guru's creations

Status
Not open for further replies.

rgurus

Active member
This story has already been posted by me under some other thread title, but now I don't remember it. so now I am creating a new thread titled Guru's creations and posting my stories here

எப்பவும் இட்டிலி, தோசை தானா?
by RAAGU



'தினமும் காலையிலே எழுந்தா இட்லி, இல்லை தோசை.

லைஃபே ரொம்பப் போரடிச்சிப் போச்சு.
இன்னிக்கு ஒரு நாளாவது ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போயி நமக்குப் பிடிச்ச எல்லா ஐடங்களையும் ஒரு பிடி பிடிச்சிட்டி வரணும்.
எதுக்கும் கிரெடிட் கார்டை எடுத்துப்போம்.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போவோமா?
வேணாம் ரொம்ப காஸ்ட்லி. அங்கே போய் ஒரு வேளை சாப்பிடற செலவுலே ஒரு மிடில் கிளாஸ் ஹோட்டலுக்குப் போனா மூணு நாள் முழுசா சாப்பிடலாம்.
த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குப் போவோமா?
சரி . போய்ப் பார்ப்போமே. எப்பதான் இதையெல்லாம் பார்க்கிறது? லைஃபை கொஞ்சமாவது எஞ்சாய் பண்ண வேண்டாமா?
சரி. இன்னிக்கு ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கே போவோம்'.
இப்படி நினனத்து அருகிலிருந்த ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நுழைந்து ஒரு வசதியான சீட் பிடித்து உட்கார்ந்தேன். அதற்குள் ஒரு சிறு சபலம். ஏன் ஏசி ரூமில் போய் உட்காரக்கூடாது என்று தோன்றவே பக்கத்திலிருந்த ஏசி ரூமில் போய் உட்கார்ந்தேன்.. அங்கு டேபிளில் மெனு கார்டைப் புரட்ட ஆரம்பித்தேன். எப்படியும் இன்றைக்கு இட்லியோ தோசையோ ஆர்டர் செய்யப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு மெனு கார்டைப் பார்த்து என்ன ஐடம் ஆர்டர் பண்ணலாமென யோசித்தேன்.
ஸ்நாக்ஸ் லிஸ்டைப்பார்த்தேன்.
என்ன? பஜ்ஜி அம்பது ரூபாயா? நம்ம வீட்டிலே இந்த ருபாய்க்கு நாலு பேர் ஆளுக்கு அஞ்சு பஜ்ஜி சாப்பிடலாம்.
ஊஹூம். இது சரிப் பட்டு வராது.
சூப் ஏதாவது சாப்பிடுவோமா?
ஆனா சாயந்திர நேரத்துலே யாராவது சூப் சாப்பிடுவாங்களா? தெரியல்லியே.
என்ன ஒரு சின்ன டம்ளர் தக்காளி சூப் அறுபது ரூபாயா?
அறுபது ரூபாய்க்கு நாலு கிலோ தக்காளி வாங்கி வீட்டிலே கல்யாணமே பண்ணிடலாமே.
வெஜிடபிள் சூப், கேரட் சூப், காளான் சூப் விலையைப் பாத்தா தலையைச் சுத்துதே.
சரி. சூப், அப்பிடைசர் எல்லாம் தேவையில்லை.
சாட்ஸ் ஐடத்தைப் பார்ப்போமா? பாம்பே சாட்ஸா, கல்கத்தா சாட்ஸா?
ஆனா சோமு சென்னானே 'நம்ம பக்கமெல்லாம் சாட்ஸ் எதுவும் நல்லா இருக்கிறதே இல்லை. வட இந்தியாலதான் சாட்ஸ் எல்லாம் பிரமாதமா இருக்கும்னு'.
ஆமாம். சாப்பாட்டு விஷயத்துலே அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
சைனீஸ் டிஷ் ஏதாவது செலக்ட் பண்ணுவோமா?
நமக்கு இந்த இட்லி தோசையைச் சாப்பிட்டு சாப்பிட்டு வேறே டிஷ்களைப் பத்தியெல்லாம் ஒரு எளவும் தெரிய மாட்டேங்குதே.
சப் சப்னு இருக்குமா, இல்லை கார சாரமா இருக்குமா? சாப்ஸ்டிக் வச்சி சாப்பிடணும்னு சொல்லுவாங்களே. நம்பளாலே முடியுமா? எதுக்காக ரிஸ்க் எடுக்கணும்?
நார்த் இண்டியன் டிஷ் ஏதாவது ட்ரை பண்ணுவோமா? நான், நீ ன்னு என்னவோ எல்லாம் இருக்கே. ஆனா இதையெல்லாம் ஸைட் டிஷ் இல்லாம சாப்பிட முடியாதே.
சைட் டிஷ் இருந்தாலும் வசக், வசக்குன்னு இதையெல்லாம் சாப்பிடறதுக்குள்ளே வாயே வலி எடுத்துப் போயிடுமே. இந்த நானை ஆர்டர் பண்ணினா அதை சாப்பிடறதுக்கள்ளே அதோட நீயா, நானான்னு சண்டையில்லே போடணும்.
சார். என்ன ஆர்டர் பண்ணுறீங்கன்னு சொல்லுங்க சார். நானும் பத்து நிமிஷமா உங்களைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஒண்ணும் சொல்லாமலே இருக்கீங்களே சார்.
கொஞ்சம் பொறு அப்பா. நான் யோசிச்சிச் சொல்றேன். நார்த் டிஷஸ்களோட சைட் டிஷ் விலையைப் பாத்தா சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்கிற கதையாயில்லே இருக்கு.
ஆலூ மக்கர் -- அது என்ன எளவுன்னே தெரியல்லே- எண்பது ரூபாயாம்.
அது என்ன அது மட்டர் பன்னீர்? மட்டமான பன்னீரா இருக்குமோ? பன்னீரையும் வென்னீரையும் கூட சைட் டிஷ்ஷா பண்ணுவாங்களா என்ன? இதெல்லாம் என்னன்னு யாரைக் கேக்கறது? அப்படிக் கேட்டா நம்மை ஒரு மாதிரி பார்ப்பாங்களே.
அது என்ன கோஃப்தா?
என்ன நூறு ரூபாயா? அது எதுவா இருந்தாலும் வேண்டாம்.
இப்படி கொள்ளை அடிக்கிறாங்களே இவங்களையெல்லாம் கவர்மெண்ட் கேக்கக் கூடாதா?
கோபி மஞ்சூரியன் என்ன கோபி, என்ன மஞ்சு, என்ன சூரியன் யாருக்குப் புரியறது? விலை 120 ரூபாயாமே. இதெல்லாம் நமக்கு சரிப் பட்டு வராது.
சார் என்ன சார்? எத்தனை நேரம் ஆச்சு. இன்னும் ஆர்டர் பண்ணாம உட்கார்ந்திருந்தா எப்படி சார்?
சரி. இவன் வேறே தொந்திரவு பண்ணிக்கிட்டு இருக்கான். என்ன சாப்பிடலாம்னு யோசிக்கறதுக்கு டைமே தர மாட்டேங்கறானே.
சார் . நேரம் ஆறது சார். சீக்கிரம்
சொல்லுங்க சார்.
அடடா . என்னப்பா நீ வேறே.
(ஒண்ணும் தோணவே மாட்டேங்குதே. மைண்டே ப்ளாங்க்காப் போயிட்டுதே.)
சரி. ஒரு பிளேட் இட்டிலி, ஒரு தோசை கொண்டுவாப்பா.
இதுக்கா சார் இத்தினி நேரம் யோசிச்சீங்க?
இட்லி, தோசை, காப்பியுடன் என் டிஃபன் இனிதே முடிந்தது.
ஆமாம். பேமெண்ட் கேஷாப் பண்ணலாமா இல்லே கார்டுலே பே பண்ணலாமா?
கார்டுலே பே பண்ணினா ஸ்கிம்மர் வச்சி நம்ம கார்டு டேடா எல்லாம் காபி பண்ணிட்டான்னா ? வேண்டாம். கேஷாவே கொடுத்துடுவோம்.
'பேரர் பில் கொடுங்க.'
இதோ பில்லுக்குள்ளேயே பணம் வச்சிருக்கேன். எடுத்துக்குங்க.
சாவு கிராக்கி. ஒரு டிப்ஸ் கூட கொடுக்க யோக்கியதை இல்லை. இவன் எல்லாம் இங்கே சாப்பிட வந்துடறானுக என்று பேரர் முணுமுணுப்பது என் காதில் விழுந்தாலும் காதில் விழாத மாதிரி
ஆத்துலே தண்ணி கரைபுரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி என்ன தான் ஆசைப்பட்டாலும் த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தும் இட்லி தோசை நம்மை விட்ட பாடில்லையே என்று எண்ணியபடி
எழுந்து போய்க் கொண்டே இருந்தேன்.
 
That is why you were advised to 'put all you eggs in the same basket'

OR at least give different names to each of those eggs! :bump2:

I bet all the readers remember the thread and the story
visually screaming at them more than once :attention:

and at least thrice to my knowledge ! :tsk:

Wisdom is understanding correctly the message being conveyed.

I too want to ask you a question!

