புதுக்கவிதைத் தொகுப்பு

Status
Not open for further replies.

saidevo

Active member
புதுக்கவிதைத் தொகுப்பு

புதுக்கவிதை: சில செய்திகள்
(தமிழ் இணையக் கல்விக்கழக வலைதளத்தில்
பாட ஆசிரியர் திரு.கி.சிவகுமாரின் கட்டுரைகளிலிருந்து தொகுத்தது:
Ref:Tamil Virtual University)

இந்த நூலில் புதுக்கவிதை பற்றிய சில புதிய செய்திகளுடன், சான்றாக சில புதுக்கவிதைகளையும் காணாலாம். அன்பர்கள் இதுபோன்ற செய்திகளையும், சுவையான புதுக்கவிதைகளையும் இங்குப் பதியலாம்.

பாரதியார் எழுதிய வசன கவிதையே தமிழில் இன்று நாம் காணும் புதுக் கவிதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது. புத்க்கவிதையின் இலக்கணம் பற்றிய சில விளக்கங்கள்:

யாப்பிலக்கணக் கட்டுகளின்றி கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. மரபுக் கவிதைகளில் யாப்புக்கட்டுகள் சில சமயம் வெறும் அடைமொழிக்காக, எவ்விதப் பொருளுமின்றித் தொடுக்கப் படுவதை எதிர்த்தே புதுக்கவிதையாளர்கள் தம் படைப்புகளைக் கட்டுகளின்றி அமைத்தனர் எனலாம். இந்தப் போக்கு, ’காரிகை கற்காமலேயே கவிதை எழுதலாம்’ என்ற மெத்தனத்தையும் பல புதுக்கவிதையாளர்களிடம் தோற்றுவித்தது.

புதுக்கவிதை உரைவீச்சாகக் கருதப்பட்டாலும் அது மரபுக் கவிதை, கவிதை வசனக் கலப்பு, வசனம் என எந்த வாகனத்திலும் பயணிக்க வல்லதாக அமைந்தது. புதுக்கவிதையைச் சிலர் இயல்புநிலைக் கவிதை, உத்திமுறைக் கவிதை என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.

இயல்புநிலைக் கவிதைகள்

அகராதி தேடும் வேலையின்றிப் படித்த அளவில் புரிவன இவை. சில சான்றுகள்:

காதலும் நட்பும்: அறிவுமதி
கண்களை வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை வாங்கிக்கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்.

முதிர்ச்சியின் பக்குவம்: இரா.தமிழச்சி
காய்கள்கூட
கசப்புத் தன்மையை
முதிர்ச்சிக்குப் பின்
இனிப்பாக்கிக் கொள்கின்றன
மனிதர்களில் சிலர்
மிளகாய்போல் காரத்தன்மை மாறாமல்
காலம் முழுவதும்
வார்த்தை வீச்சில் வல்லவர்களாய்.

பணிக்குச் செல்லும் பெண்கள்: பொன்மணி வைரமுத்து
வீட்டுத் தளைகள்
மாட்டியிருந்த கைகளில்
இப்போது
சம்பளச் சங்கிலிகள்.

மத நல்லிணக்கம்: அப்துல் ரகுமான்
எப்படிக் கூடுவது
என்பதிலே பேதங்கள்
எப்படி வாழ்வது
என்பதிலே குத்துவெட்டு
பயணத்தில் சம்மதம்
பாதையிலே தகராறு

இன்னா செய்யாமை
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

உத்திமுறைக் கவிதைகள்

புதுக்கவிதையின் உத்திமுறைகள் மரபுக் கவிதையின் அணியிலக்கணம் போல. படிமம், தொன்மம், அங்கதம் என்பன சில உத்திமுறைகள்.

