விநாயகரின் அறுபடைவீடுகள்

praveen

Life is a dream
Staff member
விநாயகரின் அறுபடைவீடுகள்

தம்பிக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல் அண்ணனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.


முதல்படை வீடு திருவண்ணாமலை
இங்குள்ள விநாயகரின் பெயர் ”அல்லல் போம் விநாயகர்” இவரைக் குறித்துப் போற்றிப் பாடப்படும் பாடலே ”அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்” என்பதாகும்.


இரண்டாம் படைவீடு விருத்தாச்சலம்
இங்குள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ”ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார்.
இறங்கிச் சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம் கல்வி சீரான வாழ்வு அமையும்.


மூன்றாம் படைவீடு திருக்கடவூர்
அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு ” கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார்.


அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.


நான்காவது படைவீடு மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மையைத் தரிசிக்கச் செல்லும் வழியில் ” சித்தி விநாயகர்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.
மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்து சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.


ஐந்தாவது படைவீடு காசி மற்றும் பிள்ளையார்பட்டி
காசியில் ”துண்டி ராஜ கணபதி” யாகவும், பிள்ளையார்பட்டியில் ”கற்பக விநாயகர்” ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.


காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார் காசிக்கு போகமுடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார்.
இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.


ஆறாம்படைவீடு திருநாரையூர்
இங்கு ”பொண்ணாப் பிள்ளையார்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் இத்திரு நாமம்.


இத்திருத்தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்புயாண்டார் நம்பிகளும் அவதரித்தார். கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக.
 
Back
Top