S
S.Ramanathan
Guest
Thanks to appusami.com for the following information about gaya srartham.I just copy and paste for the benefit of members.regards,S. Ramanathanகாசிக்கும் கல்கத்தாவிற்கும் இடையிலுள்ளது கயை. ஸ்டேஷனைவிட்டு சுமார் 3 மைலிலிருக்கும் ஊர். விஷ்ணு பாதத்தின் வெகு ஸமீபத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் மடம் இருக்கிறது.டாங்காவும் சைக்கிள் ரிக்ஷாவும் நிறையக் கிடைக்கும். சைக்கிள் ரிக்ஷாதான் குறிப்பிட்ட மடத்தின் வாசல்வரை செல்லும். அங்கு ஆலயத்தினருகே உள்ள ரோடுகள் எல்லாம் மிகக் குறுகலாக காசி சந்துபோலிருக்கும். ஒவ்வொரு வண்டிக்கும் ரயிலடிக்கு யாத்திரிகரை அழைத்துச் செல்ல அரைகுறைத் தமிழ் பேசும் அத்தேசத்திய ஆட்கள் வருவர்.நமது ஆசார்ய மடத்தில் உபாத்யாயர், சமையல் செய்ய சகல பாத்திரங்களும் இலவசமாக மடத்தில் அளிக்கப்படுகின்றன. சகல சாமான்களும் கறிகாய் இலை பால் தயிர் எல்லாம் கிடைக்கின்றன.மாளய பக்ஷத்தில் வடதேச ஜனங்கள் உருண்டு திரண்டு செல்வர். வருஷத்திற்கு ஒரு முறை 15 நாட்களும் ஸ்நான தர்ப்பண பிண்டதானம் செய்வர். அச்சமயம் வண்டியில் இடம், வாத்யார், ஸாமான் எல்லாம் ஒரே கிராக்கி.கோயிலுக்குப் பின்புறத்தில் பல்குனி நதி இருக்கிறது. சில மாதங்களில்தான் அதில் ஜல ப்ரவாஹம் இருக்கும். ஜலமில்லாத காலத்தில் ஊற்றுத் தோண்டி அதில் ஸ்நானம் பிண்டதானம் செய்வர். உத்தமமான புண்ய நதி அது. 1. ஒவ்வொரு தீர்த்தத்திலும் க்ஷவரம் செய்து கொள்ளவேண்டு மென்பது பொதுவான விதி. பல்குனி நதிக் கரையிலேயே முடி வெட்டுவோர் காத்திருப்பர். அங்கு வபனம் செய்து கொள்ளலாம்.2. பாபம் அகல ஸ்நான சங்கல்பம், பலதானம், தச தானாதிகள் செய்து முதல் நாள் தீர்த்த ஸ்ராத்தம் செய்யவேண்டும்.இதை அன்ன ஸ்ராத்தமாகச் செய்வது உத்தமம். இல்லையேல் ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து 17 பிண்டம் போட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். இங்கும் மொத்தமாகப் பேசி வாத்யாரிடம் பணம் தருவது வழக்கம். ஹிரண்ய ஸ்ராத்தத்தில் ப்ராம்மணர்களை வரித்து தத்தம் செய்து தக்ஷிணை தரவேண்டும். இங்கு கயாவாளிகளே இதற்கும், அன்ன ஸ்ராத்தம, ப்ராம்மணார்த்தம் ஆகியவற்றுக்கும் வருவர். பிண்டத்தை பல்குனி நதியில் போட்டு முதல்நாள் கார்யம் பூர்த்தியாகும்.3. விஷ்ணுபாத ஸ்ராத்தம் மஹாளயத்தில் செய்வதுபோல் ஆறு அல்லது ஏழு ப்ராம்மணர்களை வரித்து மாதா மஹ வர்க்கத்திற்குத் தனி அன்னம், பாயஸம் வைத்து ஸ்ராத்தம் செய்யவேண்டும். கிராப்புள்ளவர், சிறுவர் முதலியவர்தான் பிராம்மணராக வருவர். அவர்களைக் கொண்டே செய்ய வேண்டுமானதால் அவைகளைக் கவனியாமல் சாஸ்த்ரத்தை நம்பி செய்யவேண்டும்.