• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

chathurmasya food restrictions details. video

chathur masya vratham.
சாதுர் மாஸ்ய விரத விதானம்.
வராஹ புராணம் இது பற்றி விரிவாக கூறுகிறது.
குந்தியின் மைந்தன் அர்ஜுனன் ஶ்ரீ க்ருஷ்ணரிடம் ஹே மதுசூதனா பகவான் மஹா விஷ்ணுவின் சயன விரதத்தை எவ்வாறு நியமத்துடன் கடை பிடிப்பது என்று பணிவுடன் கேட்டார்.

ஶ்ரீ கிருஷ்ணரும் விஸ்தாரமாக கீழ் கண்டவாறு கூறினார்.

ஒவ்வொரு வருடமும் ஸூர்யன் கடக ராசிக்கு வரும் போது மஹா விஷ்ணு யோக நித்திரையில் ஆழ்ந்து , ஸூர்யன் துலா ராசி ப்ரவேசிக்கும் போது விழித்து எழுகிறார்.

புருஷோத்தம மாதம்=மலமாதம்= அதிக மாதம் இந்த சமயத்தில் வந்தாலும் இந்த விதிப்படி மாறாமல் நடக்கும்.

இவ்விதிப்படி மற்ற தேவதைகள் நித்திரையில் ஆழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்.
ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி திதியன்று விதி முறைப்படி விருதம் அனுஷ்டிக்க வேண்டும்.

அன்று பகவான் மஹா விஷ்ணுவின் ப்ரதிமையை சிலா ரூபத்தில் மூர்த்தியாக செய்து சாதுர் மாஸ்ய விரதத்தை நியமத்துடன் அனுஷ்டிக்க வேண்டும். அன்று விஷ்ணு ப்ரதிமைக்கு அபிஷேக ஆராதனை செய்து , வெள்ளை வஸ்திரம் அணிவித்து , பட்டு மஞ்சத்தில் நித்திரை கோலத்தில் வைக்க வேண்டும்.

பின் தூப தீப நைவேத்யத்துடன் பூஜை, சாஸ்திரம் அறிந்த பண்டிதர் அல்லது பிராமணர்கள் மூலம் நடத்த வேண்டும்.

அதன் பின் மஹா விஷ்ணுவிடம் ஹே பகவானே நான் உங்களை யோக நித்ரையில் ஆழ்த்து கிறேன். நீங்கள் துயில் கொள்வதால் , இந்த ப்ரபஞ்சமே துயிலில் ஆழ்ந்து விடுகிறது. ஹே பகவானே தாங்கள் நாங்கு மாதங்கள் துயில் கொள்ளும் போது , நான் அனுசரிக்கும் சாதுர்மாஸ்ய விரதத்தில் எந்த வித பங்கமும், இடையூறும் வராமல் காத்து அருளுங்கள் என இரு கரம் கூப்பி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.

வட இந்தியாவில் சில பிரிவினர் ஸ்ரீ விஷ்ணுவை யோக நித்திரையில் சயனிக்க செய்வதால் , அவ்வாறு செய்த பின்பே பிரதிமைக்கு ஸ்நானம் முதலியவை செய்கிறார்கள்.

தேவசயனி ஏகாதசியிலிருந்து தேவோத்தானி ஏகாதசி வரை சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க வேண்டும். துவாதசி, பெளர்ணமி, அஷ்டமி, அல்லது மாத பிறப்பிலிருந்து விரதத்தை தொடங்கி கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும்.

இந்த விரதத்தினால் சகல பாபங்களும் அழிந்து மஹா விஷ்ணுவின் பூரண கடாக்ஷம் கிட்டும். எவரொருவர் ஒவ்வொரு வருடமும் சாதுர் மாஸ்ய விரதத்தை நியமத்துடன் கடை பிடிக்கிறாறோ, அவர் இந்த உலக வாழ்க்கைக்கு பின் , ஸூர்ய தேவருக்கு இணையாக , தெய்வீகமான விமானத்தில் அமர்ந்து விஷ்ணு லோகத்தை அடைவர்.

