பயணக் க(வி)தைகள்...

இரவில் மிளிரும் தங்கக் கோவில்

22%20chennaiGolden%20temple%20by%20night....jpg


20%20chennai%20Temple%20by%20night.jpg


புகைப்படங்கள் உதவி: 'இன்டர்நெட்' :nod:
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 4

வார விடுமுறையில்தான் நூறு ரூபாய் டிக்கட் உண்டாம்;
வார நாட்களாயின் இருநூற்று ஐம்பது தரவேண்டுமாம்!

இறைவியின் தரிசனம் கண்டு வெளியே வந்தபின்,
நிறைய மக்கள் 'அம்மா' வாகிய மனிதரை சேவிக்கின்றார்!

ஒரு பெரிய மண்டபத்தில் அவரின் ஆளுயரப் படம் வைத்து,
ஒரு வரிசையில் சென்று வணங்கி வருகின்றனர் அன்பர்கள்!

மற்ற தெய்வங்களின் சன்னதிகள் அங்கு கிடையாது. ஆனால்
மற்ற தெய்வங்களின் 'சிமென்ட்' சிலைகள் வெளிச் சுற்றில் உள்ளன!

இறை அனுபவம் மிகையாகக் கிடைக்காவிடினும், அந்தக்
குறைவில்லா அழகும், மின்னும் தங்கமும் அதிசயமே!

அன்னமளிக்கக் கோவிலின் மிக அருகிலேயே, வெளியில்
அன்னலக்ஷ்மி உணவகம் உள்ளது. அங்கும் கூட்டமே!

கார் நீர் ஆகி, மோர் ஆனதைப் பாடியது நினைவில் வருகிறது,
மோர் வைத்திருந்த அந்தக் குட்டிக் கிண்ணத்தைப் பார்த்ததும்!

'பசி ருசி அறியாது', என்பது எத்தனை நிஜம்!
ருசி பற்றியே நினையாமல், உண்டு முடித்தோம்.

விரைவில் தரிசனம் முடிந்ததால், சென்னைக்கும்
விரைவில் வந்து சேர்ந்தோம். சுற்றுலா முடிந்தது!

போரூரில் இறங்கி, 'மூத்த குடிமக்கள்' சலுகையை
வேறு நாள் வாங்கலாமெனத் தீர்மானித்தோம்!

ஆம்! இருபது சதவீதம் கட்டணத்தில் திருப்பித் தருவார்கள்,
நாம் பயணம் முடித்த 'மூத்த குடிமக்களாக' இருந்தால்!

:cool: தொடரும்.....
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 5


என் காமரா பழுது பட்டதால் 'இன்டர்நெட்' படங்களை
என் புதிய ஆல்பங்கள் தயாரிக்க, 'சுட்டு' வந்தேன்!

இதுவரை இணைத்த படங்களில் கோவில் படங்கள்,
மெதுவாக 'இன்டர்நெட்டில்' சேகரித்தவைதான்! என்

காமரா சரி செய்ய ஒரு நண்பரின் கடை கிடைக்க, அவர்
காமரா சரி செய்ததாகத் தகவல் கொடுக்க, அதை வாங்க

மாலையில் செல்லும்போது, இன்னும் இரு இடங்களாக,
மயிலை, திருவல்லிக்கேணி கோவில்களை இணைத்தோம்!

வெளியூர் கோவில்களைக் கண்டு வந்ததால், நம்ம
உள்ளூர் கோவில்களும் காணும் ஆர்வம் எழுந்தது!

வழியில் தமிழ் நாடு சுற்றுலா அலுவலகத்தில், அக்காவிற்கு
எளிதில் இரு பயணங்களில் SENIOR CITIZEN DISCOUNT கிடைத்தது!

பார்த்தசாரதி கோவிலை நான் இதுவரை கண்டதில்லை. நான்
பார்த்திராத அந்தக் கோவில் மிகப் பெருமை வாய்ந்தது!

23%20chennai%20Parthasarathy%20temple.jpg


இரு புறமும் கொடிமரங்கள் திகழ, பெரிய பிரகாரமிருக்க,
இரு கண்கள் போதாது அந்த அழகிய சன்னதிகள் காண!

மீசையுடன் வட இந்திய சுவாமிபோலக் கண்கள் இருக்க,
ஆசையுடன் ருக்மணி தேவி உடனிருக்கும் திருக்கோலம்!

24%20chennai%20Sri%20Parthasarathy%20with%20Rukmini%2C%20Balaramar.jpg


சன்னதிக்குள் நேரே பார்த்தால் தேவி தெரிவதேயில்லை!
சன்னதியில் சுவாமிக்கு வலப்புறமாக நிற்கின்றாள்!

பாஞ்சஜன்யமாகிய சங்கு சுவாமியின் வலது திருக்கரத்தில்.
எஞ்சிய ஆயுதத்தில் எதுவும் ஏந்தவில்லை இடக்கரத்தில்!

அன்று பார்த்தனுக்குச் சாரதியாய் வந்தபோது, ஆயுதம்
ஒன்றும் ஏந்தமாட்டேன் எனக் கண்ணன் சொன்னதாலாம்!

ஆண்டாள் சன்னதி அழகுற அமைந்திருக்க, இங்கு
ஆண்டாண்டு காலமாக ஒரு கதை நிலவுகிறது!

:gossip:தொடரும்....

 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 6

பார்த்தசாரதியின் உற்சவ மூர்த்தியை உருவாக்கும்போது,
பார்த்திராத வடிவில் அவரின் திருமுகம் வந்ததாம்!

அம்புகளைத் தாங்கிய விழுப்புண் உள்ள முகம்போல,
நம்ப முடியாத ஒரு வடிவில் பலமுறை வந்ததாம்!

பாரதப் போரில் பீஷ்மரின் அம்புகளை, தாம் தடுத்துப்
பார்த்தனைக் காத்ததால், வந்தவையாம் இத்தழும்புகள்!