தத்தம் செய்த பிறகு வந்து சாப்பிட்டுச் செல்வர். ஸ்ராத்த சங்கல்பம் முதலேயே அவர்கள் உட்கார்ந்து இருக்கவேண்டுமானால் தனித்தனி தக்ஷிணை தரவேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் மத்வ மடாதிபதி இவர்களை மத்வர்களாக்கி விட்டார். கோபி சந்தனத்தால் சங்கு சக்ர முத்ரைகளைத் தரித்திருப்பர். சிலர் ஸ்ராத்தத்தில் கூறவேண்டிய "ஆப்ரம்மன் ப்ரதிவசனம், முதலியன சொல்லத் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்கு இளமையிலேயே உபயோகமான தேவ காரியங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். ஆயிரக்கணக்காக இருந்த இந்த கயாவாளிகளின் வம்சம் குறைந்து நூற்றுக் கணக்கில் வந்துள்ளது வருந்தத்தக்கது.ஒவ்வொரு மடத்திற்கும் ஒவ்வொரு கயாவாளி தலைவனாக இருப்பர். நாம் க்ருச்ரம் செய்து அளிப்பது அவர்களையே சேரும்.முதல்நாள் பல்குனி நதியில் ஸ்நானம் செய்தவுடன் அச் சமயம் நாம் உடுத்தி இருந்த வஸ்திரத்தை அவர்களுக்குத் தரவேண்டும். காசி, கயா, ப்ரயாகை என்ற மூன்று இடங்களிலும் இந்த பழக்கமுண்டு.4. விஷ்ணுபாத பிண்டம்இங்கு முன்பு செய்த பதினேழு பிண்டத்துடன் மற்றும் மாத்ரு பிண்டம், பித்ரு பிண்டம் இவைகளையும் தரவேண்டும். இவை எழுபத்தியோரு பிண்டங்கள் ஆகின்றன.இவை தவிர நமக்கு வேண்டியவருக்கும் பிண்டம் தரலாம். கோயிலுக்குள் இருக்கும் விஷ்ணுபாதத்தில் பிண்டங்களை வைத்துத் தர்ப்பணம் செய்யவேண்டும். நடுவில் கற்பாறை. அதில் ஒரு சிறிய பாதமிருக்கிறது. கற்பாறையைச் சுற்றி மதில்போல் சிறிய பித்தளைச் சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏககாலத்தில் எல்லா ஜாதியினரும் கூட்டமாக அதில் பிண்டம் போடுவர். (கயாவாளிகளுக்குச் சிறிது தனம் தனியாகத் தந்தால் ஒருவர்மேலும் படாதபடி பிண்டதானம் செய்ய வசதி அளிப்பர்.) இங்கும் தக்ஷிணை தரவேண்டும்.விஷ்ணுபாத சரிதம்:கயம் என்ற அசுரன் தவம் செய்து பவித்ரமான எல்லா வஸ்துக்களையும்விட தான் மிக பவித்ரமானாலும் அஸுர குணத்தால் எல்லோருக்கும் துன்பம் விளைவித்தான்.மற்ற பவித்ர வஸ்துக்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. தேவர்கள் உபாயமாக அவனிடம் சென்று பூமி அசுத்தமானதால் சுத்தமான உன்மீது யாகம் செய்யவேண்டும் எனக் கேட்டனர்.அவன் படுத்துக்கொள்ள அவன்மீது தீ மூட்டி யாகம் செய்ய ஆரம்பித்தனர். தீ எரிந்ததால் அவன் உடலை அசைத்தான். தேவர் தர்ம தேவதையைக் கல்லாக்கி அவன்மீது வைத்து யாகம் செய்தனர்.அப்பொழுதும் அவன் உடலை அசைத்தான். கதாதரரான மஹாவிஷ்ணு அச்சிலைமீது காலை வைத்தார் அவனால் அசைக்க முடியவில்லை. திவ்ய பாதார விந்தம் பட்டவுடன் அவனுக்கு நல்ல புத்தி உதித்தது.