Naga Chaturthi Vazhipadu Murai

நாகதோஷம் நீக்கும் நாக சதுர்த்தி - வழிபடும் முறைகள், பலன்கள்!

நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் நாக சதுர்த்தி’. நாகத்தை வழிபட்டு நாக தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்கு உகந்த தினம் நாக சதுர்த்தி தினமாகும்.

சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும்.

பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும்.

இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும்.

அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.

இது பற்றி பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் நாகங்கள் பிறந்தன. அவை வளர்ந்த பிறகு தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கின. அதனால், கோபம் கோண்ட தாயார் கத்ரு, `தாய் சொல்லைக் கேட்காததால் தீயில் விழுந்து இறப்பீர்களாக” என்று சாபம் கொடுத்துவிடுவாள்.

ஜனமேஜயன் மூலம் அந்தச் சாபம் பிற்காலத்தில் நிறைவேறும்.

நாகங்களின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ எனும் கொடிய நாகம் தீண்டி பரீட்சித் எனும் அரசன் இறந்துவிடுவான். தந்தையை இழந்து வாடிய பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் தந்தையின் இறப்புக்குக் காரணமாக விளங்கிய பாம்பு இனத்தையே அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ’சர்ப்பயக்ஞம்’ எனும் வேள்வி செய்வான்.

அந்த வேள்வியில் பாம்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்து இறக்கும். பாம்புகள் அனைத்தும் அழிவதைக் கண்ட அஸ்தீகர் எனும் முனிவர் ஜனமேஜயனது வேள்வியைத் தடுத்து நிறுத்தி நாகர்களுக்குச் சாப விமோசனம் அளித்து, பாம்பினத்தைக் காப்பார். ஆஸ்திக முனிவர் நாகங்களுக்குச் சாப விமோசனம் அளித்ததும் இந்த ‘நாக சதுர்த்தி’ தினத்தில்தான். இந்த நாளில் அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படும் வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்சயன் ஆகிய நாகங்களை வணங்க வேண்டும்.

பகவான் அனந்தன் என்னும் நாக வடிவில் உலகத்தைக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

அனந்தனுக்குத் துணையாக பாதாள லோகத்தில் தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் வசிக்கின்றன. அவர்களை வணங்கும் விதத்தில் பாம்புப் புற்றில் துள்ளு மாவு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள்.

இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

பொதுவாக ராகு, கேது தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த நாள் தினம் மிகவும் முக்கியமானது.

நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். கணவன் - மனைவி பிரிந்து வாழ்வார்கள், குழந்தை பாக்கியம் இருக்காது. இந்தத் தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு நாகத்தைப் பிரதிஷ்டை செய்து நாகருக்கு உண்டான வழிபாட்டினை மேற்கொண்டாலே கை மேல் பலன் கிடைக்கும். அனைத்துத் தடைகளும் விலகி உடனே திருமணம் நடைபெறும்.
 
ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டு விசேஷங்களுக்கு பஞ்சமில்லை. இம்மாதத்தில், பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரத பூஜைகளும் நிறைய இருந்தாலும், அதில் முக்கியமானவை நாக சதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி விரதங்கள் ஆகும்.*

நாக சதுர்த்தி

காஸ்யப முனிவரின் பத்தினிகளான கத்ரு, வினதை என்பார்களின் புதல்வர்கள் நாகர்கள், கருடன். இவர்களின் மாற்றாந்தாய் உணர்வின் காரணமாகத் தீராப்பகை ஏற்பட, இறுதியில் மஹாவிஷ்ணுவானவர் பாம்பைத் தனது படுக்கையாகவும்; கருடனைத் தனது வாகனமாகவும் ஏற்றருளினார் என்பது புராண வரலாறு.

எல்லா தோஷங்களையும்விடக் கடுமையானவை சர்ப்ப தோஷங்கள் என்கிறார்கள்.

ஜன்மாந்திரங்களாகத் தொடரும் தன்மை கொண்டவை. ஒருவர் ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் அமைந்திருந்தால் திருமணத் தடை, குழந்தையின்மை, காரியத் தடைகள்; எதிலும் முன்னேற்றமில்லாத நிலை ஆகியன ஏற்படும்.

இவை நீங்கக் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் நாக சதுர்த்தி விரதம். ஆடிமாதத்து வளர்பிறை சதுர்த்தியில் விரதம் ஏற்றுச் செய்ய வேண்டிய பூஜை இது.

முற்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்த சர்ப்ப ஹத்யாதி தோஷங்கள் நீங்கி சத்புத்திர ப்ராப்தி கிடைத்திட இந்த விரத பூஜையை அனுஷ்டிப்பது மரபு.

இந்நாளில் விடியற்காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, நீர் நிலைகளின் கரையோரங்களிலோ, ஆலய வளாகங்களிலோ, உள்ள கல் நாகர் திருமேனிகள் அல்லது புற்றுகளிலும் பசும்பாலால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பூ சாற்றி, தூப தீபாராதனை செய்து வழிபடுவர்.