தெய்வ சித்தம் அதுவே என்று அதே மூர்த்திக்கு, உலகம்
உய்ய, உற்சவங்கள் அனைத்தும் செய்கிறார் இக்கோவிலில்!

25%20chennai%20Uthsava%20moorthi%2C%20Sri%20Parthasarathy.jpg


இன்னுமொரு அதிசயம் உள்ளது! ருக்மிணி மட்டுமல்லாது
இன்னும் சிலர் உள்ளனர், கிழக்கு நோக்கும் சுவாமி அருகில்!

சகோதரன் பலராமன் வடக்கு நோக்கியும், இளைய
சகோதரன் சாத்யகி சுவாமியின் இடப்புறமும், மகன்

பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் தெற்கு நோக்கியும்,
பிரத்யேகமாக தரிசனம் தர அமைந்துள்ளது கர்ப்பகிருஹம்!

மனிதரைப் போலக் குடும்பத்துடன் காட்சி தருவதால்,
'மானிட வாசுதேவன்' என சுவாமிக்குப் பெயர் உண்டு!

எட்டாம் நூற்றாண்டில் பல்லவன் கட்டியதாகவும்
எட்டுகின்றன செய்திகள், இக் கோவிலைப் பற்றி!

இரு நுழை வாயில்கள் கொடிக் கம்பத்துடன் இருக்க,
ஒரு வாயிலில் நரஸிம்ஹரின் சன்னதி உள்ளது.

கண்ணாடிப் பெட்டியில் கோவிலின் மாதிரி வடிவத்தை
மின்னும் விளக்கொளியில், ஓரிடத்தில் வைத்துள்ளார்!

பெரிய அளவில் ஸ்ரீபாதம் எதிரே அமைந்துள்ளது;
அருகில் சென்று தொட்டு வணங்கி வரமுடிகிறது.

காலாற நடந்து, கோவில் முழுதும் பார்த்த திருப்தியுடன்.
மேலான மெரீனா கடற்கரையில், காற்று வாங்கினோம்.

என் காமரா வந்த குஷியில், அதில் முதல் படமாய்
என் அக்காவுடன் நின்று 'க்ளிக்கிக்' கொண்டேன்!

:photo: தொடரும் .....

 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 7

மயில் உருவில் ஈசனை தேவி வணங்கியதால், இது
'மயிலாப்பூர்' என்ற பெயர் பெற்றது! மேலும் பிரமனின்

ஆணவம் அடக்க ஈசன் அவர் தலை ஒன்று கொய்ததால்
ஆண்டவர் 'கபாலீஸ்வரன்' எனப் பெயர் பெற்றார்!

கிழக்கு கோபுர வாசலில் சிற்பங்கள் நிறைந்து விளங்கும்.
வழக்கமாய் பூசும் வர்ணங்களால் அழகு மிளர நிற்கும்!

26%20chennai%20Eastern%20gopuram%2C%20Mylapore.jpg


பழமை வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்று. நாள்
கிழமைகளில் வரும் கூட்டம் சொல்லிமாளாது! இதில்

அறுபத்துமூவர் உத்சவமே தலையாயது. நாயன்மார்
அனைவரும் ஊர்வலமாக எழுந்தருளும் நாள் அது!

பெரிதாய் நீண்ட பிரகாரங்களில், இன்று தோன்றியுள்ளது
பெரிய மண்டபம் ஒன்று, வழ வழப்பான தரையுடன்.

லிங்க வடிவில் உள்ள ஈசனை சேவித்த பின்னர்,
அங்கம் முழுதும் மின்னும், தேவியின் தரிசனம்.

சிற்பங்களின் அழகை ரசித்து, அனைத்து சன்னதிகளும்
சுற்றி வந்து வணங்கி, மன நிறைவடைந்தோம்!

மாலைப் பொழுது நன்கு கழிந்த திருப்தியுடன் - இரவு
வேளை திரும்பினோம் எம் இனிய இல்லத்திற்கு.

இறை தரிசனங்கள் மன அமைதியும் தருகின்றன;
குறை நீக்கி நம் வாழ்வில் இன்பமும் தருகின்றன!

உலகம் உய்ய வேண்டும், :pray:
ராஜி ராம்
 
மும்பையில் ஒரு நாள் சுற்றுலா ..... I

இறை அருளும் குரு அருளும் கூடியதால் வந்தது,
நிறைவாய் ஒரு திருமணம் மும்பைப் பெரு நகரத்தில்!

பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்ய விழைந்த எங்கள்
பெரிய COUSIN அண்ணா உபயம், ஒரு சின்னச் சுற்றுலா.

முன் பின் மும்பை நகரைக் கண்டிராத எங்களுக்கு,
தன் பங்காக, பாங்கான பல ஏற்பாடு செய்திருந்தார்.

நிறைந்த ஆவலுடன் 'மும்பை தரிசனம்' தொடக்கம்;
சிறந்த உணவும், குடி நீரும் பெட்டிகளில் அடக்கம்.

'GATE WAY OF INDIA' செல்லும் வழியில் இரு புறமும்
'GATE' இல்லாத குடித்தனமாய்ச் சேரிகள் விளங்கும்.

பொந்துகள் போல வீடுகளில் மனிதர்களின் ஆதிக்கம்;
பொந்துகளைக் கண்டால், மனம் மிகவும் பாதிக்கும்!

பேருந்து நின்றது; கீழே இறங்கியதும், என் செருப்பில்
ஏன் வந்து ஒட்டியதோ, ஏதோ கொழகொழப்பாய்!

மழை நீர் தேங்கி நின்றதால் அதில் தட்டித் தட்டி,
மழை நீரை உபயோகித்தேன், செருப்பு சுத்தமாக.

இரண்டு அடிகள்; அதன் பின் காலால் இரண்டு தட்டு;
திரண்ட கூட்டத்தில் சிலர் பார்த்தனர் இரக்கப்பட்டு!

01%20BBY%20GATE%20WAY%20OF%20INDIA.jpg


நீண்ட தூரம் நடந்து GATE WAY OF INDIA அருகே சென்றோம்;
வேண்டியபடி புறாக் கூட்டமும், போட்டோ எடுத்தோம்.

