Karnam Film the wholesome musical ragas

drsundaram

Active member
நீங்கள் ஸினிமா பாடலில்வரும் கர்நாடக இசையை ரஸிப்பவரா!
இதோ உங்களுக்காக!
============================
WOW ! ஒரே தமிழ் திரைப்படத்தில் இத்தனை கர்நாடக ராகங்களா !
படியுங்கள் ! தெரிந்து கொள்ளுங்கள் !

இது ஓர் சிறப்பு தகவல்:- *கர்ணன் பட இசை ஒரு ராக மதிப்பீடு:*
*தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசை காவியம் என்றால் மிகை ஆகாது.*

இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.

ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
MSViswanathan /TKRamamurthy இரட்டையர் இசைத்திருப்பார்கள் !

அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .

அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் :

அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .

முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் – தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன் ,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . –

இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறான்-

அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் – மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில் பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் –

‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘

அருமையான இந்த பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!

இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது- P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் :
‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-

இது ராக மாலிகை;

முதலில் வருவது – காபி ராகம் ;

பிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ !

இந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில் வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.

இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் !

இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை .

இந்த பாடல் அமைந்த ராகங்கள் :

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :

என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி !

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !

இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது.

இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.

இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன
இன்றளவும் !

தி எவர் ஹிட் சாங் !!

(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... வஞ்சகன் கர்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.

இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன் கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.

இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)

15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “
என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி !

JM
 
நீங்கள் ஸினிமா பாடலில்வரும் கர்நாடக இசையை ரஸிப்பவரா!
இதோ உங்களுக்காக!
============================
WOW ! ஒரே தமிழ் திரைப்படத்தில் இத்தனை கர்நாடக ராகங்களா !
படியுங்கள் ! தெரிந்து கொள்ளுங்கள் !
JM

It is really an amazing stuff produced by the trio viz. MSV, TKR and the great Kannadhasan. There were splendid usage of classical ragas throughout and also Hindustani musical instruments giving new dimension and a feast for ears.

Thanks for sharing.
 
Back
Top