இந்த விரத நாட்களில் செய்யபடும் ப்ரத்யேகமான தானங்களின் பலன்களை அறிந்து கொள்வாயாக.

எவர் ஸ்ரீ விஷ்ணுவின் ஆலயத்தில் பல் வேறு வர்ணங்களில் பூ வேலை பாடுகள் செய்த அல்லது, பின்னிய, வஸ்த்திரங்களை சமர்ப்பணம் செய்கின்றார்களோ அவர்கள் ஏழு ஜன்மங்கள் பிராமணர்களாக பிறவி எடுப்பர்.

சாதுர் மாஸ்ய விரத நாட்களில் யாரொருவர் , பகவான் மஹா விஷ்ணுவிற்கு தயிர், பால், தேன் நெய், வெல்லம் (மிஸ்ரி) ஆகிய பஞ்ச அம்ருதங்களால் அபிஷேகம் செய்விக்கிறார்களோ அவர் பாக்கிய சாலியாக அனைத்து சுகங்களையும் அனுபவிப்பர்.

இந்நாட்களில் எவரொருவர் சிரத்தையுடன், பூமி தானம், ஸ்வர்ண தானம், தக்ஷிணை ஆகியவற்றை ப்ராஹ்மணர்களுக்கு அளிக்கிறாறோ அவர் ஸ்வர்க்க லோகத்தில் , இந்திரனுக்கு சமமாக அனைத்து சுக போகங்களையும் அடைவர்.

எவரொருவர் தங்கத்தால் மஹா விஷ்ணு ப்ரதிமை செய்து, தூபம், தீபம், புஷ்பம், நைவத்யத்துடன் பூஜை செய்கிறாரோ , அவர் இந்திர லோகத்தில் அள்ள அள்ள குறையாத செல்வத்துடன் வாழ்வார்.

சாதுர் மாஸ்ய தினங்களில் எவரொருவர் தினமும் விஷ்ணுவிற்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்கிறாரோ , அவர் இவ்வுலக வாழ்விற்கு பின் ஸ்வர்ண புஷ்பக விமானத்தில் விஷ்ணு லோகம் செல்வர்.

சாதுர் மாஸ்ய தினங்களில் எவரொருவர் பகவான் மஹா விஷ்ணுவிற்கு தூப தீபங்களுடன் பூஜை செய்கிறாரோ, அவர் வற்றாத தன லாபம் பெறுவர்.

தேவ சயனி ஏகாதசியிலிருந்து தேவ உத்தானி ஏகாதசி வரை விஷ்ணுவிற்கு பூஜை செய்பவர் , இவ்வுலக வாழ்க்கைக்குபின் விஷ்ணு லோகம் அடைவர்.

சாதுர் மாஸ்ய விரத நாட்களில் மாலையில் விளக்கேற்றும் வேளையில் ,தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் தீப தானம் செய்பவர்களும், பிராமணர்களுக்கு தங்க பாத்திரத்தில் வஸ்த்ர தானம் தருபவர்களும் விஷ்ணு லோகம் அடைவர்.

சாதுர்மாஸ்யத்தில் பக்தி பூர்வத்துடன் பகவானின் திரு நாம ஸ்மரணையுடன் , மஹா விஷ்ணுவின் பாத கமலமே தஞ்சம் என்று சரணாகதி அடைபவர்கள் , பிறப்பு, இறப்பு என்ற இந்த மாய சக்கிரத்திலிருந்து விடுதலை அடைவர்.

இவ்விரத காலங்களில் , விஷ்ணு ஆலயத்தில் பிரதி தினம் 108 முறை காயத்திரி மந்திர ஜபம் செய்பவர்கள், தங்களின் பாவங்கள் உடனுக்குடன் விலக பெறுவர்.