பல திரைப்படங்களில் புறாக் கூட்டங்களைக் கண்டாலும்,
பலர் பார்த்து ரசித்தது 'நாயகன்' திரைப்படக் காட்சிகளே!

வலை பொட்டு நீர் நிலையில் குப்பைகள் ஒருவன் எடுக்க,
நிலையான கேமராவில் சினிமா படப்பிடிப்பு நடந்தது!

மீண்டும் பேருந்தில் ஏறி, அடுத்தபடியாகச் சென்று
கண்டோம், நீர் வாழ் இனங்கள் இருக்கும் AQUARIUM.
:fish2:
தொடரும் .....
 
மும்பையில் ஒரு நாள் சுற்றுலா ..... II

04Mumbai-Taraporewala-Aquarium-.jpg


காமரா கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், எங்கள்
காமரா நாங்கள் வந்த பேருந்திலேயே ஓய்வு எடுத்தது!

சின்ன நீர்த் தொட்டிகள் பல வைத்து, அங்கு உள்ளன,
எண்ணி வியக்க வைக்கும் பல வகைகளில் மீன்கள்.

இன்னும் கொஞ்சம் கவனிப்பு இருந்தால், அவ்விடத்தை,
இன்னும் சுத்தமாக வைத்துப் பராமரிக்கலாம். எனினும்,

வண்ண வண்ண நீர் வாழ் இனங்கள் கண்டு ரசித்தோம்;
எண்ண எண்ண மகிழ்வித்தன மீன்களின் சாகசங்கள்!

விஷக் கொடுக்குடன் படுத்திருக்கும் மீன் வகைகளும்,
விஷமம் செய்யும் குட்டிக் குட்டி மீன்களும் அதிசயம்!

விதவிதமான ஆமைகளில் வெட்கத்துடன் பச்சை ஆமை;
விதவிதமான கடல் பாம்புகளும், ஈல் வகைகளும் உண்டு.

பசி கொஞ்சம் ஆரம்பித்து; அடுத்த நிறுத்தம் தோட்டத்தில்;
பசி ஆற உணவு டப்பாக்களைத் திறந்ததும் வந்தது மழை!

புடவைத் தலைப்பால் கூடாரம் போல கட்டிய பெண்கள்,
உணவைக் காத்தபடி உணவை முடித்தோம்; ஆண்களோ,

பட்சிகளின் எச்சத்துடன் மழை நீர் விழுமோ என்று,
அச்சம் ஏற்பட, பேருந்தை அடைக்கலமாய் நாடினர்!

நனைந்தே உடைகள்; 'மடி'யாக மஹாலக்ஷ்மி கோவில்;
நினைத்தபடிக் கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை!

தேவி மகாலட்சுமி திருவுருவம் மிளிர, இரு புறமும்,
தேவியுடன் காளி, கலைவாணி தேவியரின் தரிசனம்.

மூன்று தேவியரும் தங்கக் கவசத்துடன், வளைகளும்,
மூக்குத்தியும், முத்து மலைகளும் அணிந்து, அருளினர்.

தங்க தேவியரின் தரிசனம் கண்ணாறக் கண்டபின்,
பொங்கும் மகிழ்வுடன் பிரசாதம் பெற்று வந்தோம்.

மற்ற சன்னதிகளும் தரிசித்ததில், மனம் நிறைந்தது;
சற்று நேரத்தில் பேருந்தில் ஆனந்தமாய் ஏறினோம்.

:grouphug:தொடரும் .....
 
மும்பையில் ஒரு நாள் சுற்றுலா ..... III


03marine-drive-mumbai.jpg


புகழ் பெற்ற 'MARINE DRIVE' -இல் வேகமாகச் சென்றோம்;
புகழ் பெற்ற 'NEHRU SCIENCE MUSEUM' சென்றடைந்தோம்.

05%20bby%20Nehru%20museum.JPG


எத்தனை வித அதிசயங்கள் நிறைந்த இடம்! அவை
அத்தனையும் காணச் சொல்லியபடி விரட்டியது 'கைடு'.

நாங்கள் எமக்குப் பிடித்த சில இடங்களில் நின்றோம்;
எங்கள் அரைகுறை இந்தியில் 'கைடை'த் துரத்தினோம்.

மேலும் கீழுமாகப் பொருத்திய குழாய்களிடையே கை ஆட்ட,
மென்மையான இசை ஸ்வரங்கள் கேட்டன 'மேஜிக்' போல!

கைகளை ஆட்டி, ஒரு பாடலை இசைக்க முயன்றபோது, அது
மெய்யாகவே இனிய அனுபவமாக மனதில் நிலைத்தது!

கைகளை விரித்து ஒரு விளக்கொளியில் திரைமீது பதித்தால்,
கைகளை விரித்த நம் நிழல், நாம் நகர்ந்த பின்னும் திரை மீதே!

நிழலைப் பிடித்து வைத்துப் பார்ப்பது பிரமிக்க வைத்தது;
'நிழலும் நிஜமானதோ?' என்ற ஒரு ஐயத்தை ஏற்படுத்தியது.

இட வலக் கண்களில் வேறு வேறு உருவங்கள் தெரிந்தன;
இரு கண்களாலும் கண்டால், ஒரு புதிய உருவம் தெரிந்தது!

'டைனோசார்' 'ஹோலோக்ராமில்' அச்சுறுத்தியது! அந்த
'டைனோசார்' பற்றிச் செய்திகளும் விரிவாக இருந்தது.

சிற்சில இடங்களைப் பார்க்க நேரமின்றித் தவித்தோம்;
பற்பல ஒலி, ஒளி ஜாலங்கள் கண்டு அதிசயித்தோம்.

நல்ல அனுபவங்கள் பெற்று மகிழ்ந்தபின், அடுத்ததாக,
மெல்ல அடைந்தோம் அருமையான ISKCON கோவில்!

