• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பழமொழி விளக்கம்

Status
Not open for further replies.

saidevo

Active member
பழமொழி விளக்கம்

பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம்.
பொருள்: கழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது.

விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

*****

பழமொழி: குதிரை குணம் அறிந்து அல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை!
பொருள்: குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை.

விளக்கம்: குதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. இதனால்தான் குதிரைக்குக் கடிவாளம் போடுவது. தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தம்பிரான் தோழர் என்று ஒரு பெயர் உண்டு. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம்.

*****

பழமொழி: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார்.

பொருள்: கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.

விளக்கம்: சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.
Ganesha Worship , Ganesha in Turmeric, Ganesha in Cow dung, Ganesha under a tree,Symbolic Significance,biodegradable
Dussehra Puja - Pooja On Dusshera Festival, Pooja On Vijayadashami

மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.

*****
 
பழமொழி: தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்: தெய்வம் வழிகாட்டும், ஆனால் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?

விளக்கம்: இதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ? இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
"God helps those who help themselves."
"God gives every bird its food, but does not throw it into the next."

*****

பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.
பொருள்: நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது.

விளக்கம்: இதைவிட எளிய சொற்களில் கர்மபலன் விதியைச் சொல்ல முடிய்மோ? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும்.

*****

பழமொழி: தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
பொருள்: ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.

விளக்கம்: பட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமக அவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர். கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான் இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய, அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.

*****

பழமொழி: சீதை பிறக்க இலங்கை அழிய.
பொருள்: சீதாதேவியின் பிறப்பால் இலங்கை அழிந்தது.
விளக்கம்: ஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது.

*****

பழமொழி: காரண குரு, காரிய குரு.
பொருள்: காரண குரு ஆத்மனை அறிவுறுத்தி மோக்ஷத்துக்கு வழி சொல்பவர். காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர்.

விளக்கம்: ’குரு கீதா’ குறிப்பிடும் மற்ற குரு வகைகள் இவை: ’சூசக குரு’வானவர் உலகசாத்திரங்களை நன்கு கற்றறிந்தவர். ’வாசக குரு’வானவர் வர்ணாசிரம தர்மங்களை எடுத்துச்சொபவர். ’போதக குரு’வானவர் சீடனுக்கு ஐந்தெழுத்து போன்ற மந்திரங்கள்மூலம் தீட்சையளிப்பவர். ’நிஷித்த குரு’வானவர் மோகனம், மாரணம், வசியம் போன்ற கீழ்நிலை வித்யைகளைக் கற்றுக்கொடுப்பவர். ’விஹித குரு’வானவர் வைராக்யம் கைவரப்பெற்று சம்சாரபந்தத்திலிருந்து விடுதலை பெற வழிகாட்டுபவர். ’காரணாக்ய குரு’வானவர் ’தத்துவமசி’--ஆத்மனும் பிரமனும் ஒன்றே என்னும் மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து அனுபவித்துப் பயில்வதன் மூலம் மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர். கடைசியாகப் ’பரம குரு’வானவர் சீடனின் எல்லாவித சந்தேகங்களையும் நீக்கி, ஜனன-மரண பயத்தைப் போக்கி, பிரமனோடு ஐக்கியமாக வழிகாட்டுபவர்.

*****

பழமொழி: குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும்.
பொருள்: கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.

விளக்கம்: சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டது, குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பைபோன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது பழமொழியின் தாத்பரியம்.

*****

பழமொழி: சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்.
பொருள்: சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி.

விளக்கம்: சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது.

*****
 
பழமொழி: இல்லது வாராது, உள்ளது போகாது.

இதைத்தான் ரஜினி, தன திரைபடத்தில் "கிடைக்கிறது கிடைக்காம போகாது; கிடைக்காதது கிடைக்காது" என்று சொன்னாரோ? :bump2:
 
பழமொழி: அற்றது பற்றெனில் உற்றது வீடு.
பொருள்: உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.

விளக்கம்: அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ள ’எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ வரி நினைவுக்கு வருகிறது.)

*****

பழமொழி: இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
பொருள்: இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.

விளக்கம்: அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. இதனையொத்த பிற பழமொழிகள்:
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
தன் முதுகு தனக்குத் தெரியாது.

*****

பழமொழி: அம்மி மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
பொருள்: அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா?

விளக்கம்: மிடுக்கு என்ற சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு. ஒரு அழகான பெண் தன் ஆற்றலில் உள்ள கர்வம் தெரிய முழுக்கவனத்துடன் அம்மியில் அரைப்பதை விழுதாக அரைத்துப் பாராட்டுவாங்குவதை இந்தப் பழமொழி அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்தக்காலத்தில் பெண்ணை அம்மையில் அரைக்கச்சொன்னால், சொன்னவர்மேலுள்ள கோபத்தில் அவள் மிடுக்கு--ஆற்றல் அதிகமாவது நிச்சயம்!

*****

பழமொழி: இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
பொருள்: மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?

விளக்கம்: ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்.

*****

பழமொழி: சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு!
பொருள்: எவ்வளவுதான் தத்ரூபமாக இருந்தாலும் சித்திரமாக வரையப்பட்ட கொக்கினைத் திருடுபோன ரத்தினத்துக்காகக் குற்றம்சாட்ட முடியுமா?

விளக்கம்: ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது.

*****

பழமொழி: மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
பொருள்: மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

விளக்கம்: மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும் உண்டோ?

*****

பழமொழி: தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே.
பொருள்: கிணற்றைத் தூர்த்து முடிவிட்டபின், மீண்டும் அதைத் தோண்டித் தூர்வாரினால் பயன் உண்டோ?

விளக்கம்: முடிந்துபோன விஷயத்தை மீண்டும் கிளறுவது குறித்துச் சொன்னது.

*****
 
பழமொழி: உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
பொருள்: ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும்.

விளக்கம்: உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.

புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. ’பொய்யும் புராட்டும்’ என்பது பொதுவழக்கு. ’இந்த உருட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்’ என்கிறோம்.

உள்ளது என்பது ஒருவனுக்குள் உள்ள உண்மையை, அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது. உள்ளம் உண்மையை ஆராயாது கள்ளத்தை ஆராயும்போது, ஆத்மா மேன்மேலும் உள்ளுக்குள் ஒடுங்கிவிடுவதை இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது.

*****

பழமொழி: இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம்.
பொருள்: இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு.