அந்தத் தன் உடல் - தர்மசிலை - விஷ்ணு பாதம் - இடத்தில் பித்ருக்களை நாடி பிண்டமளித்தால் அது பித்ருக்களுக்கு அளவற்ற முடிவில்லாத இன்பந்தர வேண்டும் என வரங் கேட்டான்.ஆதலால்தான் அங்கு பிண்டமளிக்க வேண்டும். அவரவர் ஊரில் ஸ்ராத்தம் செய்தாலும் "கய, கய, கய அக்ஷய்ய வட" என்று கூறுகிறோம் என்பது நினைவிருக்கும்.5. வட ஸ்ராத்த பிண்டம்இரண்டாவது நாள் கார்யம் முடித்து, மூன்றாவது நாள் அன்ன ரூபமாகவே இந்த ஸ்ராத்தம் செய்து முடிவில் ஆலமரத்தடியில் முன் போல் 71 பிண்டமளிக்கவேண்டும். அது இரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. ஸ்ராத்தம் செய்து பிண்டமளிக்க நேரமாகும். வெய்யிலில் நடந்து போய்வர சிலருக்கு சிரமமாக இருக்கும்.ஆதலால் டாங்கா வண்டியில் போய் வருவர். ஆலமரத்தடியில் பிண்டம் தர்பபணம் ஆன பிறகு அந்த ஸ்ராjத்தம் சாப்பிட்ட கயாவாளிகளின் தலைவன் மாத்திரம் அங்கு வந்து த்ருப்தி சொல்லி நமது பித்ருக்கள் நரகத்திலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறுவர்.அதற்கு முன் ஸ்ராத்தாங்கமாக 'கோ, பூ, வஸ்த்ர, சய்யா' தாநம் செய்யவேண்டும். அதற்காக ஏதேனும் தக்ஷிணை கொடு என்பர்.முன்னெல்லாம் எவ்வளவு சொத்து இருக்கிறது எனக் கேட்டு இவ்வளவு ரூபாய் கொடுத்தால்தான் த்ருப்தி கூறுவேன் என்பர்.இப்பொழுது எதையேனும் தக்ஷிணை பெற்று த்ருப்தி சொல்வர். 'கயா யாத்ரா பலம் பரிபூர்ணமஸ்து' என்பர். மாலை போடுவர்.6. பழம், காய், இலை விடுதல்சரீர ஸுகத்திற்காக நாம் கைக்கொள்ளும் ஸுகப் பொருளில் மூன்றை விடவேண்டும்.தற்சமயம் ஒரு பழம், ஒரு காய், ஒரு இலையை விடுவர். நமக்கு ப்ரியமானவைகளையே விடவேண்டும். வடவிருக்ஷம் சிவ ரூபமானது.ஆனதால் பெரும்பாலோர் அந்த ஆலை இலையையே விடுவர். காயிலும், பழத்திலும் ஒன்றை விட்டால் அதன் உட்பிரிவான எல்லாவற்றையும் விடுவதே நியாயம். உதாரணமாக வாழைக்காய், அல்லது வாழைப் பழத்தை விட்டவர் மொந்தங்காய், ரஸ்தாளி, பூவங்காய், நேந்த்ரங்காய், அந்தந்தப் பழம் எல்லாவற்றையும் விட வேண்டும்.அந்த ஆலமரத்தின் அடியில் சில தேவ விக்ரஹங்களை வைத்து அங்கே அமர்ந்திருக்கும் பண்டா தக்ஷிணைக் கொடு என்பான். அதற்கு அபிஷேகம் செய்து பூஜை, ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதனருகில் பல இடிந்த கோயில்கள் இருக்கின்றன. வழியும் சரியாக இல்லை. பிதாமஹேஸ்வரர் கதாதரர் முதலிய சன்னிதிகளில் தரிசனம் அபிஷேகம் அர்ச்சனை செய்யவேண்டும். அங்கு பிச்சைக்காரர்களும், ஏழை ப்ராம்மணர்களும் "பைசா பைசா" எனப் பிடுங்கி எடுப்பர். வண்டியைத் தொடர்ந்து வெகு தூரம் ஓடி வருவர். வட விருக்ஷம் ஒரு சில படிக்கட்டுகள் மீதேறிச் சென்றால்தான் காணக் கிடைக்கும். விசாலமான இடம். தண்ணீர்க் குழாய் வைத்திருக்கிறார்கள். அங்கு வைத்த பிண்டங்களை ஆலமரத்தடியில் வைத்தெடுத்துக் காக்கைக்குப் போடவேண்டும். இத்துடன் மூன்றாவது நாள் வேலை முடிந்தது. 