பரணிலிருந்து

Status
Not open for further replies.
‘பரணிலிருந்து’
இந்த thread க்கு ‘பரணிலிருந்து’ என்ற தலைப்பு ஏன் தந்தேன்? பரண் என்ற சொல் ஆங்கிலத்தில் Loft என்று சொல்கிறோம் அல்லவா அதுவேதான். எங்கள் வீட்டில் நிறைய பழைய புத்தகங்கள் (சுமார் நூறு வருடப் பழசு கூட) பரணில் உண்டு. அவைகளை தூசி தட்டிப் பார்க்கும் போது கிடைக்கின்ற சுவாரஸ்யங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த thread.
எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையாரை முன்னிறுத்தித்தானே செய் கிறோம்? இந்த thread இலும் நாம் பிள்ளையாரில் ஆரம்பிப்போமா?
ஒரு துண்டு நோட்டீஸ் கிடைத்தது. அதில் “நாமகிரி க்ஷேத்திரத்தில் வினாயக சதுர்த்தி விழா சமயம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. விநாயக சதுர்த்தி 6–9-1978.” என்றிருந்தது. இதில் “ஸ்ரீ மகா கணபதி மானஸிக பூஜா” என்ற தலைப்பிட்டு, “ஆக்கியோன்: ஆலங்குடி A.K. வெங்கட நாராயணய்யர், சங்கர் ராம் ஏஜன்ஸி, சேலம்-5, மஹோத்ஸவ சபா ஆர்கனைஸர், ஹனுமத் ஜயந்தி, நாமக்கல்” என்ற குறிப்புடன் இந்தப்பாடல் இருக்கிறது. முதல் இரண்டு வரிகள் மிகப்பிரபலமான ஒரு பிள்ளையார் பாட்டை நினைவு படுத்தினாலும், இது அதுவல்ல. இதில் பிள்ளையார் தொடர்பான பல கதைகளும் பின்னிக் கிடக்கின்றன. இந்த பாட்டை எழுதிய பாடலாசிரியர் என் தந்தை காந்தி ஆஸ்ரமம் கிருஷ்ணன் அவர்களின் நீண்ட நாள் நண்பர். சேலம் ஜங்ஷன் வி.ஆர்.ஆர். ஸ்டாலில் வெகு காலம் மேனேஜராக இருந்தவர். நாமக்கல் அனுமனுக்கு ஆண்டு தோறும் ஜெயந்தி மஹோத்சவத்தைப் பலகாலம் ஒருங்கிணைத்தவர். இது போலப் பல பக்திப்பாடல்களை எழுதி நிறைய துண்டுப் பிரசுரங்களை அந்த நாட்களில் வெளியிட்டிருக்கிறார். இனி பாட்டைப் பார்ப்போமா?
“ஸ்ரீ மகா கணபதி மானஸிக பூஜா”
“பிள்ளையார் பிள்ளையார் பாரிலெங்கும் பிள்ளையார் பாரிலெங்கும் கோவில் கொண்டு பாபம் போக்கும் பிள்ளையார்”
1. மஞ்சளிலும் மண்ணினிலும் மந்திரமோத ஓடிவந்து
மனக்கவலை போக்கடிக்கும் மகிமை கொண்ட பிள்ளையார்
2. அவலரிசி கொழுக்கட்டை அள்ளி அள்ளி தின்ற பின்பு
ஆர்த்திகளை போக்கடித்து ஆசி செய்யும் பிள்ளையார் (பிள்ளையார்)
3. பரமசிவத்தைச் சுற்றிவந்து பழமதனை பெற்றபின்பு
பாரிலெங்கும் கோவில் கொண்டு பெருமை கொண்ட பிள்ளையார் (பி)
4. மலைதனிலே முருகனுடன் மயிலேறி விளையாடி
மாதேவன் மன்மதனை மகிழ வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