"எப்பவும் இட்டிலி, தோசை தானா?" :rolleyes:
 
this story was written by me before Pongal
பொங்கலோ பொங்கல்


ராகு

தை பிறக்குது, தை பிறக்குது, பொங்கல் வருது, பொங்கல் வருது என்று அவரவர்கள் கொட்டாய் விட்டு முடியும் நேரத்தில், அதாவது விடியும் நேரத்தில், குடுகுடுப்பைக்காரர் வாக்குச் சொல்ல அதைக்கேட்டு அரைத் தூக்கத்தில் இருந்த சில இளம் கன்னியர் "தைபிறந்தால் வழி பிறக்கும்"என்ற நம்பிக்கையில் மறுபடியும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தங்கள் கனவுகளைத் தொடர்ந்தனர்.
ஆனால் அதே நேரத்தில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக் கேட்ட பெண்களைப் பெற்ற சில அப்பன்மார்கள் தை பிறந்தால் வழி பிறக்குமோ இல்லையோ, நம் விழி பிதுங்குமே என்று கவலைப்பட ஒரு வழியாகத் தை மாதம் பிறந்தது.
மார்கழி விடியற்காலைக் குளிர் இன்னும் பரிபூரணமாக மறையாததால் இளசுகள் எல்லாம் போர்வையிலிருந்து வெளியே வரத் தயங்கியபடி இருக்க அம்மாக்கள் வாயிலில் சற்று நடுங்கிய கையுடன் தண்ணீர் தெளித்துச் சுண்ணாம்பு மற்றும் சில வண்ணப்பொடிகள் கொண்டு கோலம் போட ஆரம்பித்தனர். தான் உண்ணப் போகும் பொங்கலை நினைத்து நாவில் உமிழ் நீர் சுரக்க தை பிறந்த மகிழ்ச்சியில் அந்த வீட்டுக்குப் பெரிய பாட்டன்மார்கள் அன்றைய பொங்கலில் நிறைய திராட்சையையும் முந்திரிப் பருப்பையும் மறக்காமல் போடச் சொல்லி விட்டு அவரவர் வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஈஸி சேரிலோ அமர்ந்தபடி பேப்பரைப் படித்தபடி ஒரு சிலரும், பிறர் படிக்க அதைக்கேட்டு ரசித்தபடி ஒரு சிலரும் வழக்கம் போல அரசியல்வாதிகளைத் திட்டியபடியும், அரசாங்கத்தை மோசமாக விமரிசித்தபடியும் அன்றைய அரசியலை அக்கு வேறு ஆணிவேறாக அலசிக் கொண்டு இருந்தனர். தூக்கம் தெளிந்து எழுந்த குழந்தைகள் பொங்கலுக்காக வாங்கி வைத்திருந்த முழுக் கரும்பைப் பார்த்தபடி அதை எப்போது தின்னலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர். இந்தப் பல்லில்லாத் தாத்தாக்களும் பாட்டிகளும் எப்படி இதைச் சாப்பிடுவார்கள் என்று அவர்களுக்கு ஒரு நெருடல், ஒரு கவலை. அதே நேரத்தில் பொங்கலுக்கு மாத்திரம் ஏன் இப்படி ஒரு விழா என்று புரியாமல் அவர்களுக்குள் ஒரு குழப்பம். பொங்கலின் பெருமையையும் அதன் மகிமையையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு சில பெரியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த அளவில் குழந்தைகளை அழைத்து அந்த நேரம் பொங்கல் ரெடி ஆகாததால் அவர்கள் கண்களில் பொங்கலைக் காட்டாமல் பொங்கல் மகிமையை விளக்கினர்.
அன்று டிவியில் பொங்கல் பண்டிகையின் பழமையையும் பெருமையையும் விளக்கும் விதத்தில் சிலப்பதிகார காலத்தில் கண்ணகி செய்த பொங்கல் சிறந்ததா இல்லை மாதவி செய்த பொங்கல் சிறந்ததா என்று நடக்க இருக்கும் சிறப்புப் பட்டி மன்ற நிகழ்ச்சி எப்போதும் போலில்லாமல் ஒரு சினிமா அளவிற்கு இரண்டரை மணி நேரம் நடக்க விருப்பதால், குழந்தைகளை உஷார் படுத்தி " பொங்கல் பற்றி பட்டி மன்றத்தில் பல அறிஞர்கள் நின்று பேசுவார்கள். எல்லோரும் உட்கார்ந்து கேளுங்கள், நீங்கள் பொங்கலைப் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று கட்டளை இட்டபடி அவர்களுக்கு முன் இவர்கள் நாற்காலியிலோ தரையிலோ அமர்ந்தபடி டிவியையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தனர். இந்தப் பட்டி மன்றம் பார்ப்பதில் பொங்கல் சாப்பிடுவதைக் காட்டிலும் அதிக ஆர்வம் காட்டியபடி தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் அந்த ஆர்வக் கோளாறின் காரணமாக பொங்கல் பண்டிகையை மறந்து அவரவர்கள் சொந்தக்காசு போட்டு வாங்கின டிவி முன்போ இல்லை இனாமாகவோ அல்லது விலை இல்லாப் பரிசாகவோ கிடைத்த டிவி முன்போ அமர்ந்து வாய்க்குள் ஈயா அல்லது கொசுவா எது போகிறது என்று தெரியாமல் கவனித்தபடி பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்த நேரமும் வந்தது. பட்டி மன்றமும் ஆரம்பமாயிற்று. நடுவர் நட்ட நடு சிம்மாசனத்தில் அமர, பேச்சாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து அதில் கண்ணகி அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு புறமும், மாதவி அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்புறமும் அமைய, நடுநிலையாளர் வணக்கத்துடனும் வழக்கம் போல ஒரு சிரிப்புடனும் தொண்டையைக் கனைக்க, அரங்கமே அதிரும்படி அவர் ஏதோ ஒரு பெரிய ஹாஸ்யத்தைச் சொல்லிவிட்டாரோ என்று சந்தேகப்படும் வகையில் கைதட்டி வாய்விட்டுச் சிரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். நடுவருடைய வழக்கமான பேச்சாளரைப்பற்றிய அறிமுகங்களுக்குப் பிறகு நடுவர் கண்ணகி அணியைச் சார்ந்த அறிஞரைப் பேச அழைத்தார். அவ்வணியைச் சார்ந்த தமிழ்ப்புலவர் ஒருவர் மேடை ஏறி தன் பையன் தீபாவளிபோல் மத்தாப்பும் பட்டாசும் இல்லாத பண்டிகை ஒரு பண்டிகையா என்று கேட்டதாகவும், பொங்கல் பிடிக்காத பக்கத்து வீட்டைப் பையன் ஏன் இட்டிலிக்கோ, வடைக்கோ, மசாலா தோசைக்கோ இல்லை மசாலா நூடில்ஸுக்கோ இப்படி ஒரு விழா கொண்டாடுவதில்லை என்று ஏக்கத்துடன் கேட்டதனால் அவனுடைய தந்தை அவனைப் பொங்கலுக்கு வாங்கின கரும்பினாலே அடித்ததையும் நெக்குருகச் சொல்லி அது ஒரு அறுவடைத்திருவிழா என்று தான் விளக்கிக் கூறியதாகவம், அதைக் கேட்டு , மற்றவர்களைக் காட்டிலும் அறிவுத்திறன் அதிகம் படைத்த தன் பையன் ஒரு வடைகூட இல்லாமல் கொண்டாடப்படும் இவ்விழா எப்படி அறுவடைத்திருவிழா என்று பெயர் பெற்றது என்று கேட்டதாகவும், பரீட்சை ஹாலில் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் முழிக்கும் மாணவர்கள் போல தான் முழிக்க நேர்ந்ததையும் கடைசியில் எவ்வாறு அந்தப் பையனை சமாதானப் படுத்தினார் என்பதையும் முகவுரையாகக் கூறி கண்ணகி செய்த பொங்கலின் பெருமையை விளக்கினார். இன்னொருவர் எவ்வாறு இளங்கோ அடிகள் கண்ணகியின் பொங்கற் சிறப்பையும் பூம்புகாரில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவைவிட இது எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதையும் அவரது கட்டைக் குரலில் இளங்கோ அடிகளே ஏன் இப்படிப் பாடினோம் என்று மனம் நொந்து போகும் அளவிற்கு பாடி முடித்து மேலும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, கலிங்கத்துப்பரணி என்று தனக்குத்தெரிந்த நூல்களைப் பற்றி பலரும் இவற்றை எல்லாம் படித்து இருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் கிடைத்த முப்பது நிமிடங்களில் விளாசித்தள்ளி கண்ணகி செய்த பொங்கலின் சிறப்பை எடுத்துக்கூறினார். அடுத்தவர் பொங்கலன்று பொங்கலைச்சாப்பிடலாம். தீபாவளி அன்று தீபாவளியைச்சாப்பிட முடியுமா என்று ஆரம்பிக்க இந்தப் பட்டிமன்றக் கட்டிடமே இடிந்து விழுமளவிற்குக் கை, கால்தட்டலுடன் கட்டடம் கிடுகிடுத்தது. எப்படி எல்லாப் பண்டிகைகளை விடவும் பொங்கல் மிகச்சிறந்த பண்டிகை என்பதை மற்ற பண்டிகைகளோடு ஒப்பிட்டுப்பேசி, கடைசியில் தான் கண்ணகி அணியைச் சேர்ந்தவர் என்று நினைவு வந்தவராக " எனவே, கண்ணகிப் பொங்கல் என்ற சொல் எப்படிக் காணும் பொங்கல் என்று மருவிற்று என்பதற்கு மற்றவர்கள் சொல்ல மறந்து போன தமிழ் இலக்கியங்களிலிருந்து பாயின்ட் பாயின்டாக ஒரு சில பாயின்டுகளை அள்ளி வீசினார். அப்போது எழுந்த கை தட்டலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிலரும் திடீரென்று கண் திறந்து பார்த்துத் தாங்கள் பட்டிமன்றத்தில் இருப்பதை உணர்ந்து சரிந்து கொண்டு இருந்த நிலையிலிருந்து எழுந்து சரியாக சீட்டில் உட்கார்ந்தனர். பட்டி மன்றத்தில் பேசியவர்களைவிட இந்தக் காட்சியை டிவி நேயர்கள் அதிகமாக ரசித்ததாகக் கேள்வி. கண்ணகி அணிக்கு எதிர் அணியினரோ எதிரணிக்குச் சற்றும் சளைக்காமல் கண்ணகியின் பொங்கல் பழமை கலந்தது, மாதவியின் பொங்கல் புதுமை நிறைந்தது என்று கண்ணகி அணியினர் சொன்ன அதே நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட, நடுவர் திணறிப்போனார். அடுத்து வந்தவர் ஏன் பொங்கலுக்கு மாத்திரம் தனித் திருவிழா, மற்றத் தின்பண்டங்களுக்கு ஏன் இதுவரையிலும் திருவிழா எடுப்பதில்லை, அதற்கு எவ்வாறு கண்ணகிதான் மூலகாரணம் என்பதை யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு செய்யுள் மூலம் விளக்கினார். முன்னாளில் செங்கல் திருவிழா எவ்வாறு தமிழனின் கட்டிடக்கலை அறிவை வெளி உலகிற்குக் காட்ட கொண்டாடப் பட்டது என்பதையும் அது எவ்வாறு நாளாவட்டத்தில் அல்லது சதுரத்தில் பொங்கல் விழாவாக மாறியது என்பதையும் அவையோரின் அட்டகாச ஆர்ப்பரிப்பின் மத்தியில் எடுத்து உரைத்தார். இப்படி ஆண்மணிகளே இவ்வளவு ஆரவாரத்துடன் பொங்கலைப்பற்றிப் பேசும் போது ஆரவாரத்திற்கே மூலகாரணமான பெண்மணிகள் சும்மா விட்டு விடுவார்களா?