எவரொருவர் இவ்விரத காலத்தில் புராணங்கள், தர்ம சாஸ்திரம் ஆகியவற்றை கேட்கின்றாரோ, வேத அத்யயனம் செய்யும் பிராமணர்களுக்கு வஸ்திர தானம் செய்கின்றாரோ , அவர் வள்ளல், தனவான், பாண்டித்யம் மற்றும் யசஸ்வியாக பிறவி எடுக்கும் பேறு பெறுகின்றார்.

மஹா விஷ்ணு அல்லது சிவனின் திரு நாமத்தை இடைவிடாமல் ஸ்மரணம் செய்து , நிறைவில் விஷ்ணு அல்லது சிவ ப்ரதிமையை தானம் செய்பவர் , தம் பாபங்களி லிருந்து விடுதலை பெற்று குணவானாக மாறுவர்.


விரத காலத்தில் நித்தமும் ஸூர்ய நாராயணருக்கு அர்க்கியம் கொடுப்பதுடன், நிறைவில் கோ தானமும் செய்பவர், நோய் நொடி அண்டாத ஆரோக்கியம்,தீர்க்காயுள், தனம், கீர்த்தி மற்றும் பலத்துடன் கூடிய ஆனந்த வாழ்வு ஆகியவற்றை பெறுவர்.

சாதுர்மாஸ்யத்தில் எவர் காயத்திரி மந்திர ஜபத்துடன், தில ஹோமம் செய்வதுடன், சாதுர் மாஸ்ய முடிவில் எள் தானம் செய்கிறாரோ , அவர் தமது ஸர்வ பாபங்களும் அழிய பெறுவதுடன் , திட ஆரோக்கியம், நன்னடத்தையுள்ள சந்தான ப்ராப்தி பெறுவர்.

எவரொருவர் சாதுர் மாஸ்ய விரத காலத்தில் அன்னத்தால் ஹோமம் செய்வதுடன் , முடிவில் நெய், கடா, வஸ்த்ரம் ஆகியவற்றை தானம் செய்கிறாரோ அவர் ஐஸ்வர்யங்களை அடையும் பாக்கியம் பெறுவார்.

எவரொருவர் துளசியை மாலையாக அணிவதுடன், அதை விரத முடிவில் பகவான் மஹா விஷ்ணுவின் அம்சமான பிராமணருக்கு தானம் அளிக்கிறாரோ அவர் விஷ்ணு லோகத்தை அடைவர்.

யார் சாதுர் மாஸ்ய விரத காலத்தில் பகவான் யோக நித்திரையில் ஆழ்ந்த பிறகு , பகவானின் மஸ்தகத்தில் நித்யம் பால் அபிஷேகம் செய்வதுடன், நிறைவு நாளில் ஸ்வர்ணத்தால் ஆன தூர்வா வை ( அருகம் பில் ) தானம் செய்து பகவானிடம்

ஹே தூர்வே பூமியில் உன் வேரானது எப்படி விரிந்து பரந்துள்ளதோ , அதே மாதிரி எனக்கும் என்றும் வெற்றியுடன் அமரனாக வாழும் புத்ர ஸந்தானத்தை அருள்வீர் என்று ப்ரார்த்தனை செய்கிறாரோ, அவர் ஸந்தான ப்ராப்தியுடன் சகல பாபங்களிலிருந்தும் விடுதலை அடைந்து இறுதியில் ஸ்வர்க்கத்தை அடைவர்.

எவர் பகல் முழுவதும் , சிவன் அல்லது விஷ்ணுவின் மீது பஜனை பாடல்களை பாடி துதிக்கிறாரோ, அவர் இரவிலும் கண் விழித்து பாராயணம் செய்த புண்ணிய பலனை பெறுகிறார்.

சாதுர் மாஸ்ய விரதத்தை கடை பிடிப்பவர்களுக்கு உன்னதமான சப்தத்தை எழுப்பும் மணியை தானம் செய்வதுடன், ஹே பகவானே ஹே ஜகதீஸ்வரா தாங்கள் ஸகலருடைய பாபங்களையும் நாசம் செய்து அழிப்பவர். செய்ய கூடாத காரியங்களை செய்ததால் விளைந்த என் பாபங்களை நாசம் செய்து என்னை ரக்ஷித்து காப்பீர் என்று துதித்து ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.

