பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.
மார்க்கண் டேயர்தம் பூசைக் கென்றொரு
. மாற்று லிங்கம மைத்ததே
கார்க்க டன்றனைத் தீர்த்து வைத்தருள்
. காப்பு லிங்கமென் றாவதாம்
வேர்க்க டன்வினை மூன்று தீர்ந்திட
. வேள்வி யைந்தென ஆற்றவே
சேர்த்த ருள்செயும் தீர்த்த னென்றுறை
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 3

[மேற்சொன்ன மூன்று கடன்களைத் தீர்க்கும் வேள்விகள் ஐந்து.
இவை பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனுஷ்ய விஷயமாகச்
செய்யும் வேள்வி மற்றும் அறங்கள்]

அப்பர் பாடிய பைர வர்புகழ்
. அந்த நாள்முதல் ஓங்குமே
கப்பு வல்வினை கண்ட போதிவர்
. காத்த ருள்செயும் கோவெனச்
சிற்ப மாயுரு மேவு காட்சியில்
. சிந்தை யில்நலம் சேருமே
சிப்பி யில்லுறை அப்ப னின்தலம்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 4

இரட்டைச் சண்டராய் ஈசன் பத்தரும்
. இங்குக் காவலில் மேவினார்
அருந்த வத்தவர் மார்க்கண் டர்செய
. அரனி லிங்கமென் றாகியே
இருணம் தீர்த்திடும் ஈச னென்றவர்
. இங்க ருள்செய்யும் ஆலயம்
தெரிநி லைதரும் அரிவை மேலுறும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 5

[இருணம் = கடன்; தெரிநிலை = அறிவு தெளிந்த நிலை; அரிவை = பெண்]
 
மாவி லிங்கமென் றேவி ருட்சமே
. மாதம் நாலுபின் மாறுமே
பூவி ரித்துவெண் மையென் றோருரு
. பூவி லைவெறும் பச்சிலை
பூவும் பச்சிலை யேது மின்றியே
. பூணும் கோலமு மாகுமே
தேவ நாயகர் மேவு பேரெனச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 6

மின்னு வார்சடை வேத முட்பொருள்
. வித்த கன்கழல் சேருவோர்
இன்னல் வாழ்வினில் வந்த போதிலும்
. ஏற்று நின்றவர் வாழ்வரே
பின்னு வார்குழல் அன்னை மேவிடும்
. பெண்ணி டத்தனைப் போற்றவே
சென்னி யிற்பிறை கங்கை கொண்டவன்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 7

அன்று மாமலை ஆட்டு தானவன்
. ஆவி சோர்ந்தவன் வீழ்ந்ததே
கொன்றை மாமலர் சென்னி சூடிய
. கூத்தன் கால்விரல் மாயமே
பின்னி ராவணன் கானம் செய்திடப்
. பித்தன் வாளினைத் தந்தனன்
சென்னி யிற்சடை கங்கை தாங்கிடும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 8
 
(இறுதிப் பகுதி)

செங்கண் மாலுடன் வாணி கேள்வனும்
. செங்க ழல்முடி தேடியே
எங்கும் காண்கிலர் ஏழை யாயவர்
. ஏங்கி நின்றவப் போதிலே
அங்க ணன்தன துண்மை காட்டியே
. அங்க வர்க்கருள் செய்தனன்
செங்க னல்வரும் அங்க மாய்நுதல்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 9

வேதம் தள்ளிடும் வேற்றுப் பாதைகள்
. வீணர் கூற்றென விட்டவர்
வேத னை-களை வேள்வி யாளன்தன்
. வெள்வி டைவரக் கூடுமே
பேத மில்லறப் பத்தி யுள்வரப்
. பெய்யன் பில்லவர் வாழ்வரே
தேதி யென்வரும் சேதி சேருவீர்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 10

குற்ற மில்புக லிப்பிள் ளையவர்
. கூத்தன் சேறையிற் பாடினார்
உற்ற வேதனை தீர்த்த நாதனை
. உன்னி யப்பரும் பாடினார்
பற்றும் பாசமும் போக்கி யேயருள்
. பாவ நாசனை நாடுவோர்
சிற்சு கந்தனைப் பெற்று வாழ்ந்திடச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 11

[புகலி = சீர்காழி; சிற்சுகம் = அறிவின்பம், ஞானானந்தம்]

--ரமணி, 13-18/08/2015, கலி.01/05/5116

*****
 
திருப்பறியலூர் [இன்று (கீழ்ப்)பரசலூர்] (அட்டவீரட்டத் தலக்களில் ஒன்று)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)

திருநேரிசை (நேரிசைக் கொல்லி) அமைப்பு
http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm

1. பொதுவான சீர்மைப்பு: கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா
2. அறுசீர்க் கட்டளையடிகள்
3. முதற்சீரும் நான்காம் சீரும் ஒரோவழிக் கருவிளம் ஆவதுண்டு
4. இரண்டாம் ஐந்தாம் சீர்கள் ஒரோவழித் தேமா ஆவதுண்டு
5. மூன்றாம் ஆறாம் சீர்கள் எப்போதும் தேமா.