5. கைலையிலே கந்தனுடன் கைகோர்த்து விளையாடி
காமாக்ஷி மனமதனை குளிர வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
6. காதுகிள்ளி கஷ்டம் தந்த கந்தன் மீது கோபம் கொண்டு
கண்கள் பன்னிரெண்டினையும் கணக்கெடுத்த பிள்ளையார் (பிள்ளை)
7. தும்பிக்கையை அளவெடுத்த தம்பி மீது கோபம் கொண்டு
தகப்பனிடம் ஓடி வந்து தாவா செய்த பிள்ளையார் (பிள்ளையார்)
8. அண்ணன் தன்னை கும்பிடாமல் ஆரணங்கை பிடிக்க சென்ற
ஆறுமுகன் வேலனுக்கு அல்லல் தந்த பிள்ளையார் (பிள்ளையார்)
9. திரிபுரத்தைப் எரிக்க வேண்டி தனித்துச் சென்ற பரமசிவத்தின்
தேரினது அச்சொடித்து திகைக்க வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
10. அம்மையைப்போல் பெண்ணை வேண்டி அலைந்தலைந்து அல்லல்பட்டு
அரசமரத்தின் அடிதனிலே அமர்ந்திருக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
11. அருகினது புல்லைக் கொண்டு அனுதினமும் பூஜை செய்தால்
அருளினையும் பொருளினையும் அள்ளி வீசும் பிள்ளையார் (பிள்ளை)
12. மந்தார புஷ்பம் கொண்டு மனமுருகி பூஜை செய்தால்
மூஷிகத்தின் மீதிலேறி முன்னேவரும் பிள்ளையார் (பிள்ளையார்)
13. வெள்ளெருக்கின் பூமாலை வினயமுடன் சார்த்தி விட்டால்
வையகத்தின் புகழுடனே வாழவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
14. நெய்யப்பம் எலையடையும் நூத்திஎட்டைப் படைத்துவிட்டால்
நினைத்ததொரு காரியத்தை நட்த்தி வைக்கும் பிள்ளையார் (பிள்ளை)
15. தேங்காய்கள் நூத்தி எட்டை தூள்தூளாய் உடைத்துவிட்டால்
தீராத வினைகளெல்லாம் தீர்த்துவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
16. முக்குருணி அரிசியாலே மோதகத்தைப் படைத்துவிட்டால்
முருகனுடன் ஓடிவந்து முக்திதரும் பிள்ளையார் (பிள்ளையார்)
17. தித்திக்கும் வெல்லப்பாகில் திரவியங்கள் பலதும் சேர்த்து
தேங்காயுடன் ஹோமம் செய்தால் திருப்தி கொள்ளும் பிள்ளையார் (பி)
18. வீடுதோறும் பிள்ளையார் வீதிதோறும் பிள்ளையார்
வினைகளெல்லாம் போக்கடிக்க வழிவகுக்கும் பிள்ளையார் (பிள்ளை)
19. வியாஸர் சொன்ன பாரதத்தை வேகமுடன் எழுதிவைத்து
வையகத்தில் பெருமை கொண்டு வாழவைக்கும் பிள்ளையார் (பிள்)
20. ஓம்காரமந்திரத்தின் உட்பொருளை உணர்ந்தவருக்கு
ஆனந்த பவனம் தன்னில் இருக்கை தரும் பிள்ளையார் (பிள்ளையார்)
21. தொந்திதனை தூக்கிக்கொண்டு தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டவர்க்கு தொல்லை போக்கும் பிள்ளையார் (பிள்)

