Origin of Deepavali

தீபாவளித் திருநாள் !!--பதிவு 1

தீபாவளி நம் பாரத தேசத்தில்
கொண்டாடப்படும் மிகச் சிறப்பான/
மகிழ்ச்சியான பண்டிகை.இப்போது பல்வேறு நாடுகளிலும் பல மதத்தாரும்
கொண்டாடி வருகிறார்கள்.தீபாவளியின் வரலாறு,சில திவ்ய தேசங்களில்
தீபாவளியின் தனித்துவமான வைபவங்கள் ஆகியவற்றை சில பதிவு களில் பார்ப்போம்.

தீபாவளி வந்த விதம்


நரகாசுரன்

கிருதயுகத்தில்,ஹிரண்யாக்ஷன்என்கிற அசுரன்,பூமியைக் கவர்ந்து கொண்டு போய் அதள பாதாளத்தில் ஒளித்து வைத்தான்.அவனிடமிருந்து பூமியைக் காப்பாற்ற, பூமாதேவி ஶ்ரீமஹாவிஷ்ணு வைப் பிரார்த்தித்தார்.பெருமாள் வராக அவதாரமெடுத்துத் தம் கூரிய கொம்புகளால்,அசுரனை மாய்த்து, கொம்பின் நுனியில் பூமாதேவியை ஏந்திக்கொண்டு மேலே வந்தாராம்.
"மாசுடம்பில் நீர் வார"வந்த வராகப் பெருமாளின் அருளால்"பாசி தூர்த்துக் கிடந்த பார் மகளான" பூமிப்பிராட்டிக்குப் பிறந்தவனே நரகாசுரன்.சிறு வயதிலிருந்தே அடங்காப்பிடாரியாக வளர்ந்த நரகாசுரன் கண்ணில்பட்ட உயிர்களை எல்லாம் இம்சித்துக் கொண்டிருந்தான்.

நரகாசுரன் ஆண்ட, இன்றைய அஸ்ஸாம் மாநிலம்:

நரகாசுரன் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் காமரூபா,பிராக்ஜோதிஷா
(இன்றைய காம்ரூப்,மட்டும் பக்கத்து மாவட்டங்கள்,நேபாளத்தில் ஒரு பகுதி) எனும் பிரதேசத்தை ஆண்டு வந்தான். இன்னமும் அஸ்ஸாம் மக்களிடையே நரகாசுரனைப் பற்றிய பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன.
அஸ்ஸாமின் புராண வரலாற்றில் நரகாசுரனைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. அஸ்ஸாமிய இலக்கியங்களிலும் நரகாசுரன் அஸ்ஸாமின் சிறந்த அரசனாகவும், பின்னாளில் பேராசையினால் அழிந்தவனாகவும் சித்தரிக்கப் படுகின்றான்.பாணாசுரன் என்பவனுடன் ஏற்பட்ட நட்புறவால் நரகாசுரன் பற்பல தீமைகளைச் செய்ய ஆரம்பித்தான்.
பாணாசுரன் தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் மத்தியில் அமைந்திருக்கும் சொனித்பூரை (தற்போது தெஸ்பூர்) ஆண்ட மன்னன் என கூறப்படுகின்றது.
நரகாசுரன் பதவி பேராசையாலும் ஆதிக்க ஆசையாலும் உலகத்தையே ஆள பேரவா கொண்டான்.
பல இராஜ்ஜியங்களின் மீது போர் தொடுத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

பூமாதேவி பெற்ற வரம் !!