விளக்கம்: இந்தப் பழமொழிக்குப் பின்னே ஒரு கதை உண்டு. குயவர்கள் என்றும் வைஷ்ணவர்களாக இருந்ததில்லை. ஆயினும் ஒரு சமயம் ஶ்ரீரங்கத்தில் இருந்த வைஷ்ணவர்கள் அங்கிருந்த குயவர்களை நெற்றியில் நாமம் தரிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினர்; இல்லாவிடில் அவர்கள் செய்யும் பானைகளைக் கோவிலுக்கு வாங்கமுடியாது என்றனர். இந்தக் கஷ்டத்தை நீக்க ஒரு புத்திசாலிக் குயவன் தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான். வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி.

*****

பழமொழி: கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
பொருள்: ஒருவனைக் கண்டபோது அவன மரியாதைக்கு உரியவனாகவும், காணாதபோது அவன் மடையன் என்றும் சொல்வது.

விளக்கம்: காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது. (’உன் பிள்ளை பரதன் காமாட்டி யானானே’--இராமாயணம், அயோத்.6)

இதுபோல இன்னொரு பழமொழி: கண்டால் முறை சொல்கிறது, காணாவிட்டால் பெயர் சொகிறது.

*****

பழமொழி: அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
பொருள்: ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.

விளக்கம்: அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.

*****

பழமொழி: குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்?
பொருள்: குரங்கு என்பது ஒரு நிலையில் நில்லாது மனம் போனபோக்கில் ஆடும் விலங்கு. அது கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, அதன்பின் அதனைத் தேளும் கொட்டிவிட்டால், குரங்கின் கதி என்ன?

விளக்கம்: நம் மனமே குரங்கு. கள் குடிப்பது ஆணவ மலத்தால் நாம் செய்யும் செயல்கள்; பேய் பிடிப்பது நாம் மாயை என்கிற மலத்தால் அவதியுறுவதைச் சொல்வது; நம்மைத் தேள்கொட்டுவது கன்ம/கரும மலம்: நாம் முன் செய்த வினைகளின் பயன். இந்த மூன்று மலங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மாவின் கதி என்ன ஆகும்?

*****
 
பழமொழி: வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை.
பொருள்: எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.

விளக்கம்: மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்.

*****

பழமொழி: ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்சாதி/பெண்டாட்டி கையே.
பொருள்: தன் பொருளைவிட மற்றவர் பொருளை உபயோகிப்பதில் தாராளம்.

விளக்கம்: கணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். மனவியை விருந்தினர்களுக்கு உணவு பரிமாற அழைத்தனர். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா?

*****

பழமொழி: கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான்.
பொருள்: இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது.

விளக்கம்: காஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், "கஞ்சி வரதப்பா!" என்று கூவினான். இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி உற்றுபவர்கள் வருவதாக எண்ணி, "எங்கே வரதப்பா?" என்றான்.

தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. கஞ்சியும் காஞ்சியும் ஒன்றானால் வரதப்பா என்று வணங்குவது அவர்/அது வருவதைக் குறிப்பதாகவும் ஆகிறதல்லவா?

*****

பழமொழி: சுயகாரிய துரந்தரன், சுவாமி காரியும் வழவழ.
பொருள்: தன்காரியத்தில் குறியாயிருந்து அலுக்காமல் சலிக்காமல் அதை வெற்றியுடன் முடிப்பவன், அதுவே கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான்.

விளக்கம்: दुरन्त என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைக்கு ’தீவிர உணர்ச்சியுடன் மிகவும் முயல்வது’ என்றொரு பொருளுண்டு. வழவழவெனல் என்ற தமிழ்ச்சொல்லுக்குத் தெளிவின்றிப் பேசுதல் என்று பொருள். தன்காரியம் எனும்போது (பேச்சின்றி) எண்ணமும் செயலுமாக இருப்பவன், அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது.

*****

பழமொழி: குரங்குப்புண் ஆறாது.
பொருள்: குரங்கு தன்மேலுள்ள புண்ணை ஆறவிடுமா?

விளக்கம்: இங்குக் குரங்கு என்றது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. அதுவும் குரங்குபோல அமைதியற்று அலைவது. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. குரங்கு தன் புண்ணை ஆறவிடாது; மனிதனும் தன் தீயகுணத்தை மாறவிடான்.

*****
 
பழமொழி: பழைய பொன்னனே பொன்னன், பழைய கப்பரையே கப்பரை.
பொருள்: (சமீபத்தில் மாறிவிட்ட) பொன்னன் மீண்டும் பழைய பொன்னன் ஆனான், புதிதாகக் கிடைத்த கப்பரையை விட பழைய கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய்.

விளக்கம்: பொன்னன் என்றொரு வேலக்காரன் ஒருநாள் பொற்காசுகள் நிறைந்த புதையல் ஒன்றைக் கண்டான். புதையலைத் தன்வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அங்கேயே அதை மறைத்துவைத்துப் பின் தினமும் அங்கு சென்று அதைக் கவனித்து வந்தான். புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். இதைக்கவனித்த அவன் யஜமானன் ஒருநாள் அவன் அறியாமல் அவனைத்தொடர்ந்து சென்று புதையலைக்கண்டுபிடித்து அதைக் கைப்பற்றிவிட்டான். மறுநாள் புதையல் காணாமல் போயிருந்ததுகண்டு பொன்னன் தன்விதியை நொந்து மீண்டும் பழைய பொன்னன் ஆனான். யஜமானன் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான்.

*****

பழமொழி: கொள்ளை அடித்துத் தின்றவனுக்குக் கொண்டுதின்னத் தாங்குமா?
பொருள்: திருடியே உண்பவன் உணவை வாங்கி உண்பானா?

விளக்கம்: கொள்வது என்றால் வாங்குவது; கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல். ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாது’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. எனவே கோண்டு தின்னல் என்பது ஒரு உணவுப்பொருளை வாங்கித்தின்னுதலாகும். இன்றைய அரசியல்வாதிகள் இப்பழமொழியை நினைவூட்டுகின்றனர்.

*****

பழமொழி: குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.
பொருள்: குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.

விளக்கம்: காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ’காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே’--அறநெறிச்சாரம் 22.

ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை. இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர் ’டூ’ விட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.

குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான் (’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’). இவர்களின் வெறுப்பும் பொறாமையும் எளிதில் மாறுவன அல்ல.

*****

பழமொழி: கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோலச் சொல்லவேண்டும்.
பொருள்: எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல கண்ணால் கண்டதை நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.