இனி மிகப் பிரபலமான பிள்ளையார் பாட்டை ஒப்பிடுவதற்காக்க் கீழே தந்துள்ளேன்:

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)

ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும், நீக்கி வைக்கும் பிள்ளையார்(2)

மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2)

ஓம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்தபிள்ளையார்(2)

அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2)

கலியுகத்தின் விந்தைகளைக், காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.(2)
 
பரணிலிருந்து – 2
ஒரு மிகச்சிறிய புத்தகம்; தெய்வீக வாழ்க்கைச் சங்கம் காஞ்சீபுரம், 1966-இல் சங்க வெளியீடு – 13
பார்வையிட்டவர்: சிந்தாமணிப்புலவர் மகா வித்வான் மே.வீ. வேணு கோபாலப் பிள்ளை, அவர்கள்
வேண்டுவோர் பெறுமிடம்: ப.கோ.நாதமுனி, 23, வைகுண்டப்பெருமாள் மடவீதி, காஞ்சீபுரம் என்ற குறிப்புக்களோடு ராஜா அச்சகம், காந்தி ரோடு, காஞ்சிபுரத்தில் அச்சிடப்பட்ட
ஸ்ரீ:
ஸ்ரீ கண்ணன் துதி (அபயம்) என்கின்ற தலைப்பிட்ட புத்தகம் இது

ஓம்:
ஸ்ரீ கண்ணன் துதி
(அபயம்)
இயற்றியவர் ஹா.கி.வாலம், பி.ஏ., பம்பாய்.

அனலிற் பிறந்தவளை அர்ச்சுனன்றன் காதலியைச்
சனசபையில் காத்திட்ட சக்கரத்தோய்! நின்னபயம்!

கற்புப் பெருங்கனலைக் காதற் கவின்கடலை
அற்பரிடைக் காத்திட்ட அச்சுதா! நின்னபயம்!

ஐவர் அரும் பத்தினியை ஆன்ந்த மாமயிலை
நைபவளைக் காத்திட்ட நாரணா! நின்னபயம்!

துய்ய மணிச்சுடரைச் சோதிப் பெருங்கற்பைப்
பொய்யர் நடுக்காத்திட்ட பூரணா! நின்னபயம்!

ஐவேந்தர் கட்டுண்டே அன்னை துடிக்கையிலே
பைங்குழலைக் காத்திட்ட பாம்பணையோய்! நின்னபயம்!

இருகையும் விட்டன்னை இதயம் துடிக்கையிலே
விரைவாகக் காத்திட்ட வித்தகனே! நின்னபயம்!

துகிலை யுரிகையிலே துரோபதையைக் காத்தவனே!
அகிலமெலாந் திகைத்து நிற்க “அஞ்சல் என்றாய்! நின்னபயம்!

பாண்டவரின் பத்தினிக்காய்ப் பாரதம் முடித்தவனே!
ஆண்டவனே! அன்னைகுழல் பின்னினவா! நின்னபயம்!

அலறியதோர் ஆனைக்கும் அபயம் அளித்த பிரான்!
உலகினிலே உத்தமரின் உற்றதுணை நின்னபயம்!

பத்தனுக்காய்க் கம்பத்தில் படீரென்று வெடித்தவனே!
சத்தியத்தைக் காத்திடவே சக்கர மெடுத்தவனே!
தேவகியின் திருவயிற்றில் திருமகவாய் உதித்தவெங்கள்
காவலனே! கார்மேனிக் கண்ணபிரான்! நின்னபயம்!

விதுரனிடும் கீரை விருந்தை உகந்தவனே!
அதிஏழை சுதாமனுக்கும் அருட்செல்வம் தந்தவனே!
கூனிக்கருள் புரிந்த கோபால மாமணியே!
ஞானி மனம்வளரும் நாரணனே! தூமணியே!
திருப்பாற் கடல்துறந்து திருமேனி வாடிடவே
விருப்பால் அவதரித்த விண்ணவனே! நின்னபயம்!

கமலை மடிதுறந்து கருடனின் தோள்துறந்தே
அமர பதம்துறந்து நான்ஆனாய் நின்னபயம்!

சேடன் முடிதுறந்து ஸ்ரீவைகுண் டம்துறந்து
பாடுபடும் அன்பருக்காய்ப் பார்வந்தாய்! நின்னபயம்!

மனிதக் குலத்துக்கோர் மாணிக்க மாமலையே!
புனிதக் கனித்திருவாய்ப் புண்ணியனே! நின்னபயம்!

கீதை மணியளித்த கேசவனே! நின்னபயம்!
கோதைக்கருள் புரிந்த கோவிந்தா! நின்னபயம்!

மீரா மடமாதை நேராய் அழைத்தவனே!
காராள் மணிவண்ணா! கண்ணனே! நின்னபயம்!

