• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ராம நவமி ஸ்பெஷல்

ராம நவமி ஸ்பெஷல் ! 13.4.19

மிதிலாபுரி வீதிகளில் ராமன், முனிவருடனும் லட்சுமணனுடனும் வந்து கொண்டிருந்ததைப் பார்த்திருந்த மக்கள், ராமன்தான் தனுசில் நாணேற்றப் போகிறான் என்பதை ஊகித்து பெரும் திரளாக அரசவையில் பார்வையாளர்கள் பகுதியில் வந்து நிறைந்தார்கள். ஒவ்வொருவர் கண்களிலும் துடிப்பு மின்னியது. ‘‘பேரழகன் இவன். நம் சீதைக்கு மிகவும் பொருத்தமானவன். இவன் வில்லை வெல்ல வேண்டும். நாணேற்றி நிறுத்த வேண்டும். நம் சீதையை மணக்க வேண்டும். இந்த நல்ல தருணத்திற்காகத்தான் இவனுக்கு முன் வந்தவர்கள் யாராலும் நாணேற்ற முடியவில்லை போலிருக்கிறது. அவர்கள் தோற்றதும்தான் இப்போது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! திண்ணிய தோளும், அகன்ற திருமார்பும் கொண்ட இந்த ஆணழகனுக்காகவே காத்திருந்தது போலிருக்கிறது...’’

ஜனகபுரி மக்களின் எண்ண ஓட்டம் இவ்வாறிருக்க, அந்தப்புரத்தில் சீதையின் உள்ளமும் உடலும் பதறிக் கொண்டிருந்தன. ‘‘என் விழிகளை சந்தித்தவன் சிவதனுசைக் கையிலேந்தப் போகிறான் என்று தோழியர் சொன்னார்களே, அது உண்மையாக இருக்க வேண்டுமே... அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த தனுசு அவனது சிவந்த, பரந்த கைகளுக்குள் குழைந்து நிற்க வேண்டுமே...

குழைவதோடு, அவன் நாணேற்றும்போது மறுக்காமல், விரைக்காமல், விநயமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே... என் அன்பு சிவதனுசே, நான் பிறந்த நாள் முதல் உன்னை இந்த அரண்மனையில் பார்த்து கொண்டிருக்கிறேன். பாரம்பரிய வழக்கமாக உன்னை பூஜித்திருக்கிறேன். உன் பக்தையாக நான் உன்னை மலரிட்டு அலங்கரித்திருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே. என்னைக் கவர்ந்தவன் கைப்பிடிக்குள் இணக்கமாகிவிடு. அவனிடம் அடங்கிவிடு. என்னை உன் இளைய சகோதரியாக நினைத்துக்கொள். ஒரு அண்ணனாக, என் மனவிருப்பத்தை நிறைவேற்றி என் உயிரை நிலைக்கச் செய்...’’

தனுசும் ராமனைப் பார்த்தது. ‘‘இது சும்மா சம்பிரதாயம்தான் ராமா. உனக்குதான் சீதை என்ற தேவலோக பிராப்தம் தவறுமா என்ன? சீதையை அவளுடைய தகுதிக்குக் குறைந்தவன் எவனும் கரம் பற்றிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் போட்டி. இதில் வெற்றி பெறுவதற்கென்றே நீ இருக்கும்போது, மற்றவர்கள் என்னை பற்றிடவும் நான் அனுமதிப்பேனோ..? அதனால்தான் யாரையும் என்னில் நாணேற்றிட நான் அனுமதித்ததில்லை. வா, ரகுகுல திலகா, தயாசாகரா, என்னை ஆட்கொள்...’’ என்று யாசித்தது.

ராமன் விஸ்வாமித்திரரைப் பார்த்தான். அவர் சம்மதமாய் தலையசைத்தார். தம்பி லட்சுமணனைப் பார்த்தான். அவன் சற்றே நாணப்பட்டு ஒதுங்கி நின்று சம்மதம் தெரிவித்தான். ஜனகரைப் பார்த்தான். அவர் கண்களில் பேரார்வத்துடன் மலர்ந்திருந்தார். தனுசைப் பார்த்தான். அதில் சிவ அம்சத்தைக் கண்டு கும்பிட்டான். ‘என் வெற்றிக்கு உதவுங்கள்’ என்று மானசீகமாகக் கேட்டுக் கொண்டான்.