:peace:தொடரும் ......
Photos courtesy : Internet
 
மும்பையில் ஒரு நாள் சுற்றுலா ..... IV

பெயர் 'இஸ்கான்' கோவில் என்றாலும் இக்கோவிலே வேறு
பெயரில், 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' கோவிலாகிறது.

'கோவில் செல்வதா, ஜுஹூ பீச் செல்வதா?' எனக் கேட்டதும்,
கோவில் தரிசனத்தால் புண்ணியம் சேர்க்கவே விழைந்தோம்!

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் 1978 இல் எழுந்த கோவில்;
சுமார் ஐந்து ஆயிரம் பக்தர்கள் தினமும் வந்து தொழுகின்றார்!

விடுமுறை நாட்களில் பக்தர் கூட்டம் இரு மடங்காகுமாம்;
விடுமுறையில் இறையருளை எத்தனை பேர் விரும்புகிறார்!

ஆலய தரிசனத்தில் அழகிய இக் கோவில் வந்தது பாக்கியம்;
ஆலிலை விரும்பியைத் தொட்டிலில் தாலாட்டும் நேரம்.

கூட்டம் கூட்டமாக நின்று தாளம் தட்டியபடி, கண்ணனை
நோட்டமிட்டபடி, ஆடிப் பாடி மகிழ்கின்றனர் பக்தர்கள்.

தெய்வீகமான ஆட்ட பாட்டத்திற்குத்தான் எத்தனை மகிமை!
மெய்மறக்கச் செய்து, நம்மைச் சிலையாக்கும், உண்மை.

காணுகின்ற சன்னதியெல்லாம், ஒளிவெள்ளம் அருமை;
காணக் கண் கோடி வேண்டும், சுந்தர மூர்த்திகள் உருவை!

02bby.jpg


06%20BBY%204683548-CULTURAL_RELIGIOUS_SITES-Mumbai.jpg


அடுக்கடுக்காய் மிளிரும் உடைகளை அணிவித்து, மிக
மிடுக்காய்த் திகழுகின்றன, அனைத்து மூர்த்திகளுமே!

சூரியப் பிரகாசமாய் கேமராவில் தெரிந்ததைப் படமெடுக்க,
சரியான FRAME இல் படம் அமைந்துவிட, மெய் சிலிர்த்தது!

அழகான எல்லா சன்னதிகளும் தரிசித்துத் தொழுத பின்னர்,
விரைவாய் வந்து பேருந்தில் ஏறி, மண்டபம் திரும்பினோம்.

ஒரே நாளில் இத்தனை இடங்களை அருமையாய்ப் பார்த்து,
அதே இனிக்கும் நினைவுகளுடன், உணவுக்கு விரைந்தோம்!

எத்தனை இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், கோவில்கள்
அத்தனையும்தான், இறையருளும், மன நிறைவும் தருகின்றன!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம் - 15. 06. 2008
 
கடல் கடந்த முதல் அனுபவம்!

முதல் முறை எதைச் செய்தாலும், புது அனுபவமே;
முதல் அமெரிக்க விஜயமும் எனக்கு அது போலவே!

யதார்த்தமான உரை நடையில் எழுதிய பக்கங்களை,
யதார்த்தமான கவிதை நடையில் எழுத விழைகிறேன்!

நண்பர்கள் படித்து, என்னுடன் பயணித்து, மேலும்
அன்புடன் ஊக்குவிக்கப் பணிவுடன் வேண்டுகிறேன்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 1

இறை அருள் இருந்தாலே செல்லலாம் கடல் கடந்து;
இதை முதல் முறை செய்தேன் 2003 - ம் ஆண்டு!

மகன் பணிக்கு அமர்ந்து மூன்று ஆண்டுகள் முடிய,
அவன் பலமுறை அழைக்க, நாங்களும் VISA எடுக்க,

பயணம் செல்ல, மூன்று பெட்டிகள் வாங்கி நிரப்ப,
பயணம் கூடிவந்தது, ஏப்ரல் மாத இரண்டாம் வாரம்.

முதல் முறை எது செய்தாலும், மனத்தில் தோன்றும்
முதல் பயமும், எதிர்பார்ப்பு கலந்த உற்சாகமும் வந்து,

மனம் புதுவித நிலையை அடைய, ஏற்பாடுகளைத்
தினம் கொஞ்சமாக முடிக்க, முடிவு செய்தோம்!

எல்லா அலமாரிச் சாவிகளையும், சுவாமி அறையில்
உள்ள அலமாரியில் வைத்து அதைப் பூட்ட, அதுவோ

மீண்டும் திறக்க வராது படுத்தியது! அதைப் பற்றி
மீண்டும் இந்தியா வந்து யோசிக்கலாமென எண்ணி,

நிறைத்த பெட்டிகளுடன், தூக்கம் துளியும் வராது,
நிறைந்த மனத்துடன் விமான நிலையம் சென்றோம்!

தடங்கல் ஏதும் இல்லாது 'செக் இன்', 'கஸ்டம்' முடிய,
உடம்பில் 'அட்ரினலின்' சுரக்க, விமானம் ஏறினேன்!

பல முறை என்னவர் வெளிநாடு சென்றதால், ஏதோ
பல நாள் பழகின காரில் ஏறுவது போலவே ஏறினார்!

உள்ளே நோக்கிய எனக்கோ, மிகப் பெரிய அதிர்ச்சி!
உள்ளே உள்ள 'சீட்' எல்லாம், 'டீலக்ஸ்' பஸ் போல!

:wave:தொடரும்.......
 
Last edited:
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 2

ஒன்பது மணிநேரம் இதிலேயே பயணிக்க வேண்டுமே
என்பது அறிந்ததும், இன்னும் கொஞ்சம் பயம் ஒட்டியது.

எனக்கு 'ஜன்னல் இருக்கை' கிடைக்க மகிழ்ந்தேன்; ஆனால்
என்னவரைத் தாண்டி இன்னொருவர் அமர்வாரே! அவரைத்

தாண்டினால்தான் முகம் கழுவ முடியும்! இல்லையெனில்
தண்டனை போல அவர் எழும்வரை, நாம் அமர வேண்டும்!