பாதைவழி இருளில் பேதைமனம் நோகுதடா!
போதுமடா சோதனையும் பூந்துழலாய் மாலையனே!

இந்தப் பாடலின் இறுதியில் “மோகன அமுதம் என்று குறிக்கப் பட்டுள்ளது.
புத்தகத்தின் இன்னொரு பக்கத்தில் கீழ்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது:
திருமதி ஹா.கி.வாலம் அவர்கள்
(11, Colaba Chambers, Bombay -5)
இயற்றிய நூல்களைப் படித்து இன்புறுங்கள்!


1. மோகன வாணி (பால பகவத் கீதை) விலை ரூ 3 25

2. மோகன அமுதம் விலை ரூ 4-00 (லீலா சுகர் – கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் மொழிபெயர்ப்பு)

3. மோகன முரளி விலை ரூ 3 25

ஹா.கி.வாலம் என்று கூகிள் செய்தால் இவர் மிக நிறையப் புத்தகங்கள் எழுதியிருப்பதாக அறிகிறோம். என் தந்தை சொன்ன செய்தியின் அடிப் படையில் இவர் திருச்சி ஹாலாஸ்யம் அய்யர் என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் மகள் என்பதும் இவர் கணவர், இன்னொரு சுதந்திரப்போராட்ட வீரரும், ஹரிஜன ஆலயப் பிரவேச முன்னோடியும் முன்னள் அமைச்சர் திரு க்க்கன் அவர்களின் குருவுமான மதுரை வைத்தியனாதர் என்பவரின் மகன் என்றும் நினைவு.
 
பரணிலிருந்து – 3

இன்றைக்குப் பரணிலிருந்து எடுத்த துண்டுக் காகிதத்தில் “நமசிவாய ஸ்தோத்திர மாலை என்ற தலைப்பில் ஒரு அருமையான தோத்திரப் பா மாலை கண்டேன். ஆனால் இந்த வெளியீட்டில் இதை எழுதியவர் யார் என்றோ, இது எந்த வருடம் பதிப்பிக்கப்பட்டதென்றோ விவ்ரம் ஏதுமில்லை. அந்த காகிதத்தின் தன்மையை வைத்துப் பார்க்கும் போது, இது குறைந்த்து அறுபது வருடங்களுக்கு முந்தையது என்று உத்தேசிக்கிறேன். இனி பிரசுரத்திற்கு வருவோம். உள்ளது உள்ளபடி கீழே தந்துள்ளேன்.

ஓம் நமசிவாய
நமசிவாய ஸ்தோத்திர மாலை

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை
சித்தமதை நிலையிறுத்தி சிவநாமம் சொல்பவர்க்கு
சங்கடங்கள் என்றென்றுமில்லை

ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமசிவாய
ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமோ
ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமசிவாய
ஓம் நமோ நமசிவாய ஓம் நமோ நமோ.
1. ஆதியா யனாதியாகி ஆதிமூலம் பொருளுமாகி
ஆவின் நிழலில் அமைதி கண்ட ஆதிமூலமே (ஓம் நமோ)

2. சனகாதி முனிவர்களுக்கு ஸ்ம்ஞையாலே தத்துவம் காட்டி
ஸகல லோக பூஜ்யனான ஸாம்பமூர்த்தியே (ஓம் நமோ)

3. ஆனைமுகன் ஆறுமுகன் ஆதிசக்தி அம்மையுடன்
ஆனந்தமாய் பவனி வரும் ஆதி ஜோதியே (ஓம் நமோ)

4. ஆனந்த தாண்ட புரந்தனிலே மாமுனிக்கு
ஆருத்ரையில் நடனம் செய்த ஆசுதோஷியே (ஓம் நமோ)

5. மழலை பேசும் முருகனுடன் மந்திரார்த்த தத்வம் கேட்டு
மகனுக்கு சீடன் ஆன மாயாதீதனே (ஓம் நமோ)

