Language

Status
Not open for further replies.
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், கருத்தினை வெளியிடுவதற்கும் மட்டுமே பயன்படுகின்ற ஓர் ஊடகக் கருவி மட்டும் தானா மொழி? அது ஒரு குறியீடு, வெறும் அடையாளம் என்று மட்டும் இருந்தால் அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்.
ஒன்று நம்மைப் பாதிக்கும் பட்சத்தில் நம்மிடம் முதலில் தோன்றும் எதிர்வினை சிந்தனை அளவிலானது. அந்தச் சிந்தனை அளவிலான எதிர்வினைக்கு ஓர் உருவம் கொடுப்பது உடலசைவு. இந்த உடலசைவு என்ற செயலானது நம்மின் சிந்தனைகளைப் பிறர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டும் இருக்கலாம், கொள்ளாமலும் இருக்கலாம். நம்மைப் பிறர் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவா ஏற்படும் பட்சத்தில் நாம் உடனடியாகச் செய்வது ஒலி எழுப்புவதுதான், அதாவது மொழியைக் கைக்கொள்வதுதான். வாய் பேச முடியாத ஊமைகள்கூட ஒருவிதமான தெளிவற்ற ஒலியினை ஏற்படுத்தி தம் எண்ணத்தினைப் புரிந்துகொள்ளச் செய்ய முயற்சிப்பர்.
ஆக மொழியில்லை என்றால் இன்றையப் போன்றதான சமூக நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இப்போதைய அளவிலான முன்னேற்றத்தினை அடைய எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
அப்படியெனில் மொழி ஓர் ஊடகம் மட்டும்தானா? அதில் வேறு சிறப்பு எதுவும் இல்லையா?
நம் மனித இனத்தின் இத்தனை ஆண்டு கால வரலாறு என்பதனை ஒரு தனித்த இனத்தின் வரலாறோடு கட்டம் கட்டி குறிப்பிட்டுவிட முடியுமா? அது உலகம் முழுவதும் உள்ள இனக் குழுக்களின் வரலாறு ஆகும். ஒவ்வொரு இனக் குழுவுக்கும் உரியதான அதனதன் வரலாறு என்பது அதனதன் தாய் மொழியிலேயே உள்ளது. கல்வெட்டுகளாகட்டும், செப்புப் பட்டயங்களாகட்டும், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டுவரும் இலக்கியங்களாகட்டும். அனைத்தும் அதனதன் மொழியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மனித இனத்தின் வரலாறினைத் தாங்கி நிற்பதுவும் மொழிதான்.
சரி, மொழியின் சிறப்பு இருக்கட்டும். இந்த மொழியை நாம் எப்படி அறிந்து கொள்வது. அதாவது சுருக்கமாகச் சொல்வதெனில் நாம் இந்த உலகத்தினை எந்த மொழியில் புரிந்து கொள்வது மற்றும் நமது உணர்வுகளையும் கருத்துகளையும் இந்த உலகத்திற்கு எந்த மொழியில் புரிய வைப்பது?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழி வழியாக தலைமுறை தலைமுறையாக நமது இனம் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிற தாய்மொழியிலா? சென்ற தலைமுறை வரை நம் இனத்திற்குத் தொடர்பே இல்லாத அந்நியமொழியிலா?
 
Status
Not open for further replies.
Back
Top