கண்ணகி சார்பில் பேசிய பெண் கண்ணகி பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும் அவர் செய்த பொங்கலை மிஞ்சக்கூடிய மணமும் சுவையும் இன்றைக்கு நாம் செய்யும் குலோப்ஜானாக இருந்தாலும் சரி, ரஸகுல்லாவாக இருந்தாலும் சரி எந்தப் பதார்தத்திலும்கிடையாது என்பதைக் கேட்போர் நாவிலிருந்து உமிழ்நீர் சொட்டி அவர்களது உள்ளங்களையும் உடலையும் நனைத்தது. அந்தப் பெண்மணி அதற்கும் ஒரு படியோ, லிட்டரோ மேலே போய் கண்ணகி தயாரித்த பொங்கலின் ரெசிபியை ஒவ்வொன்றாக அதற்கான இலக்கிய இலக்கண நயங்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கினார், இதைக் கேட்ட நடுவர் இந்தப் பொங்கலை அங்கேயே அப்போதே சாப்பிடவேண்டும் என்ற தன்னால் கட்டுப் படுத்த முடியாத தன் அவாவை "வாவ்" என்று கூறி அடக்கிக் கொண்டதை பார்வையாளர்கள் ரசித்தனர். அதை எதிர்த்து மாதவியின் பொங்கலைச் சிறப்பித்துப் பேசிய பெண்மணி, மாதவியின் பொங்கல் ரெசிபியையும், அவர் பொங்கல் செய்த விதத்தையும் வீடியோப் படம் போடாக் குறையாக விளக்கி, அது எவ்வாறு மணம், குணம், ரசம் இவற்றில் சிறந்தது என்பதையும், அதில் அறுசுவை மட்டுமின்றி இன்று நம்மால் கண்டுகொள்ள முடியாத ஏழெட்டு சுவைகள் இருப்பதையும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெரும் காப்பியங்களிலிருந்தும் அடுக்கடுக்காக மேற்கோள்களைக்காட்டினார். மற்றும் இன்னொருவர் எவ்வாறு வாசுகி இந்தப் பொங்கலைச் சமைத்துப்போட, அதை உண்ட பிறகுதான் திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுதும் ஒரு வேகம் வந்தது என்பதை சபையோர் கண்ணகி முற்பட்டவரா இல்லை வள்ளுவர் முற்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் குழம்ப மெய் சிலிர்க்கும் வகையில் விளக்கினார். மற்றொரு பெண்மணி " இப்பண்டிகையைப் பொங்கல் என்ற தமிழ்ப் பெயரால் அழைக்கிறோம். இப்பொங்கல் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் கிடையாது என்று கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி இருந்திருந்தால் இன்று இந்தச்சொல் மறைந்து அந்த ஆங்கிலச் சொல்தான் அனைவர் நாவிலும் நடமாடிக் கொண்டு இருக்கும். நல்ல வேளையாகப் பொங்கல் தப்பியது என்றார். மேலும் தொடர்ந்து " பொங்கல் என்றால் அது வெண் பொங்கலாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்களோ அதை சர்க்கரைப் பொங்கல் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு வெல்லத்தைத்தான் பயன்படுத்துகிறீர்கள். வெல்லப் பொங்கல் என்று சொல்வதில்லையே" என்ற வினாவை என்னிடம் ஓர் விதண்டாவாதி எழுப்பினார். அதற்கு விடை இங்கே கூறுகிறேன். இலக்கியங்களில் பார்த்த போது முதலில் தோன்றியது சர்க்கரைப் பொங்கல்தான் என்றும், வெல்லத்தைப் பயன் படுத்தினாலும் அந்தக்காலத்தில் வெல்லம் கருப்பட்டி என்றும் சர்க்கரை என்றும் அழைக்கப்பட்டதற்கு சர்க்கரைப்பாடியாரின் சர்க்கரைப்பத்து என்ற கவிதைகள் ஆதாரம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். பிறகு தொடர்ந்து கண்ணகிதான் அதற்கு சர்க்கரைப் பொங்கல் என்று பெயர் வைத்தாரென்றும் அதற்குப் போட்டியாக அப்போது வெண் பொங்கல் இல்லாததால் அது வெறும் பொங்கலென்றே அழைக்கப் படலாயிற்று என்பதை அவர் அடித்துச் சொன்னதில் அவர் முன் இருந்த மைக் அங்கிருந்து எகிறி மண்டபத்தில் முதல்வரிசையில் அமர்ந்திருந்தவரின் மூக்கைப் பதம் பார்த்தது. இதனால் அங்கு ஐந்து நிமிடம் ஏற்பட்ட தடையில் பேச்சாளர் சாரி சொல்ல, ஒருவர் அந்த மைக்கை மறுபடியும் மேடை ஏற்றி மூக்கில் அடிபட்டவரை தன் கையிலிருந்த பழைய கர்சீஃபினால் துடைக்க அந்த கர்சீஃபின் வாசனையோ அல்லது நாற்றமோ தாங்காமல் மூக்கில் அடி பட்டவர் முனகியபடி வெளியேற பட்டி மன்றம் தொடர்ந்தது.
இவ்வளவு "பழமையான" தமிழருக்கே உரித்தான கண்ணகி-மாதவி காலத்தில் இருந்து கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று ஒவ்வொருவரும் மாறி மாறிக் கூற, டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது படிக்கும் ஒரு பையன் "ஏம்ப்பா, பொங்கல் இவ்வளவு பழமை வாய்ந்தது என்றால் அது கெட்டுப் போகாமல் இருக்குமா, அதைச் சாப்பிட்டால் வயற்றுக் கோளாறு ஏதும் வந்துவிடாதா?" என்ற தன்தீராத சந்தேகத்தை அருகிலிருந்த தன் தந்தையிடம் கேட்கிறான். அப்போது அவன் தந்தைக்கு வந்த கோபத்தை விவரிக்கவொண்ணாது. இருந்தாலும் நல்ல நாளும் அதுவுமாக அவனை இப்போது அடித்தால் அவன் கூச்சல் போட்டு அழ ஆரம்பித்து விட்டால் பட்டி மன்றத்தைத் தொடர்ந்து காண முடியாது என்ற கரிசனத்தில் அவனைப் பார்த்து "நடுவர் இப்போது தீர்ப்பு அளிக்கும் நேரம் இது. என்னைத்தொந்திரவு செய்யாதே" என்று கூறி அவன் வாயைப் பொங்கல் நுழையாத அளவிற்குப் பொத்தினார். நடுவரும் தன்தரப்பில் எப்படி இரு அணிகளும் பொங்கலை கலக்கு கலக்கு என்று கலக்கினார்கள் என்றும் கண்ணகியின் பொங்கலிலேயே திராட்சை, முந்திரிப் பருப்பு இவை அதிகமாக இருந்ததாகவும், மாதவியின் பொங்கலில் கொஞ்சம் செங்கற் பொடியும், காய்ந்த சில திராட்சைகளும் இருந்ததனால் கண்ணகியின் பொங்கல் கிராம விவசாயிகளின் வீட்டுப் பொங்கல் என்றும் மாதவியின் பொங்கல் வெறும் ஹோட்டல் பொங்கலே என்றும் அதனால் ஹோட்டல் பொங்கலை விட வீட்டுப் பொங்கலே சிறந்தது என்றும் தீர்ப்பளிக்க பட்டி மன்றம் வந்திருந்த அனைவரும் அவரவர்கள் வீட்டிற்குப் போகும் வரை கை தட்டிக் கொண்டே போக பட்டி மன்றம் இனிதே முடிந்தது.
அதைப் பார்த்து முடித்த வீட்டுப் பெரியவர்கள் "சரி பொங்கல் சாப்பிட உட்காரலாமா" என்று அந்த வீட்டு அம்மணிகளைக் கேட்க "அடடா, நாங்களும் பட்டி மன்றம் பார்த்துக் கொண்டு இருந்தபடியால் இன்னும் பொங்கலுக்காக அடுப்பையே மூட்டவில்லை, உலையும் வைக்கவில்லை" என்பதை சோகத்துடன் சொல்லி, வேகமாக காஸ் அடுப்பை ஏற்றி குக்கர்ரை மஞ்சள் இஞ்சிக் கொத்து கொண்ட கொடியினால் சுற்றி அதற்கு மஞ்சள் பூசி ஸ்டிக்கர் குங்குமம் இட்டு "என்னங்க, எதுக்கும் இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே பொங்கல் ஆயிடும், கொஞ்சம் நேரமாயிட்டுது பொறுத்துக்குங்க" என்று சொன்னார்கள். இதைக்கேட்ட வீட்டு ஆண்கள் பொறுமை இழந்துப் பொங்கிப் பசி தாங்கமுடியாமல் பொருமினார்கள். ஆனால் அந்த வீட்டுப் பெரியவர்களோ பொரும முடியாத அளவு பசியில் இருந்த படியால் கோபத்தில் பொங்கியவர்களைப் பார்த்து " பொங்கியது போதும். பொறுத்து இருங்கள். நாம் அனைவரும் பட்டி மன்றத்தில் மூழ்கி இருந்து விட்டு இன்று பெண்களை மாத்திரம்குறை சொல்வது அந்தக் கண்ணகிக்கும், ஏன் அந்த மாதவிக்கும் கூட அடுக்காது" என்று கூறி அனைவரையும் சமாதானப் படுத்த பொங்கல் நன்னாள் இனிதே நிறைவேறியது.
ஆமாம், நீங்க என்ன சார், பானை, விறகு அடுப்பு இல்லாம கிராமத்துலே எப்படி சார் குக்கரையும்,காஸ் அடுப்பையைம் பயன்படுத்தறதாச் சொல்றீங்க என்று சில தமிழன்பர்கள் கோபத்துடன் என்னைச்சாட "ஐயா, நீங்க எல்லாம் எந்தக் காலத்துலே இருக்கீங்க? அரசாங்கமே குக்கர், காஸ் அடுப்பு எல்லாத்தையும் எல்லாக் கிராமத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கிய பிறகு கிராம மக்கள் பலரும் தங்களிடம் இருந்த பானை, விறகு அடுப்பு எல்லாத்தையும் எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டாங்க. அதை எல்லாம் இப்ப ஜனங்க மறந்தே போயிட்டாங்க. இன்னும் நீங்க விறகு அடுப்பு, பானை இதுக்குள்ளேயே இருக்கீங்க. அதுலே இருந்து வெளியே வாங்க" என்று சொன்ன என்னைத் தமிழினத் துரோகி என்று திட்டியபடியே அடுத்த வருடம் போடவிருக்கும் ரோட்டிற்காக சென்ற வருடத்திலிருந்தே மக்களுக்குப் பயன்படுமே என்ற நல்ல எண்ணத்தில் ரோட்டோரம் குவித்து வைக்கப் பட்டு இருந்த ஜல்லி ( இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று நினைக்கிறேன்) மற்றும் கருங்கற்களை என்வீட்டின் மேல் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டபடி எறிந்து மகிழ்ந்தனர்..
 