7. பஞ்சகயா அக்ஷ்டகயா ஸ்ராத்தம் சக்தியும் அவகாசமு திரவியமும் சிரத்தையுமுள்ளவர் பல நாள் அங்கு தங்கி ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றாக 13 நாள் செய்யலாம். பிரேத சிலை என்ற இடத்தில் பிண்டம் போட்டு பிரேத ரூபிகளாக உள்ள பித்ருக்களைக் கரை ஏற்றலாம். நாம் எழுதிய மூன்று நாள் சாமான்யமானவர்க்கே கூறியதாம். மூன்று நாள்கூட தங்க முடியாதவர், செலவு செய்ய முடியாதவர், முதல் நாளில் தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாகச்செய்து, பிண்டமளித்து விஷ்ணுபாதம் ஒரு நாள் வட விருக்ஷம் ஒருநாள் அன்ன ஸ்ராத்தம் செய்யலாம். அது மத்யமே. அதிலும் அவசரக்காரர் ஒரே நாளில் மூன்றையும் ஹிரண்யமாகச் செய்து மூன்று இடங்களிலும் பிண்டம் போட்டுச் செல்வர். இது மிக அதமம். ஜன்ம மத்தியில் ஒரு முறை யாத்திரை கிடைக்கும். அச்சமயம் சிரத்தையுடன; அன்ன ஸ்ராத்தம் மூன்று நாளாவது செய்ய வேண்டும். யாத்திரை சபலமாகவும் பூர்ணமாகவும் ஆகும். 8. கயையில் சில அபூர்வமானவை பெரும்பாலும் வடதேசத்தில் பல இடங்களில் டீ, பால், தயிர் இவைகளை மண் பாத்திரத்திலேயே கொடுப்பார்கள். சாப்பிட்டவுடன் அதை எறிந்து விடுவார்கள். கயா ஸ்ராத்த ப்ராம்மணர்களுக்குத் தீர்த்த பாத்திரமும் பாயஸம் ரஸம் முதலியவைகளை அருந்தவும் மண் கிண்ணிகளே வேண்டும். கயா வாசிகள் தமது சாப்பாட்டுடன் பச்சை மிளகாயும் பாலும் விரும்புகிறார்கள். பிண்டம் பிடிfக்க அன்னம் வடிக்க வேண்டும் அல்லவா? அதற்கேற்ற மண் பாத்திரமும் மலிவாகக் கிடைக்கிறது. ஸ்ராத்த ஷட் பாத்திரங்களுக்கும் சிலர் அதையே வைத்துக் கொள்கின்றனர். காசியைப்போல் கோவிலிலும் வீடுகளிலும் பசுக்கள் பிண்டத்தைப் பக்ஷிக்க உள்ளே புகுந்து விடும். கோவிலுக்குப் பின்புறமே சுடுகாடு. ஆற்றில் வெள்ளமில்லாவிடில் அங்கேயே கொளுத்துவர். நீரிருந்தால் கரைமீது உள்ள இடத்தில் கொளுத்துவர். நதிக்கு அக்கரையில் சீதா குண்டம். அங்கு தசரதர் மாத்திரம் தோன்றி சீதா தேவி பிடித்த பிண்டங்களை ஏற்றுக்கொண்ட காட்சி அருமையானது. அங்கும் பல இடிந்த கோயில்களுண்டு. காசி பலன் பூர்ணமாகட்டும் என்று கூற தக்ஷிணை கேட்பவர் பலருண்டு. காமாக்ஷியோனி மாத்ர ஸ்வரூபம், நரஸிம்மர் முதலிய தனி சிவ ஆலயங்கள் இக்கரையில் இருக்கின்றன. 9. கயை கோயில் வடநாட்டு