அறிவும் உணர்ச்சியும் கொண்ட ஒரு மனபாவனையை சட்டெனத் தெரியப்படுத்துவது படிமம் என்பார் வெ.இராம சத்தியமூர்த்தி. இது [மேத்தா[வின் கருத்துப் படிமம்:
ஆகாயப் பேரேட்டில் பூமி
புதுக்கணக்குப் போட்டது

இது அவரது காட்சிப்படிமம்:
பூமி உருண்டையைப்
பூசணித் துண்டுகளக்குவதே
மண்புழு மனிதர்களின்
மனப்போக்கு

புராணக் கதைகளைப் புதுநோக்கிலோ, முரண்பட்ட விமிசனத்துடனோ கையாள்வது தொன்மம். இது மேத்தாவின் முரண்பாடு:
நானும்
சகுந்தலைதான்
கிடைத்த மோதிரத்தைத்
தொலைத்தவள் அல்லள்
மோதிரமே
கிடைக்காதவள்

அங்கதம் என்பது முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவது. இது மேத்தா:
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகிவிட்டது
--ஒரு வானம் இரு சிறகு

இருண்மைநிலைக் கவிதைகள்

புதுக்கவிதை என்பதே படித்த உடனே புரிய வேண்டுவதாயினும், எளிதிலோ முற்றுமோ புரியாத கவிதகளை இருண்மைநிலைக் கவிதைகள் என்கின்றனர். பேசுபவர், பேசப்படுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங்கள் கவிதையில் இருண்மையை ஏற்படுத்துவதுண்டு:

எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன் நிழல்
--பிரமிள்

எறும்புகள் வரிசையாக
பள்ளிக்குச் செல்கிறார்கள்
வரும்பொழுது கழுதையாக வருகிறது
--என்.டி.ராஜ்குமார்

இத்தகைய கவிதைகளின் நோக்கம், வாசகர்களிடம் பொருளத் திணிக்காது, அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவது என்பர்.

குறுங்கவிதை

இயந்திர கதியில் இயங்கும் உலகில் நறுக்கென்று கருத்தினைத் தெரிவிக்கும் புதுக்கவிதையின் வடிவத்தையும் சுருக்கி ’நச்’சென்று கருத்துரைக்கும் குறுங்கவிதைகள் தோன்றலாயின. இவற்றை துளிப்பா (ஹைகூ), நகைத் துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்ப (லிமெரிக்) என்று பாகுபடுத்துகின்றனர்.

துளிப்பா (ஹைகூ: 5-7-5)
படிமம் கொண்டவை:
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி
--பரிமள முத்து

குறியீடு கொண்டவை
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
--அமுதபாரதி

உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை
--அறிவுமதி

தொன்மம் கொண்டவை:
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
--ராஜ.முருகுபாண்டியன்

முரண் கொண்டவை
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி
--ல.டில்லிபாபு

அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
--கழனியூரன்

அங்கதம் கொண்டவை:
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள்
--தங்கம் மூர்த்தி

விடுகதை கொண்டவை:
அழித்து அழித்துப் போட்டாலும்
நேராய் வராத கோடு
மின்னல்
--மேகலைவாணன்

பழமொழி கொண்டவை:
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள்
--பாட்டாளி

வினாவிடை:
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு
--செந்தமிழினியன்

உவமை:
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில்
--அறிவுமதி

உருவகம்:
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை
--பல்லவன்

நகைத் துளிப்பா (சென்ரியு:5-7-5)

அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல்
--ஈரோடு தமிழன்பன்

கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம்
--ஈரோடு தமிழன்பன்

இயைபுத் துளிப்பா (லிமெரிக்)

பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம்
--ஈரோடு தமிழன்பன்

புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்
--ஈரோடு தமிழன்பன்

கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான்
--ஈரோடு தமிழன்பன்

*** *** ***
 
புதுக்கவிதை உருவம்:

சுவைபுதிது சொல்புதிது வளம்புதிது
சொற்புதுதிது சோதி மிக்க நவகவிதை
--பாரதியின் அறுசீர் விருத்த அழைப்பே புதுக்கவிதையின் முன்னோடி.

எத்தனை அடிகளில் வேண்டுமேனாலும் இருக்கலாம்:

இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை.
--அரங்கநாதன், சுதந்திரம் குறித்து

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ
--தமிழன்பன்

பழத்தினை
நறுக்க வாங்கிக்
கழுத்தினை
அறுத்துக் கொண்டோம்
--எழிலவன், சுதந்திரம் குறித்து

அமுத சுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்
--மேத்தா, காந்தியடிகளிடம்

வாயிலே
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு!
--சுப்பிரமணிய ராஜு

ஒவ்வொரு அடியிலும் எத்தனை சொற்களோ எழுத்துக்களோ இருக்கலாம்!