பேசா மனிதராக அந்த நபர் அமர, நாங்கள் இருவரும்,
பேசியபடி, கொடுத்த சூடான டின்னரைச் சுவைத்தோம்!

இரவு நேரமே தொடர்ந்து வந்ததால், ஜன்னல் இருந்தும்
இரவின் கருமையைத் தவிர, எதுவும் பார்க்கவில்லை!

விமானத்துள் கடல் அலைபோலச் சின்ன இரைச்சல்;
விமானம் பறக்கும் வேகமே தெரிவதில்லை உள்ளே!

விமானம் FRANKFURT ஐ நெருங்கும்போது, முகம் துடைக்க,
விமானப் பணிப்பெண், கொதிக்கும் துண்டு கொடுத்து, பின்

மிருதுவான ரொட்டியும், ஜூசும், காபியும் பரிமாற, அதை
மெதுவாக உண்டபின், மீண்டும் ஜன்னலைத் திறந்தேன்.

மேகங்கள் விடியல் நேரத்தில்தான் எத்தனை அழகு! ஒரு
மேகத்தைத் தாண்ட, பதினைந்து நிமிட நேரம் ஆகிறது!

பஞ்சைப் பிரித்துப் பிரித்து நீட்டிச் செங்குத்தாக வைத்த
பஞ்சுக் கூட்டங்கள் காணுவதற்கு மிகவும் வியப்புத்தான்!

001cloud.jpg


முன்பு கறுத்து வெறுமையாக இருந்த வானம், அப்போது
நன்கு வண்ணக் கலவைகளாக மாறி, மேலும் அசத்தியது!

வான உச்சியில் நிறம் நீலம்; வான முகட்டில் செம்மை;
மேக வடிவங்கள் வெள்ளை, பழுப்பு நிறங்களின் கலவை.

002cloud.jpg


எழுபத்தியாறாயிரம் அடியிலிருந்து கீழே இறங்க, அதில்
எழாயிரம் முதல் மூவாயிரம் அடிகள் வரை மேகங்கள்!

விமானம் தரை இறங்க, இருக்கையை விட்டு வெளிவர,
விமானத்தின் படி அருகில், சில சிறு ஓட்டைகள் இருக்க,

அடிக்கும் 'O - டிகிரி'க் காற்று, கீழிருந்து மேலெழுந்து,
நொடிக்குள் உடலை வாட்டி, என்னை நடுங்க வைத்தது!

:plane:தொடரும் .......
 
Last edited:
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 3

விமானத்தில் ஹீட்டர் உள்ளதால் பிழைத்தேன்! அந்த
விமான நிலையத்தில் தண்ணீர் இல்லாத 'டாய்லெட்'!

'டிரை கிளீன்' இப்போதிருந்தே பழகவேண்டுமே! ஏழு
அரை (மூணரை!) மாதங்களுக்கு, இதே தொடருமே!

ஓசி கேட்கும் பழக்கம் நம்மவர்களை விடாது போல!
ஓசி கேட்டார் ஒரு மாமி பவுடரும், பொட்டும்! வேறு

ஒரு மாமி என் சோப்பையும் கேட்க, அங்கே இருந்த
ஒரு சோப்பு திரவக் குடுவையைக் காட்டி, நகர்ந்தேன்!

செக்யூரிட்டி செக் வந்தது; என் பையைத் தனியே எடுத்த
செக்யூரிட்டி நபர், ஒரு கோலால் அதைத் தட்டி, அதைத்

திறக்குமாறு விரட்டினார்! பரிசாகத் தர, நான் வாங்கிய
சிறப்பு வெள்ளிக் காசுகள், என்னை மாட்டி விட்டன!

நீல நிறத்தில் அவை மின்ன, அந்த ஆள் எனை முறைக்க,
நீளமான ஜிப்பைத் திறந்து பையைக் கவிழ்த்துவிட்டேன்!

ஒன்றும் தவறாகக் கிடைக்காது, வெறுப்புப் பார்வையுடன்,
ஒன்றும் சொல்லாது, சைகையால் போகச் சொன்னார்!

'உள்ளாடை முதல் எல்லாத்தையும் கொட்டிவிட்டீரே! இப்ப
உள்ளே யார் அழகாக அடுக்குவார்களாம்?' எனக் கேளாது,

தப்பித்தோம் பிழைத்தோம் என எல்லாவற்றையும் அடுக்கி,
தப்பி ஓடினேன்! மறு விமானத்தில் என்னவருடன் ஏறினேன்!

இந்த முறை இரண்டு பேர் அமரும் இருக்கை கிடைத்ததால்,
சொந்த வண்டி போலவே, சௌகரியம் எனக்கு இருந்தது!

என்ன அதிசயம்! FRANKFURT ல் ஊத்தப்பமும் கிச்சிடியுமா?
சின்ன டிபன் என்றாலும், மிகவும் ருசிதான்! ஜூஸ் வந்தது!

'BUN' (?) ஒன்று தந்தனர் BOSTON நெருங்கும்போது, அந்த
'BUN' னை நாய் கூடத் தின்னாது! தங்கவேலு காமெடிதான்

மெய்யாக நினைவு வந்தது! 'முகத்துக்கு மாவு, கண்ணுக்கு
மையி, ஒதட்டுக்குச் சாயம்', என அடுக்கி விட்டு, அதன் பின்

'இந்தா ரொட்டி' என அவர் கொடுக்க, 'இதக் கொண்டுபோயி
நாயிக்குப் போடு', என அவர் காதலி கிண்டலாய்ச் சொல்ல,

'அங்கே இருந்துதானே கொண்டு வந்தேன்' என்பாரே, அதுதான்!
எங்கே சத்தமாகச் சிரிப்பேனோ என்று, சிரிப்பை அடக்கினேன்!

:lol:.. தொடரும்............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 4

'அட்லாண்டிக்' பெருங்கடல் தாண்டும்போது, வழி முழுதும்
அட்டகாசமாக வெய்யில்; மேகக் கூட்டம் அதிகமில்லை.

