• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சித்திரம் (பதிவு-1)

ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சித்திரம் (பதிவு-1)
🥁🔔🥁🔔🥁🔔🥁🔔🥁🔔🥁🔔

பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்ற நாதமுனிகளும்,
மாறன் உரைசெய்த தமிழ்மறை, பாரெங்கும் பரப்பிய ராமானுஜரும்!!
🙏🙏🌺🌻🌹🌷🌼🙏

நாளை ஆனிஅனுஷம்(23/06/2021),
ஸ்ரீமந்நாதமுனிகளின் 1199 ஆவது
திருநட்சித்திரம்.

ஸ்வாமியின் தனியன்:

"நம:அசிந்த்ய,அற்புத,அக்லிஷ்ட,ஜ்ஜான வைராக்ய ராசயே!
நாதாய முநயே,அகாதய பகவத் பக்தி ஸிந்தவே!!"

'எப்போதும் பகவத் த்யானத்தில்
ஆழ்ந்து,பக்திக்குக் கடலானவரும், அளப்பரிய ஞானம், நினைப்பரிய வைராக்யம் ஆகியவை பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்'.

ஸ்ரீமந் நாதமுனிகளுக்கும்
ஸ்ரீராமாநுஜருக்கும் உள்ள விசேஷ தொடர்பைப் பார்ப்போம்.

1.நம்மாழ்வாரிடமிருந்து,நாலாயிரத்தோடுநாளைய(பவிஷ்யத)ஆசார்யரையும் பெற்ற நாதமுனிகள்:
👏👌👍🖒👌👏
ஒரு நாள் காட்டுமன்னார் கோயில்
(நாதமுனிகள் அவதாரஸ்தலம்),
வீரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு,
மேல்கோட்டைப் பக்கமிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்திருந்தார்கள்.
அவர்கள் பெருமாள் முன்பாக, "ஆராவமுதே அடியேனுடலம், நின்பாலன் பாயே"
என்று தொடங்கி 11 பாசுரங்கள் சேவித்தனர்.
கடைசிப்பாசுரத்தில்,
"குருகூரச் சடகோபன் குழலின் மலியச்
சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்,
மழலை தீரவல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே" என்று முடித்தனர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாதமுனிகள், ஆயிரத்துள் பத்துப்
பாசுரங்களைக் கேட்டு உகந்தேன். மற்ற பாசுரங்களையும் பாடுங்கள் என்றார்.
அதற்கு அவர்கள் எங்களுக்கு இந்தப் பத்து தான் தெரியும்.இவற்றை யார் இயற்றினார்கள்;மற்ற பாடல்கள் பற்றியெல்லாம் தெரியாது என்று கூறி
விட்டனர்.

ஆர்வத்தால் உந்தப்பட்ட நாதமுனிகள், பாடலில் குருகூர் என்றிருந்ததால், குருகூரைத்(ஆழ்வார் திருநகரி) தேடிச் சென்றார்.(1150ஆண்டுகளுக்கு, முன்னால் எந்த வசதியும் இல்லாத காலத்தில்"குருகூர்" என்னும் குக்கிராமத்தின் பெயரை வைத்துக் கொண்டு சென்றுவிட்டார்!!).அங்கு சென்று விசாரித்த போது யாருக்கும் ஒன்றும் தெரிய வில்லை.மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தில் வந்த 'பராங்குச நம்பி' என்று ஒரு வயதானவர் ஒருவர் திருக்கோளூரில்இருப்பதாகவும்,
அவரைக் கேட்டுப் பாருங்கள் என்றனர்.
அங்கு சென்று அவரைக் கேட்டபோது,
"மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு" பாசுரங்களைச் சொல்லி, இவற்றை குருகூர் திருப்புளியமரத்தடி யில் இருக்கும் ஆழ்வார் விக்ரகத்துக்கு முன் அமர்ந்து ,நிஷ்டையுடன், "12000"முறை சொன்னால் ஆழ்வார் பிரத்யட்சமாவார் என்றார்.