சாதுர்மாஸ்ய விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் ப்ராஹ்மணர்களுக்கு தாம்பூலம் அளிப்பவர் (ஸரணாம்ருத் பான்) சகல பாபங்கள், மற்றும் துக்கங்களிருந்து விடுதலை , நீண்ட ஆயுள், லக்ஷ்மி யோகம் ஆகியவற்றை பெறுவர்.

சாதுர்மாஸ்ய காலத்தில் ப்ராஜாபத்யம் மற்றும் சாந்திராயணம் விரத வழி முறைகளின் படியும் விரதத்தை கடை பிடிக்கலாம்.

ப்ராஜாபத்ய விரதம் 12 நாட்களில் பூர்த்தி செய்கின்றனர்.

முதல் மூன்று நாட்கள் பகல் ஒரு வேளை உணவு. அடுத்த மூன்று நாட்கள் இரவு ஒரு வேளை மட்டும் உணவு. அடுத்த மூன்று நாட்கள் யாசிக்காமல் கிடைக்கும் உணவு. அடுத்த மூன்று நாட்கள் உபவாசம் இருப்பது. உணவின் அளவு ஒரு கை நிறைய அன்னம்.. சில மஹரிஷிகள் ஒரு கபளம் அளவு எங்கின்றனர்.

சாந்திராயண விரதம்:- அமாவாசை அன்று உபவாசம். ப்ரதமையில் 1 கைப்பிடி, த்விதியையில் 2 கைப்பிடி உணவு, இப்படியாக பெளர்ணமி தினத்திற்கு முதல் நாள் 14 கைப்பிடி உணவும், பெளர்ணமி அன்று 15 கைப்பிடி உணவு உட்கொள்ள வேண்டும்.

பின்னர் தேய்பிறையில் பெளர்ணமி தினத்திற்கு பின் ஸங்கல்பம் செய்து கொண்டு 14.13.12.11. இப்படி தினமும் ஒவ்வொரு கைப்பிடி குறைத்து கொண்டு வந்து அமாவாசை அன்று உபவாசம் இவ்வரிசையில் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்து கொண்டு வர வேண்டும்.

இவ்விரதம் ஒரு மாதம் முழுவதும் அனுஷ்டிக்க படுகிறது. ஹே அர்ஜுனா இம்மாதிரி பிராஜாபத்யம், சாந்திராயனம் விரதத்தை மேற்கொள்பவர்கட்கு இவ்வுலகில் தன ப்ராப்தி
பூர்ண ஆரோக்கியத்துடன் கூடிய திட காத்திரமான சரீரம், கடவுளின் பரிபூர்ண க்ருபை ஆகியவை கிட்டுகிறது.

ப்ராஜாபத்யம், க்ருச்சிரம் மேற்கொள்ளும் சாதகன் அவ்விரதத்துடன் சாதுர்மாஸ்ய விரத தார்மீக கடமைகளான பூஜை, ஜபம், த்யானம், அத்யயனம் செய்தல், பஜனை, கீர்த்தனை ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.

12 நாள் சுத்த உபவாசம் இருந்தால் பராக க்ருச்சரம் எனபெயர் படும். ஒரு மாதம் பழங்கள் மாத்திரம் சாப்பிட்டு உபவாசம் இருந்தால் பல க்ருச்சரமாகும். யவ தான்யத்தால் பாயசம் செய்து ஒரு மாதம் சாப்பிட்டு உபவாசம் இருந்தால் யாவக க்ருச்சரம் ஆகும்.

மூன்று பகல், மூன்று இரவு, மூன்று நாள் யாசகமில்லாமல் கிடைப்பது மூன்று நாள் சுத்த உபவாசம்.இந்த நாட்களில் போஜன சமயத்தில் ஜலம் மாத்திரம் சாப்பிட வேண்டும்.இது க்ருச்சராதி க்ருச்சரம் எனப்பெயர்.