ஜல்லிக் கட்டுக் கதை
இது ஒரு கட்டுக்கதை அல்ல. நம் தமிழ்நாட்டில் இன்றைய வரலாற்றின் நிகழ்வின் அடிப் படையில் எழுதப் பட்ட இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கற்பனை.
முன்னுரை
பள்ளிக்கட்டு, சபரிமலைக்கு; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சாமியே ஐயப்பா, ஐயப்பா சாமியே,
சாமியேய்........ சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் விண்ணை முட்ட மகர சங்கிராந்தி முடிவடையும் நேரத்தில் "ஜல்லிக்கட்டு, தமிழர்களுக்கு; குத்தும், காயமும் உடலுக்கு மெத்தை, அஃதின்றிப் பொங்கலே பொய்யப்பா, ஏறு தழுவுதலே..... மெய்யப்பா, அது தமிழனின் உரிமையப்பா" என்ற கோஷம் போடும் நிலைமைக்கு தமிழர்கள் இன்று தள்ளப் பட்டுவிட்டனர். இதனால் பல வீடுகளிலும் மகிழ்ச்சியும் பொங்கலும் பொங்க வேண்டிய வேளையில் தமிழக மக்களும், அதைவிட வரப்போகும் தேர்தல் காரணமாக, அரசியல் கட்சிகளும் ஆர்ப்பரித்துப் பொங்கும் நிலை தோன்றிவிட்டது. ஜல்லிக்கட்டை பிராணிகளின் வதைத் தடுப்புப் பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட் தடை செய்ததை நீக்க பத்து நாட்களுக்கு முன் ஒரு போராட்டம் நடந்தது. தேர்தல் இன்னும் சில மாதங்களே இருக்கும் இந்நேரத்தில் திடீரென்று தமிழர்களின் வீரம் பற்றிய நினைவு வரவே, கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வந்த மதுவிலக்கு ஆதரவுப் பிரசாரத்தை தேர்தல் அறிக்கைகளுக்குள் பூட்டிவைத்து விட்டு, முழு ஆவேசத்துடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் குதித்தன. மத்திய அரசும் அதே நோக்கத்தை ஒட்டி ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை அனுமதித்து ஒரு சட்டம் ஒன்று இயற்ற, நம்பிக்கை இழந்து இருந்த ஒரு சில ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் எழ, அதுவரையில் அக்கடா என்று இருந்த எருதுகள், ஒரு சோகப் பார்வையுடனும் பயத்துடனும் எழுந்தன. இதனால் தமிழ்நாடே இன்று இரண்டு பட்டு ஒரு சாரார் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், இன்னொருசாரார் வழக்கம்போல் அதை எதிர்த்தும் நிற்க, மாடுபிடிச் சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்தது. சபாஷ் சரியான போட்டி என்று இந்தச் சண்டையைப் பற்றி எந்தத் தீர்மானமும் செய்யாத பலர் எட்ட இருந்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர். இதற்குள் மிருகவதைத் தடுப்புச் சட்ட ஆதரவளர்கள் அதிர்ச்சியுற்று இந்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க, பொங்கல் இரண்டே நாட்கள் இருக்கும்போது இந்த எருதுச் சண்டைக்குத் தடை விதித்தது சுப்ரிம் கோர்ட். மக்கள் தங்கள் கட்சியை எடுத்துப்பேச, இந்த வாயில்லா ஜீவன்களான எருதுகளுக்குப் பதில் மிருக வதைத்தடுப்புச் சட்ட ஆதரவாளர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஆனாலும் எருதுகளுக்கு முழு நியாயம் செய்ததாக ஆகுமா? எனவே என்னுடைய இந்தக் கோர்ட்டில் மனிதர்கள் தங்கள் பக்கத்தை எடுத்துச் சொன்ன பிறகு, எருதுகளையே தங்கள் கட்சிக்குப் பேச அனுமதிக்கிறேன்.
வழக்கம்போல் இல்லாமல், வீண்வாதங்களை எல்லாம் சென்ஸார் செய்து சுருக்கமாக வழங்கப்பட்ட வழக்கின் சாரம் இதோ:
வாதப் பிரதிவாதங்கள்
நீதிபதி: உங்க கட்சி வாதத்தை ஆரம்பியுங்க.
ஜ(ல்லிக்கட்டை ஆதரிக்கும் மக்கள் கட்சியின்) வக்கீல்: நீதிபதி அவர்களே, ஜல்லிக்கட்டு என்பது மஞ்சு விரட்டு என்ற பெயரிலும், மாடுபிடிச்சண்டை என்ற பெயரிலும், ஏறு தழுவுதல் என்ற பெயரிலும் இன்னும் பல்வேறு பெயர்களிலும் தமிழ்நாடு முழுவதும் தமிழனின் ஒரு வீர விளையாட்டாக புராண காலந்தொட்டு அனுசரித்து வரப்படுகிறது. பசுவை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது போல் .....


எருது வக்கீல்: இங்கே எங்களைப் பற்றிப் பேசாமல் எதிர் கட்சி வக்கீல் பசுக்களை அனாவசியமாக இழுக்கிறார். ( நீதிபதி: அமைதி, அமைதி)


ஜ.வக்கீல்: நான் இங்கு பசுவைப்பற்றி பேச வரவில்லை, மைலார்ட். எப்படிப் பசுவையும், எருதையைம்
மனிதர்கள் கௌரவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல வந்தேனே ஒழிய பசுவைப் பற்றிப் பேசவரவில்லை.


நீதிபதி: சரி, நேரத்தை வீண் அடிக்காமல் சுருக்காக உங்கள் கட்சியின் கருத்தைச் சொல்லுங்கள்.


ஜ.வக்கீல்: தமிழ்க் கடவுளான சிவனின் வாகனமாகக் கௌரவிக்கப்படும் எருதைப் போற்றுவது தமிழனின் மரபு. இதோ இங்கே நிற்கிறாரே எருது வக்கீல், அவரையும் நாங்கள் மதிக்கிறோம். சாதுப் பசுவுடன் நாங்கள் இந்த வீர விளையாட்டை விளையாடவில்லை. ஆண்மை மிக்க, வீரியம் வாய்ந்த வீர எருதுடன்தான் விளையாடுகிறோம். இது தமிழனின் ஒரு கலாசாரச் சின்னம். இதைத்தடை செய்வது என்பது தமிழினத்தை இழிவு படுத்துவதாகும். இந்த விளையாட்டிற்கு ஏன் தடை?


எ.வக்கீல்: மை லார்ட்,இது ஒரு கொடுமையான விளையாட்டு. இதில் நாங்கள் சித்திர வதை செய்யப்படுகிறோம். நாங்கள் பொதி சுமக்கிறோம். வண்டி இழுக்கிறோம். ஏர் உழுகிறோம். அதைப் பற்றி எல்லாம் என்றாவது நாங்கள் எங்கள் உணவை உண்ணும் நேரம் தவிர, வேறு நேரத்தில் எங்கள் வாயைத்திறந்து இருக்கிறோமா? ஆனால் வீர விளையாட்டு என்று சொல்லி இவர்கள் எங்களின் தோலைக் குத்திக் கிளறிக் காயப்படுத்திப் பலவித இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்துகிறார்கள். எனவே இதைத்தடை செய்ய வேண்டும்.


ஜ.வக்கீல்: இந்த எருது வக்கீல் இந்த வீர விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாத, ஏன் எருதுகளை வாழ்க்கையிலே பார்த்திராத பல எருமைகளாலும் - மன்னிக்க வேண்டும்- சோணங்கிகளினாலும் தூண்டப்பட்டு இவர் இவ்வாறு பேசுவது பற்றிக்கொண்டு வருகிறது. இதை எதிர்ப்பவர்கள் பெரும்பாலோரும் பண்பற்ற படித்தவர்கள், நகரவாசிகள்தான். நகரத்திலிருந்து நகரா இந்த நகரவாசிகளுக்கு, நம் ஊர் கிராமங்களைப்பற்றியும் அவர்களுடைய பழக்க வழக்கங்களைப் பற்றியும் என்ன தெரியும்? இவர்களுக்கு எருதுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா? அவர்கள் என்றாவது ஒரு எருதையாவது அருகிலிருந்து பார்த்திருப்பார்களா? அன்புடன் அதைத் தடவிக் கொடுத்து இருப்பார்களா? அரவணைத்து இருப்பார்களா? கரப்பான்பூச்சி, எருது, எருமை இப்படி எதைக் கண்டாலும் பயந்து காத தூரம் ஓடுபவர்கள் அவர்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு அவர்களின் வக்கீல் பேசுவதைக் கண்டால் ஏதோ சம்திங் வாங்கிக் கொண்டுதான் இவ்வாறு பேசுகிறார் என்று தோன்றுகிறது


எ. வக்கீல்: இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன், மை லார்ட். இவர் எங்கள் இனத்தைக் கொடுமைப்படுத்துவது மாத்திரம் இல்லாமல் அவமானமும் படுத்துகிறார். இந்த மனிதர்கள் மாதிரி ஏதவது சம்திங் வாங்கிக்கொண்டு சுயலாபம் பார்க்கும் கயவர்கள் அல்ல நாங்கள். லஞ்சம் வாங்குவதும் ஊழல் செய்வதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதும் இந்த மனிதர்களின் புத்தி. சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு இந்தப் புத்தி வராது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மல்லுக்கட்டுக்கு நிற்கும் நீங்கள், எப்போதாவது எங்கள் வயிறு நிறையும் அளவிற்குக் புல்லுக்கட்டாவது கண்களில் காண்பித்திருப்பீர்களா?