திருநேரிசை விளக்கம்
விபுலாநந்த அடிகளாரின் ’யாழ்நூல்’, பக்.217
இந்நூலைத் தரவிறக்க
http://www.noolaham.org/wiki/index.php?title=யாழ் நூல்

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=510
http://www.shivatemples.com/sofct/sct041.php

பதிகம்
சம்பந்தர்: 01.134: கருத்தன் கடவுள்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=11340

காப்பு
கோட்டத்தில் நர்த்தனராய்க் கோவில்வி நாயகராய்
ஆட்டம் நடத்தும் அருளாள! - தாட்டனை
வீட்டிய வித்தல வீரட்டே சன்பெருமை
பாட்டில்நான் செய்யப் பரி.

[தாட்டன் = பெருமைக்காரன், போக்கிரி: இங்கு தட்சன்]

பதிகம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)

தட்சனும் செருக்குற் றானே
. தானெனும் அகந்தை தானே
திட்டமாய் அவிசு பாகம்
. தில்லையம் பலனுக் கில்லை
இட்டமாய் உமையாள் வந்தும்
. ஈசனை மதித்தான் இல்லை
வெட்டினார் தலையை யீசர்
. வீடுறும் பறிய லூரே. ... 1

அன்னையாம் இளமை யம்மை
. அத்தனின் மனையாய் இங்கே
தன்னிடம் வருவோர்க் கெல்லாம்
. தாமதம் இலாத ருள்வாள்
நன்னெறி நலத்தில் வாழ
. நாடுவோர்க் கின்னல் இல்லை
மன்னிய வினைகள் மாண்டே
. வீடுறப் பறிய லூரே. ... 2
 
ஆவுடைச் சதுரம் மூலர்
. ஆனபை ரவரே வீரம்
மேவுபத் திரரென் றாகி
. வேள்வியை அழித்தே தக்கன்
பாவியின் தலையைக் கொய்தே
. பாதமும் அருளி யீசர்
தேவரை யொறுத்தே பாவம்
. தீய்த்தனர் பறிய லூரே. ... 3

ஆடுகொள் தலையாய்த் தக்கன்
. ஆதியை வணங்கும் சிற்பம்
மேடுகொள் உருவாய்க் கோட்டம்
. மேவிடும் பலவாய்ச் சிற்பம்
ஈடுகொள் உருவொன் றில்லா
. ஈசரின் வகையாய்ச் சிற்பம்
வீடுகொள் அருளும் கிட்ட
. வீற்றருள் பறிய லூரே. ... 4


தலமரம் பலவென் றாகும்
. தடாகமாய் உத்ர வேதி
சிலையெழில் இளங்கொம் பன்னாள்
. சிவனெழில் பலவாய்க் காண
விலகியே வினைகள் போக
. விடையவர் கருணைப் பார்வைத்
திலகமாய்த் திகழும் ஊரே
. திருப்பறி யலெனும் பேரே. ... 5

[பலவு = பலாமரம்; தடாகம் = குளம்;]
 
உற்சவர் பலராய் மேனி
. ஊர்வலம் செலுதற் கென்றே
பொற்பதம் மயில்மேல் ஊன்றிப்
. போற்றுவோர்க் கருளும் கந்தன்
கற்பகத் தருவாம் சோமாஸ்
. கந்தரைங் கரனும் என்றே
உற்சவர் பலராய்க் காணும்
. ஊரெனப் பறிய லூரே. ... 6

[சோமாஸ் கந்தரைங் கரனும் = சோமாஸ்கந்தர், ஐங்கரன்]

காமனை எரித்த கண்ணும்
. காலனை உதைத்த காலும்
தாமரைக் கடவுள் சென்னி
. தட்டிய தலைவன் கையும்
நாமெலாம் அவரே யென்னும்
. ஞானமும் அருளும் பாதம்
சேமமாய் இகத்தில் காண்போர்
. சேர்வது பறிய லூரே. ... 7