யாக்கிய வல்கியர் 12 நாட்கள் பாலை மட்டும் சாப்பிட்டு கொண்டு இருப்பது க்ருச்சராதி க்ருச்சரம் என்கிறார்.

தப்த கிருச்சரம் என்பது சூடாக செய்த ஜலம் மூன்று நாள், சூடாக செய்த பால் மூன்று நாள், சூடாக செய்த நெய் மூன்று நாள், சுத்த உபவாசம் மூன்று நாள்.

சாந்தபன க்ருச்சரம்;- ஒரு நாள் பசு மூத்திரம், ஒரு நாள் பசும் சாணி, ஒரு நாள் பசும் பால், ஒரு நாள் பசும் தயிர், ஒரு நாள் பசு நெய், ஒரு நாள் தர்ப்பை ஜலம். ஒரு நாள் உபவாசம்.மொத்தம் 7 நாட்கள்.

சாதுர்மாஸ்யத்தின் நிறைவில் வேத பண்டிதர்கள், அல்லது ப்ராமணர்களுக்கு தாமிர பாத்திரம், வஸ்த்ரம் போன்ற வற்றை தானமளிப்பதும், வேத பண்டிதர்களுக்கு மன நிறைவான தக்ஷிணை அளிப்பதும் வழக்க மாக உள்ளது.ப்ராமணர்களுக்கு போஜனம் செய்விப்பவர்களுக்கு ஆயுள் வ்ருத்தி, தன வ்ருத்தி கிட்டும்.

சாதுர் மாஸ்ய விரதம் நிறைவு பெற்ற பின் தான் பசு மாடு தானம் செய்ய வேண்டும். வசதி இல்லாதவர்கள் வஸ்த்ர தானம் அவசியம் செய்ய வேண்டும். மனதின் நியாயமான ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும்.

பாபங்களிலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக இம்மாதிரி விரதங்கள் மேற்கொள்ள பட வேண்டும். இயலாவிட்டால் ஒவ்வொரு க்ருச்சரத்திற்கும் 12 ப்ராஹ்மண போஜனம், பத்தாயிரம் காயத்ரி ஜபம், ஆயிரம் ஆவர்த்தி தில ஹோமம் ப்ரதினிதியாக செய்யலாம்.

சாதுர் மாஸ்ய நிறைவு ஆனவுடன் வேதம் ஓதும் ப்ராஹ்மணருக்கு பழுப்பு நிற பசு, கன்றுடன், அலங்கரிக்க பட்ட நிலையில் தானம் செய்கிறாரோ அவர் ஆயுள் முழுவதும் சக்கிரவர்த்தியாக வாழும் பாக்கியம் கிட்டும். மேலும் அரசனை போன்ற புத்ரர்களை பெறுவார். ஸ்வர்க்க லோகத்தில் பிரளய காலம் முடியும் வரை இந்திரனுக்கு சமமான ராஜ்ஜியத்தை ஆள்வார்.

எவரொருவர் தினமும் சூரிய பகவானுக்கும், விக்ன விநாயகருக்கும் நமஸ்கார வணக்கம் செய்கிறாரோ அவர் ஆயுள் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி பெறுவர். விரும்பியது கிடைக்கும். விநாயகர் மற்றும் சூரிய பகவானின் பிரதிமையை ப்ராஹ்மணருக்கு தானம் செய்கிறாரோ அவருக்கு எடுத்த காரியங்கள் ஜயத்துடன் நிறைவடையும்.

எவரொருவர் இந்த இரண்டு ருதுக்களிலும் சிவனின் ப்ரீதிக்காக எள், வஸ்த்ரம், தாமிர பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்கிறாரோ அவர் இல்லத்தில் சிவன் மீது பக்தி கொண்ட அழகான ஆரோக்கியமான புத்ர ப்ராப்தி பெறுவர்.

எவரொருவர் பகவான் விஷ்ணு யோக நித்ரையில் ஆழ்ந்த பிறகு சக்திக்கு ஏற்றவாறு வஸ்த்ரம், எள், ஸ்வர்ண தானம் செய்கிறாரோ அவரின் அனைத்து பாபங்களும் நசித்து போகும்.இவ்வுலகில் இக போகத்துடன் வாழ்வர், மோக்ஷ ப்ராப்தி கிட்ட பெறுவர்.