எவ்வளவோ முயன்றும்,பூமிப்பிராட்டி
யாரேலேயே அவனைத் திருத்த முடிய வில்லை.அவனுக்கு எதிரிகளே அதிகம் இருந்தனர் .தாய்ப் பாசத்தால் தம் மகனுக்கு சாகாவரம் தரும்படி, பெருமாளிடம் வேண்டினார்.இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் மரணம் அடைவது திண்ணம் என்பதை பெருமாள் எடுத்துரைத்தார்.ஆனாலும் பிராட்டி விடாமல்"பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூரத்திகளாலோ,தேவ/அசுரர் களாலோ,அதிபராக்ரமசாலிகளாலோ,தம் பிள்ளைக்கு மரணம் நேரக்கூடாது" என்னும் வரம்வேண்டினார்.
"அப்படியேஆகட்டும்.அவனைப் பெற்ற தாயான உன்னால் மட்டுமே அவனுக்கு மரணம்" என்றார் பெருமாள்.தாம் பெற்ற மகனை எந்தத் தாயும் கொல்லத் துணியாத போது,பொறுமையின் வடிவான தாம் எவ்வாறு கொல்லப் போகிறோம் என்று நிம்மதியாக இருந்தார் பிராட்டியார்.

தேவர்களை அழிக்க விளைந்த பேராசை:

தம் தாய் பெற்ற வரத்தை அறிந்த நரகாசுரனின் கொடுமைகள் மேலும்
பலமடங்கு பெருகின.யுகங்கள் கடந்தும் அவனை யாரும் அடக்க முடியவில்லை.
சுவர்க்கலோகங்களின் மீதும் போர் தொடுக்க ஆரம்பித்தான்.இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான்.
இந்திரன் ஓடி ஒளிந்து கொண்டான்,
துவாபர யுகத்தில் மஹா விஷ்ணு ஶ்ரீ கிருஷ்ணராகவும்,பூமாதேவி சத்ய பாமாகவும் அவதரித்தனர். நரகாசுரனின்கொடுமைகளை அனுபவித்த தேவர்களும், ரிஷிகளும் நாரதரிடம் முறையிட, நாரதர்
கிருஷ்ணரிடம் வேண்டுவதற்கு துவாரகை வந்தார்.கிருஷ்ணருடன்,
சத்யபாமா இருக்கும் போது,நாரதர் நரகாசுரனின்கொடுமைகளை,வரிசையாக கிருஷ்ணரிடம் சொல்ல சத்யபாமா மிக ஆத்திரமுற்றார்.ஶ்ரீகிருஷ்ண
பகவானைப்பற்றியே,நரகாசுரன் இழிசொற்கள் பேசுவதையும் நாரதர் சொல்ல,கோபத்தின் உச்சிக்கே சென்ற சத்யபாமா"உடனே புறப்படுங்கள் ஸ்வாமி.அந்த அரக்கனை அழிப்போம்.
நானே சாரதியாக இருந்து உங்கள் தேரை ஓட்டி வருகிறேன்"என்று கூறினார்.கிருஷ்ணர், பெண்கள் போர்க்களத்துக்கு வரக்கூடாது என்று தடுத்தும் கேளாமல், சத்யபாமாவும் புறப்பட்டு நரகாசுரன் இருப்பிடத்துக்கு வந்தனர்.

நரகாசுரன் மடிந்தான்-தீபாவளி பிறந்தது !

அகங்கார மமதையால்,அவன் கிருஷ்ணர் மேலேயே பல அம்புகளை எய்தான்.அதில் ஓர் அம்பு கிருஷ்ணரின் முகத்தில் பட,அவர் மயக்கமுற்றது,போல நடித்து சாய,சத்யபாமாஆக்ரோஷத்தில் ஓர் அம்பை எய்த ,அது நரகாசுரன் மார்பைத் துளைத்து,அவனைக் கீழே தள்ளியது.'அம்மா' என்ற அவனது பலத்த அலறல், சத்யபாமாவின் தாயுள்ள த்தைத் தட்டி எழுப்ப, அவர் அனைத்தையும் உணர்ந்தார்.தம் மகன் சாவுக்குத் தாமே காரணமாகி விட்டோமே என்று அரற்றினாலும்,இது பகவான் வகுத்தபடி நடந்து விட்டது என்று அறிந்தார்.மரணத் தருவாயிலிருந்த நரகாசுரனின் செருக்கும் ஆணவமும் ஒழிந்தன.

