முருதேஸ்வரர் கோயில் தல வரலாறு

praveen

Life is a dream
Staff member
500 ஆண்டுகளுமேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். புராணங்களின் படி சிவபெருமானிடமிருந்து பிராண லிங்கத்தை பெற்ற ராவணன் அதை இலங்கைக்கு கொண்டு சென்று ஸ்தாபிக்க தென்திசை நோக்கி பயணமானான். இந்த பிராண லிங்கத்தை இலங்கைக்கு ராவணன் கொண்டு சென்று ஸ்தாபிப்பதை தடுக்க, ராவணன் சந்தியாகால பூஜை செய்யும் வேளையில், அந்தண இளைஞன் வேடத்தில் வந்த விநாயகர் தனது தந்திரத்தால் இந்த லிங்கத்தை இப்பகுதியில் ஸ்தாபித்து விட்டார். பூஜை முடிந்து திரும்பி வந்த ராவணன், லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து தனது இருபது கைகளால் இந்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அச்சிவலிங்கம் நான்காக உடைந்தது. அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்ரகம் ஆனதாக கூறப்படுகிறது.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.

தல சிறப்பு

இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோவில் அமைவிடம்

ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலத்தில், உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
மதியம் 3.00 மணி முதல் இரவு 8.15 வரை

கோவில் முகவரி:
ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில்,
பட்கல்,
உத்தர கன்னட மாவட்டம்
கர்நாடகா – 581350
 
Back
Top