விளக்கம்: இது ஒரு வழக்கில் சாட்சிக்குச் சொன்ன ஆலோசனை.

*****

பழமொழி: மரத்தாலி கட்டி அடிக்கிறது.
பொருள்: மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.

விளக்கம்: இச்செயல் கொடுங்கோன்மையின் உச்சியைக் குறிக்கிறது. முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

*****
 
033. பழமொழி: அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு.
பொருள்: கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான்.

விளக்கம்: அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில் ’பற்றவைப்பவன்’ ஆகிறான்! (என் விளக்கம்).

சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு.

*****

034. பழமொழி: குறவழக்கும் இடைவழக்கும் கொஞ்சத்தில் தீராது.
பொருள்: வேடுவர்கள், இடையர்கள் இவர்களின் சர்ச்சைகளை எளிதில் தீர்க்கமுடியாது.

விளக்கம்: குறவன் என்ற சொல் அந்நாளில் குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன் என்று பொருள்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமும். இங்கு வசித்தோரின் உணவு தேனும் தினைமாவும். அவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல்.

*****

035. பழமொழி: மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.
பொருள்: துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.

விளக்கம்: மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.

*****

036. பழமொழி: மாரைத்தட்டி மனதிலே வை.
பொருள்: கேட்ட வசைமொழிகளை மார்பைத் தட்டியபடி மனதில் இருத்திக்கொள்வது.

விளக்கம்: இருவருக்கிடையே ஏற்படும் சச்சரவில் வார்த்தைகள் தாறுமாறாகக் கையாளப்பட, வசைமொழி கேட்டவன் தன் மாரைத்தட்டியபடி, ’இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்’ என்று அறைகூவுவது இன்றும் நடப்பதைப் பார்க்கிறோம்.

*****

037. பழமொழி: மௌனம் கலகநாசம்.
பொருள்: மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.

விளக்கம்: தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.

*****

038. பழமொழி: ஶ்ரீரங்கத்துக் காக்காயானாலும் கோவிந்தம் பாடுமா?
பொருள்: காக்கை ஶ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும் அது கோவிந்தனைப் பற்றி அறியுமோ?

விளக்கம்: காக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். அதற்கு அந்த ஊரின் ஆன்மீக, கலாசார வழக்கங்கள் பற்றித் தெரியாது. அதுபோலச் சிலர் இருக்கிறார்கள்.

*****

039. பழமொழி: நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா?
பொருள்: நெல்குத்தும் பெண் இரத்தினங்களை இனம்காண அறிவாளா?

விளக்கம்: கல்லு பரிக்ஷை என்பது இரத்தினக் கற்களை பரிசோதித்துத் தரம் பிரிப்பது. இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா? சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து.

*****

040. பழமொழி: சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டதுபோல.
பொருள்: சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல.

விளக்கம்: சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. சணப்பன் வீட்டுக்கோழி என்றது தன்னுடைய முட்டாள்தனத்தால் தனக்கே துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது.

*****
 
பழமொழிக்கு, முதுமொழி என்றும் ஒரு பெயர் தமிழில் உண்டு. நமது முன்னோர்களால் முழுக்க முழுக்க அனுபவபூர்வமாக அனுபவித்து சொல்லப்பட்டது....

இதுபோல் முதுமொழிகள் தமிழ்மொழிபோல் பிறமொழிகளில் உண்டா என்று தெரியாது...

பழமொழிகள் இன்றுவரை பொய்த்துபோனது இல்லை.

எனக்குப் பிடித்த சில பழமொழிகள்......

1) "குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு படவேண்டும்" என்றது ஆகும்.

இந்தபழமொழியை பணக்காரன் கையால் குட்டு பட்டால் நலம் ... என்று தவராக அர்த்தம் கொள்ளப்படுகிறது..

அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல... " நம்மோடு மோத தகுதி உள்ளவனுடன் தோற்றாலும் தப்பில்லை " என்பதேஆகும்.

அதேபோல் " ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால்... தன்பிள்ளை தானேவளரும் " என்ற பழமொழியும் தவராக அர்த்தம்கொள்ளப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தனது மருமகள் வயிற்றில் சுமப்பது தன் குடும்ப வாரிசு. ஆனால் மருமகள் ஊரார் பிள்ளை..

கர்ப்ப காலத்தில் ஊரார்பிள்ளையான மருமகளை ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசு தானாக வளரும் என்பதே அதன் பொருள்.

(அந்தக்காலத்தில் மருமகள்,மாமியார் சண்டை அனேகமாக எல்லா குடும்பங்களிலும் சகஜம். எனவே பொல்லாத மாமியார்களுக்கு சொல்லப்பட்ட அறிவுறை..)
 
சிலர் முழு சுயநலவாதிகளாக இருப்பார்கள். நம்மிடம் அவர்களுக்கு ஒரு காரியம் செய்து கொடுக்கச்சொல்லி இருப்பார்கள். தட்டமுடியாமல் சரி செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி இருப்போம்.

நம்மைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு கூழைக்கும்பிடு போட்டு நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.

சிலநேரம் நாமே ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொண்டு தப்பிக்க வழிதெரியாமல் தவித்துக்கொண்டிருப்போம்.

அநத நேரம் இவர் கண்ணில் நாம் பட்டுவிட்டால் அப்போது கூட நம்மை விடமாட்டார்கள் இவர்கள்.

அவர்களுக்காக சொல்லப்பட்ட பழமொழிதான் ," ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது... வேருக்கடியில் இருக்கும் குழவி என்கதை என்னாயிற்று என்றதாம் " எவ்வுளவு அனுபவபூர்வமானது பாருங்கள்..
 
பழமொழி: சேணியனுக்கு ஏன் குரங்கு?
பொருள்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?

விளக்கம்: சேணியன் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம்: ’ஆடை நெய்யுஞ் சாதி வகையான்’. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. "இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). பழமொழி நாம் கெட்ட பழக்கங்களை வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது என்று சுட்டுகிறது.

*****

பழமொழி: ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
பொருள்: ஒரு கொம்பில்லாத விலங்குகூட ஏழை என்றால் அவன்மேல் பாயும்.

விளக்கம்: மோழை என்றல் கொம்பில்லாத விலங்கு: ’மூத்தது மோழை, இளையது காளை’ என்பர்.
"Even a child may beat a man that’s bound."