கிருஷ்ணரையும், சத்யபாமாவையும் வணங்கிய அவன், "பெற்றெடுத்தஅன்னையின் கரங்களால் மரணத்தையும் பெற்ற நான் பாக்யசாலி ஆனேன். என்னுடைய மரணம் நேர்ந்த இந்த துலா மாச,கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாளை,அதர்மம் ஒழிந்து,தர்மம் தழைத்த நந்நாளாக பூலோகவாசிகள் அனைவரும் மகிழ்ச்சியாக்க் கொண்டாட வேண்டும்.அன்று அனைவரும் எண்ணெய் தேய்த்து,கங்கா ஸ்நானம் செய்து,புது வஸ்திரங்கள் தரித்து பட்சணங்கள் சாப்பிட்டு,வெடி(பட்டாசு) வெடித்துக் கொண்டாட வேண்டும்.
வீடுகள் எங்கும் மாலை வேளையில் தீபங்கள் ஏற்றப்பட்டு தீபாவளி என்று கொண்டாட வேண்டும் என்னும் வரம் கொடுங்கள்" என்று வேண்டினான்.
பகவானும் அவன் வேண்டிய வரத்தைக் கொடுக்க,நரக சதுர்த்தசி தீபாவளியாக மலர்ந்தது.

இராமாயணத்தில் தீபாவளி !!

ராவணனை வென்று,சீதையை மீட்ட ஸ்ரீராமர்,சீதையோடும்,லக்ஷ்மணரோடும் அயோத்தி திரும்பிய நந்நாளில் அயோத்தி மக்கள் நகரெங்கும் தீபங்களை ஏற்றி வைத்து,அலங்காரம் செய்து மிகுந்த உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனராம்.அங்கும் ஓர் அசுரனைக் கொன்று ,ராமர் நாடு திரும்பிய நாளை தீபாவளியாகக் கொண்டாடினர்.வட நாட்டில் பல பகுதிகளில் தீபாவளி இந்த வைபவத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.(ராமர் நாம் கொண்டாடும் தீபாவளியன்று அயோத்தி திரும்பவில்லை; பங்குனி மாதம் திரும்பினார் என்பது ஆராய்ச்சி யாளர்களின் கூற்று !)

தீபாவளியோடு தொடர்புடைய வேறு சில நிகழ்வுகள்:

1.ஸ்கந்த புராணத்தின் படி, இந்த நாளில் தான் பார்வதிதேவியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது.விரதம் முடிவடைந்ததும், ருத்ரர், பார்வதியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆகக் காட்சி அளித்தார்.

2.சீக்கிய மதத்தவர்கள்,அமிர்தசரஸில், 1577 ஆம் ஆண்டு, இந்நாளில் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.

3.சமணர்கள் இந்த நாளை மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளாக தீபங்கள் ஏற்றி அனுஷ்டிக்கின்றனர்.

படங்கள்:
1)ஶ்ரீவராகப் பெருமாள்.
2.ஸ்ரீ லஷ்மிவராகர்/நித்யகல்யாணப் பெருமாள் --திருவிடவெந்தை.
3).தம் அரண்மனை உப்பரிகை மேல் அமர்ந்திருக்கும் நரகாசுரனும்,அவன் மனைவியும்(வலது)-அவனை அழிப்பதற்காக கருடன் மேல் வந்த கிருஷ்ணரும், சத்யபாமாவும் (இடது)
4.நரகாசுர வதம்.

(---அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)


WhatsApp Image 2021-11-01 at 9.17.25 PM.jpeg


WhatsApp Image 2021-11-01 at 9.17.44 PM.jpeg


WhatsApp Image 2021-11-01 at 9.18.04 PM.jpeg


WhatsApp Image 2021-11-01 at 9.18.34 PM.jpeg
 
Back
Top