சாதுர் மாச நிறைவு ஆனவுடன் எவர் படுக்கையை தானம் செய்கிறாரோ அவர் அளவில்லா சுகம் பெறுவதுடன் குபேரன் போல தனவான் ஆகும் யோகத்தை பெறுவர்.

வர்ஷ ருது= ஆவணி,புரட்டாசி காலத்தில் கோபி சந்தனம் தானம் பகவானுக்கு ப்ரீதி அளிக்கிறது. சாதுர் மாஸ்ய காலத்தில் ஒரு வேளை உணவு உட்கொள்ளுபவர், பசியால் வாடுபவர்களுக்கு அன்னம் அளிப்பவர், தரையில் நித்திரை செய்பவர், தமது அபீஷ்டங்கள் நிறைவேற படுவர்.

சாதுர் மாஸ்ய காலத்தில் ப்ரஹ்மசரியத்தை கடை பிடிப்பவர் அனேக நற்பலன்கள் பெறுவர்.ஶ்ராவண மாதத்தில் காய்கள், பழம்; பாத்ரபத மாதத்தில் தயிர், ஆசுவின மாதத்தில் பால், கார்த்திகம் மாதத்தில் பருப்பு வகைகள் சாப்பிடாமல் இருந்தால் நோய் நொடி இல்லாத பூரண ஆரோக்கியம் கிட்ட பெறுவர்.

சாதுர்மாஸ்ய விரத முடிவில் உத்யாபனம் ( இறைனனை இருப்பிடத்திற்கு எழுந்தருள செய்தல்) செய்ய வேண்டும், நித்திரையை த்யாகம் செய்து விழித்து எழுவதற்கு முன் பூஜை செய்ய வேண்டும்.

ஹே பாண்டு நந்தனா தேவ சயனி ஏகாதசி மற்றும் சாதுர் மாஸ்ய மஹாத்மியம் மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் பலன் கொண்டது. இதை படிப்பதாலும், கேட்பதாலும் மன நோய்களிலிருந்து அமைதி பெறுவதோடு , பகவான் விஷ்ணு மீதான நிஷ்டையும், பக்தியும் பன் மடங்கு வளர பெறுவர்.

சாதுர் மாஸ்ய விரதம் பகவான் மஹா விஷ்ணுவின் க்ருபா கடாக்ஷம் பெறுவதற்காக நான்கு மாதங்கள் மேற்கொள்ள படும் விரதமாகும். சாதுர் மாஸ்ய 4 மாதமும் பகவான் ஸ்ரீ ஹரி யோக நித்ரையில் ஆழ்ந்திருப்பதால், அச்சமயம் சுப மங்கள காரியங்களை விலக்க வேண்டும்.

தேவோத்தானி ஏகாதசிக்கு பிறகு மீண்டும் சுப மங்கள காரியங்கள் தொடங்கலாம்.

வராஹ புராணத்தில் பூமா தேவி வராஹ மூர்த்தியிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அறியாமை, அற்ப ஆயுள், பிறவி பிணி இவற்றுடன் கலி யுகத்தில் பிறந்தவர்களை பற்றி மிகவும் கவலை பட்டு ,

பிரபு இவர்கள் கலி யுகத்தில் தங்களுடைய குறைகளிலிருந்து பூரணமாக விடுபட்டு நலமுடன் வளமுடன் வாழ , அதிக சிரமம் இல்லாமல் அதே சமயம் முழு பலன் அளிக்க கூடிய ப்ரார்த்தனை முறையை கூறி இவர்களை ரக்ஷியுங்கள் என வேண்டி நின்றாள்.

வராஹ மூர்த்தியும் சாதுர் மாஸ்ய 4 மாதங்களிலும் (சுப காலத்தில் செய்ய படும் விரதம், தானம், ஜபம், ஹோமம் அனேக நன்மை அளிக்கும். ) செய்யும் நற்செயல்கள் பல மடங்கு பலன்களை அளிக்கும்.என்று அருளினார்.

