• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ரிவால் பல்லாண்டு பாடிய பட்டர் பிரான்

ரிவால் பல்லாண்டு பாடிய பட்டர் பிரான்

விஷ்ணு சித்தர் திருமாலிடம் வரம் கேட்காமல், "நீ பல்லாண்டுகள் வாழ்வாயாக!' என்று தாய் தன் குழந்தையை வாழ்த்துவது போல், பாடியுள்ளார். அதனால்தான் பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றார்.


விஷ்ணுசித்தர் என்ற வைணவ பக்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி கோயிலில் நந்தவனம் அமைத்து மலர்களை கொய்து மாலையாகத் தொடுத்து, பெருமாளுக்கு அணிவிக்கும் திருத்தொண்டுசெய்து வந்தார்.


இவர் பெரியாழ்வார் என்ற பெருமை பெறுவதற்குக் காரணமான நிகழ்ச்சி மதுரை மாநகரில் நடந்தது.


மதுரையை தலைநகராகக் கொண்டு, பாண்டிய நாட்டை வல்லபதேவ பாண்டியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் இரவில் மாறுவேடம் பூண்டு அடிக்கடி நகர சோதனைக்குச் செல்வான்.


ஒருநாள் இரவு நகர சோதனைக்கு மாறுவேடத்தில் சென்றிருந்தபோது, ஒரு வீட்டுத் திண்ணையில் அயலூர்காரர் ஒருவர் படுத்திருந்தார். மன்னன் அவரை எழுப்பி, ""ஐயா, தாங்கள் யார்? இத்திண்ணையில்ஏன் படுத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.


அதற்கு அவர், ""ஐயா, நான் தலயாத்திரை செய்து வருபவன். இன்று கூடலழகர் கோயிலில் உள்ள இறைவனைச் சேவித்துவிட்டு வந்தேன். நேரமாகி விட்டது.அதனால், திண்ணையில் படுத்துவிட்டேன்''என்றான்.


அதற்கு மன்னன், ""தலயாத்திரை செய்வதால் என்ன பயன்?'' என்றான்.


""மறுமையில் நற்கதி அடைவதற்கு இம்மையில் பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறைவனைத் தரிசித்துப் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் பக்தியே மறுமைக்கு உதவும் செல்வம்!''
யாத்திரிகர் கூறியது மன்னனின் உள்ளத்தைக் கவர்ந்தது.


அவரைப் பாராட்டிப் பொருளுதவி செய்து, அரண்மணைக்குச் சென்றான்.


மறுநாள், மன்னன் முதலமைச்சர் செல்வ நம்பியையும் மற்ற அமைச்சர்களையும் அழைத்து யாத்திரிகர் கூறியதைச் சொன்னான்.
""மறுமையில் நற்கதி அடைவதற்கு அழியாத பரம்பொருளை நாம் வணங்க வேண்டுமென்றால், அவர் யார் என்று எப்படி அறிவது?'' அதற்குசெல்வநம்பி, ""அரசே நம் அரசவையில் ஒரு தோரணக் கம்பம் நட்டு, பட்டுத்துணியில், பொன், முத்து, வைரம் போன்ற நவமணிகளை வைத்துக் கம்பத்தின் உச்சியில் கட்டி வைப்போம். உண்மையானபரம்பொருள் யார் என்று எவர் நிரூபிக்கிறார்களோ, அவர்முன் பொற்கிழி கட்டி இருக்கும் கம்பம் வளையும். அப்பொற்கிழியை அவர் அறுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் உண்மையானபரம்பொருளையும் அறியலாம்!'' என்றார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு மலர் கைங்கர்யம் செய்து வந்த விஷ்ணுசித்தரின் கனவில் திருமால் தோன்றி, ""விஷ்ணுசித்தரே, மதுரை சென்று பாண்டியன் அவையில் நடைபெறும் விவாதத்தில்
பிறசமய அறிஞர்களுக்கெல்லாம் விடை கூறி, திருமாலே பரம்பொருள் என்ற உண்மையை நிரூபித்து, வைணவ சமயத்தின் பெருமையை வையம் அறியச் செய்துவாரும்'' என்றார்.


அதற்கு விஷ்ணுசித்தர், ""சுவாமி, நான் மலர் தொடுத்து தங்களுக்கு மாலையணிவிக்கும் கைங்கர்யம் செய்வது தவிர, சமயநூல்களைக் கற்றவன் இல்லையே!"' என்றார்.


அதற்குத் திருமால், ""நீர் மதுரைப் பாண்டியன் அரசவைக்குச் செல்லும். உமது மூலம் உண்மையான பரம்பொருளை உணர்த்தும் ஆற்றலைப் பெற நான் உதவுகிறேன்''என்றார்.