*****

பழமொழி: அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல.
பொருள்: நாவிதன் மாப்பிள்ளையின் மீசை இதனால் மறைந்தே போயிற்று.

விளக்கம்: ஒரு நாவிதன் மகளுக்குத் திருமணாமாம். மாப்பிள்ளை தன் வருங்கால மாமனாரிடமே மீசையைத் திருத்திக்கொள்ள வந்தானாம். வந்த இடத்தில் நாவிதனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறைசொல்லித் திருத்தியதால் மாப்பிள்ளையின் மீசை மறைந்தே போயிற்றாம்!

*****

பழமொழி: இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்.
பொருள்: கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்!

விளக்கம்: ஏன் கைகள் போதவில்லை? வங்கியது என்ன? கையூட்டு (லஞ்சம்).


*****

பழமொழி: இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
பொருள்: அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான்.

விளக்கம்: இது குறித்த தெனாலிராமன் கதையில், தெனாலிராமன் தான் சாகும்போது தன்னை ஒரு கல்லறையில் புதைக்கவேண்டுமென்றும், அந்தக் கல்லறை தன் ஊர் எல்லையில் பக்கத்து ஊர் நிலத்தில் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது.

*****

பழமொழி: எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
பொருள்: கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன் கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.

விளக்கம்: என் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது. ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்‍ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்‍ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியது ’சாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" என்று கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். எனவே அவன், "சாலீஸ் நஹி, சார் தஸ் பைசா தேதோ (சாலீஸ் அல்ல, நான்கு பத்து பைசாக்கள் கொடு)!" என்று பதில் சொன்னான்!

*****

பழமொழி: கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல.
பொருள்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது.

விளக்கம்: பல பழமொழிகள் அனுபவத்தில் எழுந்தாலும், இந்தப் பழமொழி ஒரு உருவகமாச் சொன்னதாகத் தோன்றுகிறது. அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். எடுத்துக்காட்டாக, ’நீ பெரிய ஆளப்பா’ என்று சொல்லும்போது நாம் அவன் உடல் பருமையோ உயரத்தையோ குறிப்பதில்லை.

*****

பழமொழி: குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.
பொருள்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.

விளக்கம்: கோபாலப் பெட்டி என்பது என்ன? விடை நாமம் என்ற பெயரில் உள்ளது. புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று பெயர். இன்றும் அதைக் காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது.

*****

பழமொழி: பாட்டி பைத்தியக்காரி, பதக்கைபோட்டு முக்குறுணி என்பாள்.
பொருள்: கொடுத்தது கொஞ்சமேயானாலும் அதிக அளவு என்று கூறுவது.

விளக்கம்: பைத்தியம் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். அந்த வார்த்தைக்கு மூடத்தனம் என்றும் பொருளுண்டு. பதக்கு என்பது இரண்டு குறுணிகொண்ட ஓர் அளவு. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு.

*****

பழமொழி: சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது.
பொருள்: நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா?

விளக்கம்: சாப்பிள்ளை என்பது பிறக்கும்போதே இறந்திருந்த குழந்தை. வியாதி குணமாகாவிட்டாலும் நாம் டாக்டருக்கு ஃபீஸ் கொடுப்பதுபோல. மருத்துவச்சியாவது அவள் வேலை முடிந்தபின்னரே பணம் பெற்றுக்கொண்டாள். ஆனால் டாக்டர்?

*****
 
பழமொழி: சேணியனுக்கு ஏன் குரங்கு?
பொருள்: நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா?


இதை துணி நெய்கிறவன் குரங்கு வளர்த்த கதை என்று கூறுவார்கள்... அக்கதை பின்வருமாறு...

ஒரு ஊரில் துணி நெய்பவன் செல்லமாக ஒரு குரங்கு வளர்த்தானாம். அது அவன் தறியில் அமர்ந்து வேலை செய்யும்போதெல்லாம் அவனையும் அவனது செயல்களையும் உற்று நோக்கியபடியே எப்போதும் இருக்குமாம்.

ஒருமுறை அவன் வேலையில் இருக்கும்போது அவனது நண்பன் வந்து வாசலில் இருந்து அழைத்தானாம்.

நண்பனைப்பார்க்க வாசலுக்கு நெசவாளி சென்றானாம்.

கீழே இருந்த குரங்கு தனது எஜமானர் வருவதற்க்குள் அவர் மெச்சும்படி அவரது வேலையை தான் செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணியதாம்.

உடனே தறியில் அமர்ந்துகொண்டு தனது எஜமானை தறிக்கட்டையை பிடித்து குறுக்கும் நெடுக்கும் ஆட்டுவதைப் பார்த்திருந்த குரங்கு தவறாக தனது நகம் பொருந்திய கைகளால் குறுக்கும் நெடுக்குமாக பாவிவைக்கப்பட்ட நூலை அறுத்துவிட்டதாம்.

வாசலில் இருந்து வந்துபார்த்த எஜமானியின் நண்பன் கேட்டானாம் ," தறி நெய்யும் உனக்கு குரங்கு தேவையா?" என்றானாம்.
 
051. பழமொழி: கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.
பொருள்: மரண துக்கத்திலும் அவளுக்குத் திருட்டுப் புத்தி போகாது.

விளக்கம்: வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது மாதர் வட்டமாக அமர்ந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கும்போது இவள் ஆறுதல் சொல்வதுபோல் ஒவ்வொரு பெண்ணாகக் கட்டியணைக்குபோதே திருட ஏதேனும் நகை அகப்படுமா என்று கைகளால் துழாவுகிறாள். திருடனுக்கு எதுவுமே புனிதம் இல்லை.

*****

052. பழமொழி: தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.
பொருள்: தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான்.

விளக்கம்: பொற்கொல்லர்கள் பொதுவாக ஏமாற்றுபவர்களாக அக்காலத்தில் கருதப்பட்டனர். இன்றோ கொடுப்பதில் நாணயம் குறைந்து ஏமாற்றுவது என்பது கடையுடமையாக்கப் பட்டுள்ளது.

*****

053. பழமொழி: சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை.
பொருள்: நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை).

விளக்கம்: சொந்தக்காரர்களிடையேயும் திருடர்கள் உண்டு. அதிலும் சம்பந்தி வீட்டில் திருடும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. சம்பந்தி கிரஹஸ்தன் என்ற சொற்றொடர் சம்பன்னகிருஹஸ்தன் என்ற சொல்லின் திரிபு. சம்பன்னகிருஹஸ்தன் சொல்லின் நேர்பொருள் தகுதியுள்ள வீட்டுக்காரன் என்று இருந்தாலும் அது அங்கதமாக நாணயமற்றவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

*****

054. பழமொழி: நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
பொருள்: இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.