உடனே நாதமுனிகள் பக்திப்பெருக்கு/நிஷ்டையுடன் நம்மாழ்வார் முன் அமர்ந்து தொடர்ந்து, 12000 முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு சேவித்தார்.அவருடைய வைராக்ய பக்தியில்,நெகிழ்ந்த ஆழ்வார் பிரத்யட்சமாகி,இவர் வேண்டிய ஆயிரம் பாசுரங்கள் மட்டுமல்லாமல்,அவரும் மற்ற ஆழ்வார்களும் பாடிய மற்ற மூவாயிரத்தையும் தந்து அருளினார்.

."பொலிக,பொலிக,பொலிக"
"கண்டோம்,கண்டோம்;கண்ணுக்கினியனகண்டோம்"பாசுரங்களைச் சொல்லும் போது இவை பின்னர் அவதரிக்கப் போகும்"நாளைய-பவிஷ்யத ஆசார்யர்"
(ராமாநுஜர்) அவதரிப்பதைக் கொண்டாடும் பாசுரங்கள் என்று அருளினார். பெருவியப்பும் உவகையும் அடைந்த நாதமுனிகள் அந்த
ஆசார்யரைத்,தமக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஆழ்வாரிடம், "பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
....குருகூர்நம்பி !,முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே"பாசுரத்தை நெக்குருகச் சேவித்து வேண்டினார்.

அன்றிரவு நாதமுனிகள் கனவில் நம்மாழ்வார்,காஷாயம் தரித்து திரிதண்டம் ஏந்தி,அழகிய திருமுகம், நீண்ட திருக்கரங்களுடன் தோன்றி,
இவரே பவிஷ்யத ஆசார்யர்என்றார். மறுநாள்,நாதமுனிகள் ஆழ்வாரிடம் பவிஷ்யத ஆசார்யர் விக்ரகம் பிரசாதிக்குமாறு வேண்டினார் ஆழ்வாரும் அந்த விக்ரகத்தை ஒரு சிற்பிக்குக் காட்டிக் கொடுக்க, அவரும் பவிஷ்யத ஆசார்யர் விக்ரகத்தை தத்ரூபமாக வடித்துக் கொடுத்தார். நாலாயிரத்தையும்,நாளைய ஆசார்யரையும் எடுத்துக் கொண்டு காட்டுமன்னார் கோவில் திரும்பினார். நாலாயிரச் சுவடிகளுக்கும்,பவிஷ்யத ஆசார்யர் விக்ரகத்துக்கும் திருவாராதனை செய்து வந்தார்.

இந்த பவிஷ்யத ஆசார்யர் விக்ரகம்,நாதமுனிகளின் சீடர்கள் உய்யக்கொண்டார்,மணக்கால்நம்பிகள் வழியாக ஆளவந்தாரைஅடைந்தது.இந்த விக்ரகத்தை வைத்துத்தான்,ஆளவந்தார்
காஞ்சிபுரத்தில் ராமாநுஜரை அடையாளம் கண்டு"ஆம்,முதல்வன்இவர்"
என்றுநிர்ணயித்தார்.ஆளவந்தாருக்குப்
பின் அந்த விக்ரகம், அவர் சீடர் திருக்கோஷ்டியூர நம்பியின்
திருவாராதனையில் இருந்தது.இந்த ஆச்சர்யமான பவிஷ்யத ஆசார்யர் விக்ரகத்தை இன்றும் நாம் திருக்கோஷ்டியூரில் சேவிக்கலாம்.

உடையவரின் இந்தத் திருமேனி "தன்னை உணர்த்திய திருமேனி" என்று போற்றப்படுகிறது..(மதுரகவி ஆழ்வாருக்கு தாமிரபரணி நதி தீர்த்தத்தில் கிடைத்த பவிஷ்யத ஆசார்யர் விக்ரகம் வேறு.அவரை,
ஆழ்வார்திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் சேவிக்கலாம்).

