• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வரலாறு எழுதிய முதல் தமிழன்

Status
Not open for further replies.
வரலாறு எழுதிய முதல் தமிழன்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.

பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.

இரு பெரும் சோழர்களையும், இரு பெரும் சேரர்களையும் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது. இது தவிர கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.

நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார். கழார்ப் பெருந்துறை நீர் விழாவில் ஆட்டனத்தியை காவிரி அடித்துச் சென்றது, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் அடைந்த வெற்றியைக் கொண்டாட அவனுக்குப் பெண் கொடுத்த அழுந்தூரில் விழா நடந்தது, ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது, பாழியில் வேளிர் புதையல் செல்வங்களைச் சேர்த்துவைத்தது, தந்தையின் கண்ணைப் பறித்த கோசரை அன்னி மிஞிலி பழிவாங்கியது, மனைவியைப் பிரிந்து பரத்தை வீட்டில் வாழ்ந்த பேகனை மீண்டும் மனைவியுடன் சேர்த்து வைத்தது—இப்படி எத்தனையோ செய்திகளை பத்திரிக்கை நிருபர்கள் போல பிட்டுப் பிட்டு வைக்கிறார். அந்தக் காலத்தில் பத்திரிக்கைகள் இருந்திருந்தால் சிறந்த பத்திரிக்கையாளர் விருது பரணருக்குத்தான் கிடைத்திருக்கும்!

மேலே கூறிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவையான நிகழ்ச்சி. இவைகளில் கரிகாலன், நன்னன், பறவை நண்பன் ஆய் எயினன், சேரன் செங்குட்டுவன் போன்றோரின் சுவையான கதைகளை ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழ்கண்ட கட்டுரைகளில் காண்க:

1.கரிகாலன் வெள்ளை முடி தரித்ததால்தான் இன்றும் பிரிட்டிஷ் நீதிபதிகள் வெள்ளை “விக்” தரித்து வந்து தீர்ப்பு கூறுகிறார்கள்
2. துலாபாரம் கட்டுரையில்,எடைக்கு எடை தராசில் வைத்து தங்கம் தருகிறேன் என்று ஊர்மக்கள் மன்றாடியும் நன்னன் ஒரு பெண்ணைப் படுகொலை செய்தான் என்பதைக் கூறியிருக்கிறேன்
3. அதிசயப் பறவைத் தமிழன் கட்டுரையில் ஆய் எயினனுக்குப் பறவைகள் கூடி குடை பிடித்த அற்புத நிகச்சியைக் கொடுத்துள்ளேன்
4. கடற்கொள்ளையர்: இந்துக் கடவுள்கள் கடற்கொள்ளையரைத் தாக்கி ஒழித்த கட்டுரையில் கடம்பறுத்த செங்குட்டுவன் பற்றி எழுதினேன்.
5. Sea in Tamil Literature and Kalidasa என்ற கட்டுரையில் கடல் பற்றி பரணர் கண்டுபிடித்த அரிய விஷயத்தைக் கொடுத்திருக்கிறேன்

அறுகை என்ற நண்பனுக்கு உதவுவதற்காக மோகூர்ப் பழையன் மீது படை எடுத்த செங்குட்டுவன், பழையனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் சோழனையும் விரட்டிவிட்டு பழையனை வென்றான். பழையனின் காவல் மரமான வேம்பை வெட்டித் துண்டுகளாக்கி முரசு செய்ய யானைகளால் இழுத்துவந்தான். இதற்குப் பழையன் மனைவியரின் முடியைக் கத்தரித்து கயிறு செய்து அந்தக் கயிற்றைப் பயன்படுத்தினான். ஆக தமிழர் செய்த தவறான தவறுகளையும் துல்லியமாகத் தருகிறார். மாங்காய் எடுத்த பெண்ணைக் கொன்ற நன்னனை ஏசுகிறார். கடற்படையைக் கொண்டு கடல் கொள்ளயர்களைச் செங்குட்டுவன் அழித்ததையும் கூறுகிறார்.

ஆதிமந்தி—ஆட்டநத்தி
அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட், உதயணன்—வாசவதத்தை, மும்தாஜ்- ஷாஜஹான் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி. அவள் ஆட்டநத்தி என்ற ஆடல்வல்லானை மணக்கிறாள். ஆட்டத்தில் சிறந்த அவன் பல நீர் விளையாட்டுகளைச் செய்து காட்டுகையில் காவிரி நதி அவனை அடித்துச் செல்லுகிறது. அவன் மனைவி ஆதிமந்தி காவிரி கடலுடன் கலக்கும் இடம் வரை அவனைப் பின் தொடர்ந்து அலறியவாறே ஓடுகிறாள். இந்த அவலத்தைக் கண்ட சோழ நாடே கண்ணீர் உகுக்கும் வேளையில் மருதி என்பவர் அவனைக் கரை சேர்த்து விட்டு காவிரியால் அடித்துச் செல்லப்பட்டு மறைந்துவிடுகிறார். இந்தச் சோகக் காட்சிகளை பரணரும் வெள்ளிவீதீயாரும் பல பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

வடமொழிக்கு இலக்கணம் கண்ட, உலகமே வியக்கும் மேதை பாணிணீயை, பகவான் பணிணி என்று பதஞ்சலி புகழ்வார். நாமும் வள்ளுவனைத் தெய்வப் புலவன் என்போம். பரணரும் இவ்வாறு தெய்வப் புலவன் என்று நக்கீரரால் வணங்கப்படும் செய்தியைத் தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பேராசிரியர் கூறுகிறார்: “முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

