ரமணியின் கவிதைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
ரமணியின் கவிதைகள்

#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே ஓய்ந்தேனே!
(குறும்பா)
(சிவன்: பிரதோஷத்துதி)


ஒத்திவைத்தே ஒத்திவைத்தே ஓய்ந்தேனே
சித்தமெலாம் பித்தேறி மாய்ந்தேனே
.. கண்ணெதிரே தெரிவதெலாம்
.. எண்ணெழுத்தாய் அறிவதனால்
அத்தனையும் உண்மையெனக் காய்ந்தேனே. ... 1

கற்பனையே விற்பனமாய்க் கொண்டேனே
அற்பமெலாம் அற்புதமாய்க் கண்டேனே
.. ஆன்மவொளி பேணேனே
.. பான்மையதில் காணேனே
சிற்சபையின் சன்னிதியை அண்டேனே. ... 2

அஞ்செழுத்துக் காதொலிக்கும் நேரமெலாம்
நெஞ்செனிலே ஏதேதோ வேருறுமே
.. வேதவொலிப் பண்ணிசையில்
.. காதலிலே கண்ணசையும்
கொஞ்சமேனும் ஏற்றமிலாச் சீரழிவே. ... 3

மூவறமும் நிலைநிற்கும் வாழ்வினிலே
ஆவதெலாம் ஆனதெனும் தாழ்வினிலே
.. முத்திநிலை நாடேனே
.. அத்தனுனைத் தேடேனே
போவதுவும் வருவதுவும் ஊழ்வினையோ? ... 4

கத்துகடல் நஞ்செடுத்தே உண்டவனே
முத்தெனக்க ழுத்தினிலே கொண்டவனே
.. என்னுளத்தில் தெளிவுறவே
.. உன்னுருவின் ஒளியருளே
சத்தியத்தின் தத்துவமாய் நின்றவனே. ... 5

--ரமணி, 01/12/2017

*****
 
பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்!
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் => அரையடி)

ஆட்டுவித் தாலும் ஆடாத
. அகமென தாகில் என்செய்வேன்
கூட்டுவித் தாலும் கூடாத
. குணமென தாகில் என்செய்வேன்
தேட்டுவித் தாலும் தேடாத
. தினவென தாகில் என்செய்வேன்
ஓட்டுவித் தாலும் ஓடாத
. ஒட்டுத லாகில் என்செய்வேன்? ... 1

காட்டுவித் தாலும் காணாத
. கல்மன மாகில் என்செய்வேன்
பாட்டுவித் தாலும் பாடாத
. பண்பென தாகில் என்செய்வேன்
நாட்டுவித் தாலும் நாடாத
. நலிவென தாகில் என்செய்வேன்
பூட்டுவித் தாலும் பூட்டாத
. புத்தியைக் கொண்டேன் என்செய்வேன்? ... 2

இவ்விதம் என்னை இயக்குவதும்
. ஈசர்-உம் செயலாய் எண்ணுவதோ
செவ்விதின் என்னைச் செப்பனிடும்
. திருவுளம் இந்நாள் உமக்கிலையோ
வெவ்வினை சூழ வாழ்வதுதான்
. விதியெனக் கென்றே சொல்வீரோ
எவ்வித மெனினும் காத்திருப்பேன்
. எண்குணன் என்னை ஆட்கொளவே! ... 3

--ரமணி, 15/12/2017

*****
 
Status
Not open for further replies.
Back
Top