ஜ.வக்கீல்: இதை நான் ஆட்சேபிக்கிறேன். சினிமா வசனம் போல கேட்க அழகாய் இருக்கிறது என்பதால் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்குப் புல்லுக்கட்டு வாங்கிப் போடுகிறோம்.....


நீதிபதி: சரி, விஷயத்திற்கு வாருங்கள்.


ஜ.வக்கீல்: நாங்கள் எல்லாக் காளைகளுடனும், முக்கியமாக சோதாக் காளைகளுடனும் மோதுவதில்லை. இதற்காக என்றே பராமரிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட வீரியம் வாய்ந்த காளைகளுடன்தான் மோதுகிறோம். ஏறுதழுவுதல் என்ற இது, தவறாக எருதுடன் மோதல், சண்டை போடுதல் என்று விஷம்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. வீரியம் வாய்ந்த காளைகளை களத்தில் இறக்கி அவற்றை ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு அது துள்ளிக்குதித்து வீரிட்டு ஓடும்போது அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் அந்த எருதினால் உதறப்படாமலும், தள்ளப்படாமலும், கீழே விழாமலும்எருதிற்கு எந்த பாதிப்பும், சேதமும் இல்லாமலும் அதைக் கடைசி வரையில் அணைத்து அரவணைத்துச் செல்பவனே வெற்றி பெற்றவனாகக் கருதப்படுவான். அந்த வீரனுக்கு அக்காலத்தில் பொற்காசும் தற்காலத்தில் அதற்கேற்ப காகிதக்காசும் கொடுத்துக் கொண்டாடப்படுவதுதான் இந்த வீர விளையாட்டு. இதில் வெற்றி பெற்ற வீரனையே மணப்பதாக பல வீரப்பெண்மணிகள் சபதம் எடுப்பது வழக்கம். இது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பழக்கம். இன்றும் இந்த வீரவழக்கம் தொடருகிறது.


எ. வக்கீல்:: இவர்களுடைய வீர சபதத்திற்கும், விளையாட்டிற்கும் நாங்கள் என்ன விளையாட்டுப் பொருளா? இந்தக் கேடு கெட்ட மனிதர்கள் ஜெயிக்க எங்களுக்குப் பிடிக்காத சனியன் பிடித்த சாராயத்தை ஊற்றியும், வேறு விதத்தில் போதை ஏற்றியும், கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியும் எங்களை ஆத்திரப்படுத்தியும், ஆவேசப்படுத்தியும் வெறி ஏற்றுவார்கள். நாங்கள் வாடிவாசலிலிருந்து வேகமாக அரங்கத்திற்கு வந்த உடனே எங்கள் மீது பல போக்கற்ற இளம் வாலிபர்கள் பாய்ந்து, கூறிய ஆணிகள் பதித்த கட்டைகளாலும், ஈட்டி போன்ற உபகரணங்களாலும் படுகாயப்படுத்துவது கொடுமை இல்லாமல் வேறு என்ன? எங்கள் சம்மதம் பெறாமல் எங்களுக்கு இஷ்டமில்லாத இந்தச் சண்டையில் எங்களை ஈடுபடுத்துவது ஒருதலைப் பட்சமானது. எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எங்கள் கொம்பினால் குத்தப்பட்டும் தூக்கி எறியப்பட்டும் ஒரு சிலர் இறப்பதும், படுகாயங்களடைவதும் ஆண்டுதோறும் நடை பெறுகின்றன. ஆனால் அவர்கள் காயத்திற்கும் இறப்புக்களுக்கும் நாங்கள் பொறுப்பில்லை. அவர்களே அதை விரும்பி ஏற்றுக்கொண்டுதான் வருகிறார்கள். நீங்கள் எங்களுக்குப் பலவிதத்திலும் புரிகிற கொடுமைகளுக்கு உங்களை மிதித்து, குத்திக் கொன்றால் கூட தப்பே இல்லை. நாங்கள் உங்களை மாதிரி கேடு கெட்ட ஜன்மங்கள் இல்லை. அந்தப் பாவம் எங்களுக்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மேலும் பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்கள் விசிலடித்தும், கூக்குரலிட்டும் எங்களை நடுங்க வைப்பதால் நாங்கள் அரண்டு போய் உயிருக்குப் பயந்து ஓடும்போது எங்கள் மேல் பலர் பாய்ந்து துன்புறுத்துவது கொடுமை இல்லாமல் அது வீர விளையாட்டா? அப்படி வீர விளையாட்டு விளையாட வேண்டுமென்றால் வாருங்கள். ஒண்டிக்கு ஒண்டி விளையாடுவோம், வருவீர்களா? உங்க வீரத்தை அப்போது காட்டுங்கள். நாங்கள் உங்களைவிட பலமடங்கு பலசாலிகள் தான். எங்கள் ஒருவரின் சராசரி எடை 350 கிலோ கிராம். உங்களின் சராசரி எடை ஒருவர்க்கு 70 கிலோ கிராம்னு வைத்துக் கொள்ளுவோம். அப்படி இருக்க சம பலத்துடனோ அல்லது எடையுடனோ ஒரு ஐந்து பேர் எங்கள் மேல் பாய்ந்து போராடினால் அது நியாயம். தர்மம். அதை விட்டுவிட்டு ஊரிலே இருக்கிற எல்லோரும் பாய்ந்தால் அது எப்படி நியாயமோ, முறையோ ஆகும்? ஏன் உங்கள் வீரத்தைக் காட்ட ஒரு சிங்கத்தோடோ அல்லது புலியோடோ சண்டை போடுவதுதானே. முறம் கொண்டு ஒரு தமிழ்ப் பெண் புலியை விரட்டியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் நீங்கள், ஏன் எங்களைப் போன்ற சாதுவான ஆடு,மாடு, கோழி கொக்கு போன்றவர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டுகிறீர்கள்? ஏனென்றால் நாங்கள் இளிச்ச வாயர்கள். நாங்கள் வெறும் புல்பூண்டுகளைத் தான் சாப்பிடுகிறோம். உங்களையும் சாப்பிடுவதில்லை. உங்களைப் போல வேறு உயிரினங்களையும் சாப்பிடுவதில்லையே. உங்களுக்கு உதவியாகத்தானே நாங்கள் இருக்கிறோம். அப்படி இருக்க நீங்கள் ஏன் எங்களைத் தொந்திரவு செய்கிறீர்கள்?


ஜ. வக்கீல்: இவர் உண்மையை மாற்றிக்கூறுகிறார் யுவர் ஆனர். யாரும் இவர் கூறுவது போல் குச்சிகளையும், ஆணிகளையும் பயன்படுத்துவதில்லை. சாராயம் கொடுப்பதில்லை. கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவதில்லை. எங்கோ, எப்போதோ நடந்திருக்கலாம். அவ்வாறு நடப்பது தெரிந்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் வீர விளையாட்டை ஒழிப்பதற்கென்றே இவர் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார். நான் கேட்கிறேன் நாங்கள் விளையாடும் இந்த விளையாட்டு ஒரு கொடுமையான விளையாட்டென்றால், உங்களால் சுமக்க முடியாத அளவுக்குச் சுமைகளை ஏற்றி வண்டியை இழுக்க முடியாமல் இழுக்கும்படி செய்வதற்கு என்ன பெயர்? காய்ச்சிய இரும்பினால் உங்கள் உடம்பில் சூடு போடும் வழக்கத்திற்கு என்ன பெயர்? உங்களை ஆண்மையை இழக்கப் பயன் படுத்தப்படும் முறையின் கொடுமைக்கு என்ன பெயர்? இது தவிர வயதின்காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ பயன்படாது போன முப்பது அல்லது நாற்பது எருதுகளை பத்து எருதுகளே கொள்ளளவு உள்ள ஒரு லாரியில், கால்கள் அசைக்க முடியாமலும், படுக்கவும் முடியாமலும் கட்டிப்போட்டு, ஆகாரமும் தண்ணீரும் இன்றி நின்றபடி நெடு நேரம் பயணம் செய்யும்படி செய்வதற்கு என்ன பெயர்? கடைசியல் கேரளாவிலுள்ள இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப் பட்டு அங்கு நீங்கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுவதற்கு என்ன பெயர்? சாப்பிடுவதற்காகப் பல மிருகங்களும் கொல்லப்படுகின்றனவே, அதற்கு எல்லாம் என்ன பெயர்? சாமி பேரைச் சொல்லிப் பலி இடுகிறார்களே அதற்கு என்ன பெயர்? நாய்களையும் பூனைகளையும் வீட்டில் வளர்க்கிறார்களே. அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து பிரித்து வீட்டுக்குள் அடைக்கப்படுவது என்ன நியாயம்? இதற்கு எல்லாம் நாட்டில் தடை இருக்கிறதா? இல்லையே. இதை எல்லாம் தடை செய்யாமல் ஒரு தமிழ் நாட்டு வீர விளையாட்டைத் தடை செய்வது என்ன நியாயம்? இதைத்தடை செய்வதனால் நல்ல வீரிய எருமைகள் நாட்டில் இல்லாமல் போய்விடும். நாட்டு மக்களிடம் ஏற்கெனவே மங்கிவிட்ட வீர உணர்ச்சி ஜல்லிக்கட்டுத் தடையினால் இன்னும் மங்கி வடும். பல இளம் பெண்களின் கனவுகள் சிதைந்து விடும். இப்போதே இந்த எருதுகளின் மதிப்பு மார்க்கெட்டில் வெகுவாகக் குறைந்து விட்டது. இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? இந்த ஜல்லிக்கட்டினால் பொங்கல் திருவிழா பொலிவு அடைகிறது. பல வெளி நாட்டவரும் வந்து இதைப் பார்ப்பதால் இதன் மதிப்பு கூடுகிறது. இது இல்லை என்றால் பொங்கல் திருவிழா எங்களுக்குக் கருப்புப்பொங்கல் விழாதானே தவிர இனிப்புப் பொங்கல் விழா இல்லை. தமிழர்களின் பண்பாட்டையே சீர் அழிக்கும் இந்தத் தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளுமே ஆதரிக்கும் இந்த ஜல்லிக் கட்டு நடைபெற தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் அனைவர் சார்பிலும் கனம் நீதிபதி அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