சுற்றி நின்றிருந்த அனைவரும் படபடக்கும் இதயத்துடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவைக்கு வரமுடியாத சட்டத்திற்கு உட்பட்ட பெண்கள் தத்தமது பகுதிகளில் அமர்ந்தபடி என்ன செய்தி வருமோ, ராமன் வெல்வானோ, சீதையைக் கரம் பிடிப்பானோ என்றெல்லாம் கண்களில் ஆர்வம் மின்ன ஆவலுடன் காத்து கொண்டிருந்தார்கள்.

தனுசைப் பார்த்து வணங்கிய தன் கரங்களைப் பிரித்தான் ராமன். தனுசின் நடுப்பகுதியைத் தன் இடது கையால் பற்றினான். அப்படியே தூக்கினான். மேடையிலிருந்து கீழே இறங்கினான். தனுசின் கீழ்ப் பகுதியை நாணின் ஒரு முனை பற்றியிருக்க அடுத்த முனையை இழுத்து மேல் பகுதியுடன் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதி தரையில் சறுக்கி நழுவிவிடாதிருக்க, தன் வலது பாதத்தால் அதைப் பற்றிக்கொண்டான். இணைக்கப்பட வேண்டிய நாண் முனையை வலது கையால் எடுத்தான். மேல்நோக்கி இழுத்துச் சென்றான்.

தனுசின் மேல்பகுதி ராமனுடைய சிரசை தரிசித்தது. அவனுடைய முக அழகை ரசித்தது. இடுப்பு வரை அவனுடைய கம்பீரத்தைக் கண்டு பிரமித்தது. ஆனால், அவனது பாத அழகு எப்படி இருக்கும்? தன்னால் அந்த சௌந்தர்யத்தைப் பார்க்க முடியவில்லையே... ஆனால், கீழ்ப் பகுதிக்குதான் எத்தனை பெரிய பாக்கியம்! ராமன் தன் பாதத்தால் பற்றக்கூடிய பெரும் பேறு பெற்றிருக்கிறதே! இது அநியாயம். என்னில் ஒரு பகுதி என்னைவிட பெருமை அடைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சிரம் பார்த்து, முகம் பார்த்து, மார்பழகு கண்டு, இடுப்பு எழில் நோக்கினாலும் பாதத்தைச் சரணடையும் பக்குவம் எனக்கு இல்லை என்று நினைத்தானோ ராமன்?

மேல் பகுதிக்கு ஆதங்கம் தாங்கவில்லை. மாட்டேன், நானும் அண்ணலின் பாதம் பணிவேன். என்னையும் அவர் பாதம் ஸ்பரிசிக்க வேண்டும். எனக்கும் அந்தப் பேறு கிட்ட வேண்டும்... அப்படியே குனிந்தது மேல் பகுதி. கீழே... கீழே... குனிந்தது. ராமனின் பாதத்தைத் தானும் தொட்டுவிடும் வேட்கையில் குனிந்தது. தன்னை அவன் பாதம் தீண்டாவிட்டாலும், தானாக முயன்று தொட்டுவிட குனிந்தது...

நாண் பிடித்திருந்த ராமனின் வலது கரம் தயங்கியது. இன்னும் சற்று உறுதியாகப் பற்றினான். இழுத்தான்.

அவ்வளவுதான். படீர் என்ற பேரொலியுடன் இரண்டாக முறிந்து வீழ்ந்தது தனுசு. ஒன்றாக இருந்தபோது ராமனின் கரம் பற்றிய பேறு கொண்ட அந்த தனுசு, இப்போது இரண்டாகி அவன் பாதத்தைச் சரணடைந்திருந்தது.

அவையில் கரகோஷம், கடலலையாகப் பொங்கியது. தனுசை ராமன் எடுத்தது கண்ட அவர்கள், அடுத்த கணமே அது இற்றது கேட்டதும், பேரானந்தம் அடைந்தனர்.

ராமன் வில்லை முறிக்கவில்லை நாண் ஏற்றவே முயற்ச்சித்தான் இருந்தும் ஏன் உடைந்தது ? வில்லின் கீழ் பாகத்தில்.
ராமன் திருவடி பட்டதும் மேல் பாகம் நினைத்ததாம் ராமன் நாண் ஏற்றினால் என் மேல் ராமன் கைத்தலம் தான் படும் முறிந்து விட்டால் ராமனின் திருவடி கிட்டும் என நினைத்து அற்று வீழ்ந்து ராமன் திருவடியை முத்தமிட்டதாம்.


ஸ்ரீ ராம ஜெயம் !!!!
 

Latest ads

Back
Top