தரை அருகில் வரும்போதுதான் அடர்த்தியான மேகம்; அது-
வரை, அங்கங்கே குட்டி மேகம்; அதன் நிழல் கடல் மேலே!

ஒரு சில பனிப் பந்துகள் (SNOW BALLS) கண்ணில் பட்டுவிட,
ஒரு சிலிர்ப்பு வந்தது எனக்குள், முதன் முதலாய்க் காண!

மேகக் கூட்டம் BOSTON ல் மெல்லிய பஞ்சுப் படுக்கை போல;
வேகமாய் அதனுள் நுழைந்து, விமானம் தரை தொட்டது.

'இமிகிரேஷன்' முடிந்தது பதினைந்து நிமிடங்களில்; அந்த
இனிமையான பெண்மணி ஆறு மாதம் விசா 'அடித்தார்'!

'தங்கள் விடுமுறை இனிக்கட்டும்', எனவும் வாழ்த்தினார்;
தங்கள் அமெரிக்க அன்பு மொழிகளை அள்ளி வீசினார்!

இருபது நிமிடங்களில் பெட்டிகள் வந்து விழ, அவை எடுத்து
ஒரு தள்ளு வண்டியில் அடுக்கி, வேகமாக வெளியேறினோம்!

வெப்பநிலை பத்து டிகிரி சென்டிகிரேடு! எங்கள் சென்னை
வெப்பநிலை எண்பதுக்குக் குறைந்ததே இல்லை! பற்கள்

'டைப்' அடிக்கும் குளிராக அதை உணர, எங்கள் மகன் நல்ல
'டைப்' 'கோட்டு'கள் இரண்டு எங்களுக்காக எடுத்து வர,

பெரிய சிரிப்புடன் அன்பு மகன் வரவேற்க, அவனுடைய
பெரிய காரில் பெட்டிகளை வைத்து, வீடு நோக்கிச் செல்ல,

வழி சரியாகத் தெரியாமல், அதே வீதிகளில் சுற்றி வர,
வழி கேட்டு நண்பனைத் தொந்தரவு செய்யாது, தெரிந்த

ஒரு ரோடானும் வராதா, எனச் சுற்றினான்! அவனறிந்த
ஒரு ரோடு வந்தது! ஆனால், கார் போனது எதிர் திசை!

வீட்டுக்குச் செல்லப் பின்னால் செல்ல வேண்டும்! பின்,
வீட்டுக்கு வழி கேட்க நண்பனிடம் தொலைபேசினான்!

'செல்போன் பேசியபடி ஓட்டாதே!' எனச் சொன்னாலும்,
செல்போன் பேசாமல் எப்படி வீடு சேருவதாம்? நாங்கள்

நெடிதுயர்ந்த கட்டிடங்களை வேடிக்கை பார்த்தபடியே,
வடிவழகாய் அமைத்த அபார்ட்மென்ட் அடைந்தோம்!

004boston.jpg


006boston.jpg


:car:தொடரும்....
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 5

எந்தக் காய் போட்டு சாம்பார் வைத்தாலும், என்றும் அது
வெண்டைக்காய் சாம்பாருக்கு இணையில்லை என்பது,

செல்ல மகனின் தீர்மானம்! 'பவர்' சாம்பார் அது! எனவே
நல்ல வெண்டைக்காய் சாம்பாரும் உருளை 'ரோஸ்டும்',

சாதமும் சூடாகத் தயாரித்து வைத்திருக்க, வயிறு நிறைய,
நேரமும் வீணாக்காது 'ஸ்டார் மார்க்கெட்' அடைந்தோம்.

பெரிய ஊர் போல இருந்தது கடை! இதுபோல இதுவரை
பெரிய கடை பார்த்ததில்லை! ஒரு புறம் காய் கறிகள்;

ஒரு புறம் விதவிதமாய் கனி வகைகள்; குடை மிளகாய்
வேறு புறம்; மஞ்சள், சிவப்பு மேலும் பச்சைக் கலர்களில்!

கத்திரிக்காய் பலாக்காய் மாதிரி அளவு; பேரு EGG PLANT!
சுத்திகரித்த பாலில் எத்தனையோ வகைகள், 'CAN' களில்.

அரிந்து வைத்த காய்கறிகளே பல வகைகளில் இருக்கு;
அறிந்துகொண்டு தேர்வு செய்தால், சமையல் எளிது!

பல்லி விரட்டுவது, கரப்பான் அடிப்பது எனக்கு 'ஹாபி';
பல்லி, கரப்பான் காணாமல், இங்கு பொழுது போகுமோ?

இரவு உணவு முடித்துப் படுத்தவுடனே தூக்கம்; ஆனால்
இரவு இரண்டு மணிக்கு, கொட்டக் கொட்ட விழித்தேன்!

பசி வேறு கொஞ்சமாய்த் தோன்றி, வயிறு குடைந்தது; ஓ!
பசியாறும் வேளைதான் அப்போது, சென்னை நேரத்துக்கு!

'ஜெட் லாக்' அனுபவம் இதுதானோ? இது எனக்குப் புதிது;
'ஜெட் லாக்' என்ற சொல்லைத்தான் நான் கேட்டுள்ளேன்!

'பின் விழுந்தாலும் கேட்கும்' நிசப்தம், FAN இல்லாததால்!
தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு, தூங்காது கண் மூடினேன்.

:couch2:தொடரும் ......
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 6

நண்பனுடன் மகனும் சேர்ந்து பகிர்ந்துகொள்ளும் வீடு;
நன்கு விசாலமான பெரிய ஹாலும் சமையல் அறையும்!

இரண்டு குழாய்கள்; அதில் வரும் குளிர் நீரும், வெந்நீரும்;
இரண்டு படுக்கை அறைகள்; இடையே வாஷிங் மிஷின்.

துவைக்க, திருகு போன்று நடுவில் அமைப்புள்ள 'வாஷர்';
துவைத்ததைக் காய வைக்க, உருளும் சூடான 'டிரையர்'.