6. சோமயாஜீ பக்திதனை சோதித்து முத்திதர
சண்டாளனாய் நேரில் வந்த சித்ஸபேசனே (ஓம் நமோ)

7. எண்ணிரண்டு பிராயங்கொண்ட ஏகபுத்ரன் மார்க்கண்டனை
என்றும்பதி னாறாய்ச் செய்த ஏகநாதனே (ஓம் நமோ)

8. வேட்டக்கார வேடங்கொண்டு வில்லாலன்று அடியும் பட்டு
விஜயனுக்கு அஸ்திரம் தந்த வேத வேத்யனே (ஓம் நமோ)

9. வைகையிலே அணையைக்கட்ட வேலைக்காளை தேடி நின்ற
வாணியச்சி பிட்டைத்தின்ற வேத பூஜ்யனே (ஓம் நமோ)

10. பிட்டுக்கு மண்சுமந்து பிரம்பாலன்று அடியும் பட்டு
பக்தை துயர் போக்கடித்த பூர்ணரூபனே (ஓம் நமோ)

11. மலைதனிலே முருகனுடன் மழலைபேசி விளையாடி
மலமகளை மகிழச்செய்த மஹாதேவனே (ஓம் நமோ)

12. தாயுதவி நாடி நின்று தத்தளித்த பெண்மணிக்கு
தாயாகி அறையில் வந்த தாயுமானவா (ஓம் நமோ)

13. சின்னஞ்சிறு சம்பந்தனை சக்தியுடன் பாலூட்டி
சிவஞானம் நேரில் தந்த சத்ரூபனே (ஓம் நமோ)

14. ஆழ்கடலில் பொங்கிவந்த ஆலகால விஷத்தையுண்டு
ஆர்வமுடன் அவனிகாத்த ஆதிதெய்வமே ` (ஓம் நமோ)

15. நாளதனை பாழாக்கி நலிந்துவாழும் மக்களுக்கு
நற்கதியைக் காட்ட வந்த நடராஜனே (ஓம் நமோ)

16. ஆணவத்தை அழித்து எனை அனவரதம் நாமம் சொல்ல
ஆசிதனை செய்ய வேண்டும் ஆத்மநாதனே (ஓம் நமோ)

17. அங்குமிங்கும் ஓடியாடி அல்லல் தரும் மனக்குரங்கை
அடக்கியாட்கொள்ள வேண்டும் ஆர்யபூஜ்யனே (ஓம் நமோ)

18. காலதேவன் வரும் நேரம் கண்கலங்க செய்திடாமல்
காளைமீதில் வரவேண்டும் காலகாலனே (ஓம் நமோ)


கலியுகத்தில் ஸம்ஸார ஸாகரத்தில் தத்தளிக்கும் மக்கள் அனைவரும் பிறவிப் பயன் எய்தி பேரின்பமடைய தின்ந்தோறும் காலை மாலை மேற்படி நமசிவாய ஸ்தோத்திரமாலையை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டியது. ஒருமுறை பாராயணம் செய்தால் 108 தடவை “நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மஹாமந்திரம் சொல்லப்படுகிறது.

Keywords: Old Tamil Prayer songs; A.K.Venkatnarayana Iyer; Haa.Ki.vaalam; Pillaiyaar Paattu; Krishna Geetham; Namasivaaya Sthoththira maalai
 
பரணிலிருந்து – 4
சென்ற பதிவில் நமசிவாய ஸ்தோத்திர மாலையைப் பார்த்தோம். அதே வெளியிட்டில் தசாவதார ஸ்தோத்திர மாலை என்ற பெயரில் இதே போல் 18 ஸ்லொகங்கள் அடங்கிய ஒரு ஸ்தோத்திரத்தைப் பார்க்கிறோம். இதையும் உள்ளது உள்ளபடி கீழே தந்துள்ளேன். இவ்விரண்டு ஸ்தோத்திரங்களையும் எழுதியவர் ஒருவரே என்று தோன்றுகிறது.