விளக்கம்: மூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். இன்றுள்ள எல்லா ஜாதிகளும் அன்றுமுதல் மாறுதல் இல்லாமல் இருந்தனவல்ல என்பது செய்தி.

*****

055. பழமொழி: வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான்.
பொருள்: வியாபாரத்துக்கு வந்த வெள்ளைக்காரன், கொஞ்சம் இடம்கொடுத்ததால் நாட்டையே கைப்பற்றினான்.

விளக்கம்: ஆட்டுத்தோல் என்றது, ஒரு ஆட்டின் தோல் அளவு இடம். அதை அறுத்து ஊர் முழ்தும் அடித்தது, அந்தத் தோல்துண்டுகளைப் போன்ற இடங்களை நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது.

*****

056. பழமொழி: ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
பொருள்: ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.

விளக்கம்: மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி.

*****

057. பழமொழி: பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும்.
பொருள்: எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது.

விளக்கம்: திருமணத்துக்குப் பெண்தேடும் ஒருவன் நினைத்தது இது: நான் கொடுக்கும் சிறிய வரதட்சிணைப் பணத்துக்கு எனக்கு முத்தாக ஒரு பெண் கிடைக்கவேண்டும் அவள் என் அத்தை மகளாகவும் இருக்கவேண்டும்.

*****

058. பழமொழி: சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சமுசாரம் மேலிட்டதுபோல்.
பொருள்: தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது.

விளக்கம்: சந்நியாசி கல்யாணம் செய்துகொண்டதாகப் பொருள் இல்லை. கதை இதுதான்: ஒரு சந்நியாசி தன் கோவணத்தை எலி கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம். பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம். அந்தப் பசுவை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம். அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம்.

*****

059. பழமொழி: பூனை கொன்ற பாவம் உன்னோடே, வெல்லம் திண்ற பாவம் என்னோடே.
பொருள்: பூனையைக் கொன்ற பாவம் உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும்.

விளக்கம்: ஒரு பேராசைக்கார வணிகன் ஒரு பூனையைக் கொன்றுவிட்டானாம். அந்தப் பாவம்போக ஒரு பிராமணனிடம் பரிகாரம் கேட்டானாம். பிராமணன் சொன்ன பரிகாரம் (தங்கப் பூனை செய்து கங்கையில் விடுவது) செலவுமிக்கதாக இருந்ததால், பதிலாக வணிகன் ஒரு வெல்லப்பூனை செய்து அதற்குக் கிரியைகள் செய்துவிட்டுப் பின் அதைத் தின்றுவிட்டு பிராமணனைப் பார்த்து இவ்வாறு சொன்னானாம்.

*****

060. பழமொழி: ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.
பொருள்: மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.

விளக்கம்: ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது. அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.

*****
 
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
பொருள்: இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.
திருமண மந்திரங்களில் மூன்று தலைமுறையினர் பெயர்கள் சொல்லுவதைப் பற்றி என் தங்கை வேடிக்கையாகக் கூறுவாள்:

"ஏன் அப்படிச் சொல்லுகிறார் தெரியுமா? இடையில் அக்பரோ, ஆன்டனியோ வ
தோன்னு 'செக்' பண்ணத்தான்!" :spy:
 

'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!' - இது மருவிய பழமொழியாம். சொன்னது -

'மண் திரையை நம்பி ஆற்றில் இறங்காதே!' ஆற்று நீர் வழியே பார்க்கும்போது, அதன் அடி -

மண் திரை - மிகவும் அருகில் இருப்பதுபோலத் தெரியும்; ஆனால் ஆழம் அதிகம் இருக்கும்.

இது ஒரு சொற்பொழிவாளர் சொன்ன விளக்கம்.
 

தனக்கு மிஞ்சித் தான தருமம்! - என்று சொல்லி, பெறும் செல்வத்தைப் பெரும் செல்வமாக்க முனைவது

உலக வழக்கம். ஆனால் சொன்னது, 'தனக்கு மிஞ்சும் தான தருமம்' என்பதாம்! ஒருவர் மண்ணுலகை நீத்து

விண்ணுலகு செல்லும்போது, அவருடன் மிஞ்சி வருவது அவர் செய்த தானமும், தருமமுமே ஆகும்!


இதுவும் ஒரு சொற்பொழிவில் கேட்டது! :)

 
061. பழமொழி: இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்.
பொருள்: யஜமானி நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.

விளக்கம்: நாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். (நல்வழி 28).’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உடை, பூ, மஞ்சள். (இன்று அவை ஊண், உறக்கம், ஷாப்பிங், டி.வி. என்று மாறிவிட்டது வேறு விஷயம்.)

*****

062. பழமொழி: இலவு காத்த கிளி போல.
பொருள்: பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல.

விளக்கம்: இலவம் என்றால் பருத்தி மரம். இலவம் பஞ்சு, பஞ்சு வகைகளில் தரமானது. இலவு என்பது இலவம் மரத்தின் காய்களைக் (உண்மையில் அவை pods--விதைப் பைகள்) குறிக்கும். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.

*****

063. பழமொழி: ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.
பொருள்: ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.

விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது.

*****

064. பழமொழி: கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.
பொருள்: தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.

விளக்கம்: கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. சவுக்குத் தோப்பில் நரி உலாவும் என்பார்கள். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.

கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த ஊரின் பெயரிலும் ’நரி’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம்.
Some links:???????????? ????????? ???????? (???????? ?????????? etc)- Nandanar songs of Gopalakrishnabharati
Gopalakrishna Bharati

*****

065. பழமொழி: போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
பொருள்: பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.

விளக்கம்: புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.

*****

066. பழமொழி: கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
பொருள்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.

விளக்கம்: கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர் ’கல்கி’ தன் ’பொன்னியின் செல்வன்’ புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.

*****

067. பழமொழி: பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.
பொருள்: பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.

விளக்கம்: ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான்.

வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

068. பழமொழி: முப்பது நாளே போ, பூவராகனே வா.
பொருள்: வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.

விளக்கம்: வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது.

*****

069. பழமொழி: பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு.
பொருள்: ஒரு பட்டுப்புடவையை அவள் உடுத்த இரவல் கொடுத்தேன். கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது!

விளக்கம்: என் பட்டுப்படவை அழுக்காகிவிடுமே என்ற கவலைதான்!