2.நாலாயிரத்தை வளர்த்த தாய் நாதமுனிகள்!
நாலாயிரத்தைப் பாரெங்கும், மணம் பரப்பிய இதத்தாய் ராமானுஜர்!!
🌹🌺🌻🌼🌷🌱🌲
ஸ்ரீபராசரபட்டர் திருவாய்மொழித் தனியனில்,
"ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்,
மொய்ம்பால் வளர்த்த இதத்தாயி இராமானுசன்"என்றுஉரைத்தார்.ஆனால் நாலாயிரத்தையும் பார்க்கில், ஈன்ற தாய் நம்மாழ்வார்(மற்றஆழ்வார்களுக்காகவும்) என்றால்,அவற்றுக்குப்பாத்தி கட்டி, நீர் பாய்ச்சி,உரமிட்டு வளர்த்து உடையவரி
டம்,தந்த தாய் நாதமுனிகளே !
நாலாயிரப் பூக்களின் மணத்தையும், கனிகளின் சுவையையும் பாரெங்கும் கொண்டு சேர்த்த, இதத்தாய் நம் ராமாநுஜர் !!

நாலாயிரத்தில் எவை முதலாயிரம்,
எவை இரண்டாம் ஆயிரம் என்று தொகுத்தவர் நாதமுனிகள். திருப்பல்லாண்டு(12),பெரியாழ்வார்திருமொழி(461),திருப்பாவை(30),நாச்சியார்திருமொழி(143),பெருமாள் திருமொழி(105 ),திருச்சந்த
விருத்தம்(120)திருமாலை(45),திருப்பள்ளியெழுச்சி(10)அமலானாதிபிரான்(10) ஆகிய பிரபந்தங்கள் "ஓம்"என்னும் பிரணவ ஸ்தானத்தில் இருப்பதால் முதலாயிரம் என்று சேர்த்தார்.

கண்ணிநுண்சிறுத்தாம்பு(11)திருமந்திரத்தின் இடைப்பதமான"நம" பதத்தின் பொருளை விவரிக்கிறதுஎன்றும், அதையும் முதலாயிரத்தில் வைத்தார்.

திருவாய்மொழி தவிர மற்ற பிரபந்தங்கள் எல்லாம் திருமந்திர சேஷமான"நாராயணாய"பதத்தை விவரிப்பதாக அருளினார்.அவற்றுள் திருமங்கைஆழ்வாரின் பெரியதிருமொழி
(1084 ),திருக்குறுந்தாண்டகம்(20),திரு
நெடுந்தாண்டகம்(30)இரண்டாம்ஆயிரத்திலும்,மற்றவற்றை 'இயற்பா'என்று சேர்த்து மூன்றாம் ஆயிரத்திலும் வைத்தார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி(1102) "த்வய மஹாமந்திரத்தின்"பொருளை விவரிப்பதாகக் கூறி நான்காம் ஆயிரத்தில் வைத்தார்.
நாதமுனிகளும், அவர் மருமக்கள் மேலையகத்தாழ்வானும்,கீழையகத்தாழ்வானும் சேர்ந்து திவ்யப்பிரபந்தப் பாசுரங்களுக்கு(இயற்பா தவிர)-துறை/விருத்தம்,தாளம்,ராகம்அமைத்து
வைத்தனர்;தேவகானத்தில் பாடினர்.
திருவரங்கத்தில் அத்யயன உற்சவத்தில் தாள இசையுடன் பாடினர்.

ராமாநுஜர் திவ்யதேசங்கள்/கோவில்கள் தோறும் நாலாயிரத்துக்கு, முன்னுரிமை கொடுத்துச் சேவிக்கச் செய்தார்.
அதற்காக அத்யாபகர்களை நியமித்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.கோவில் உற்சவங்களில் பெருமாள் புறப்பாட்டில்
பெருமாளுக்கு முன்னால் திராவிட வேதமான நாலாயிரம் சேவித்துக் கொண்டு செல்லவும்,பெருமாளுக்குப் பின்னால் வடமொழி வேதம் சேவித்து வரவும் நியமித்தார்.அவர்தமது காலட்சேப
ங்களில் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களு
க்கு அற்புதமான விளக்கம் கொடுத்தார்.
தம் சீடர் திருக்குருகைப் பிள்ளானை திருவாய்மொழிக்கு உரை எழுத நியமித்தார். இதுவே நாலாயிரத்துக்கு இயற்றப்பட்ட முதல் விரிவுரை. அவரைத் தொடர்ந்து ராமானுஜர் விரும்பிய வண்ணம்,அவர்காலத்துக்குப், பின்னும் பல அற்புத வியாக்யானங்கள்/விரிவுரைகள் வந்தன.