நாக சதுர்த்தி

வெல்லம் சேர்த்த எள்ளுப் பொடி, அரிசி மாவு, முளைகட்டிய பச்சைப் பயிறு, காய்ச்சாத பசும் பாலுடன் நாவற் கனிகளும் நிவேதிப்பது சிறப்பு. அருகு மற்றும் நாகலிங்கப் பூ, தாழைமடல், மல்லிகை முதலான மலர்கள் கொண்டு பூஜிப்பது விசேஷம்.

பின்னர் இல்லத்துக்கு திரும்புகையில் வாயிற் நிலைப் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு, மலர்கள் தூவி வணங்கிவிட்டு பின் உள்ளே புக வேண்டும் என்பது ஐதிகம்.

சர்ப்ப உருவங்களை மஞ்சள் கொண்டு நிலைக்கதவினில் வரைந்து குங்குமத் திலகம் இடுதலும், இயன்றவர்கள் வீட்டினுள் தூய்மையான இடத்தில் கோலமிட்டு, அலங்கரித்த மனையில் பொன், வெள்ளி, தாமிரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட நாகர் வடிவம் நாகப்ரதிமையை தக்க ஆசனத்தில் அமர்த்தி பூஜிப்பதும் வழக்கம்.

சதுர்த்தியானது விநாயகருக்கும் உகந்த தினமாக அமைந்து விடுவதால், விநாயகர் சேர்ந்த வழிபாடும் இன்றைய தினம் சேர்வது இறையருள் என்றே சொல்ல வேண்டும்.

விநாயகர்

ஆடி மாதத்திய வளர்பிறை சுத்த பஞ்சமியில் அதாவது நாக சதுர்த்திக்கு மறுதினம் அனுஷ்டிக்க வேண்டியது கருட விரதமாகும்.

கருடன் பஞ்சமியில் பிறந்த திதி ஆகையால் இந்த தினத்தினை 'கருட பஞ்சமி' என்பர்.

உடன் பிறந்த சகோதரர்களின் நலனிற்காகவும், விஷ ஜந்துக்களால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பெண்கள் இதை அனுஷ்டிப்பர்.

முன்தினம் பூஜித்த அதே இடத்திலேயே மாற்றாமல் அன்றைய தினமும் வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம்.

மறுதினமும் முந்தைய நாள் போன்றே நாகர் கல் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும்.

எள்ளு மற்றும் உளுந்து பூரணம் வைத்த மோதகங்கள், அப்பம், சுழியம், பச்சரிசி இட்லி, பச்சைப் பயிறு சுண்டல், சர்க்கரைப் பொங்கல், போன்றவையுடன் இயன்றவற்றை நிவேதித்தல் சிறப்பு.

பின்னர் முதல் நாள் போன்றே அன்றைய தினமும் வாயிற்படியை வழிபட்டு உள் நுழைந்து பூஜையறையில் மீண்டும் வழிபடுதல் ஐதிகம்.

இப்படி பூஜைசெய்பவர்களின் எல்லாவித கோரிக்கைளும் பூரணமாக நிறைவேறுவதுடன், முக்தியும் கிட்டும் என்பது புராணம் சொல்லும் பலன்.

சர்ப்பங்களுக்குச் செய்யும் வினைகளால் ஏற்படும் தோஷங்களை இவ்விரதம் இருந்து போக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

சர்ப்பங்கள் காணும்போதே பயப்படும் கருடபகவானை இந்நாளில் வணங்கிட நமது சர்ப்ப தோஷங்கள் அகன்றிடும் என்பது ஐதிகம்.

அன்றைய தினம் செய்யும் வழிபாட்டினால் கருடனைப் போன்று அழகும்; ஆற்றலும் கொண்ட புத்திரர்களைப் பெறலாம் என்பர்.

இவ்விரதம் இருப்பதால் கிடைக்கும் பலாபலன்களை ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனாலும் சொல்லிட இயலாது என்பர்.

வியாச மாமுனிவரிடம் பெற்ற இவ்விரதத்தை, சுவீத முனிவர் என்பார் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து பின்னர் பூலோகத்தில் இதன் மகிமை பரவியது என்று கூறுவர். மிகுந்த புண்ணிய பலன்களை அளிக்கவல்ல இவ்விரத பூஜைகளை இயன்ற அளவு கடைப்பிடித்து சர்ப்ப தோஷங்கள் நீங்கப் பெற்று நன்மைகளைப் பெறலாம்.
 
கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மகா புண்ணியம்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸொர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத்

என்று ஆத்மார்த்தமாக சொல்லி வழிபடுங்கள்.

பின்னர், பூஜையை நிறைவு செய்யும்விதமாக புளியோதரை நைவேத்தியம் செய்யுங்கள். அடுத்து, வாசலுக்கு வந்து, வானை நோக்கி கருடாழ்வார் பறப்பதாக நினைத்து, பாவனையாக, மூன்று முறை கைக்கூப்பி வணங்குங்கள். அதன் பின்னர், தீப தூப ஆராதனைகள் செய்து, பெருமாளுக்கு நமஸ்காரம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள்.
 
Back
Top