• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

51 Special Facts about the Month of Karthigai

கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்

1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

5. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

6. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

7. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

8. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

9. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

10. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

11. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

12. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

13. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

14. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

15. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

16. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

17. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

18. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

19. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

20. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

21. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

22. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

23. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

24. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

25. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

26. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

27. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

28. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

31. தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

32. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.

33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.

35. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

36. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

37. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்… ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

38. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

39. திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.

40. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!

41. குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!

42. கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.

43. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.

44. கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.

45. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

46. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.

47. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.

48. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

49. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

50. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

51. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.
 

Latest ads

Back
Top