*****

070. பழமொழி: அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.
பொருள்: பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.

விளக்கம்: அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும். உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும்.

*****
 
வணக்கம்.

’மண்குதிரை’ ஒருவேளை ஊர் எல்லையில் இருக்கும் அய்யானார் கோவில் மண்குதிரையைக் குறித்ததோ?

தனக்கு ஒன்றுமே மிஞ்சாமல் தானம் செய்தான் கர்ணன். அவன் இறந்தபின் சொர்க்கத்துக்குச் சென்றபோது பசியில் வாடினான். அவனைச் சுற்றிப் பொன் வைர மாணிக்கப் பாத்திரங்கள் இருந்தனவே தவிர அவற்றில் சோறோ தண்ணீரோ இல்லை. ஏன் இப்படி என்று கேட்டதற்கு, "நீ கொடுத்தது மட்டுமே இங்கு இருக்கும். அவ்வளவு தானங்கள் செய்திருந்தும் நீ அன்னதானம் செய்யவில்லையே?" என்று பதில் வந்தது. அவன்கூட இருந்தவர்கள் அவன் தன் கட்டைவிரலைச் சூப்பினால் பசியடங்கும் என்றனர். கர்ணன் அவ்வாறே செய்து தன் பசியைத் தீர்த்துக்கொண்டான்.--அன்னதானத்தின் உயர்வு குறித்து காஞ்சி பரமாச்சாரியார் செய்த உபதேசத்திலிருந்து.

அந்நியர் நம்மை ஆண்டபோது, இப்படித்தான் தமிழ் மெத்தப்படித்த பாதிரியார் ஒருவர் திருவள்ளுவரின்

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்

என்ற குறளில் எதுகைப்பிழை இருப்பதாகக் கருதி, ’எச்சத்தால்’ என்ற சொல்லை ’மக்களால்’ என்று மாற்றிப் பெருமையுடன் ஒரு தமிழ்ப் பண்டிதரிடம் காட்டினாராம்.

பண்டிதர் தலையில் அடித்துக்கொண்டு பாதிரியிடம், "மெத்தப் படித்தவர் என்று நினப்போ மூடரே? எச்சம் என்ற சொல்லால் வள்ளுவர் மக்களை மட்டும் குறிக்கவில்லை. ஒருவன் இறந்ததும் அவன் விட்டுச்சென்ற மக்கள், பொருள், புகழ் போன்ற எச்சங்களைக் குறிப்பிடுகிறார். இனிமேலாவது நம் முன்னோர்கள் எழுதிவைத்ததின் முழுப்பொருளை அறிய முற்படும்" என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.
 
Last edited:
பழமொழி: மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
பொருள்: மாமியாரப் பொறுத்தவரை மருமகள் எது சொன்னாலும், செய்தாலும் குற்றம்.

விளக்கம்: மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? மாமியார்கள் மாறுவதும்
it reminds the saying
மாமியார் ; எப்ப வந்தீர்கள் மாப்பிள்ளை
மருமகன் :இடி இடித்து மழை பெயிது ஒய்ந்த பிறகு
விளக்கம் :மாமியார் பாத் ரூமில் இருந்த பொது வந்ததை இப்படி சூசக மாக சொனார் many old people make sound even while urinating
guruvayurappan
 
dear saidevo !
you can add these also
கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தார் போல
அவலு கொண்டு வா நான் உமி கொண்டுவரேன் என்ற கதை போல
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்
guruvayurappan
 
வணக்கம் திரு. குருவாயூரப்பன்.

அஞ்சல் 20-ல் நீங்கள் தந்துள்ள பழமொழிகள் எளிதில் விளங்குவன் ஆதலால் நான் விளக்கவுரை தேடவில்லை. இப்பழமொழிகளைப் பற்றி ஏதேனும் கதையோ, வேறு சுவையான செய்தியோ இருந்தால் நீங்களோ, வேறு யாராவதோ பகிர்ந்துகொள்ளலாம்.
 
071. பழமொழி: அம்பலம் வேகுது.
பழமொழி: அதைத்தான் சொல்லுவானேன்? வாயைத்தான் நோவானேன்?
பழமொழி: சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே.

பொருள்: இந்தச் சத்திரம் பற்றி எரிகிறது.
பொருள்: அதைச் சொல்வது ஏன்? பின் என் வாய் வலிக்கிறது என்பானேன்?
பொருள்: உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே.

விளக்கம்: இந்த மூன்று பழமொழிகளுக்குப்பின் ஒரு கதை உண்டு: சத்திரம் என்பது வழிப்போக்கர்களுக்காகக் கட்டியது. அங்கு யாரும் நிரந்தரமாகத் தங்கக் கூடாது. ஒரு சத்திரத்தில் ஒரு அரைச் சோம்பேறி, ஒரு முக்கால் சோம்பேறி, ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள். சத்திரத்தின் சொந்தக்காரன் எவ்வளவு முயன்றும் அவர்களை விரட்ட முடியவில்லை. ஒரு நாள் அவன் சத்திரத்துக்குத் தீ வைத்துவிட்டான். நெருப்பைப் பார்த்த அரை சோம்பேறி சொன்னது முதல் பழமொழி. அதற்கு பதிலாக முக்கால் சோம்பேரி இரண்டாவது பழமொழியில் உள்ளவாறு கூறினான். இவர்களின் உரையாடலைக் கேட்ட முழுச் சோம்பேறி கூறியது மூன்றாவது பழமொழி.

*****

072. பழமொழி: உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.

பொருள்: என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. (இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு.

விளக்கம்: கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் பட்டணத்துக்கு வேலை தேடிப் போனான். அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. அதைத் தன் உறவினர்களிடம் சொல்வது கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.

அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு இல்லை. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. எனக்குத் தரும் சம்பளம் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு. குண்டை என்றால் எருது. வராகன் என்பது மூன்று ரூபாய்க்கு சற்று அதிக மதிப்புள்ள பொன் நாணயம்.

*****

073. பழமொழி: குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
பொருள்: குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.

விளக்கம்: மலையளவு சொத்துக்கள் சேர்த்த இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு குந்தித் தின்றாலும் அவர்கள் சொத்து கரைவதில்லை. கரைவது (குவாரியாகப் பொடிபட்டு) ஊரில் உள்ள குன்றுகளும், இன்னபிற பொதுச் சொத்துக்களும்தாம்.

*****

074. பழமொழி: நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
பொருள்: நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.

