பெரியாழ்வார் என்னும் பக்திப் புயல்

praveen

Life is a dream
Staff member
பெரியாழ்வார் என்னும் பக்திப் புயல்

திவ்ய அம்ருத சாகரம் - 97


பெரியாழ்வார் என்னும் பக்திப் புயல் - திரு மொழி - தளர் நடை


ஆயர் குலத்தினில் வந்துத் தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயார் மகிழ ஒன்னார்த் தளர தளர் நடை நடந்தானை
வேயர் புகழ் விட்டுச் சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே


ஆயர் குலத்தினில் வந்துத் தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை -


ஆயர்கள், கண்ணனை, அஞ்சனம் போன்ற நிறத்தைக் கொண்டவனை, தங்கள் இல்லங்களில் வந்து பிறந்திடு என்று வேண்டவில்லை.


அவனுக்கே தோன்றியதால் மட்டுமே, ஆயர்கள் இல்லத்தில் வந்துத் தோன்றினான். ஆயர்கள் கண்ணனிடத்தில் எப்போதும் தங்கள் இக சுகத்திற்காக எதுவும் வேண்டியதில்லை.


ஆயர்கள்' உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்' -


எப்போதும் உனக்கு என்றும் தொடர்பு கொண்டவர்களாக நாங்கள் இருக்கவும், உனக்கு மட்டுமே தொண்டு செய்யும் வரத்தை மட்டுமே எங்களுக்குக் கொடுத்திடு. இதைத் தவிர வேறெதுவும் நாங்கள் வேண்டினால், அப்படிப்பட்ட எங்கள் எண்ணத்தை மாற்றி விடு' என்று தான் வேண்டினார்கள்.


கண்ணனின் உண்மை அடியார்களுக்கு அவன் எண்ணத்தைத் தவிர வேறெதுவும் தேவையில்லை. ந்ருஸிம்ஹ மூர்த்தி 'என்ன வரம் வேண்டுமானாலும் உனக்குத் தரக் காத்திருக்கிறேன்' என்று பிரகலாதனுக்கு அருளியவுடன்,


பக்திக்கு இலக்கணமான பிரஹலாதன் கேட்ட முதல் வரம் ' நான் எந்த வரத்தையும் எப்போதும் எவரிடமும் கேட்காத வரத்தைக் கொடுங்கள்' .


தாயார் மகிழ ஒன்னார்த் தளர தளர் நடை நடந்தானை -


தாயார்களுக்குப் பெரும் சுகம், அந்தந்த பருவங்களுக்கான வளர்ச்சியை தங்கள் குழந்தைகளிடம் காண்பது தான். 'தளர் நடை' பருவமான ஒரு வயதில், யசோதையை மகிழ்விக்கும் ஒரே நோக்கத்தோடு மட்டுமே கண்ணன் தளர் நடை பயின்றான்.


பாலகனாய் இருக்கும் சமயத்திலேயே பெரும் நிரஸனப் ப்ரபாவங்கள் நிகழ்த்தியவனுக்கு, தளர் நடை என்பது
ஓர் மாய வேடம், தாயை மகிழ்வித்திட அவன் நடத்திய ஆனந்த நாடகம்.


எதிரிகளைத் தாக்கி அவர்கள் நடையைத் தளர வைத்தவனுக்கு, தளர் நடை என்பது ஒரு திரு சிறிய விளையாடல்.


வேயர் புகழ் விட்டுச் சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் -


புத்தி சாதுர்யத்தையும், பக்தி பெருக்கையும் வேத பண்டிதர்கள் கண்டு வியந்துப் பாராட்டப் பெற்ற ஒப்பற்ற பக்தர், விட்டுச் சித்தரான பெரியாழ்வார்.


அன்னார், மிகவும் விரும்பி பாடியப் பொக்கிஷம் திரு மொழி. அதிலும் குறிப்பாகப் பிள்ளைத் தமிழின் ஒவ்வொரு பாசுரமும், யசோதையின் அன்பின் தத்ரூபப் பிரதிபலிப்பு.


இந்த அறியத் திரு மொழி எனப்படும் அருளிச் செயலை, சொற், பொருள் செறிவு அறிந்து பாராயணம் செய்திடும் பக்தர் எவருக்கும்,


மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே -


தங்களோடு நில்லாமல் வரும் பல தலை முறைகளும், மக்கட் செல்வங்களும் எம்பெருமான், மாயன் மணிவண்ணனின் திருவடிகளை ஆஸ்ரயித்து அவன் புகழைப் பாடி அவனுடைய பேரருளை சுவீகரிக்கும் திவ்ய வரத்தைப் பெற்றிடுவார்கள்.
 
Back
Top