இராவணன் மலையை ஆட்ட
. இராமநா தன்றன் காலின்
உராய்ஞ்சலாய் விரலை வைத்தே
. ஒறுத்துடன் நாள்-வாள் தந்தார்
ஒரோவழி அறம்நின் றாலும்
. உறுதியாய் உறவன் ஆகி
பராக்கதம் அருளும் ஊரே
. பறியலூர் அதனின் பேரே. ... 8

[பராக்கதம் = தைரியம்]
 
(இறுதிப் பகுதி)

அயனரி அலைய வைத்த
. அழலென நிலம்வான் ஆழ்ந்தார்
கயலெழும் விழியாள் சேரக்
. கடவிடும் சிவனாய் ஆனார்
வயவரி உரிவை கொள்வார்
. மயலினை நலியச் செய்வார்
செயலுறும் மனதில் உண்மை
. செழித்திடும் பறிய லூரே. ... 9

[கடவுதல் = செலுத்துதல்; வயவரி = புலி; உரிவை = தோல்]

வேதமில் நெறிகள் யாவும்
. வீணென மனதில் கொள்வோர்
போதனை எனவே தந்த
. பொய்யுரை அனைத்தும் தள்ளி
வேதனின் அருளைப் பெற்றே
. வேரினை யறிந்தே வாழ்வர்
ஓதுவார் அடியார் காணும்
. உள்ளொளி பறிய லூரே. ... 10

ஆழியின் நஞ்சைக் கொண்ட
. ஆரணன் தாளைப் பற்றி
ஊழியம் செய்தே வாழ்ந்து
. ஊரெலாம் கண்டே சொன்ன
காழியின் பிள்ளை சொல்லைக்
. காதுறப் பாடும் உள்ளம்
வாழிய வாழ்க வென்றே
. வாழ்த்துமூர் பறிய லூரே. ... 11

--ரமணி, 10-13/09/2015, கலி.27/05/5116

*****
 
பாமரர் தேவாரம்
திருநனிபள்ளி (இன்று புஞ்சை)
(கலித்துறை: ’தான தானன தானன தானன தானன’: ’மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற அமைப்பு.)

கட்டளை அடிகள்
அடியீற்றைத் தவிர மற்ற சீர்கள் நெடிலில் முடியா.
கூவிளம் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.

சம்பந்தர்: 02.010.01
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20100

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே.)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=265
http://www.shivatemples.com/sofct/sct043.php

பதிகம்
சம்பந்தர்: 02.084: காரைகள் கூகைமுல்லை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20840

அப்பர்: 04.070: முற்றணை யாயி னானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40700

சுந்தரர்: 07.097: ஆதியன் ஆதிரையன் அயன்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70970

சிவசிவா அவர்களின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/nayMqE8k7Vw[351-375]

காப்பு
(நேரிசை வெண்பா)
தந்தைமணக் கோலம் தனயனாய்க் கண்டுமகிழ்
எந்தை கணபதியே இன்னருள் - தந்தருள்வீர்!
கோட்டவி நாயகரே கும்பிட்டேன் ஈசனைப்
பாட்டிலே செய்திடப் பஃது.

பதிகம்
(கலித்துறை: ’தான தானன தானன தானன தானன’: ’மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற அமைப்பு.

ஆனை சுற்றிட வானது வுள்ளறை; ஆதியாய்
ஆன மூர்த்தியென் றேதிகழ் நற்றுணை யப்பராய்
பானு சோதியென் றேயரு ளீசனும் பாலையை
பானல் நெய்தலென் றேவரச் செய்நனி பள்ளியே. ... 1

[பானல் = கடல்]

அன்னை யாயிரு பர்வத புத்திரி அம்மனும்
இன்னு மாமலை யான்மடந் தையெனும் ஈச்வரி
நின்ற ருள்செய நைந்திடக் காணுவம் நீள்வினை
பன்ம வெண்பொடி பூண்டவ ருள்நனி பள்ளியே. ... 2

[பன்மம் = பஸ்மம் = விபூதி; பூண்டவருள் = பூண்டவரின் உள் (இடம்)]

ஆடு தெய்வமென் றாம்பல சிற்பமென் றாவரே
கோடி வட்டமென் றாயொரு மண்டபம் கோவிலில்
நாடு வோர்வினை காணுவர் நாள்பட நையவே
பாடி யேதொழ மூவரும் சூழ்நனி பள்ளியே. ... 3