எ. வக்கீல்: இவர் குறிப்பிட்ட கொடூரங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே தடைச்சட்டம் உள்ளது. அதை சரியான முறையில் அமல் படுத்தாததுதான் தவறே தவிர அந்தச் சட்டங்கள் இல்லாமல் இல்லை. நீங்கள் கூறிய வேறு சில கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு அவற்றையும் தடை செய்ய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வோம். உண்பதற்காக உயிர்கள் கொல்லப்படுவது இயற்கையின் நியதி. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழி நீங்கள் அறிந்ததே. நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பது தடை செய்யப்படவேண்டும் என்றால் எங்களையும் வீட்டுப் பிராணியாக வளர்க்கக் கூடாது. நாங்கள் மிருக வதைத்தடை அமைப்புடன் பேசி நீங்கள் சொன்ன பல தடைச்சட்டங்களையும் கொண்டு வருவோம். மக்களின் வீர விளையாட்டுக்கு எதிரி அல்ல நாங்கள். சிங்கம் அல்லது புலியுடன் போராடி உங்களின் வீரத்தைக் காட்டுங்களேன். இல்லை வேறு பழந்தமிழ் வீர விளையாட்டுக்களான கபடி, வில்வித்தை, மல்போர், சிலம்பம் என்று ஏராளமான விளையாட்டுகளுக்கு உயிர் கொடுத்து உங்கள் வீரத்தை நிலை நாட்டுங்களேன்.அப்போது நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே உங்கள் வீரத்தைப் போற்றும். தமிழர்கள் பின் பற்ற எவ்வளவோ வேறு பல நல்ல பண்புகளும் பாரம்பரியமும் இருக்க, ஏதோ ஜல்லிக்கட்டு ஒன்றுதான் தமிழர்களின் புராதான வீர விளையாட்டு என்பது உங்கள் நெஞ்சில் வீரமுமில்லை, ஈரமுமில்லை என்று காட்டுகிறது. மறக்கப்பட்ட மற்ற வீர விளையட்டுக்களுக்கு புத்துயிர் கொடுங்கள். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். "அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கிறார்கள். எனவே இந்த ஐல்லிக்கட்டை ஆதரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்" என்று எதிர் கட்சி வக்கீல் கேட்டுக் கொண்டார். நான் சொல்கிறேன். வரும் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறவே அவர்கள் இதை ஆதரிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் இதில் ஈடுபடுவதை ஆதரிக்கிறார்களே தவிர , இது வரையில் தங்கள் வீட்டு வீர மகன்களை இந்த விளயாட்டிற்கு என்றாவது அனுப்பி இருப்பார்களா? கிடையாது? அது ஏன்? எனவே கனம் நீதிபதி அவர்களே! எங்கள் பக்கம் உள்ள நியாயங்களை ஏற்று எங்களை ஜல்லிக்கட்டிலிருந்து விடுவிக்க ஜல்லிக்கட்டுத் தடை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.
இரு பக்க வாதங்களும் ஓய்ந்தன. முடிவை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்தவாறு நீதிபதியையே பார்க்கின்றனர்.


தீர்ப்பு
நீதிபதி: இதற்கான தீர்ப்பு போன வருட பொங்கலுக்கு முன்பு கூறியது போலவே, அடுத்த பொங்கல் வரையிலும் ஒத்தி வைக்கப்படுகிறது.


இதனால் எருதுக் கூட்டம் சந்தோஷமடைய, அவர்களின் எதிரிக்கூட்டம் பெரும் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தார்கள். வாதாடிய ஜல்லிக்கட்டு வக்கீலுக்கு சல்லிக்காசு கூட தரமாட்டோம் என்ற கோபத்துடன் அவர் தெருவில் நடமாட முடியாத அளவிற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவர்மீது ஆத்திரம் அடைந்து ரோட்டில் இருந்த ஜல்லிக்கற்களை இவர்மீதும், அரசாங்கக் கட்டிடங்களின்மீது எறிந்தும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். ஒரு சிலர் ரோடுகளில் "தான் உண்டு, தன் வேலை உண்டு" என்று திரிந்த சில எருதுகளின் மீது காரணமில்லாமல் ஆத்திரம் கொண்டு, ஓரிரு கற்களை வீசினார்கள். அவை பயந்து நாற்கால் பாய்ச்சலில் ஓடவே அவற்றைத் தொடர்ந்து துரத்தி ஒரு சிலர் தங்கள் ஜல்லிக்கட்டு ஆர்வத்தைத் தீர்த்துக் கொண்டனர். வேறு சிலர் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பொங்கலே இல்லை, அது கருப்புப் பொங்கல் என்றும் கசப்புப் பொங்கல் என்றும் கூறி தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர். வேறு பலர் ஆங்காங்கே நடு ரோட்டில் உட்கார்ந்து பொங்கல் சாப்பிடாமல் தர்ணா செய்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள். சில இடங்களில் இதைக் கண்டிக்கும் வகையில் நாய்ப் பிடிச்சண்டைகளப் போட்டு மகிழ்ந்தார்கள். மக்கள் பலரும் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வரை தீர்மானித்தார்கள். அரசியல் கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம்போல மத்திய அரசை திட்டித் தீர்த்தார்கள். அதே சமயத்தில் தங்கள் குழந்தைகள் யாரும் ஜல்லிக்கட்டில் ஈடுபடுவதை விரும்பாமல் தடுத்தார்கள். ( இதற்கிடையே ஆங்காங்கே அரசாங்கத்தின் மறைமுக ஆசியுடனும், போலீஸின் பாராமுகத்துடனும் ஜல்லிக்கட்டு நடந்ததாக இரகசியச் செய்திகள் பகிரங்கமாகக் கசிய ஆரம்பித்தன.) சட்டத்திற்குப் பயந்த சில வீர வாலிபர்கள் மஞ்சு விரட்டு என்று கூறப்படும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உள்ளூரிலிருக்கும் மஞ்சு என்ற பெயர் கொண்ட பெண்களை பின்னாலே சென்று விரட்ட ஆரம்பித்தார்கள்.
 
guru ji,


After reading your stories, I thought of scolding you
[FONT=&quot]“[/FONT] தமிழர் துரோகி ; தமிழின துரோகி ”.

But ends with the comment ...... " Stories are very good " .
 