எங்கள்
வீட்டுக்
கட்டில்
குட்டி
போட்டது;
’தொட்டில்’
எஸ்.வைத்தியலிங்கம்

எ.....எ.....தூ
ன....த்.....ங்
க்.....த....கா
கு....னை...த
த்
......ந....இ
தெ....ட்.....ர
ரி.... ச....வு
யு....த்.....க
ம்.....தி.....ள்
......ர
......ங்
......க
......ள்

......எ
......ன்
......று
--அமுதபாரதி

புள்ளியிட்ட அழுத்தங்களும் உண்டு:

மௌனத்தை மொழிபெயர்த்து
நாலே எழுத்துள்ள
ஒரு மகாகாவியம் தீட்டினேன்
ம. . . ர. . .ண . . . ம்,
எனது வாசகர்கள்
வாசித்து - அல்ல
சுவாசித்தே முடித்தவர்கள்
--சிற்பி

சொற்சுருக்கம்:

அண்ணலே!
இன்று‌உன் ராட்டையில்
சிலந்திதான் நூல் நூற்கிறது

ஒலிநயம்:

ராப்பகலாப் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே!
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே!
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே
கவியேதும் பாடலியே!
கதைகதையாப் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலியே!
--வைரமுத்து, கம்பரிடம்

சொல்லாட்சி:

வில்லே
வில்லை வளைக்குமா?
வளைத்தது
சீதையின் புருவவில்
இராமனின்
இதய வில்லை வளைத்தது
தன்பக்கம்
அழைத்தது
--மேத்தா

பிறமொழிச் சொற்கள்:

நாங்கள் அடிமைகள்
அதனால்தான்
எங்கள் சாம்ராஜ்யத்தில்
சூரியன் உதிப்பதுமில்லை
அஸ்தமிப்பது மில்லை

அம்மா
மழைத்தண்ணியை
வாளியில பிடிச்சா
இடியைப் பிடிப்பது எதுலே?
ட்ரம்மிலேயா?

தொடை நயம்:

பாரதி வேண்டியது
ஜாதிகள் இல்லாத
தேதிகள் . . .
நமக்கோ
ஜாதிகளே இங்கு
நீதிகள்
--மேத்தா

கம்பனின் இல்லறம்
களவில் பிறந்து
கற்பிலே மலர்ந்து
காட்டிலே முளைத்துப்
பிரிவிலும் தழைத்து
நெருப்பிலும் குளித்து
நிமிர்ந்த இல்லறம்
--மேத்தா

வயல்வெளிகள்
காய்கிறது!
வெள்ளம் . . .
மதுக்கடைகளில்
பாய்கிறது!
--மேத்தா

யாப்பு, நாட்டுப்புறச் சாயல்கள்:

காத டைத்துக்
கண்ணி ருண்டு
கால்த ளர்ந்த போதும்
ஆத ரித்துக்
கைகொ டுக்க
ஆட்க ளிலாப் பாதை!
திரும்பிவராப் பாதை - இதில்
உயிர்கள்படும் வாதை!
--புவியரசு

பூக்களிலே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை யாகலையே
--மேத்தா

வசன நடை, உரையாடல்:

கவலை யில்லாமல்
தேதித் தாளைக் கிழிக்கிறாய்
பதிலுக்குன் வாழ்நாளை
ஒவ்வொன்றாய்க்
கழிக்கின்றேன்
--மேத்தா

எங்களுக்கும்
ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு
நன்றி ஐயா!
பிணம்கொத்திச்
சுகம்பெறும் ஆண்களைக்
காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் . . .
எங்களைக் காப்பாற்ற
எங்களை மீட்க ஏதும் சொன்னீர்களா?
ஐயா
நீங்கள் சொன்னதுபோல்
எல்லாம் விற்கிறோம் - எனினும்
இதயத்தை விற்பதில்லை
--தமிழன்பன், வள்ளுவரிடம்

*** *** ***
 
அகர ராமாயணம்

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்.

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?

அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை
அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.

அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு
அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையைஅடைந்தான்.

அசோகமரத்தின் அடியில, அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்
அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி ,அதிசயமான அணையை
அமைத்து,அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல் . அனந்த ராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே.

*** **** ***
 
Status
Not open for further replies.
Back
Top