங்களுடன் சிற்பியாரின் சீடர்கள் வெளிவந்தனர்.

மன்னனை நெருங்கிய சீடர்கள், வந்திருப்பவர் மன்னர் என்பதைக் கண்டு கொண்டதும் அவர்களில் ஒருவன் குடில்களின் வரிசையில் பின்னால் சற்றுத் தள்ளி தெரிந்த பெரும் குடிலை நோக்கிப் பறந்தான்.

சற்று நேரத்தில் சிற்பியார் வெளெரென்ற உடையும், அதைவிட வெளுத்து நீண்டுக் கிடந்த தாடி மீசையும் அரசலாற்றுக் காற்றில் வேகமாக அசைய, அரை ஓட்டமாகவே மன்னனை நோக்கி வந்தார்.

வர வேண்டும், வர வேண்டும் மன்னா..." என்று வரவேற்றவர், முன்னறிவிப்போ உடன் காவலரோ இன்றி தாங்கள் இப்படித் தனித்து வரலாமா" என்று கடிந்துகொள்ளவும் செய்தார்.

மன்னன் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. ஆசார்யரே, நான் இங்கு மன்னனாக வர வில்லை.

உமது பழைய சீடனாகத்தான் வந்திருக்கிறேன்.

அதுவும் உம்மிடம் ஏற்கெனவே நான் கேட்டிருந்தபடி உதவி கேட்டு" என்றான்.

தமது சீடர்களை நோக்கிய சிற்பி, சீடனே,சென்று கனிகளையும் பாலையும் எடுத்துக் கொண்டு எனது குடிலுக்கு வந்து சேர்" என்று உத்தரவிட்டு மன்னனின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு தமது குடிலை நோக்கி நடந்தார்.

சீடன் கொண்டு வந்த கனிகளையும் பாலையும் அருந்திய மன்னன், சிற்பியை ஏறெடுத்தான்.

மன்னனின் சிவந்த விழிகளில் புலப்பட்ட கேள்வியைப் புரிந்துகொண்ட சிற்பியாரின் முகத்தில் முறுவல் விரிந்தது.

மன்னவா, நீ கேட்டபடி என் சீடனொருவனை உனக்குப் பரிசாக அனுப்பிவைக்கிறேன்.

முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன்.

நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர்,

சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார்.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பி யையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது.

கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி,

முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப் போகிறாய்?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது '' திருநறையூருக்கு " என்று.

‘ செந்தளிர் கோதிக் குயில் கூவும் ’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது.

பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும், குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.

மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வியாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை.

இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும்.

அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும்.

காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு.

காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது.

நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும்.

பின்னர், ‘ யந்திரசர்வாஸ ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்.

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.

அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின.

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும்.

ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும்.

கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும்.

மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும்.

எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார்.

அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும்.

மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.

கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும்,

மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும்,

பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது.

நமது ஆன்மிகமும் , அறிவியலும் எவர்க்கும் குறைந்தது இல்லை என்பது மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது..

1644132483557.png
 

Latest ads

Back
Top