விளக்கம்: சோம்பேறிக்கு நண்பர்கள் கிடையாது; சுறுசுறுப்பாக இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் சமாளித்துவிடுவார்கள்.

*****

075. பழமொழி: கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.
பொருள்: படைத்தால் உண்ணும் பண்டாரம் தான் வேலை எதுவும் செய்யமாட்டார்.

விளக்கம்: கொட்டிக் கிழங்கு ஒரு செடி எனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.

கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்குத் தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.
???? ?????? ????????? ???????????????- 17 benefits kotti kizhangu prabbak kizhangu - Boldsky Tamil

*****
 
076. பழமொழி: தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!
பொருள்: வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா!

விளக்கம்: அது என்ன குண்டு, எட்டுமணி? ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்கள் அமைத்திருந்த கோட்டை அலுவலகங்களில் இருந்து நேரத்தைக் குறிக்க தினமும் இரண்டு முறை துப்பாக்கிக குண்டுகள் (காற்றில்) சுடப்படும். இப்படித்தான் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து காலை விடியும்போது ஒரு முறையும் இரவு எட்டு மணிக்கும் குண்டுச் சத்தம் ஒலிக்கும். இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க.

*****

077. பழமொழி: ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
பொருள்: ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

விளக்கம்: திருமூலரின்
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்ற பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

*****

078. பழமொழி: உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்.
பொருள்: உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். ஆனால் மனத்திலோ கோடிகோடி ஆசைகள்.

விளக்கம்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கூறியிருந்தாலும், ஆசைகளின் உந்துதலில் மனம் தன் குறைந்த தேவைகளுக்கு மிக அதிகமாகவே நாடுகிறது.

*****

079. பழமொழி: உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.
பொருள்: உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை.

விளக்கம்: கேட்டது எல்லாம் செய்துகொடுத்தும் மேலும் ஒன்று கேட்பவனை/கேட்பவளைக் குறித்துச் சொன்னது. உதாரணமாக, பாண்டவர்கள் சூதாட்டத்திலே தோல்வியுற்று அனைத்தும் இழந்தபோது, திரௌபதி ஒரு சபதம் ஏற்றாள்: துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை முடிப்பது என்று. கண்ணனின் அநுக்கிரகத்தால் இவை நிறைவேறியபின் அவள் மீண்டும் ஒரு சபதம் செய்தாள், தன் குழந்தைகளைக் கொன்ற அசுவத்தாமன் கொல்லப்படும் வரை அவள் தன் கூந்தலை முடிவதில்லை என்று. அப்போது கண்ணன் அவளிடம் இப்பழமொழியைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

*****

080. பழமொழி: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பொருள்: இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.

விளக்கம்: ரஸவாதத்தால் உலோகங்களைப் பொன்னாக்கும் முயற்சி உலகெங்கும் முயற்சிக்கப்பட்ட ஒன்று. ஆனால், அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. அதைவிட, இருப்பதே போதும், தேவையானது தேவையான நேரங்களில் வந்துசேரும் என்ற மனம் இருந்தால் அந்த ரஸவாதம் மற்ற உலோக மனங்களையும் பொன்னாக்க வல்லது.

*****
 
081. பழமொழி: அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?
பொருள்: வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

விளக்கம்: இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த ’ஜுரம்’போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

*****

082. பழமொழி: எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.
பொருள்: எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

விளக்கம்: எருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம். இதுபோன்று அடிமுட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்:

எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.
கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.
கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.
காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.
கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.

*****

083. பழமொழி: நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.
பொருள்: நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல.

விளக்கம்: லவாடி என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது. ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி.

*****

084. பழமொழி: புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்.
பொருள்: ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன்.

விளக்கம்: புட்டுவெல்லம் என்பது பனைவெல்லம். அதை வைக்கும் ஓலைக்கூடைக்கு புட்டிற்கூடை என்று பெயர்; இச்சொல் மருவி புட்டுக்கூடை என்றாகியது. கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தைவிட பனைவெல்லம் பொதுவாக மட்டமாகக் கருதப்படுகிறது. பனங்கற்கண்டு ஒரு மருந்துப்பொருளாகப் பயன்பட்டாலும், பனைவெல்லத்தைக் கரும்பு வெல்லம் போலவோ, சர்க்கரை போலவோ பயன்படுத்த முடியாது. முன்பெல்லாம் கிராமங்களில் காப்பிக்கு பனைவெல்லத்தைத்தான் பயன்படுத்தினர். கருப்பட்டிக் காப்பி என்றே அதற்குப் பெயர். கரும்பு வெல்லம் போலன்றி கருப்பட்டியில் கசடு இருக்கும்.

முண்டம் சொல்லுக்கு அறிவில்லாதவன் என்றொரு பொருள் உண்டு. தலையில்லாத உடம்பை மூன்டம் என்றதால் அறிவிலி ஒருவனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம்.

*****

085. பழமொழி: இரிஷி பிண்டம் இராத் தாங்காது.
பொருள்: கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.

விளக்கம்: ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

*****

086. பழமொழி: எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?
பொருள்: எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

விளக்கம்: தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. இதே பழமொழி கொஞ்சம் மாறுபட்ட வடிவில், "எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான்" என்று, குருவை மிஞ்சிய சீடனாக நிற்கும் ஒருவனைக் குறித்து வழங்குகிறது. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்.

*****

087. பழமொழி: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?
பொருள்: குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.

விளக்கம்: ஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி.

*****

088. பழமொழி: நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை.
பொருள்: எந்த வேலயும் இல்லாமல் ஒரு நாய் அலைவதுபோல, கவைக்குதவாத பொழுதுபோக்கு வேலைகளை வைத்துக்கொண்டு அவன் தான் எப்போதும் ’பிஸி’ என்கிறான்.

விளக்கம்: "சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை" என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தால் அவை ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும்.

*****

089. பழமொழி: மூத்திரம் பெய்கிறதுக்குள்ளே முப்பத்தெட்டு குணம்.
பொருள்: சிறுநீர் கழிக்குபோதுகூட அவனால் பொறுமையாக இருக்கமுடியாது.

விளக்கம்: "க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம்" என்ற பழமொழியும் இதே போன்றது. இரு பழமொழிகளும் சலன புத்தியுள்ளவர்களைக் குறித்துச் சொன்னவை.

*****

090. பழமொழி: ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?

பொருள்: தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.

விளக்கம்: மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி.