வாரத்துக்கு ஏழு நாள்தானே இருக்கு. என்ன பண்றது?
ராகு
ஞாயிறு
ஏன்னா, இன்னிக்கு எனக்குப் பல் ரொம்ப வலிக்கிறது. ஏதாவது பல் டாக்டர்கிட்டே உடனே போய்க் காண்பிக்கணும். இந்த வலது பக்கத்திலே ஒரு வாழைப் பழத்தைக் கூட கடிச்சி சாப்பிட முடியல்லைன்னா பாருங்களேன்.
வாழைப் பழத்தை கடிச்சு சாப்பிடாதே. அப்படியே முழுங்கிடு.
ஏன் நான் தொண்டை அடைச்சு சாகறதுக்கா? உங்க கிட்டே போய் சொன்னேனே.
இப்ப நான் என்ன பண்ணணும்னு சொல்றே?
நாளைக்குக் கட்டாயமா பல் டாக்டர் கிட்டே போகணும்.
உடனே போகணும்னு சொன்னியே.
இன்னிக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதனாலே நாளைக்குக் கட்டாயமா மறக்காம போகணும்.
மறந்து போயிட்டா என்ன பண்றது?
வலி உயிர் போயிண்டு இருக்கும்போது அது எப்படி மறந்து போகும்?
சரி. நாளைக்குப் போவோம். அது வரையிலும் நீ வலியைப் பொறுத்துக்கணும்.
திங்கள்
என்ன இன்னிக்கு பல் டாக்டர் கிட்டே போகலாமா?
வேணாம்.
ஏன்? வலி நின்னுடுத்தா?
கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனால் இன்னிக்குக் காத்தாலேயிருந்து இந்த வலது கண் தான் சரியாயில்லே. உங்க மூஞ்சியைப் பாத்தா புசுபுசுன்னை ஒரு பேயைப் பாக்கறமாதிரி இருக்கு. அதே இந்த இடது கண்ணாலே பாத்தா நீங்க நீங்க மாதிரியே தெரியறேள்.
நல்ல வேளையாப் போச்சு.
என்ன நான் சொல்றேன் இந்தக் கண் சரியில்லேன்னு, நீங்க நல்ல வேளையாப் போச்சுங்கறேளே. நாளைக்கே ஒரு கண் டாக்டர் கிட்டே போகணும்.
நாளைக்கு எதுக்கு? இன்னிக்கே போகலாமே.
இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கேன். அதுவும் இப்ப இருக்கிற இந்தக் கண் புசுபுசுப்போடே என்னாலே வெளியிலே கிளம்ப முடியாது.
நாளைக்கு டயர்டா இருக்காது, கண் புசுபுசுப்பு சரியாயிடுங்கறது என்ன நிச்சயம்?
சும்மா குதர்க்கமா பேசாதீங்கோ. நாளைக்குப் போகலாம்னா விடுங்களேன்.
சரி. உன் இஷ்டம். நாளைக்கே போவோம்.
செவ்வாய்
ராத்திரி பூராவும் எனக்குத் தூக்கமே இல்லை. அதுவும் நீங்க விடற குறட்டை சத்தம் வேறே. கொஞ்ச நஞ்ச தூக்கமும் கெட்டுப் போயிடுத்து.
ஏதோ நான் புதுசா குறட்டை விட ஆரம்பிச்ச மாதிரி சொல்றே. 50 வருஷமா குறட்டை விட்டுண்டுதான் தூங்கறேன். அதுக்கு இப்ப என்னங்கறே? அது சரி. இன்னிக்குக் கண் டாக்டர் கிட்டே போகணுமே. அது என்ன ஆச்சு?
சரியாத் தூங்காததாலே கண் ஒரு மாதிரியா டயர்டா இருக்கு. இப்படி இருக்கும்போது போனா கண் டெஸ்டு சரியா இருக்காது. அதனாலே இன்னிக்கு வேண்டாம். அடுத்த வாரம் பாத்துப்போம்.
அடுத்த வாரமா? அது சரி. இன்னிக்கு வேறே கோளாறு எதுவும் இல்லியா?
நல்ல வேளை. ஞாபகப் படுத்தினேள். இன்னிக்குக் காத்தாலே படுக்கையிலே இருந்து எழுந்திருக்கும்போது இந்த வலது பக்கத்துலே சுரீர்னு ஒரு வலி உயிர் போற மாதிரி.
உயிர் போச்சா இல்லியா?
என் உயிர்னா உங்களுக்கு அவ்வளவு கிண்டலா போச்சா?
சரி. இப்ப என்ன பண்ணணுங்கறே?
இந்த மாதிரி வலிக்கெல்லாம் அல்லோபதி லாயக்கில்லை. சித்த வைத்தியம்தான் லாயக்கு.
சரி. சித்த வைத்தியர் கிட்டே போவோம்.
அவர் மெட்ராஸூக்கு நாளைக்குத்தான் வரார்.
சரி. நாளைக்குப் போவோம்.
புதன்
ஆ!அச்!அச்!
என்ன? காலங்காத்தாலே ஒரேயடியா தும்மல்?
நேத்து ராத்திரி மழை பெஞ்சதோன்னோ? அது தான் ஜலதோஷம் புடிச்சுடுத்து. தும்மல் தும்மலா வந்துண்டு, மூக்கடச்சிண்டு. மனுஷாளுக்கு எது வந்தாலும் வரலாம். ஜலதோஷம் மாத்திரம் வரவேபடாது.
ஒவ்வொரு கோளாறு வரும்போதும் இதே டயலாக்கைத் தான் விடறே. சித்த வைத்தியம் என்ன ஆச்சு? அந்த வைத்தியரைப் பார்க்கப் போக வேணாமா?
ஜலதோஷத்துக்கு ஏற்கனவே அவர் கொடுத்த மருந்து இருக்கு. அதை வச்சி சமாளிச்சடலாம்.
அது சரி. ஏதோ வலின்னு சொல்லி அதுக்குத்தானே சித்த வைத்தியரைப் பார்க்ணும்னு சொன்னே.
சொன்னேன்தான். ஆனா இப்ப இருக்கிற ஜலதோஷம் தலைவலியோட அவரைப் பார்க்க வேணாம். அடுத்த தடவை வரும்போது பாத்துப்போம்.
அதுவும் சரிதான். அந்த வலி அடுத்த தடவை வராமலா போயிடப் போறது? அப்பாடா. இன்னிக்கோ நாளைக்கோ ஒரு டாக்டர் கிட்டேயும் போகவேண்டாம். நிம்மதி.
நாளைக்குத் தான் டாக்டர் சேஷசாயியை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி ஃபோன் பண்ணியிருக்கேன்.
எதுக்கு?
எதுக்கா? எல்லாம் உங்களுக்காகத்தான். இப்படியே நீங்க விட்டுட்டேள்னா கடைசியிலே அது பைல்ஸுலே கொண்டு போய் விட்டுடும். அப்புறம் அது இதுன்னு ஏகப் பட்ட தொந்திரவு வந்துடும். நீங்க உடம்பைக் கவனிச்சுக்கறது பத்தவே பத்தாது.
ஈயத்தைப் பாத்து இளிச்சதாம் பித்தளை. அந்தக் கதையா இல்லே இருக்கு. நீஆயிரத்து எட்டு கோளாறு வெச்சிண்டு எனக்கு வைத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணறயா?
வியாழன்
எனக்கு இந்த இடது கை ராத்திரியிலிருந்து ரொம்ப வலிக்கிறது. எனக்கு என்னவோ பயமா இருக்கு. அந்த மாதிரி வலிச்சா ஹார்ட் பிராப்ளமா இருக்கும்னு நினைக்கிறேன். உடனே ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்டைப் போய்ப் பார்க்கணும்.
ஆமாம். இதெல்லாம் டிலே பண்ணக்கூடாது. உடனே பாத்துட வேண்டியதுதான்.
ஆனா டாக்டர் சேஷசாயியை வரச்சொல்லி இருக்கேனே. அவருக்கு டைம் கெடச்சி வீட்டுக்கு வரேன்னு சொல்றதே பெரிய விஷயம். அப்படி அவர் வரேன்னு சொல்லி இருக்கும்போது நாம இங்கே இல்லேன்ன எப்படி?
சரி. வரவேண்டாம்னு ஃபோன் பண்ணிடு.
நன்னா இருக்கே. நான் பத்து நாளா டிரை பண்ணி நேத்து ஃபோன்லே அவரைப் பிடிச்சி அப்பாயிண்மெண்ட் வாங்கி இருக்கேன். இப்ப விட்டா அவ்வளவுதான். மறுபடியும் அவரைப் பிடிக்க முடியாது. ஹார்ட் ஸ்பெஷலிஸ்டை இன்னொரு நாள் பாத்துப்போம்.
ஹார்ட்லே வலின்னு சொன்னே. வலி இருக்கும்போதே டாக்டரைப் பார்த்துடறது நல்லது தானே.
ஆமாம். இன்னொரு நாள் ஹார்ட்லே வலி வராமலா போயிடும்?
சரி. எத்தனை மணிக்கு உன் டாக்டர் வரேன்னு சொல்லி இருக்கார்?
மத்தியானத்துலே இருந்து சாயந்திரத்துக்குள்ளே எப்ப டைம் கிடைக்கிறதோ அப்ப வரேன்னு இருக்கார்.
இப்படிச் சொன்னா எப்படி? ஏதாவது ஒரு கரெக்ட் டைம் சொல்ல வேண்டாமா?
அவர் ரொம்ப பிஸியான டாக்டர். அந்த மாதிரி எல்லாம் அவராலே கரெக்ட் டைம் சொல்ல முடியாது.
(சாயந்திரம் 6 மணி வரையிலும் காத்திருக்கிறார்கள். அப்போது ஃபோன் ஒன்று வருகிறது)
ஃபோனை எடுத்துப் பேசு. உன் டாக்டராகத்தான் இருப்பார்.
என்ன டாக்டர்? என்ன சொல்றேள்? உங்க டிஸ்பென்ஸரியிலே நிறைய பேர் வெயிட் பண்ணிண்டு இருக்கிறதாலே உங்களாலே வர முடியாதா டாக்டர்?
(ஃபோனை வைத்து விட்டு) இன்னிக்கு டாக்டராலே வர முடியாதாம். எப்ப வர முடியுங்கிறதை அப்பறம் சொல்றாராம்.
(மனதிற்குள்)அப்பாடா இன்னிக்கு இவர் கிட்டே இருந்து தப்பிச்சோம். (பலமாக) இவராலே ஒரு நாள் வேஸ்ட். ஹார்ட் ஸ்பெஷலிஸ்டையாவது பாத்திருக்கலாம்
வெள்ளி
என்ன தொண்டையெல்லாம் ஒரே கரகரப்பா இருக்கு. இன்னிக்கு என்ன பிராப்ளம்?நேத்து நான் சொன்னேனே ஜலதோஷம்னு. மூக்கடைப்புலே இருந்து ஜலதோஷம் இன்னிக்குத் தொண்டைக்கு இறங்கிடுத்து. தொண்டை பூராவும் ஒரே கர கரன்னு அறுக்கறது. பேசவே கஷ்டமா இருக்கு.
அடடா, கேக்கவே கஷ்டமா இருக்கே.
அடிக்கடி தொண்டையிலே கரகரப்பு வந்தா கேன்ஸர் வரும்னு சொல்வாளே. அது நெஜமா இருக்குமா?
சும்மா நீயா கவலைப் பட்டு எங்கேயோ இருக்கிற கேன்சரை இன்வைட் பண்ணாதே. வெறும் தொண்டை கரகரப்புத்தான். வொர்ரி பண்ணிக்காதே. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் சமாசாரம் என்ன ஆச்சு?
அதை விட்டுத் தள்ளுங்கோ. அதை விட முக்கியமான சமாசாரம் இது.
எது?
இந்தத் தொண்டை கரகரப்பு சமாசாரம். இப்படித்தான் என் ஒண்ணு விட்ட தம்பி வெறும் ஜலதோஷம்தான், அதனாலேதான் தொண்டை கரகரப்புன்னு விட்டு விட்டு அவன் டாக்டர் கிட்டே போகும்போது கான்சர் முத்தின ஸ்டேஜுலே வரீங்களே. நீங்க எல்லாம் படிச்சவங்க தானே. முதல்லேயே வந்திருக்கவேண்டாமான்னு டாக்டர் அவனைத் திட்டினார்.
வைத்தியம் பண்ணினாரா இல்லே, திட்டிட்டு வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாரா?
இப்ப அவன் கான்ஸர் ஆஸ்பத்திரியிலே இருக்கான்.
நாம போய்ப் பாத்துட்டு வந்துடலாமா?
ஆமாம். போய்ப் பாக்கணும். அங்கேயே எனக்கும் கான்சர் இருக்கான்னு செக்கப் பண்ணிக்கணும். நாளைக்கே என் தம்பியையும் பாத்துட்டு டாக்டரையும் பாத்துட்டு வந்துடணும்.
சரி.
சனி
(சத்தமாக) என்னடி? நான் கூப்பிடக் கூப்பிடக் காதுலேயே போட்டுக்க மாட்டேங்கறே.
என்ன? கூப்பிட்டேளா?
ஆமாம். அஞ்சு தடவைக் கூப்பிட்டேனே. காதுலே விழல்லியா? என்ன ஆச்சு உனக்கு?
என்னவோ ஆயிடுத்துன்னா? முந்தாள் பிடிச்ச ஜலதோஷம் மூக்கு அடைப்புலே இருந்து இப்போ காதுக்குப் போயிடுத்து. காது குப்புன்னு அடைச்சிண்டு இருக்கு. நீங்க பேசறது எதுவும் கேக்க முடியல்லே.
சரி . உன் தம்பியையும் அப்படியே கான்ஸர் ஸ்பெஷலிஸ்டையும் போய்ப் பாத்துட்டு வந்துடுவோம் இன்னிக்கு.
ஆனா இவ்வளவு காது கேக்காத போது போனா டாக்டர் என்ன சொல்றார்ங்கறதை எப்படித் தெரிஞ்சுக்கிறது.
நானும் கூட வருவேன் இல்லியா?
ரொம்ப விசேஷம் தான். நீங்க டமாரச் செவிடு. உங்களோடே தினமும் கத்தி கத்திப் பேசியே எனக்குத் தொண்டையிலே கான்சர் வந்துடும் போல இருக்கு. நீங்க வந்து என்ன ஆகப் போறது? ஒவ்வொரு தடவையும் நீங்க டாக்டர்கிட்டே போகும்போது நான் கூட வரதாலேதானே நீங்க மினுக்கறேள். முதல்லே ஒரு காது டாக்டர் கிட்டே போய் சரி பண்ணிண்டு அப்புறம் மத்த டாக்டர்களையெல்லாம் பார்க்கலாம்.
யாருக்கு? உனக்கா? எனக்கா?
ரெண்டு பேருக்கும் தான்.
அது எப்போ நாளைக்கா?