வழக்கப்படி மூலஸ்தானம் ஒரு கூரான கோபுரம்போல் அமைந்துள்ளது. பற்பல சன்னிதிகள் விஷ்ணுபாதத்தைச் சுற்றி இருக்கின்றன. விஷ்ணுபாதத்தை இரவு எட்டு மணிக்கு கயாவாளி பூஜிக்கிறார். எல்லோரும் அளிக்கும் பிண்டம் புஷ்பம் இவைக்ள அங்குள்ள ஜலதாரை வழியாக வெளியில் செல்லும். மாலையில் கோயிலை அலம்ப பெருங்குழாயைத் திறந்து விடுவர். அது எல்லாவற்றையும் அடித்து பல்குனி நதியில் கொண்டு தள்ளும். கோயில் சொந்தக்காரர் கயாவாளிகளே. விஷ்ணுபாதத்தைச் சுற்றி மேல் சுவரில் பற்பல மூர்த்திகள் இருக்கின்றன. பல கயாவாளிகளுக்கு அது இன்னதென்று சொல்லக்கூடத் தெரியவில்லை. லக்ஷ்மி, விநாயகர், நாராயணர் என்று நமக்குத் தெரிந்தவைகளைக் கூறி பைசா கேட்பர். விஷ்ணுபாமத்திலுள்ள நீர், புஷ்பங்களை அகற்றி கயாவாளி பூஜையில் பாதத்திற்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து பூஜிப்பது பார்க்கத்தக்கது. அப்போதுதான் பாதம் தெரியும். நாமே அதற்கு அபிஷே அர்ச்சனை செய்யலாம். விசாலமான எதிர் மண்டபத்தில் நித்யம் வடக்கத்தியர் பஜனை நடக்கும். ஸாக்ஷிகதாதரர், சிருங்கேரி மடத்து காயத்ரீ, தத்தாத்ரேயர் முதலிய விக்ரஹங்கள் அழகானவை. 10. மாத்ரு பிண்டம், பித்ரு பிண்டம் ஏற்கனவே க்ஷேத்ர பிண்டம் பதினேழு கூறினோம். அவைகளுடன் விஷ்ணு பாதத்திலும், வட விருக்ஷத்திலும் அதிகமாக முப்பத்தைந்து பிண்டங்கள் அளிக்கப்படுகின்றன. நாம் கருவிலிருந்தும், வெளியில் வந்தும் பெற்றோருக்குச் செய்த பாவத்தை நீக்க அக் கருத்துக் கொண்ட சுலோகங்களைக் கூறி, பிண்டமளிக்கப்படுகிறது. கதி இல்லாமல் ஸம்ஸ்காரமில்லாமல் இறந்த பித்ரு மாத்ரு வர்க்கத்தைச் சார்ந்தவர்க்கும் இதில் பங்கு உண்டு. அழகான அர்த்தமுள்ள அவைகளைய[ம் பின்னர் எழுதுவோம். ஆசார்ய ஸம்பாவனை இதுவரை மொத்தமாகவோ, தனித்தனியாக தக்ஷிணை வாங்கியோ கர்மாக்களைப் பூர்த்தி செய்தபின் தனியாக அவரவர் சக்திக்கேற்ப குருவுக்கு ஸம்பாவனை செய்யவேண்டும். அதைப் பெற்று அவர் வெள்ளி அல்லது தாம்பர மயமான ஸ்ரீவிஷ்ணு பாதத்துடன் விபூதி குங்குமாதி பிரசாதத்தை வேதம் கூறி அளிப்பர். அத்துடன் கயா யாத்திரை பூர்ணமாகும். வியாபாரிகள் பலவகையான பல உலோகங்களாலாகிய விஷ்ணு பாதங்களையும் அது அமைந்த தட்டுக்களையும் நாம் இருக்கும் இடத்தில் கொண்டு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்பர். காசியிலும் அன்னபூர்ணி, விஸ்வேஸன், பைரவர் ஆகிய தெய்வங்களின் கயிறு, ருத்ராக்ஷம், ஸாளக்ராமம், பாணம், காசிப்பட்டு, தாவளி முதலியவை இருப்பிடத்திற்கு வரும். ஏமாற்றம் சூது அதிகமானதால் அனுபவப்பட்டவரைக் கொண்டு வாங்குவதே நலம். - நன்றி: யாத்ரா விளக்கம்