3.ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தில் "முத்தமிழ்விழா" நடத்திய நாதமுனிகள்!.

முத்தமிழ் விழாவை செம்மைப்படுத்தி,
மற்ற திவ்ய தேசங்களிலும் நடத்தச் செய்த இராமானுசர்!!
🔔📯📯📢🎷🎸🔉🔊🕨🕩🕭
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடக்கும்அத்யயன உற்சவத்தில், திருமங்கை ஆழ்வார் முதன்முதலில் திருவாய்மொழிஆயிரத்தையும்,
பெருமாள் முன் சேவிக்கும் முறையை
ஆரம்பித்து வைத்தார்.ஒவ்வொரு
ஆண்டும், இதற்காக நம்மாழ்வார் விக்ரகம் ஆழ்வார் திருநகரியிலிருந்து,
ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளப் பண்ண பட்டது.

நாதமுனிகள் பெருமாளை வேண்டி, நாலாயிரத்தையும் சேவிக்க அனுமதி பெற்றார்.அதன்படி அத்யயன உற்சவத்தை இரு பிரிவாகப் பிரித்து வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் பத்துநாட்கள் "பகல்பத்து"என்றும்,
ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் "இராப்பத்து"என்றும் வைத்தார். பகல்பத்தில்முதலாயிரமும்,இரண்டாயிரமும்,இராப்பத்தில்திருவாய்மொழியும்
(நான்காம் ஆயிரம்) சேவிக்கச்செய்தார்.21ஆம் நாள் இயற்பா(மூன்றாம் ஆயிரம்) சேவித்தனர்.மேலே சொன்னபடி அவர் நாலாயிரத்துக்கும்,இசை அமைத்து
வைத்திருந்ததால்,முதன்முதலாக இசைதாளத்துடன்,அபிநயமும் சேர்த்து சேவித்தனர். நாதமுனிகள் தாமே சில ஆண்டுகள் நாலாயிரத்தையும் சேவித்தார்.பின்னர் அவரது இரு மருமக்களும் சேவித்தனர். அவர்கள் "அரையர்கள்"என்று அழைக்கப் பட்டனர்.நம்பெருமாள் அவர்களில் ஒருவருக்கு "மதியாத தெய்வங்கள் மனமுறைவாணப் பெருமாள் அரையர்"என்றும், மற்றொருவருக்கு
"நாதவிநோதஅரையர்"என்றும்
அருளப்பாடு சாதித்தார்.
மேலும் நம்பெருமாள் அவர்களுக்குக் குல்லாவும்,தொங்கல் பரியட்டமும்,தாம் சாற்றிக் களைந்த திருமஞ்சனக்கைலி
யும்,திருமாலைகளும் சாதித்து அருளினார்.அவர்கள் வம்சத்தில் வந்த அரையர்கள் இன்றுவரை அரையர் சேவை என்னும் முத்தமிழ்விழாவை-
இயல்-சொல்லுதல்/வியாக்கியானம் செய்தல்,
இசை-இசைகூட்டித் தாளத்துடன் பாடுதல்,
நாடகம்-அபிநயம்,காட்சிகள் அரங்கேற்றம்-அற்புதமாக நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு நம்பெருமாள், முதல் அரையர்களுக்குக் கொடுத்த வெகுமானங்களை இன்றும் தந்தருளி வருகிறார்.