இதோ அவரால் பாடப் பட்டோரின் பட்டியலைப் பாருங்கள்:
1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி 2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி 3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் 4. சேரன் செங்குட்டுவன் 5. பேகன் 6. ஊனூர் தழும்பன் 7. உறந்தை வெளியன் தித்தன் 8. மோகூர்ப் பழையன் 9. அறுகை 10. மலையமான் திருமுடிக் காரி 11. ஆய் அண்டிரன் 12. அதியமான் நெடுமான் அஞ்சி 13. கண்டீரக் கோப்பெருநள்ளி 14. வல் வில் ஓரி 15. கரிகாலன் 16. ஆட்டனத்தி 17. ஆதிமந்தி 18. நன்னன் 19.அன்னி மிஞிலி 20. அகுதை 21. ஆய் எயினன் 22.பாணன் 23. கட்டி 24. பொருநன் 25. கணையன் 26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் 27. அதிகன் 28. எவ்வி 29. மத்தி 30. கழுவுள் 31. அழிசி 32. பெரும்பூட் பொறையன் 33. தழும்பன் 34. விரான் 35.விச்சியர் பெருமகன் 36. பழையன் 37. வல்லங் கிழவன் 38. பொதியில் திதியன் 39. வன் பரணர் 40. வெள்ளிவீதியார் 41. மருதி 42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்).

தமிழ் வரலாறு கண்ட ஏனையோர்:
பரணரைத் தவிர சங்க காலத்துக்கு முந்திய மௌரியர் காலம் குறித்து தகவல் தருகிறார் மாமூலன் என்ற புலவர். மௌரியர்கள் மலைகளில் சாலைகளை அமைத்து படை எடுத்து வந்தது, வேங்கட மலைக்கு அப்பால் வேற்று மொழிகள் பேசப்பட்டது ஆகிய தகவல்களைத் தருகிறார் (அகம் 251, 281).
சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான காவியம் குறித்து பழந்தமிழ் நூல்களில் எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால் மருதன் இளநாகன் என்ற ஒரு புலவர் மட்டும் “முலையைத் தூக்கி எறிந்த பத்தினி” பற்றிப் பாடுகிறார். இது கண்ணகி தன் முலையை பிய்த்து எறிந்து மதுரையைத் தீக்கிரையாக்கிய சம்பவமே என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய சில வரிகள்தான் தமிழ் இலக்கியத்தின் காலத்துக்கே அடித் தளமாக அமைந்தது. “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தான் என்று அவர் பாடியதால் இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்திலிருந்து கஜபாகு மன்னரின் காலம் கி.பி.130 என்பதை அறிந்து சேரன் செங்குட்டுவன் காலத்தை அறிந்தோம். இளங்கோவும் ஏனைய புலவர்களும் கூறும் சுனாமி தாக்குதல்கள் , தென் மதுரை முதலியன கடலுக்குள் சென்றது ஆகியன எல்லாம் கி.பி.130க்கு முன் நடந்தன என்பதையும் அறிகிறோம். இவை எல்லாம் சதகர்ணி மன்னர் பற்றிய குறிப்புகளாலும் ரோமானிய வணிகத் தொடர்பு தடயங்களாலும் உறுதியாக்கப்பட்டன.

திருவிளையாடல் புராணம் பல வரலாற்று நிகழ்ச்சிகளைச் சொன்னாலும் அவைகளைப் புராணக் கதைகள் என்றும் வரலாறு இல்லை என்றும் ஒதுக்கிவத்தனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் (திருநாவுக்கரசு) பெருமான், தருமிக்கு பொற்கிழி கிடைத்த சம்பவத்தைத் தனது தேவாரத்தில் பாடி ஏழைத் தருமிக்கு அழியாத புகழ் வாங்கிக் கொடுத்துவிட்டார். நரியைப் பரியாக்கிய அற்புதத்தைக் குறிப்பிட்டு மாணிக்கவாசகர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர் எனபதையும் சொல்லாமல் சொல்லுகிறார். செய செய சங்கரா போற்றி என்றும் கீதங்கள் பாடிய அடியார்கள் என்றும் பாடி ஆதிசங்கரர் தங்களுக்கு முன்னால் வாழ்ந்ததையும் காட்டுகிறார். (ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க).

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் பாட்னா நகரில் ஜைனர்களுடன் அப்பர் வாழ்ந்ததால் கங்கை பற்றியும் அது வங்க தேசத்தை அடைந்தவுடன் ஆயிரம் பிரிவுகளாகப் பிரிந்து கடலில் விழுவதையும் “ஆயிர மாமுக கங்கை” என்றும் பாடுகிறார்.

மருதன் இளநாகன் கண்ணகி பற்றி பாடியது-- நற்றிணை 216.
“ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமா வுண்ணிக்
கேட்டோர் அனையா ராயினும்
வேட்டோ ரல்லது பிறரின் னாரே”



(அப்பர், திருப்புத்தூர் திருத்தாண்டகம் 2-1-2

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக்கிழி தருமிக்கருளினோன் காண்
*****

கரிகாலன் வெற்றி பற்றி பரணர் பாடியது:
காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகா
லார்கலி நறவின் வெண்ணி வாயிற்
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பி
னிழிமிசை முரசம் பொருகளத்தொழியப்
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய (அகம். 246)
*****

சிலப்பதிகாரத்தில் கஜபாஹு:
மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
மெந்நாட்டாங்க ணிமைய வரம்பனி
னன்னாட் செய்த நாளணி வேள்வியில் (சிலம்பு.30-2-159)
*********************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top