[ஆடு தெய்வம் = சஞ்சரிக்கும் தெய்வம்; மூவர் = சம்பந்தர், அப்பர், சுந்தரர்]

--ரமணி, 19/10/2015

*****
(தொடரும்)
 
பாமரர் தேவாரம்
திருநனிபள்ளி (இன்று புஞ்சை)

பொன்னி மாநதி மாமுனி பாத்திரம் பொங்கவே
முன்பு காக்கைக விழ்க்கருள் ஐங்கர முக்கணர்
சொர்ண தீர்த்தமென் னும்சுனை யில்லவர் தோயவே
பொன்செய் என்கிற பேரது புஞ்சையென் றாகுமே. ... 4

பஸ்வ மாங்கினி பேரினில் காவிரி பாயுமே
அஸ்த மித்திசை மேற்கெனப் போக்கினில் மாறுமே
வஸ்தி ரந்தரித் தேயருள் வள்ளலைக் காணவே
பஸ்தி சேர்த்தருள் ஈசனின் இல்நனி பள்ளியே. ... 5

[பஸ்தி = வளம்]

சுற்றில் தக்கணன் நான்முகன் பாவகி சூரியன்
மற்றும் சண்டிகை ஐங்கரன் சண்டிதன் வல்லவி
பற்றக் காலடி பற்றுவி னைத்தொகை பாழ்படும்
பற்ற ருத்தருள் பண்பனின் இல்நனி பள்ளியே. ... 6

[பாவகி = முருகன்; சண்டிதன் வல்லவி = சண்டிகேசர் தன் மனைவியருடன்;
வினைத்தொகை = முக்காலமும் சேர்கின்ற வினைகளின் தொகை]

கோல மாயுரு மேவிடும் தேவரின் கோவிலில்
கால னையுதை காரணன் பூரணன் காட்சியில்
ஓல மாமனம் உட்புறம் தோய்ந்திடும் ஓய்வெனப்
பாலை நெய்தலென் றாகிய ஊர்நனி பள்ளியே. ... 7

--ரமணி, 20/10/2015

*****
(தொடரும்)
 
(இறுதிப் பகுதி)

தான வன்மலை தூக்கமு யன்றத லைபத்தும்
வான வர்முதல் ஆனவர் கால்விரல் வைத்தவனின்
தான கந்தைய ழித்தபின் செய்தருள் சடையப்பர்
பான கஞ்செய நஞ்சுணி யூர்நனி பள்ளியே. ... 8

மால யன்றலை தாளிணை தேடினர் மாய்ந்தனர்
கோல மாவழற் கூத்தன ருள்செயக் கூடினர்
நீல கண்டனை நெஞ்சுரு கில்வினை நையுமே
பால னம்தரும் பாதவி ணைநனி பள்ளியே. ... 9

வேதம் யாவையும் தள்ளிடும் பாதைகள் வீணென
வேதன் பாதையில் சாதனை செய்பவர் வில்லடை
வேத னைவினை யாவையும் வேடுவன் வீட்டுவன்
பாதம் சென்னியிற் கொள்ளவென் றூர்நனி பள்ளியே. ... 10

[வில்லடை = இடையூறு, தடை; வீட்டுதல் = அழித்தல்]

தந்தை தோளமர் காழியர் பண்மலர் சாற்றினர்
தந்தை பேரவர் தாத்துவி கம்செல வேண்டினர்
சுந்த ரர்நனி போற்றினர் சீர்கொளும் சொக்கனை
பந்தம் தீர்ந்திட பத்தரின் ஊர்நனி பள்ளியே. ... 11

[காழியர் = சீர்காழி ஊரினரான சம்பந்தர்; தந்தை பேரவர் = அப்பர்;
தாத்துவிகம் செல = தன்னை வருத்தும் 96 உடற் தத்துவ
தாத்துவிகங்கள் நீங்க]

--ரமணி, 03-05/10/2015, கலி.18/06/5116

*****
 
மூவலூர் (மயிலாடுதுறை அடுத்து)
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

ஆசிரிய இணைக்குறட்டுறை அமைப்பு

1. முதலடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டும் நாலும் சிந்தடி
2. அடிகள் ஒன்று, மூன்றின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம் கூவிளம்
3. அடிகள் இரண்டு, நான்கின் வாய்பாடு: மா கூவிளம் கூவிளம்

4. அடிகளின் தொடக்கம் நேரசையில் யெனில் 11/8 எழுத்துகள்;
. . நிரையசை யெனில் 12/9 எழுத்துகள்.

