Marudhamalai Murugan Temple

praveen

Life is a dream
Staff member
மருதமலை முருகன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை என்ற ஊரில் அமைந்துள்ளது.

பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

மக்கள் இவரை, 'பாம்பு வைத்தியர்' என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார்.

அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, 'உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!' என்றார்.

அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார்.

முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, மருதமலை மாமணி என்றுசெல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

837 - சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோவில் இது. வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருவார்.

விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுயரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் ஏழாம்படை வீடாக கருதப்படுகிறது.

மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடி வைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது. முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

மருதமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் 'தான்தோன்றி விநாயகர்' சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது விசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை
நடக்கிறது.

முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, 'தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள்.

மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். மலைக்கோவிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரைக் கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும், அடிவாரத்திலுள்ள இவரை வணங்கியபிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.

மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

1659246638355.png
 
மருதமலை ஸ்ரீ முருகன் கோவிலைப் பற்றிய வரலாற்று மற்றும் முக்கியமான தகவல்களின் நல்ல விளக்கக்காட்சி. மாமணி பாடலில் நாம் கேட்டாலும், இந்த வார்த்தை ஏன் வழங்கப்படுகிறது என்பதை இக்கட்டுரை சொல்கிறது. கோவில் வழிபாட்டை எவ்வாறு பின்பற்றுவது என்பது சிறப்பு. நமது கலாச்சாரம் பல யோகிகளால் அடையப்பட்ட ஞானத்தின் மகத்தான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது.
 
Back
Top