பூமா தேவியும் வராஹ மூர்த்தியிடம் இந்த 4 மாதங்கள் ஏன் அதிக சிறப்பு வாய்ந்தது என விரிவாக எடுத்து உரைக்க வேண்டும் என கேட்டார். ஒரு சமயம் மேரு மலை சிகரத்தில் அமர்ந்திருந்த போது தேவர்கள் அனைவரும் பிரபு இரவு பொழுது ஆகி விட்டது. நாங்கள் செல்வதற்கு எங்களுக்கு விடை கொடுங்கள் என கேட்ட பொழுது

கரு நிறத்தில் மினுக்கும் வெள்ளாடையுடன் கரத்தில் கோடாலியுடன் ஒரு பெண்மணி என் முன்னால் வந்து என் பெயர் ராத்திரி. இராபொழுதின் அபிமானியாக இருந்து வருபவள். இன் நேரத்தில் எந்த விதமானமங்கள சுப காரியங்கள் நடை பெறுவதில்லை.

அசுபமானவள் என எல்லோரும் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.இந்த வேதனையும், வருத்தமும் என்னால் தாங்க முடியவில்லை. வராஹ மூர்த்தியும் ராத்திரி தேவியிடம் ஒரு நாளின் இரவு பொழுதை மூன்று யாமமாக பிறித்து அதில் முதல் இரண்டு

யாமமான சிராவணம், பாத்ரபதம், ஆசுவினம், கார்த்திகம் ஆகிய 4 மாதங்கள் சாதுர் மாஸ்ய மாதங்கள் ஆகும். இந்த 4 சாதுர் மாஸ்ய மாதங்களில் செய்யபடும் புண்ணிய காரியங்கள் , தர்ம காரியங்கள் நிறைந்த நன்மைகளை அளிக்கும்.. இந்த 4 மாதங்களின் செய்யும் புண்ணியமானது நாளுக்கு நாள் கூடுதலாகும்.

இக்காரணத்தினால் தான் கடைசி மாதமான கார்த்திகை மாதம் அனைத்து விதங்களிலும் மிகுந்த நன்மை அளிக்கும் மாதமாக கருதப்படும். என்று அருளினேன்.
இதை கேட்ட ராத்திரி தேவியும் மிகுந்த மகிழ்வுடன் தன் வந்தனத்தை சமர்பித்து கொண்டு தன் இருப்பிடம் சென்றாள்.

இந்த 4 மாதங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, தானம் செய்வது, ஜபம் செய்வது, தர்ம காரியங்கள் செய்பவர்களுக்கு நான் மிகுந்த நன்மைகளை அளிக்கிறேன்.
என்று அருளினார்.

பிரபு நாராயணர் யோக நித்ரையில் ஆழ்ந்து போகும் காலம். யோக நித்ரையில் ஆழ்வது என்பது பகவானின் ஒரு திருவிளையாடல் ஆகும்.

ஸ்ரீ தரர், ஹ்ருஷிகேசர்,பத்மநாபர், தாமோதரர் என்னும் தனது 4 திருவடிவங்களில் பிரபு நாராயணனே சாதுர்மாஸ்ய மாதங்களின் முகிய வணங்குவதற்குறிய தெய்வம்.

பக்தியை மேலும் அதிகரித்து கொள்ளவும் மோக்ஷ ப்ராப்தி அடைவதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. நம்முடைய சாஸ்திரங்கள் கீழ் கண்ட பத்து புண்ணிய நியதிகளை சாதுர்மாஸ்யத்தில் நாம் கடை பிடிக்க வேண்டும் என விதித்து உள்ளது.

சத் சங்கம்; த்விஜ பக்தி; குரு, தேவர், அக்னி தர்ப்பணம்; கொப்பரை தானம்; வேதம் அத்யயனம்; சத் க்ரியை; சத்ய பாஷனை; பசு மாடு பூஜை; தான பக்தி; தர்ம சாதனை.