5. அடிதோறும் இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.

6. அடிதோறும், ஈற்றுச்சீர் தவிர, மற்ற சீர்களில் விளச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரலாம்;
. . அங்ஙனம் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

7. விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.

உதாரணம்: சம்பந்தர் தேவாரம் 01.056.01
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.

கோவில்
http://www.shivatemples.com/vt/vt_kovil3/vt124.php
http://temple.dinamalar.com/ListingMore_search.php?search=மூவலூர்&city=0
http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm

வைப்புப் பதிகம்: அப்பர்:
05.065.08: மூவலூரும் முக் கண்ணனூர் காண்மினே.
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650

06.041.09: மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60410

காப்பு
(அளவியல் நேரிசை வெண்பா)
பொன்னி நதிக்கரையில் புன்னை மரத்தடியில்
தன்னை வழிபட்ட தாண்டவனை - மின்னும்
வரிகளில் மூவலூர் வள்ளலைப் பாடக்
கரிமுகன் கண்ணருளே காப்பு.

பதிகம்
(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

மூவர் தானவர் முப்புரம் வான்சுற்ற
தேவர் யாவரும் திண்டாட
ஆர்வன் காப்பை அளித்த மூவலூர்
சேர்வன் தீவினை தீருமே. ... 1

(ஆசிரிய இணைக்குறட்டுறை: மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

அரியே அம்பாம் அயனவர் சாரதி
இருவர்க் கும்செருக் கேறவே
சிரித்தே அத்தனும் செற்றிட மூவலூர்
இருவர் போற்றினர் ஈசனே. ... 2 ... (திருத்திய வடிவம்)

வழிகாட் டும்சிவன் வாழ்வில ருள்செய
விழிகாட் டும்சிவை மங்களம்
இழிபா வம்செல இத்தலம் மூவலூர்
எழில்மே வும்கலை யீசனே. ... 3

(தொடரும்)
 
தீர்த்தம் ஏழெனத் தென்னனின் ஆலயம்
பார்த்தே போற்றியோர் பல்லிறை
மூர்த்தம் தானெழு மூலவன் மூவலூர்
ஆர்வினை கொள்ளவ மைதியே. ... 4

[பல்லிறை = பல கடவுளர்கள்]

பலிபீ டம்முனை பால்வணன் நந்தியர்
பலவே லிப்பரப் பாய்விரி
உலக மூர்த்தியின் உன்னதம் மூவலூர்
நலந்த ரும்சிலை நால்வகை. ... 5

ஆலின் கீழமர் அண்ணலே பாற்கடல்
ஆலம் கண்டம மர்த்தினான்
கால னையுதைக் கண்ணுதல் மூவலூர்க்
கோலம் கொண்டருள் கூத்தனே. ... 6

கழல்கள் மேவிய காலிணை காலமும்
நிழலென் றேகொளின் நீள்வினை
அழிந்தே அன்பே அகமுற மூவலூர்
அழல்வண் ணன்னருள் ஆடலே. ... 7

[அழல்வண்ணன்னருள் = னகர ஒற்று விரித்தல் விகாரம்]
 
(இறுதிப் பகுதி)

மலையைக் கெல்லிய மாமத ராவணன்
தலையைக் கால்விரல் தாழ்த்தினன்
சிலையால் பூவெறி சித்தசன் மூவலூர்த்
தலைவன் ஆக்கினன் சாம்பரே. ... 8

[சித்தசன் = மன்மதன்]

வேதன் நாரணன் விண்ணெழு சோதியின்
பாதம் உச்சியைப் பார்த்திலர்
ஆதி யண்ணல வர்க்கருள் மூவலூர்
பேதம் தீர்த்தருள் பித்தனே. ... 9

வேதம் தள்ளிடும் வேற்றும தந்தனில்
வேத னைகொளும் வில்லிலை
வேதம் கொள்ளுரு வேரெனும் மூவலூர்
நாதன் காலிணை நன்மையே. ... 10

[வில்லிலை = ஒளியில்லை]

வாக்கில் அப்பரின் வைப்பெனும் இத்தலம்
நோக்கும் யார்க்குமே நொய்விலை
காக்கும் தெய்வமாய்க் கண்ணுதல் மூவலூர்
பார்க்கில் போமே பழவினை!

[-னொய்வு = மனவருத்தம்] ... 11

--ரமணி, 16/10/2015

*****
 
Status
Not open for further replies.
Back
Top