நாதமுனிகள்/மருமக்கள் காலத்துக்குப் பின் பல காரணங்களால்இந்த
"முத்தமிழ்விழா"சரிவரநடக்கவில்லை.
எம்பெருமானார் காலத்தில் இந்த விழாவை மீண்டும் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார். நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியிலிருந்து எழுந்தருளப்
பட்டு வருவதில் பல இடையூறுகள் ஏற்பட்டதால் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார்,மற்ற ஆழ்வார்கள் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தார் ராமானுஜர். உடையவர் காலத்தில் 700 அரையர்கள் இருந்தார்களாம்.
அவர்களில் பலரை பல்வேறு திவ்யதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார்.ஸ்ரீரங்கத்தில் மட்டும் நடந்துவந்த அத்யயன உற்சவம்/முத்தமிழ்விழா பல திவ்ய தேசங்களிலும் நடந்தது.(தற்போது பல திவ்ய தேசங்களிலும் அத்யயன உற்சவம் நடக்கிறது.ஆனால் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி,ஸ்ரீவில்லிபுத்தூர்,மேல் கோட்டை தவிர மற்ற இடங்களில்
அரையர்கள் இல்லாததால்,அங்கு
அரையர் சேவை நடைபெறுவதில்லை. அத்யாபகர்கள் மட்டும் சேவிக்கிறார்
கள்.அங்கெல்லாம் இயற்றமிழ்மட்டுமே
.முத்தமிழும் இல்லை. ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இன்றும் உடையவர் காலத்தில் நடந்தது போல் 'முத்தமிழ்விழா' 22நாட்கள்(திருநெடுந்தாண்டகத்தையும் சேர்த்து) மிக அற்புதமாக நடக்கிறது).
ராமானுஜர்,அவரது சீலமிக்க சீடர்கள்ஆழ்வான்,ஆண்டான்,
எம்பார், போன்றோர் எழுந்தருளியிருந்த சபையில் முத்தமிழ் விழா நடத்தியது அரையர்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது.அவர்கள் பாசுரங்களுக்கு புதிய,புதிய விளக்கங்களையும்,
அபிநயங்களையும் எடுத்துரைப்பார்கள். அதன்படி அரையர்கள் மாற்றிக் கொள்வார்கள்.ராமானுஜர் அரையர்களுக்கு பல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கென்று தனியாக "செந்தமிழ் வேதியர் வீதி"என்னும் ஒரு வீதியையே
(கீழ உத்திரவீதி) அமைத்துக் கொடுத்தார்.
நம்பெருமாள் நியமனப்படி இராமாநுச நூற்றந்தாதியும் நாலாயிரத்தில் சேர்க்கப்பட்ட பின்,இராமாநுச நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது (இயற்பா முடிந்து).

4.பவிஷ்யத(வருங்கால) ஆசார்யர்களை
அடையாளம் காட்டிய மஹான்கள்:
🙏👍👉👉👌👉👉👍🙏
நாதமுனிகள் தம் அத்யந்த சீடர் உய்யக்கொண்டாரிடம்,தமக்கு ஒரு பேரன்
அவதரிப்பார்(தம் திருக்குமாரர் ஈஸ்வரமுனியின் மகனாக) என்றும், அவர் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பீடத்தின் தலைமை ஏற்று சிறந்த ஆசார்யராக விளங்குவார் என்றும்,அவருக்கு சகல ஸாஸ்திரங்களையும் கற்பிக்கும்படி கூறினார்.பவிஷ்யதாசார்யர் விக்ரகத்தையும் அவரிடம் ஒப்படைக்கும் படி சொன்னார்.நாதமுனிகள்/உய்யக்கொண்டார் காலத்துக்குப் பின்னர் அவதரித்த அந்தப் பேரப் பிள்ளையே "பரமாசார்யர் ஆளவந்தார்" என்னும் யமுனைத் துறைவர் (உய்யக்கொண்டாரின் சீடர் மணக்கால் நம்பி,நாதமுனிகள் நியமித்ததைச் செய்து முடித்தார்).

