• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Aadi Pooram

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள்.

சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

ஆடிப்பூரம் 2022 – 1/08/2022

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள்.

அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.*

அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.

சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள்.

இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும்.

உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.

இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.

நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.

மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன.

ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர்.

திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன.

முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.

இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

ஆடியில் பூத்த அரும்பு:

வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம்.

ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர்.

ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர்.

இந்த தினத்தில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாகும்.

பெண்மையின் மகத்துவமான மகப்பேறு வரம் கொடுக்கும் அம்பிகையின் கருணை உள்ளத்தை பறைசாற்றும் உன்னதமான விழாவாகும்.

இந்த தினத்தில் நாம் அம்பிகைக்கு வளைகாப்பு நடத்த நம் வீட்டில் விரைவில் வளைகாப்பு நடக்கும் யோகம் உருவாகும் என்பது ஐதீகமாகும்.
 

Latest ads

Back
Top