*****
 
091. பழமொழி: கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
பொருள்: கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

விளக்கம்: ஒரு குளம் வற்றும் தருவாயில் இருந்தபோது அதில் இருந்த மீன்களை ஆசைகாட்டிப் பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும். ’ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருப்பது’ கொக்கின் இயல்பே. ஆயினும் கடலில் மீன் பிடிக்கும்போது கொக்கு அவ்வாறு இருந்தால் என்ன ஆகும்? இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.

*****

092. பழமொழி: நனைத்து சுமக்கிறதா?
பொருள்: பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

விளக்கம்: இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

*****

093. பழமொழி: பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.
பொருள்: நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

விளக்கம்: செய்யவேண்டியதை உரிய காலத்தில் செய்யாததன் விளைவைப் பழமொழி சுட்டுகிறது.

*****

094. பழமொழி: எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
பொருள்: வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு காரியத்தில் இறந்குவான். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான்.

விளக்கம்: ’எண்ணுதல்’ என்ற சொல்லில் சிலேடை நோக்குக. செட்டியானவன் பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.

*****

095. பழமொழி: ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
பொருள்: ஒருவனைக் கொன்றவனுக்கு தண்டனை விரைவில் கிடைத்து அவன் மாள்வான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான்.

விளக்கம்: ஒருவனைக் கொல்பவன் சுயநல நிமித்தம் அதைச் செய்கிறான். பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது. இருப்பினும், அவனது நிமித்தம் பொதுநலத்தைத் தழுவி இராவிட்டாள் காலம் காலனாக மாறி அவன் கணக்கை இயற்கையாகவோ செயற்கையாகவோ முடிக்கும்.

*****

096. பழமொழி: துறவிக்கு வேந்தன் துரும்பு.
பொருள்: துறவி தன் உயிரின் நிலைமையும் யாக்கை நிலையாமையும் நன்கு அறிந்தவர். எனவே ஒரு மன்னனின் ஆணைகள் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

விளக்கம்: இந்தப் பழமொழியை நிரூபிக்கும் வகையில் பரமஹம்ஸ யோகானந்தாவின் ’ஒரு யோகியின் சுயசரிதம்’ புத்தகத்தில் ஒரு கதை உள்ளது (அத்தியாயம் 41). அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின்போது அந்த மன்னன் தக்ஷசீலத்தில் முகாமிட்டிருந்தான். அப்போது அவன் தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை அழத்துவர ஆள் அனுப்பினான். வர மறுத்தால் துறவியின் தலையைச் சீவிக் கொன்றுவிடும்படி ஆணை அந்த தூதுவனுக்கு. ஆனால் அந்த யோகி தான் படுத்திருந்த நிலையிலிருந்து தன் தலையைக் கூட நிமிர்த்தாமல் அந்த தூதுவனுக்கு ஆன்மீக விளக்கம் அளித்து தான் மரணத்துக்குப் பயப்படவில்லை என்றும், மன்னர்கள் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் கூறிவிட, கலவரம் அடந்த தூதுவன் தன் மன்னனிடம் போய் விவரம் கூறினான். ஆச்சரியம் அடைந்த அலெக்ஸாண்டர் தக்ஷசீலத்தில் இருந்த பல பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா (இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று அழைக்கப்பட்டார்.) என்ற யோகியைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் பாரசீகத்தில் ஸுசா என்ற நகரில் மாஸிடோனியாவின் அனைத்துப் படைகளுக்கு முன் தன் வயதான உடலை நீத்தார். தனக்கு மிக நெருங்கிய தோழர்களைத் தழுவி விடைபெற்ற அவர், அலெக்ஸாண்டரிடம் அவ்வாறு செய்யாமல், "நான் உன்னை பின்னர் பாபிலோனில் சந்திக்கிறேன்" என்று மாத்திரமே குறிப்பிட்டார். அலெக்ஸாண்டர் மறு வருடமே பாபிலோனில் மரணம் அடைந்தான்.

*****

097. பழமொழி: அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.
பொருள்: அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).

விளக்கம்: மற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது.

*****

098. பழமொழி: ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.
பொருள்: ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது.

விளக்கம்: ஏற்றக்காரனின் பாட்டு அவன் மனம்போனபடி சிறுசிறு சொற்றொடர்களில் இருக்கும். அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது. உதாரணத்துக்கு ஒரு ஏற்றப்பாட்டு (கம்பர் கேட்டது):

மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே.

தன் செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது.

*****

099. பழமொழி: கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.
பொருள்: தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம்.

விளக்கம்: இருவருமே கழுதையின் மீது அதிக சுமையேற்றி அதைத் துன்புறுத்துவது சகஜம்.

*****

100. பழமொழி: சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி.
பழமொழி: சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி.
பழமொழி: வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி.

பொருள்: மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள்.

விளக்கம்: பழமொழிகளின் பொருள் ஒரு கதையில் உள்ளது. அரசன் ஒருவன் தன் நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை ஒரு குயவன், ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம் ஒப்படைத்தான். இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். அடி வாங்கிய குடியானவன் குயவனிடம் சென்று முறையிட்டு, தன் முறையீட்டின் கடைசி வரியாக முதல் பழமொழியைக் கூறினான்.

குடியானவன் சொல்ல நினைத்தது, "அல்லதை அகற்றி நல்லது செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. உன் உசிதம்போல் செய்." இந்தப் பொருள்பட அவன் குயவனுக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்திக் கூறினான் (சால் என்றால் பானை). ஏற்கனவே மடையனான அந்தக் குயவன் இவன் தன்னை பரிகாசம் செய்வதாகக் கருதி, குடியானவனை உதைத்து அனுப்பும்படிக் கட்டளையிட்டான். உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். நாவிதன் அதை சொந்த அவமதிப்பாகக் கருத, குடியானவன் மீண்டும் அடி வாங்கினான்.

கடைசியாக, குடியானவன் தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் தன் முறையீட்டை மூன்றாம் பழமொழியைக் கூறி முடித்தான். வண்ணானும் அந்தச் சொற்களால் தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கருதிவிட, குடியானவன் இப்படி இந்த மூன்று ’அதிகாரிகளிடமும்’ தர்ம அடி வாங்கினான்.

தன் கல்வியாலோ உழைப்பாலோ அன்றி வேறுவிதமாக திடீர் என்று செல்வமோ, அதிகாரமோ பெற்ற அற்பர்கள் (upstarts) எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன.

*****
 
Status
Not open for further replies.
Back
Top