ஓம் நமோ நாரயணாய

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியர் படுதுயர் ஆயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

தசாவதார ஸ்தோத்திர மாலை

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ

1. ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப்பொருளுமாகி
ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதிமூலமே (ஓம் நமோ)

2. பக்தர்களை காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு
பலபலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே (ஓம் நமோ)

3. மத்ஸ்யமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
மாபெரும் பணியைச் செய்த மாயமூர்த்தியே (ஓம் நமோ)

4. மூழ்கி மறைந்த மந்திரக்கிரியை மத்தாகி கடல் கடைய
முங்கி முதுகில் சுமந்து நின்ற மனோமோஹனா (ஓம் நமோ)

5. பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
பூமிதனை துக்கி வந்த புண்ணிய ரூபனே (ஓம் நமோ)

6. சின்ன்ஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாஅகி காட்ட வேண்டி
சபையில் தூணில் சாடி வந்த சத்திய மூர்த்தியே (ஓம் நமோ)

7. அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு
அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே (ஓம் நமோ)

8. பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து
பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராம (ஓம் நமோ)

9. மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
மானிடனாய் அவதரித்த மாயமூர்த்தியே (ஓம் நமோ)

10. அண்ணன் ஆகி ஸேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
அரும்பணிகள் பலவும் செய்த ஆதி ஜோதியே (ஓம் நமோ)

11. கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க வேண்டி
கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே (ஓம் நமோ)

12. கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக்கொண்டு
கல்கியாக வரப்போகும் காகுத்த ராம (ஓம் நமோ)

13. கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர
குருவாயூரில் கோயில் கொண்ட கிருஷ்ணமூர்த்தியே (ஓம் நமோ)

14. ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே (ஓம் நமோ)

15. பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப் பாட வைத்து
பக்தன் ஆக்கப் பாடுபடும் புண்யரூபனே (ஓம் நமோ)

16. நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியை தருவேன் என்று
நின்று அலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே (ஓம் நமோ)

17. நாமம் சொல்லும் இடந்தனிலே நித்யவாஸம் செய்வேனென்று
நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே (ஓம் நமோ)

18. பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
பவனபுரம் வந்தடைந்த பூர்ணரூபனே (ஓம் நமோ)

குறிப்பு: அஷ்டாக்ஷர மகாமந்திரத்தின் மகிமை அளவு கடந்த்து. கலியுகத்தில் பாமர மக்களும் படித்து பிறவிப்பயன் எய்தி பேரின்பம் அடைய தினந்தோறும் காலை மாலை மேற்படி தசாவதார ஸ்தோத்திர மாலையை ஒருமுறை பாராயணம் செய்ய வேண்டியது. ஒருமுறை பாராயணம் செய்தால் 108 முறை ஓம் நமோ நாராயணாய என்ர மகா மந்திரம் சொல்லப்படும்.
Keywords: Old Tamil prayer song: Thasaavathara SthOththiramaalai
 
பரணிலிருந்து பிள்ளையார் போற்றி அகவல்

பரணிலிருந்து – 5

இன்றைக்குப் பரணிலிருந்து எடுத்த சிறு புத்தகம்: பிள்ளையார் போற்றி அகவல். இந்த புத்தகத்தில் காணும் குறிப்பு சொல்கிறது: “குடந்தை திருமலை நம்பித் தெரு மைசூர் திரு.கி.லெக்ஷ்மணன் அவர்களின் ஷஷ்டி அப்தபூர்த்தி நாளன்று 10 – 8 – 1990 வெளியிடப் பெறுகிறது. இந்த நூலை இயற்றியவர்: “செந்திலன்பன் A.R. இராமசுவாமி, B.Sc., L.T.C. (Hons), ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி, 75, சௌராஷ்டிர பெரிய தெரு, கும்பகோணம்.

