• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீராமாநுஜர் 1005 ஆவது திருநட்சித்திர உற்சவம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
எம்பெருமானார்--ஸ்ரீராமாநுஜர் 1005 ஆவது திருநட்சித்திர உற்சவம்--பதிவு 1



ஸ்ரீராமாநுஜரின் 1005 ஆவது திருநட்சித்திரம்,சித்திரையில் செய்ய திருவாதிரை,எதிர்வரும் சித்திரை மாதம் 5 ஆம் நாள்(18/04/21) கொண்டாடப் படுகிறது.ஸ்ரீபெரும்புதூர்,மற்றும் பல திவ்யதேசங்கள்/கோயில்களில் இன்று முதல் உற்சவங்கள் தொடங்கி விட்டன. இந்த ஆண்டும் நோய்த்தொற்று காரணமாக கோயில்களுக்கு உள்ளேயே உற்சவங்கள் நடைபெறும்(வீதிப் புறப்பாடு இல்லை).நாமும் முக நூலில் எம்பெருமானார் அவதார உற்சவம் கொண்டாடுவோம்.

தாடீ பஞ்சகம் !!


எம்பெருமானாரைப் போற்றி/ஸ்தோத்ரம் செய்து பல பாசுர மாலைகள்/ஸ்தோத்ரங்களை பல மஹநீயர்கள்
பாடியுள்ளனர்.அவற்றுள் "தாடீ பஞ்சகம்"
என்று ஒரு ஸ்தோத்ர மாலை ராமாநுஜரின் "வெற்றிச் செல்வத்தைக்" கொண்டாடுகிறது.'தாடீ' என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு வெற்றி என்று பொருள்.ஐந்து ஸ்லோகங்கள் கொண்டதால் 'பஞ்சகம்'.இதைப் பாடியவர் ஸ்ரீகூரத்தாழ்வான் என்றும், ஸ்ரீமுதலியாண்டான் என்றும் சொல்கிறார்கள்.ஆழ்வான்,ஆண்டான்,எம்பார் மேலும் இரண்டு ஆசார்யர்கள் தலா ஒரு ஸ்லோகம் பாடியதாகவும் ஒரு கூற்று உள்ளது.யார் இயற்றியிருந்தாலும் இவை உடையவரின் வெற்றியை உரக்கச் சொல்லிக் கொண்டாடும் அற்புதமான ஸதோத்ரங்கள்.இவற்றை இன்று முதல் அநுபவிப்போம் !
(ஸ்ரீ உ.வே.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி வியாக்யானத்தின் அடிப்படையில்.)

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் திருநட்சித்திர உற்சவத்தில்,அதிகாலை நடைபெறும் மங்களாசாசனத்தில்,தாயார் சந்நிதிக்கும் ஸ்ரீராமர் சந்நிதிக்கும் இடையே உள்ள மண்டபத்தில் ராமாநுஜர் எழுந்தருளும் போது தாடீ பஞ்சகம் அனுஸந்திப்பார்கள்.ஒவ்வொரு ஸ்லோகத்துக்கு முன்னும்,"ஸ்வாமி எச்சரிக்கை ! ஸ்வாமி எச்சரிக்கை" என்றும்,ஸ்லோகத்துக்குப் பின்,"ஜய விஜயீபவ ! ஸ்வாமி எச்சரிக்கை" என்று சாதிப்பார்கள்.மற்ற திவ்ய தேசங்களிலும் பற்பல சமயங்களிலும், பல்வேறு உற்சவங்களிலும் "தாடீ பஞ்சகம்" சேவிப்பார்கள்.

ஸ்லோகம் 1 :
பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச், சார்வாக சைலாச நி,
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்,
ஜைநே பகண்டீரவ,
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்,
தரை வித்ய சூடா மணி,
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ,
விஜயதே ராமாநுஜோயம் முநி !

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற பரம நாஸ்திகவாதி களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –
காட்டுத்தீ கதுவினால் எப்படிப்பட்ட மரங்களும் ஒரு நொடிப்பொழுதில் அழிந்தொழியுமோ,அப்படி அவர்களை அறவே அழித்தொழித்தார்.

"அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே"

"நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே"

என்னும்படிக்கு !!

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –"ப்ரத்யஷம் ஏகம் சார்வாக"என்கிறபடியே கண்ணாலே கண்டது ஒன்றே பிரமாணம் (வேத,உபநிஷத்,சாஸ்திரங்கள் சொல்வதை நம்பாமல்) என்கிற சார்வாக மதத்தினரும் ஒரு வகை நாஸ்திகர்களே !
பெரும் மலைகள் போன்று மிகுந்த பலத்துடன் இருந்த அவர்கள், ஸ்ரீபாஷ்யகாரரின் இடிமுழக்கத்தால் துவண்டு, பொடிப் பொடியானார்கள்.

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி(சுட்டெரிக்கும் சூரியன்) போன்றவரும் –
"கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்,கனவிருளகன்றது காலையம் பொழுதே" என்னும்படி
"இராமாநுஜ திவாகரன்" உதித்தபொழுதே
மரித்தார்கள்.

4-ஜைநே பகண்டீரவ –
சமணர்கள் ஆகிற யானைகளுக்கு சீரிய சிங்கம் போன்றவரும் –
"வலிமிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியராம்,புலிமிக்கதென்று,இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே" என்னும்படி.--எண்ணாயிரம் சமணர்களை வாதில் வென்றது,
தொண்டனூரில் ஆயிரம் நா கொண்டு,ஆயிரம் சமணர்களை ஒரே சமயத்தில் வென்றது.(தோற்ற சமணர்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்;மற்றும் பலர் உடையவர் திருவடிகளில் சரணடைந்து சீடர்கள் ஆனார்கள்.)

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-வேதத்துக்குப் புறம்பாக மாயாவாதத்தைப் பேசி அதுவே சித்தாந்தம் என்று கூறித் திரிந்தவர்கள்,
கருடனின் நிழல் பட்டாலே மடியும் பாம்புகள் போல,ஸ்வாமியின் நிழல் பட்டாலும் மடிந்து போவார்கள்.

"சாறுவாக மதம் நீறு செய்து, சமணச் செடிக் கனல் கொளுத்தியே,
சாக்கியக் கடலை வற்றுவித்து, மிகு சாங்கியர் கிரி முறித்திட,
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து,அறமிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த,எதிராசனார்,
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்,
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாயவாதியரை வென்றிட,
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே"
என்று மணவாள மாமுனிகள் ஆர்த்திப் பிரபந்தத்தில் பாடியபடி.

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –
ரிக்,யஜுர்,சாம ஆகிய மூன்று வேதங்களையும் பரம பிரமாணமாகக் கொண்டு,அவற்றிலே பொழுது போக்குபவர்கள் த்ரைவித்யர்கள்.
அப்படிப்பட்ட பரமை காந்திகளுக்கு ச்ரோபூஷணமாக,ப்ரபந்ந ஜன கூடஸ்தராக,ராமாநுஜ தாசர்களின் உத்தாரக ஆசார்யராகவும் ஒளிர்ந்தவர்.

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதப்பெருமாளுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவரான,இந்த ஸ்ரீ ராமானுச முனிவருக்குப் பல்லாண்டு ! பல்லாண்டு !! பல்லாயிரத்தாண்டு !!!

"தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே !
மன்னிய தென்னரங்காபுரி,மாமலை மற்றும் வுவந்திடு நாள் " என்னும்படிக்கு.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
 

Latest ads

Back
Top