சாதுர்மாஸ்ய விரதம். 2-7-20 முதல் 26-11-20 முடிய.
மனைவி மக்களுடன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சாதுர்மாஸ்ய வ்ரதம் உண்டு.
ஆஷாட சுக்ல துவாதசி ஆரம்பம். கார்த்திகம் சுக்ல த்வாதசியில் முடியும்.

ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி முதல் கார்த்திகை மாதம் ஏகாதசி வரையில் நான்கு மாதங்கள் நாம் உட்கொள்ளும் உணவில் ஒரு சில வற்றை விலக்கி கட்டுபாடுகளுடன் இருப்பதே சாதுர்மாஸ்ய வ்ரதம்.

02-07-2020 முதல்30-07-2020 முடிய உணவில் விலக்க வேண்டியது :காய்,,பழம், புளி, மிளகாய், தேங்காய். சாக விரதம்.

31-7-2020முதல்29-08-2020 முடிய தயிர் மற்றும் அவற்றால் தயாரிக்கும் பொருட்கள் கூடாது. தயிறில் ஒன்றுக்கு நான்கு பங்கு ஜலம் விட்டு மோராக உபயோகிக்கலாம். நிறம், தரம்,, ருசி குணம் மாறி விடுவதால் மோர் சாப்பிடலாம்.. தயிர் விரதம்.=ததி விரதம்.



30-08-2020 முதல் 27-09-2020 முடிய பால் மற்றும் பாலை கொண்டு தயாரிக்கும் உணவு வகைகள் கூடாது. ஆனால் தேங்காய் பால் உபயோகிக்கலாம். பயோ விரதம்.=பால் விரதம்.
18-09-2020 முதல் 16-10-2020 அதிக மாதம் வருகிறது. அதிக ஆசுவினம்.=பால் விரதம்.
.
28-09-2020 முதல் 27-10-2020முடிய த்வி தள விரதம். அதாவது தானியங்களை உடைத்தால் இரு அல்லது பல விதைகள் இருக்கும். ஆதலால் பருப்பு வகைகள் , புளி மிளகாய். காய், பழம் சாப்பிடக்கூடாது. ஆனால் வாழைக்காய், வாழைதண்டு, வாழைபூ, வாழை பழம் சேனை, வள்ளிகிழங்கு, இஞ்சி, மாங்காய் இஞ்சி, பொன்னாங்கண்ணி ஆகியவை உபயோகிக்கலாம். வாழைக்கு விதை கிடையாது.

இதனால் ஆரோக்கியம், குடும்ப அமைதி உண்டாகும். 26-11-2020 சாதுர் மாசம் பூர்த்தி.

2-07-2020 & 21-07-2021 அன்று பூஜை அறையில் ஸ்வாமிக்கு முன்பாக ஹே அச்யுத நான் இன்று முதல் நான்கு மாதங்கள் வரை இந்த வ்ருதத்தை செய்கிறேன். அது வறை எனக்கெந்த தடங்களும் வராமல் செய்வாயாக. தடை ஏதுமில்லாமல் வ்ரதம் நிறைவேற நீ எனக்கு அருள் புரிவாயாக. என்று மஹா விஷ்ணுவை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
21-07-2021 முதல் 18-08-2021 முடிய சாக விரதம்.
19-08-2021 முதல் 17-09-2021 முடிய தயிர் விரதம்.
18-09-2021 முதல் 16-10 2021 முடிய பால் விரதம்.
17-10-2021 முதல் 15-11-2021 முடிய த்வி தள விரதம்.
சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி அன்று சென்ற நான்கு மாத காலமாக கட்டுபாடுகளுடன் சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டித்தவர்கள் ஸ்வாமி சன்னதியில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.
இதம் வ்ருதம் மயா தேவ க்ருதம் ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூனம் ஸம்பூரணதாம் யாது த்வத் ப்ரஸாதாத் ஜனார்தன.
 

Latest ads

Back
Top