இந்த செந்திலன்பனும் என் தந்தையின் நெடுநாளைய நண்பர். இவர் சேலத்தில் இருந்த கைத்தறி தொடர்பான, மத்திய அரசு நட்த்தி வந்த ஒரு பொறியியல் கல்வி நிறுவனத்தின் முதல் முதல்வராக இருந்தவர். நான் பார்க்கும் போது, காது கேட்கும் கருவியைப் பயன் படுத்திக்கொண்டிருந்த செவிப்புலம் குறைவு பட்ட ஒருவராக இருந்தார். இவரும் வெங்கட்டநாராயண அய்யரைப் போலவெ அவ்வப்போது இறை தோத்திர கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். இனி கவிதையைக் காண்போம்.


பிள்ளையார் போற்றி அகவல்.

அரனார் மகிழும் பிள்ளாய் போற்றி
அம்பிகை மடியில் அம்ர்ந்தாய் போற்றி
அறுமுக நாதன் அண்ணா போற்றி
அரிதிரு மாலின் மருகா போற்றி
ஆனை முகமுடை அய்யா போற்றி 5

ஓங்கா ரத்தின் உருவே போற்றி
ஐங்காரம் கொண்டே அருள்வாய் போற்றி
நெற்றிக் கண்ணுடை நேதா போற்றி
முடியில் பிறைமதி சூடினை போற்றி
ஒற்றை மருப்புடை ஒருவா போற்றி 10

பானை வயிற்றுப் பரமா போற்றி
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி
முப்பத் திரண்டு மூர்த்தமும் போற்றி
தத்துவ உருவாம் சத்துவ போற்றி
ஓம்கம் கணபதி நிறைமொழி போற்றி 15

அமர்ரும் தொழுதெழு அத்தா போற்றி
வேள்வியில் முதலிடம் உடையாய் போற்றி
ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
அறுகு மாலை அணிவாய் போற்றி
அப்பமோ டவல்பொரி மிசைவாய் போற்றி 20

முப்பழம் நுகரும் முன்னவ போற்றி
சக்தி புத்தி சமேதா போற்றி
வரமருள் வல்லபை கணபதி போற்றி
மாட்சிமை அளிக்கும் மாமணி போற்றி
அடியார்க் கருளும் வள்ளல் போற்றி 25

மும்மலம் ஒழிக்கும் மூர்த்தி போற்றி
வெற்றி யளிக்கும் வினாயகா போற்றி
இடரினைக் களையும் இறைவா போற்றி
கவலையைப் போக்கும் கணபதி போற்றி
ஐந்தொழில் ஆற்றும் ஐங்கர போற்றி 30

துயரைத் துடைக்கும் துணையே போற்றி
ஆங்கா ரத்தை அகற்றுவாய் போற்றி
தொல்வினைத் தொடர்பைத் தொலைப்பாய் போற்றி
தொடங்குமுன் தொழப்பெறும் துணைவா போற்றி
எளிய பூசனை ஏற்போய் போற்றி 35
எளிதில் அருள்செய்யும் ஏகா போற்றி
தொப்பை யப்பனைத் தொழுவோம் போற்றி
ஔவியம் அகற்றும் சௌமிய போற்றி
ஔவைக் கருள்செய் ஆண்டவ போற்றி
அகஸ்தியர்க் கருளிய அண்ணால் போற்றி 40
கஜமுகா சுரனு(க்)கும் அருளினை போற்றி
அச்சு முறித்த சச்சித போற்றி
குறுமுனி கமண்டலம் கவிழ்த்தாய் போற்றி
காவிரி ஆற்றை அளித்தாய் போற்றி
பாரத காவியம் வரைந்தனைபோற்றி 45

விஷ்ணுவின் சக்கரம் விழுங்கினை போற்றி
தசமுகன் றனைப்பந் தாடினை போற்றி
சேந்தனார் சிறையின் மீட்டனை போற்றி
வள்ளியை மணஞ்செய உதவினை போற்றி
ஞானத் தைத்தரும் நாதா போற்றி 50

நர்த்தன மாடிய நாயக போற்றி
குழந்தைகள் கும்பிடும் குணபதி போற்றி
ஆற்றங் கரையினில் அமர்வாய் போற்றி
குளக்கரை வீற்றருள் குரவா போற்றி
அரச மரத்தடி அரசே போற்றி 55

வேம்படி வீற்றுள விறலோய் போற்றி
வெய்யலை விருப்புடன் ஏற்பாய் போற்றி
மழையில் நனைந்தும் மகிழ்வாய் போற்றி
கடுங்குளிர் புயலிலும் களிப்பாய் போற்றி
கடைக்கண் பார்த்தெமைக் காப்பாய் போற்றி 60

விக்கின சமர்த்த விநாயகரே –
யான் விருப்புடன் அளிப்பதை ஏற்பீரே!

