“மிலேச்ச” என்றால் என்ன?

Status
Not open for further replies.
“மிலேச்ச” என்றால் என்ன?

RiddlesAndAnswers.webp
(English version of this article is already posted in the blogs: swami)

மிலேச்ச என்றால் என்ன? இது யாரைக் குறிக்கும்? என்ற வாதம் நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. பாரத நாட்டு வரலாற்றை தடம்புரளவைத்து எல்லா உண்மைகLaiயும் திரித்துக் குழப்பியதில் மேல் நாட்டோரின் பங்கு கொஞ்சம் நஞ்சமல்ல. சிலர் கள்ளம் கபடமில்லாமலும் இந்தப் பணியைச் செய்திருக்கின்றனர். சிலர் விஷமத்துடன் இந்தப் பணியைச் செய்திருக்கின்றனர்.

பைபிளில் மனிதன் தோன்றிய ஆண்டு சுமார் 4000 ஆண்டுக்கு முன்னர் தான் என்று கூறியதால் அதை நம்பிய சிலர் எல்லா கால வரையரையையும் அதற்குள் வைத்தனர். இன்னும் சிலர் இந்தியாவை நீண்ட காலம் ஆள வேண்டுமானால் பிரித்தாளும் சூட்சி முக்கியம் என்றும் இந்து மதத்தைச் சீர்குலைக்க இப்படி ஆரிய, திராவிட என்ற புதுக்கரடிகளை விட்டால் குழப்பம் சில நூற்றாண்டுகளுக்காவது நீடிக்கும் என்றும் திட்டமிட்டனர். அதில் பெரிய வெற்றியும் கண்டனர்.

சங்க இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இல்லாத இந்த விஷ வாதத்தை முன்வைத்து அழகாக விஷமம் செய்தனர். தமிழர்கள் மத்திய தரைக் கடல் பகுதிகளில் இருந்து வந்தனர் என்றும் ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து வந்தனர் என்றும் இவர்கள் எழுதினர். அட, நாம் எல்லோரும் வெளி இடத்தில் இருந்து வந்தவர்கள் தானே நான் ஆண்டால் என்ன? நீ ஆண்டால் என்ன? என்று சொல்லாமல் சொல்லியும் வந்தனர்.

இப்படிப் பட்டவர்கள் கையில் சிக்கிய முக்கிய வார்த்தைகள் அசுரன், மிலேச்சன், ராட்சசன் (அரக்கன்),தஸ்யூ முதலிய சொற்களாகும். இது பற்றி புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொன்ன விளக்கங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்ததோடு அவைகளுக்கு தவறான விளக்கங்களையும் கொடுத்து வரலாற்றையே திசைதிருப்பியும் விட்டனர். இதில் விந்தை என்னவென்றால் இவர்கள் (பிரிட்டிஷ்காரர்கள்) உலகம் முழுதும் எழுதிய பழைய வரலாறு எல்லாம் மாற்றி எழுதப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் அவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய வரலாறு இன்றுவரை கற்பிக்கப்பட்டு வருகிறது!!!
‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.

சிந்துவெளி ஆய்வை திசை திருப்பிய சொல்

சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.
ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ்காரர் வசம் இருந்த கல்வி நிறுவனங்களில் வேலைக்காக ஏங்கி நின்றோரும், இந்தக் காலத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பதவியோ பட்டமோ வேண்டி நின்றோரும் இதற்கெல்லாம் பலமாகத் தலைய ஆட்டினர். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவு பிறந்து வருகிறது.

இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வேல்ஸ் மக்களையும் ஜெர்மானியர்களையும் எப்படி மிலேச்சர்களாக கருதினர் என்ற எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்
மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்த்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் வரலாறு காட்டும்.

ஆகவே சிந்து சமவெளி ‘மிளக்கா’வும் இல்லை, அங்கே பேசப்பட்ட மொழி ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு.
************
 
Status
Not open for further replies.
Back
Top