ராமாநுஜர்,தமக்குப் பின்னர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிதாயத்தை வழி நடத்த பதினாறு வயதே நிரம்பிய பராசரபட்டரை அடையாளம் காட்டினார். ராமாநுஜருக் குப் பின்,எம்பார்(பட்டரின் ஆசார்யர்) குறுகிய காலம் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.அவருக்குப் பின் பராசரபட்டர் சம்பிரதாயத் தலைமை ஏற்றார். பட்டருக்குப் பின் யார் வரவேண்டும் என்பதையும் உடையவர் உணர்த்தி விட்டார்.பட்டரிடம், மேல்நாட்டில்
(மைசூர்ப் பிரதேசம்) மாதவாசார்யர் என்னும் வேதாந்தி ஒருவர் இருப்பதாக
வும், அவரைத் திருத்திப் பணி கொண்டு நம் சம்பிரதாயப் ப்ரவர்த்தகர் ஆக்க வேண்டும், என்று நியமித்துச் சென்றார்.
பட்டர் திருத்திப்பணிகொண்டவர் தான்,
பட்டருக்குப் பின்னால் சம்பிரதாயத் தலைமை ஏற்ற நஞ்சீயர்!!

5."குளப்படியிலே தேங்கினால், குருவிகுடித்துப்போம்.வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விழையும்"
🌱🌱🌱🌱🌱🌱
நாதமுனிகள் இவ்வார்த்தையை அடிக்கடி சொல்வாராம். அதாவது ஒரு மாட்டின் குளம்பின் அடியிலே தேங்கும் மழைநீர் சில குருவிகள் குடிப்பதற்கே பயன்படும்.
அதே மழை நீர், வீரநாராயணபுரத்து ஏரியிலே தேங்கினால் நாட்டிலுள்ள
வயல்களெல்லாம் விளைந்து நாடே வாழும்.
இதன் ஆழ்பொருள்:
பவிஷ்யத ஆசார்யர் ராமாநுஜருக்கு முன்பு வரை இருந்த ஓராண்வழி உபதேசம் ஒரு சிலருக்கு மட்டுமே பயன்பட்டது.ஆனால் ராமாநுஜருக்குக் கிடைத்த நல்உபதேசங்களை ஆசையுடையோர்க்கு,எல்லாம் உபதேசிக்க வழிவகை செய்தார் என்பதாகும்.

"லஷ்மிநாதனாகிய பெருங்கடலில்,
சடகோபராகிய (நம்மாழ்வார்)மேகம், கருணை நீரைப்பருகி,நாதமுனிகளாகிய மலையிலேபொழிந்தது.அந்த நீர் புண்டரீகாஷரென்னும் உய்யக் கொண்டார்,ராமமிஸ்ரர் என்னும் மணக்கால்நம்பி ஆகிய இரு அருவிகள்மூலம்,யாமுநாசார்யர்,எனும் ஆளவந்தாராகிய பேராற்றை அடைந்து,
அங்கிருந்து பெரியநம்பிகள் முதலான, ஐந்துஆசார்யர்களாகிற கால்வாய்கள் மூலம் ராமானுஜராகிய பெரிய ஏரியை(வீராணம்ஏரி) அடைந்து 74 சிம்மாசனாதிபதிகள்(ஆசார்யர்கள்)மூலம்
(வீராணம் ஏரிக்கு 74மதகுகள்), ஜீவாத்மாக்களாகியபயிர்களின் பொருட்டுப் பெருகுகிறது"

"ஆரப்பொழில் தென்குருகைப்பிரான்
அமுதத்திருவாய்,
ஈரத்தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு
இனியவர்தம்
சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் 'நாதமுனி'யைநெஞ்சால் \
வாரிப்பருகும் இராமானுசன் எந்தன் மாநிதியே !!"(இரா.நூற்.20)

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).
படங்கள்:
1&2:ஸ்ரீமந்நாதமுனிகள்,காட்டு மன்னார் கோவில்.
3.ஸ்ரீதேவி/பூதேவி சமேத
ஸ்ரீவீரநாராயணப் பெருமாள்.
4.நாதமுனிகளும்/ஆளவந்தாரும் (தாத்தாவும் பேரனும்).
5.நாதமுனிகள் புறப்பாடு.
6.நாதமுனிகளுக்கு பவிஷ்யத ஆசார்யரைத் தந்தருளிய நம்மாழ்வார்.
7&8:திருக்கோஷ்டியூரில் உடையவர்-நம்மாழ்வாரின் திருவடியில்.


1624379900942.png
 

Latest ads

Back
Top