முப்பது நிமிடங்களில், ஒரு 'லோடு' துணியையும் புரட்டி,
அப்போதே மடிக்குமாறு கொடுக்கும், சூடு உருண்டையாக!

உடனே பிரித்து மடிக்காவிட்டால், சுருண்ட துணிகளுக்கு,
உடலை வருத்தி இஸ்திரி செய்து, நாம் உயிர் ஊட்டணும்!

குளிக்க 'ஷவரை'த் திறந்து நான் பட்ட பாடு சொல்லணும்;
குளிக்க நல்ல வெந்நீர் சென்னையிலேயே வேண்டும்!

குளிர் நடுக்கும் இந்த ஊரில் கேட்க வேண்டுமா? என்னவர்
குளிர் நீரில் குளிக்கும் வழக்கத்தையே இங்கு தொடர்ந்தார்.

'வெந்நீரே வரலை' என்று வேறு பயமுறுத்தினார் என்னை!
வெந்நீர் வரும் என மகன் சொன்னானே, என எண்ணினேன்.

நடுவில் ஒரு திருகு, கீழே ஒரு நகரும் 'லிவர்' இருந்தன;
திருகைத் திருக, ஐஸ் நீர் வந்தது! 'லிவரை' நகர்த்தினால்

வெந்நீர் வருமோ? என எண்ணி அதை நகர்த்த, நீரும் அதி-
வேகநீராய் மாறி, நடுநடுங்க வைத்தது! 'பக்கெட்' இல்லை!

இருந்த குட்டி 'MUG' ல் வாஷ் பேசினில் வெந்நீர் பிடித்து,
விரைந்து பாத்ரூம் உள்ளே சென்று ஊற்றிக் கொண்டு,

இதே போல 'ACTION REPLAY' செய்தே, குளியல் முடித்தேன்!
'இதே திருகை முழுதும் திருப்பினால் வெந்நீர் வருமே!' என

மகன் செய்து காட்ட, வெட்கம் பிடுங்கியது அறியாமையால்;
அவன் ஆபீஸ் போகுமுன் கேட்காது விட்டது, நான்தானே!

இனிமேல் எல்லா சந்தேகங்களையும் மறக்காமல் கேட்டு,
தனியே சமாளிப்பதை விடவேண்டுமென எண்ணினேன்!

:crazy:....:decision:தொடரும் ........
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 7

மறுநாள் இரவும் உறக்கம் கலைந்து போனது நள்ளிரவு;
சிறு விடியல் வெளிச்சத்தை எதிர்நோக்கி இருந்தேன்.

இப்போது வெந்நீர் வரவு தெரியுமே! விரைவில் எழுந்து
எப்போதும் போல அதி சூடு நீரில் குளித்து மகிழ்ந்தேன்!

நடுவில் மறந்தும் நம்ம ஊரு போல திருகை மூடினால்,
அடுத்துத் திறக்கும்போது ஐஸ் தண்ணிதான் வரும்!

வேண்டிய அளவு சூடு 'செட்' செய்து, நீரைக் குறைக்க
வேண்டிய அளவு 'லிவரை'யே நீக்கிவிட வேண்டும்!

இந்த ஊரில் பேப்பரை நிறைய வீணாக்குகிறார்கள்;
இந்த ஊர் கிச்சனில் பெரிய அளவு 'பேப்பர் டவல்'!

வேறு இடத்தில் சின்ன 'ரோல்' பேப்பர்! சகிக்காது,
ஒரு 'ஸ்பாஞ்சை' வைத்து அடுப்படி துடைத்தேன்.

துணியில் துடைத்து அலசினால், லேசில் காயாது!
துணிக்கு பதில், 'ஸ்பாஞ்சே' நல்ல தேர்வு ஆனது!

ரயிலில் சென்று BOSTON CITY பார்க்கச் சென்றோம்;
ரயில் ஒரு இடத்தில் செல்லும், ஆற்றுப் பாலத்தில்.

மிக அருமையான CHARLES ஆறு. அதில் காணும்
மிக அழகிய குட்டிக் குட்டி வண்ணப் படகுகள் பல!

விடுமுறை நாளில் அதிலேயே மிதப்பார்களாம்;
விடுமுறை நாளில் குடித்தும் மிதப்பார்களோ?

ரயிலிலிருந்து இறங்கி, ஒரு 'பார்க்' பாக்கச் செல்ல,
முதலில் கண்ணில் பட்டது, சாம்பல் நிற அணில்.

011%20american%20anil.jpg


ராமர் அமெரிக்க அணிலைத் தொடவில்லையோ?
ராமர் போட்ட 'மூன்று கோடுகள்' முதுகில் இல்லை!

மூணு டாலர் செலவில், 'சன்னா படூரா' போன்றதை,
நாலு பேரும் சாப்பிட, வந்த பசியும் பறந்து போனது.

:wof:...:hungry:...தொடரும் .......
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 8

005boston.jpg


மாலை ஏழரை மணி வரை நல்ல வெளிச்சம் உள்ளது;
காலை எழுந்த ஆதவனுக்கு அதுவரை வேலை நேரம்!

உருளைக் கிழங்கில் எத்தனை வகையான தயாரிப்புகள்;
'ORE IDA' வில் ஒரு வகை; உருளை 'ரோஸ்ட்' உடனே ரெடி!

எண்ணையில் அதை வதக்கி, மூடிவிட்டால், விரைவில்
என்னமாய்ப் பொடிமாஸ் போலவே ஒன்று தயாராகிறது!

புது வருஷம் 'கணி' பார்க்க, பல பழங்கள், தானியங்கள்
வெகு விரைவில் வைத்து அலங்கரித்து, அமெரிக்கக்

காசுகளுடன், நம்ம காசும் அழகாக அடுக்கி வைத்தேன்.
பேசுவதற்கு அப்போது கணினி கிடையாது; 'போன்'தான்.

உடன் பிறப்புகளுடன் பேசி, அமெரிக்க வாழ சுற்றத்தா-
ருடன் பேசி, நன்றாகப் பொழுது போனது, நன்னாளில்!