விஷ்ணுசித்தர் பாண்டியன் அரசவை சென்றவுடன், மன்னனும் செல்வநம்பியும் மற்றுமுள்ள அரசர்களும் வணங்கி வரவேற்றனர்.
விஷ்ணுசித்தர், ""பக்தர்களை மறுமையில் எமதூதர்கள் பற்றாமல் தடுத்து பரமபதம் செல்ல உதவும் வைகுந்தவாசனாகிய திருமாலே பரம்பொருள்!'' என்று கூறினார்.


அவர் கூறியதை உண்மை என்று நிரூபிப்பது போல் பொற்கிழி கட்டிய கம்பம் வளைந்தது. இந்தச் செயல் கண்டு மன்னனும் செல்வநம்பியும் பக்தர்களும் அறிஞர்களும் மகிழ, வளைந்த கம்பத்தில் உள்ளபொற்கிழியை அறுத்தெடுத்தார். அத்துடன் பல சமய அறிஞர்களின் வினாக்களுக்கும் பரந்தாமன் அருளால் விடையளித்தார் விஷ்ணுசித்தர்.


ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள் என்று உணர்த்திய விஷ்ணுசித்தரைப் பாண்டிய மன்னன், தன் பட்டத்து யானை மீதுள்ள அம்பாரியில் அவரை ஏற்றி வைத்து மன்னனும் செல்வநம்பியும் அமைச்சர்களும்ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


ஊர்வலம், கூடலழகர் கோயில் அருகே வந்தவுடன் அங்கே கோயில் கொண்டிருக்கும் திருமால், தன் பக்தன் யானை மீது வரும் காட்சியைக் காணவும், தரிசனம் தரவும் கருட வாகனத்தில் லட்சுமி
சமேதராய் சங்குசக்கரதாரியாய் காட்சி தந்தார். அதைக்கண்ட விஷ்ணுசித்தர்,


""பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்''


என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடி வாழ்த்தினார்.


"நீ ஏன் எனக்காகப் பயப்படுகிறாய், என் திருவடிகளை வணங்கும் உன்னைப் போன்ற பக்தர்களைக் காக்கும் என் சேவடிகளும் இருக்கும் போது?' என்று கேட்பதுபோல், தன் திருவடிகளைக் காட்டினார் திருமால்.


அதைக் கண்ட விஷ்ணுசித்தர்,


""மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு''
என்று பாடினார்.


பக்தனின் பாடலைக் கேட்ட திருமால், "என் மீது பக்தி கொண்ட உன்னைப் போன்ற பக்தர்கள் இருக்கும்போது, எனக்கு யாரால் தீமை விளையும்' என்று கேட்பதுபோல் விஷ்ணுசித்தரைக் காட்டினார்.


அதைக்கண்ட விஷ்ணுசித்தர்,


""அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டே''


என்கிறார்.


திருமால், "என் வலமார்பினில் உறையும் மகாலட்சுமி இருக்கும்போது, எனக்கு என்ன தீமை வரும்' என்பது போல், வலமார்பினில் மகாலட்சுமியை காட்டி அருள்கிறார்.


அதற்கு ஆழ்வார்,


""வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டே''


வாழ்த்துகிறார்.


திருமால், "பக்தா! நீ எனக்காக ஏன் பயப்படுகிறாய்? என் வலக்கரத்தில் பகைவர்களை அழிக்கும் சுதர்சன சக்கரமும் இடக்கரத்தில் போர்க்களத்தில் பகைவர்கள் நடுங்க முழங்கும் பாஞ்ச சன்யம் என்னும் சங்கும் இருக்கும்போது, எனக்கு யார் தீமை விளைவிக்க முடியும்' என்பதுபோல், தன் சங்கு சக்கரத்தைக் காட்டினார்.


இதைக்கண்ட ஆழ்வார்,
""வடிவார் சோதி வலத்துறையும் பல்லாண்டே
படைபோர் புக்கு முழங்கு மப்பாஞ்ச
சன்யமும் பல்லாண்டே''
எனப் பாடினார்.


இவ்வாறு, வையத்தை வாழ்விக்கும் வைகுந்தவாசனாகிய திருமால் தமக்குக் காட்சியளிக்கும்போது அவரிடம் தமக்கு வரம் கேட்காமல், அவரைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியதால் விஷ்ணுசித்தர்,


"பெரியாழ்வார்' என்ற பெயரைப் பெற்றார்.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
 

Latest ads

Back
Top