இந்த வாரம் ஒரு விதமா முடிஞ்சது. அடுத்த வார டைம்டேபிள் என்னன்னு தெரியல்லையே?
ஏன்னா? ஆ!ஆ!ஆ! திடீர்னு ஆறு நாளா அடங்கியிருந்த பல்வலி ஆ...ஆ...ஆ ஆரம்பம் ஆயிடுத்து மறுபடியும்.
அப்படியா? ஸோ அடுத்த ரௌண்ட் ஆரம்பம் ஆயிடுத்துன்னு சொல்லு.
********
இந்த வாரம் வர என்னென்ன வலியெல்லாம் வரதுக்கு க்யூவிலே காத்துண்டு இருக்கோ தெரியலையே?
இன்னும் வயித்து வலி, இடுப்பு வலி, கால் வலி, அரைவலி, முக்கால் வலி எல்லாம் பாக்கி இருக்கே. வாரத்துக்கு ஏழு நாள் தானே இருக்கு. பாவம். அவ என்ன பண்ணுவா?
 
படமும் பாடமும்:
ஒரு பக்க (வெட்க)க் கதை.
என்னங்க படம் எடுத்து இருக்கீங்க? கதை இல்லை. உருப்படியான சம்பவம் இல்லை. ஃபைட் இல்லை. வசனம் கூட பாதி பாதியா இருக்கு. ஒரு பாட்டு கூட உருப்படியா
இல்லே.
நான் என்னங்க பண்ணுவேன்? நானும் நல்ல மெஸேஜோடு கூடிய சமூகப் படம்தான் எடுத்து இருந்தேன். அதுலே மத்தவங்க மாதிரி இல்லாம எல்லா மதத்துலேயும், எல்லா ஜாதியிலேயும் இருக்கிற தவறான மற்றும் மூட நம்பிக்கைகளையும் கிண்டல் பண்ணியும், எழுதி இருந்தேன். மத்த மதங்கள்னா சென்ஸார் போர்டு சும்மா இருக்குமா? நிறைய சீன்களை கட் பண்ணிட்டாங்க. ப்ரிவ்யூ பாத்தவங்க சில காட்சிகளை வெட்டச் சொன்னாங்க. படம் வரதுக்கு முன்னாலேயே எங்க மதங்களை இழிவு படுத்தற மாதிரி இருக்குன்னு சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சி அந்தப் படம் ரிலீஸ் ஆகப்போற தியேட்டர்களை அடிச்சி நொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க. படம் ரிலீஸ் ஆன ரெண்டாம் நாளுலேயே கட்சிக்காரங்க, மக்கள் எல்லாரும் இந்தப்படத்துலே வர பல வசனங்களையைம் பாட்டுகள்ளே வர சில வரிகளையும் கட் பண்ணச் சொன்னாங்க. சில ஜாதிக்காரங்க எங்களை இழிவு படுத்தற மாதிரி சில இடங்கள் இருக்குன்னு சொல்லி அதை கட் பண்ணச் சொல்லிட்டாங்க. ஃபைட் சீன்ஸ்லே வயலன்ஸ் ஜாஸ்தியா இருக்குன்னு அதை வெட்டிட்டாங்க. இப்படி 15000அடியா இருந்த படத்துலே 8000 அடியை வெட்டின அப்புறம் மிஞ்சின படம்தான் நீங்க பார்த்தது. நான் என்ன பண்றதுங்க?
இவ்வளவு பண்ணின நீங்க பிராமணர்களைக் கிண்டல் பண்ற சீன்களை மாத்திரம் கட் பண்ணாம அப்படியே வெச்சிருக்கீங்க.
அதுவா? நம்ம ஊர்லே வேறே எந்த மதத்தப் பத்திக் கிண்டல் பண்ணினாலும் பிரச்சினை ஆயிடுதுங்க. இந்து மதத்தப்பத்தி எழுதும்போது இத்தனை நாள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. இந்த ஹிந்துத்வா கும்பல் வந்த பிறகு அதுவும் பிரச்சினை ஆகிப் போச்சு. எந்த ஜாதியைப் பத்தி எழுதினாலும் இப்ப தமிழ் நாட்டிலே பெரிய பிரச்சினை பண்றாங்க. ஆனா பிராமணங்களைப் பத்தி எப்படி எழுதினாலும் ஒரு ஆபத்தும் வராதுங்க. அவங்க போராட்டம் எல்லாம் பண்ண மாட்டாங்க. அவங்களுக்காகப் பரிஞ்சி பேசற வங்க யாரும் கிடையாது. வெளி நாட்டான் அவங்களை இந்தியன்னு சொல்லி உதாசீனப்படுத்துவான். வடநாட்டான் அவங்களைத் தென்னாட்டான்னு சொல்லிடுவான். தென்னாட்டான் குறிப்பா ஆந்திரா, கேரளா,கர்நாடகாக்காரங்க அவங்களைத் தமிழன்னு சொல்லி ஒதுக்கிடுவாங்க. தமிழ்நாட்டிலே அவங்களைத் தமிழனே இல்லைன்னு சொல்லி கேவலப் படுத்தறதுமில்லாம, அவங்க தான் அமெரிக்கா ஜப்பான்மேலே அணுகுண்டு வீசக்காரணமா இருந்தங்க, அப்ரஹாம் லிங்கன், கென்னடி கொலைகளுக்கு அவங்க தான் காரணம், தமிழ் நாட்டிலே டெங்கு, பறவைக்காய்ச்சல், சிக்கன்கினியா இதுக்கெல்லாம் இவங்கதான் காரணம்னு இப்படி இஷ்டத்துக்கு எதையாவது சொல்ல மக்கள் என்ன, பத்திரிகை உலகம், தமிழ்ப் பேரறிஞர்கள் இப்படி எல்லாரும் அதை நம்புவாங்க. இதை எல்லாம் சமூகநீதிங்கிற போர்வையிலே நியாயப் படுத்திடுவாங்க. அதைத்தவிர அந்த ஜாதியிலுள்ள அறிவு ஜீவிகளே அவங்களைப் பத்தி என்ன சொன்னாலும் எழுதினாலும் அதை ஆராய்ந்து அந்த எழுத்தை அவங்களே நியாயப் படுத்திப்பாங்க.
இன்னும் சொல்லப் போனால் பிராமணங்கதான் தமிழ் நாட்டின் சேஃப்டி வால்வ். தமிழ் நாட்டிலே எந்தப் பிரச்சினையா இருந்தாலும் இந்த வால்வைத் திறந்தா போதும் எதிராளியை அடக்க. அவங்க நாதி அத்தவங்க. ஐயோ பாவம்னு சொல்ல ஒரு துரும்பு கூ ட இங்கே கிடையாது. அதனாலேதான் அந்தக் காட்சிகளை எல்லாம் படத்துலே அப்படியே வெச்சி ரிலீஸ் பண்ணிட்டேன். அந்தக் காட்சிகளை மட்டும் நம்பித்தான் அந்தப் படம் இப்ப ஓடிக்கிட்டு இருக்கு.
 
Last edited:
"வாரத்துக்கு ஏழு நாள்தானே இருக்கு. என்ன பண்றது?".................
excellent portrayal of the characters !
Ladies always make complaints; but ever postpone the visit to doctors.
A typical TB house wife !!
Well done " rgurus " ji.
 
ஒரு பக்க (வெட்க)க் கதை.
படமும் பாடமும்:

A good satire !


If TBs are ridiculed in Films everybody will enjoy including TBs.

Initially, during my younger days, my blood used to boil. I used to shrink within myself with the thought that TBs are the only sect which do not have any sense of shame in their life; will not protest even if they are ridiculed down to earth; will not get provoked when mocked at / laughed at, to any extent.
But one TB could not not tolerate the other.

Now I got maturity (accustomed ) to pacify myself with pride that TBs have a lot of sense of humour; and after all, real sense of humour is the ability to laugh at one's own self and one's own down fall.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top