செந்திலன்பன் செய்த இந்தப்
போற்றி யைப்படிப் பவர்
செந்திற் கந்தன் அண்ண னாரின்
அருளைப் பெற்று வாழ்வரே!

 
பரணிலிருந்து – 6

மீண்டும் a.k. வெங்கட்டநாராயணய்யர் எழுதிய ஒரு ஸ்துதி. இது ஒரு துண்டு நோட்டீஸ் வடிவில் இருக்கிறது. ஒரு பக்கம் நாமக்கல் ஆஞ்சனேயர் படம் உள்ளது. அதன் மேலே
ஸ்ரீ
ராம்
ஸ்ரீ ராம பாஹிமாம்
என்றும் கீழே
ராம ஸ்மரணாத் அன்யோபாயம்
நஹி பச்யாமோ பவதரணே

என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் பின்புறம் “ஸ்ரீ அச்சுதானந்த கோவிந்த நாமாவளி என்ற தலைப்பில் “ஆக்கியோன்: ஆலங்குடி a.k. வெங்கட நாரா-யணய்யர், சங்கர் ராம் ஏஜன்ஸி, சேலம்-5, மஹோத்ஸவ சபா ஆர்கனைஸர், ஹனுமத் ஜயந்தி, நாமக்கல்” என்ற குறிப்புடன் அமைந்துள்ளது.
இனி ஸ்துதி பார்ப்போம்:

ஸ்ரீ ராம ஜயராம ஜயஜயராம
“ஸ்ரீ அச்சுதானந்த கோவிந்த நாமாவளி
அச்சுதராம அனந்த ராம அச்சுத அனந்த கோவிந்த ராம
****

அயோத்யா ராம ஆனந்த ராம ஆச்ரித ரக்ஷண தத்பரராம அச்சுதராம..
கௌஸல்யா ராம கௌசிக ராம கௌசிக யாகரக்ஷக ராம “
மஹனீயராம மோஹனராம மைதிலி மனோஸம்மோஹன ராம “
கல்யாணராம கோதண்டராம காமித பலப்ரத காகுத்தராம “
தசரதராம தண்டகராம தீனார்த்திநாசன தத்பரராம “
வைகுண்டராம வனவாஸிராம வைதேஹி விரஹேண துக்கிதராம “
ரகுவீரராம ரணதீரராம ராவணமர்த்தன ராகவ ராம “
பட்டாபிராம பாவனராம பவனஸுத பரிதோஷித ராம “
ஸந்தானராம ஸாகேதராம ஸீதாமனோஹர ஸுந்தரராம “
ஜயவிஜயீபவ ஜானகிராம ஜானகீ லவகுச தோஷிதராம “
மாதேவராம மாம்பாஹிராம மஹனீய மாருதி பூஜிதராம “
பிதேவராம பாஹிமாம்ராம பிதுருவாக்ய பாலன தத்பரராம “
ப்ராதேவராம பரிபாஹிராம பரதலக்ஷ்மண பூஜிதராம “
ஸாகேதராம ஸதாபாஹிராம ஸாகேத புரவாஸ ஸர்வேசராம “

அசஞ்சலாம் பக்திம் அச்சுதராம
அத்யைவ தேஹிமே அனந்தராம
ஆலயம் தேஹிமே கோவிந்தராம
அச்சுத அனந்த கோவிந்தராம

அச்சுதானந்த கோவிந்த ராமநாம சதுஷ்டயம்
படதாம் ஸ்ருண்வதாம் நித்யம் பக்திஸ்யாத் அனபாயினீ
 
Status
Not open for further replies.
Back
Top