ரமணியின் கவிதைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
ரமணியின் கவிதைகள்

சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை
(கலிவிருத்தம்)

(பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்)

தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன்
சுடுமெனச் சொன்னார் சுடலை யென்றேன்
அடுமெனச் சொன்னார் அடலை யென்றேன்
விடுமெனச் சொன்னார் விடலை யென்றேன்!

[தொடலை = மாலை; அடலை = சாம்பல்; சுடலை = சுடுகாடு;
விடலை = பதினாறு வயதுச் சிறுவன்]

பொருள்:
புலவரவர்
தொடும் பிணத்தை என்றார்; நான் தொடலை (மாலை) என்றேன்.
சுடும் நெருப்பு என்றார்; ஆம், சுடலை (சுடுகாடு) என்றேன்.
அடும் (அழித்துவிடும் ) என்றார்; முடிவில் அடலை (சாம்பல்) என்றேன்.
சரி விடும் என்றார்; விடலை (பதினாறு வயதுச் சிறுவன்) என்றேன்!

--ரமணி, 16/03/2017

*****
 
சொல்விளையாடல் 2. உழல்-உழலை
(கலிவிருத்தம்)

உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை
சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை
அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை
கழல்கள் பணியேன் வினைகளோ கழலை!

[உழலை = செக்கு மரத்தடி; சுழலை = வஞ்சகம்;
அழல்வணன் = நெருப்புபோல் வண்ணம்கொண்ட சிவன்;
அழலை = களைப்பு;
கழலை = கழுத்து, வயிற்றில் வரும் பெருங் கட்டி நோய்]

--ரமணி, 16/03/2017

*****

சொல்விளையாடல் 3. புத்தகம்-முத்தமிழ்
(கலிவிருத்தம்)

புத்தகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
முத்தமிழ்ச் சொல்லற முத்தமிழ் மனத்தில்
எத்தனம் போதும் எத்தனமும் வீணெனும்
வித்தகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

பொருள்
புத்து-அகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
முத்தமிழ்ச் சொல்லற முத்து-அமிழ் மனத்தில்
எத்தனம் போதும் எத்-தனமும் வீணெனும்
வித்து-அகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

--ரமணி, 16/03/2017

*****
 
சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி
(கலிவிருத்தம்)

சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே
எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில்
கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க
வந்தது போக வந்தது நின்றது!

பொருள்
சிந்து (கடல்) அனை (அனைய = போன்ற, கடைக்குறை விகாரம்) மனத்தில் சிந்தனையைக் குறைத்தே
எந்து-((என்ன, எப்படி என்று) இரி (ஓடும்) வாழ்வில், எந்திரி (பொம்மலாட்டப் பாவையை ஆட்டுவிப்போனைக்) கண்டதில்
கந்துகம் (மனக் குதிரை) மனத்தில் கந்து (தூண்) உகந்து நிற்க
வந்தது எல்லாம் போனது ஆகி, இப்போது வந்த-அது (இந்த ஞானம்) நின்றது!

--ரமணி, 16/03/2017

*****
 
Status
Not open for further replies.
Back
Top