வேத அடிப்படையில் சைவம் வளர்த்தார்
சமண சாக்கிய சமயங்களின் கொள்கைகளில் சிலவற்றை அக்கால மக்களி்ல் எல்லாத் தரப்பினருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அம்மையாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவரது கால்கள் வேதத்தில் நிலைபெற்றிருந்தன. அதனால் சமணக் கருத்துகளைச் சைவத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்.
சமண சாக்கியங்கள் வலியுறுத்திய கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும் வேதத்தில் இல்லாதவை. அதை ஏற்றுக் கொண்ட அம்மையார் முற்பிறவியில் செய்த வினையின் பயனாகத் தான், தான் மண்ணில் பிறக்க நேர்ந்தது என்று கருதிப் பல முறை வினை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். “சிவனை வணங்குபவரை வினை நெருங்காது, அவனது அடியாரின் நிழலைக் கண்டாலே ஓடிவிடும்” என்று கூறுகிறார் அவர்.
சாக்கிய சமணர்கள் கூறும் அறவழிகளையும் அவர் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தைக் கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற் கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர் என்கிறார்.
சமண சாக்கியர்கள் அறநெறி மூலம் பிறவிப் பிணியை நீக்க முடியும் என்று போதித்தனர். அம்மையாரோ இறைவன் ஒருவன் தான் அதைச் செய்ய முடியும் என்று நம்பியதால் அவர் அதை இறைவனிடம் வேண்டுகிறார்.
அம்மையார் வணங்கிய பெம்மான் வேதத்தில் நிலை பெற்றவன். அவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார் அவர்.
வேதத்தை நம்புவதன் மூலமே இறை நம்பிக்கையை ஊட்டமுடியும் என்பதால் அதற்குப் பெருமதிப்புக் கொடுக்கிறார். அந்தணர்களும், அரசர்களும் வேதநெறியைச் சிக்கலாக்கி, சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாகச் செய்து விட்ட நிலையில், வைசியரான அவர் காட்டிக் கொடுத்த பக்தி வழி அவர்களுக்கு ஆறுதல் தந்தது. பிறவா நிலை அடைவதற்கு ஒரு எளிய வழி கிடைத்துவிட்டது.
களப்பிரர் காலத்தில் இவ்வுலக வாழ்வைச் சுமை எனக் கருதும் சமண சாக்கிய இயக்கத்துக்கு எதிர் வினை அதே காலத்தவரான அம்மையாரின் பாடல்களில் காண முடிகிறது. அம்மையாரின் பாடல்கள் வானோர் பிரானின் புகழை மட்டும் பாடவில்லை, அக்கால சமண சாக்கியக் கொள்கைகளின் மறுப்பாகவும் அவை விளங்கின.
நூலறிவைப் பயன்படுத்தித் தர்க்க வாதம் செய்து கடவுள் இல்லை என்று கூறி வந்தவர்க்கும், அறிவினால் ஆராய்ந்து நீயே பிரம்மம் என்று உணர்க என்று கூறியவர்க்கும் அம்மையார் அறிவினால் மட்டும் பிரச்சினைகளைத் தீர்த்து விடமுடியாது என்றும் இறை நம்பிக்கை ஒன்றே மனிதனைத் துன்பங்களிலிருந்து கரையேற்றும் என்றும் பதில் அளிக்கிறார். ‘நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக’ என்று பூர்வ மீமாம்சகர், வேதாந்திகள், சமணர்கள், சாக்கியர்கள் அனைவரையும் விரட்டுகிறார்.
“எவர் எவரோ எப்படி எல்லாமோ பேசுவார்கள். அவை புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புங்கள். அறிவினால் அவனை அறிய முடியாது. அவனிடத்தில் பக்தி கொள்வதன் மூலம் அவனது அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும். நீங்கள் எந்தக் கோலத்தில் எந்த உருவத்தில் வழிபட்டாலும் இறைவன் உங்களுக்கு அந்தக் கோலத்தில் அந்த வடிவத்திலேயே காட்சி கொடு்த்து ஆட்கொள்வான்” என்கிறார் அவர்.
நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும். நீ வணங்கும் இறைவன் எத்தகைய உருவினன் என்று நாத்திகர்கள் கேட்பதற்கு விடை இறுப்பது போல அம்மையார் கூறுகிறார், “பிறந்து மொழி பயின்ற போதே எனக்கு இறைவன் மேல் காதல் ஏற்பட்டுவிட்டது. நான் கண்ணால் பார்த்து அவனிடம் ஆட்படவில்லை. இன்று வரை பார்த்ததும் இல்லை. நான் எப்படி உங்களுக்குக் கூற முடியும்? பிரானவனை எங்குற்றான் என்பீர்கள். என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான். காண்பார்க்கு எளிது. உள்முகமாகப் பார்வையைச் செலுத்துபவருக்கு சிந்தையுள் சோதியாய்த் தோன்றுபவன் அவன். அவன் வானத்தானா, தானத்தானா என்று வாதம் செய்யாமல், நெஞ்சத்தான் என்பதை உணருங்கள்” என்கிறார்.
பிறவாமை ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கருதிய சமணத்திலிருந்து மாறுபட்டு, “பிறவாமை விரும்பத் தக்கது தான். ஆனால் மீண்டும் பிறப்புளதேல் இறைவனை மறவாமை வேண்டும்” என்று கோரும் அம்மையார் “இறைவனுக்கே எழுபிறப்பும் ஆளாவோம், அவன் தாளைச் சரணடைந்து விட்டதாலேயே மீளாப் பிறவிக் கனைகடலை நீந்தினோம்” என்று பாடுகிறார். அதாவது இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் அது இவ்வுலக வாழ்வைச் சுமை ஆக்காது என்கிறார்.