• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

13-11-2023 அமவாசை;கேதார கெளரி விரதம்

kgopalan

Active member
.கேதார கெளரி விரதம். 13-11-23





தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் “கேதார கௌரி விரதம்” அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது.





அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.



ஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் “கெளரி என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).





ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.







01 ஸ்ரீ ஞான கௌரி



“உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே” என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்திதேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கௌரி என்று போற்றப்பட்டாள். சிவாலயங்களில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கௌரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும், எண்ணியது நிறைவேறும். விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.



02 ஸ்ரீ அமிர்த கௌரி





உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கௌரிக்கு அமிர்த கௌரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கௌரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி “அமிர்த கௌரி” என்று போற்றப்படுகிறாள்.



03 ஸ்ரீ சுமித்ரா கௌரி





இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு “சினேகவல்லி” என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் ஸ்ரீ சுமித்ரா கௌரி என்று போற்றுவர். இவளை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.



04 ஸ்ரீ சம்பத் கௌரி





வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை “சம்பத்” என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் ஸ்ரீ சம்பத் கௌரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கௌரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கௌரி உடனாய நந்தீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். மேலும், காசி ஸ்ரீ அன்ன பூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.



05 ஸ்ரீ யோக கௌரி





யோக வித்தைகளின் தலைவியாக ஸ்ரீ மகா கௌரி திகழ்கிறாள். இவளையே யோக கௌரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கௌரி எனப்படுகிறாள். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கௌரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கௌரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.



06 ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி





உறுதியான, ஆரோக்கியமான உடலை “வஜ்ரதேகம்” என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி என்று போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இந்த கௌரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். (“ச்ருங்கலம்” என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கௌரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள்புரியும் வடிவுடையம்மனே இந்த கௌரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும்.



07 ஸ்ரீ த்ரைலோக்ய மோகன கௌரி





மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவாலயத்தில் இந்த தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல் தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கௌரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக- மகிழ்வுடன் வாழ அருள்பவள்.



08 ஸ்ரீ சுயம்வர கௌரி





சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை- திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கௌரிஎன்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.



09 ஸ்ரீ கஜ கௌரி





காசி அன்னபூரணி ஆலயத்தில் ஸ்ரீ கஜ கௌரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அன்னையே கஜ கௌரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.



10 ஸ்ரீ விஜய கௌரி





நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் ஸ்ரீ விஜய கௌரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் – ஸ்ரீ வண்டார்குழலி ஆலயத்தில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்ட பின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கௌரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.



11 ஸ்ரீ சத்யவீர கௌரி





கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; இந்த தேவியை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.



12 ஸ்ரீ வரதான கௌரி





வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் ஸ்ரீ வரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமி கூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.





13 ஸ்ரீ சுவர்ண கௌரி



ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகையே சுவர்ண கௌரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.





14 ஸ்ரீ சாம்ராஜ்ய மகாகௌரி



அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர் பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகௌரியாகப் போற்றப்படுகிறாள்.





15 ஸ்ரீ அசோக கௌரி



துன்பமற்ற வாழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம் பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கௌரியாவாள் மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கௌரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.





16 ஸ்ரீ விஸ்வபுஜா மகாகௌரி



தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கௌரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற்சொன்ன கௌரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.



“ஓம் ஸுபதாயை வித்மஹே



காம மாலின்யை தீமஹி



தன்னோ கெளரீ ப்ரசோதயாத்”





அம்பிகையான கௌரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்
 

Latest ads

Back
Top