• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ரதசப்தமி

நினைத்த போது மரணம் வருவது என்பது குதிரை கொம்பு. ஆனால் காலாகாலத்தில் சரியாக போய் சேர்வது ஒரு குடுப்பினை.

நம் முன்னோர்கள் அதனால் தான் “அநாயாசேன மரணம் வினாதைன்யேன ஜீவனம் தேஹிமே க்ருபையா சம்போ, த்வை பக்திம் அசஞ்சலாம்” என்று வேண்டினார்கள். அத்தோடு கூட துன்பப்படுகின்ற ஆடு, மாடு, நாய், பக்ஷி போன்ற கண்களில் படுகின்ற அனைத்து ஜீவராசிகளும் நற்கதி அடைய பிரார்த்தனை செய்வது வழக்கம்.

நல்லவர்கள் எளிதில் பரம்பதம் அடைவார்கள். நீண்ட காலம் நோயின்றி வாழ்வார்கள்.

இந்த உடலை விட முடியாமல் கதறி ஊரெல்லாம் ஒருவன் இறப்புக்காக (பிழைப்பதற்காக) பிரார்த்தனை செய்வது என்பது கொடுமை.

மாகாபாரத்த்தில் இது குறித்து ஒரு சம்பவம் வருகிறது. பீஷ்மரைக் கொல்ல தக்க சமயத்தை எதிர்பார்த்த சிகண்டி போர் முனைக்கு வந்தான். சுத்த வீரனுடன்தான் போர் புரிவேன் என்ற கொள்கையுடைய பீஷ்மரின் முன்வந்து பீஷ்மருக்கு சவால்விட்டான். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் காட்சி தந்த சிகண்டியுடன் போர்புரிய விருப்பமில்லாத பீஷ்மர் தயங்கினார். அர்ச்சுனன் பீஷ்மர்மீது அம்பு எய்வதற்குமுன், சிகண்டி பீஷ்மர்மீது அம்பு எய்தான். அர்ச்சுனன் சிகண்டியை முன்நிறுத்தி போர் புரிகிறான் என்பதை அறிந்த பீஷ்மர், சிகண்டி எய்த அம்பினை இடது கையால் பிடித்து முறித்து எறிந்தார். அப்போது அர்ச்சுனன் பீஷ்மர்மீது சரமாரியாக அம்புகளை எய்தான். அந்த அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர் கீழே சாய்ந்தார்.

ஆனால் பூமியில் விழாமல், அந்த அம்புகள் படுக்கையாக பூமியில் பதிந்து பீஷ்மரைத் தாங்கின ஆனால் உயிர் பிரியவில்லை. தான் விரும்பிய நேரத்தில் முக்தியடையலாம் என்ற வரத்தின்படி உத்ராயனப் புண்ணிய காலத்திற்காகக் காத்திருந்தார் பீஷ்மர். உத்ராயன காலமும் வந்தது. ஆனால் பீஷ்மரின் உயிர் அவர் விரும்பியதுபோல பிரியாததால் அவஸ்தைக்குள்ளானார். காரணம் என்ன என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். உத்ராயன காலத்தில் உயிர் பிரிந்தால் எந்தத் தடையுமின்றி சொர்க்கம் போகலாம் என்பது சாஸ்திரம் சொல்லும் விதியாகும். அனைவரும் வந்து அவரை தரிசித்துவிட்டுச் சென்றார்கள். பஞ்சபாண்டவர்களும், பகவான் கிருஷ்ணரும் வந்திருந்தார்கள். பீஷ்மர், யார்மீதும் கோபப்படவில்லை. அனைவருக்கும் இறக்கும் நிலையிலும் போதனைகள் பல கூறினார். அதில் ஒன்றுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.

தான் விரும்பியது போல் மரணம் ஏற்பட வில்லையே ஏன்? மனதிற்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்தார் வேத வியாசர். வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர், நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பிய படி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார்.

அதற்கு வியாசர், பீஷ்மரே, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை அநீதிகளைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும் கூட பாவம்தான் அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைபட்டாலும், அதை விடஉள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான் என்றார். பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர்.

வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், இதற்கு என்ன பிராயச்சித்தம்? என்று கேட்டார். யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போது அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. எனவே பீஷ்மர் நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்றுவிட்டது.

இருந்தாலும் திரவுபதி கண்ணா, என்னைக் காப்பாற்றமாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கை விடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி என்றார்.

அப்படியென்றால் என்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள் என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர். உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, பீஷ்மா இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம்.

அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழு சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும் என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

பீஷ்மருக்கு வருங்காலத்தில் சிரார்த்தம் போன்றவை செய்ய யாருமே இல்லையே. திருமணமாகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக அவர் உயிர் நீத்துவிட்டாரே என்று வருந்தினார் தர்மர். அப்போது வியாசர். தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள்.
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள் தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் கிடைக்கும் என்று வியாசர் கூறினார்.

எனவே ரதசப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரதசப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

Courtesy.. Ram Ram group
 

Latest ads

Back
Top