புது அனுபவமாக, மகனின் கிடாரை 'செட்' செய்தேன்;
புது அமைப்பாக, வீணையிலிருந்து மாறுபட்டது அது!

மந்தர ஸ்தாயி ஸ்வரங்கள் நம் அருகிலும், தார ஸ்தாயி
அந்தப் பக்கமும் இருந்ததால் பழக நேரமானது! ஆனால்,

முதல் நாளிலே 'ஹாட் டிரிக்' போல மூன்று பாடல்களை
அதில் வாசித்து, என் செல்ல மகனையும் அசத்தினேன்!

எனக்குப் பொழுது போவது இனிமேல் கஷ்டமில்லை!
'அவருக்கு' ஆபீஸ், ஹிந்து பேப்பர் இரண்டும் இல்லை!

ஆண்கள் அமெரிக்க விஜயத்தை வெறுப்பது இதனாலே;
பெண்கள் போல சமையல் வேலையும் இல்லாததாலே!

எனக்குத் தெரிந்தவரை, சென்னை சுற்றத்தில், 'அமெரிக்கா
எனக்குப் பிடித்தது!' என ஆண்கள் எவரும் கூறவில்லை!

குறிப்பு: இந்த அமெரிக்க விஜயம் 2003 ஆம் ஆண்டு...
இப்போது கணினி எல்லோரும் வைத்திருப்பதால், ஹிந்து பேப்பர் முதல்
அசட்டு 'சீரியல்'கள் வரை, தினமும் பார்க்க வசதிதான்!

:ohwell:...:rant:தொடரும்...........
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 9

பசையுள்ள வெள்ளைப் பேப்பர் உருளை பார்த்தேன்;
பசைப் பேப்பர் ஒரு சுற்றுக்கு ஒன்றாக ஒட்டியுள்ளது;

கைப்பிடியைப் பிடித்து உருட்டினால், குட்டி தூசியும்
கைபடாமல் அதில் ஒட்டிக்கொள்ள, மேசை சுத்தம்!

அதைப் பெருமையாகச் சொல்ல, மகன் சொன்னான்,
'அதை உருட்டி 'SUIT' சுத்தம் செய்யணும், அம்மா' என!

என்னென்ன கண்டுபிடிப்புகளோ! இங்கு வந்தாலே
'என்ன? என்ன?' என, கே. பி. சுந்தராம்பாள் ஆகணும்!

ஒரு வாரம் ஆகியும் அர்த்த ராத்திரியிலே விழிப்பு;
ஒரு மாதம் ஆனால் கூட, இது போகவே போகாதோ?

கடைக்குச் சென்று 'பில்' கொடுக்கும்போது தமாஷ்;
கடையில் முப்பது, நாற்பது டாலர் என்று செலவு!

இந்தியாவில் நூறுகளைக் கொடுத்து வாங்குவதால்,
விந்தையாகவே இருக்கிறது, இந்த வகைச் செலவு!

மகன் மென்பொருள் 'கம்பெனி' நடத்துவதால், இரவு
அவன் வேலை முடிய, மூன்று மணி வரை ஆகிறது!

நாங்கள் உறங்கியபின் வந்து, FRIDGE ஐக் குடைந்து
நாங்கள் விட்டுவைத்த உணவைச் சாப்பிடுவான்!

அவனிடம், தினம் இது சரிப்படாது எனச் சொல்லி,
அவனுடைய சைக்கிளை 'ரிப்பேர்' செய்து தந்தேன்!

மறுநாள் முதல் இரவு எட்டு மணிக்கு 'டின்னர்' என
கறாராகச் சொல்லி, அவனையும் வர வைத்தேன்!

அவன் நண்பனும் இரவில் அதே சமயம் வந்து சேர,
தினம், இரவு உணவு வேளையும், கலகலப்பானது!

:bounce:தொடரும் .........
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 10

வீடுகள் பொதுவாக மரத் தரையை உடையவை;
வீடுகள் சுத்தம் செய்யவும் பற்பல உபகரணங்கள்!

SWIFFER என்று தரை துடைப்பான்; அதன் பேப்பரை
SWIFFER அடியில் உள்ள பிளாஸ்டிக் அட்டையில்

சொருகி, நீண்ட கைப்பிடியைப் பிடித்து, நடந்தபடியே,
தடவித் தடவிச் சென்றால், தூசியெல்லாம் ஒட்டும்!

பேப்பரை தூக்கி எறிந்து, புதியதை மாட்டி விடலாம்.
பேப்பர் வீணடிக்க, இன்னொரு முறைதான் இதுவும்!

எளிதாக வேலை முடிவதால், நாம் யோசிப்பதில்லை;
புதிதாகப் 'பேப்பர் ரீபில்' வாங்குவதே இனி வேலை!

003%20SWIFFER.jpg


நடை பாதைகள் நன்கு பராமரிப்பதால், பலரும் வேக
நடைப் பயிற்சி செய்கின்றார், கோடை காலத்தில்.

சக்கரக் காலணிகள், சக்கரம் உள்ள தள்ளு ஸ்கூட்டர்,
சக்கரம் வைத்த 'போர்டு' எனப் பலரும் வைத்துள்ளார்.

013%20skate%20board.jpg


ஒரே நேர்கோட்டில் அமைத்த நான்கு சக்கர 'ஷூ'வை
ஒரே நாளில் பழகி, அதை அணிந்து ஓடி மகிழ்கின்றார்!

ரோடு தாண்டவும் அறிவுரை தேவைப்பட்டது; எல்லா
ரோடு தாண்டும் இடங்களிலும், ஓரத்தில் ஒரு கம்பம்.

கம்பத்தில் ஒரு பட்டன்; பட்டனை அழுத்திவிட்டால்,
கம்பத்திலிருந்து 'சிக்னல்' சென்று 'சிக்னல்' விளக்கில்

நடப்பதுபோல உருவம் மின்ன ஆரம்பிக்கும்; நாம்
நடந்து ரோடைக் கடப்பதற்கு அதுவே 'சிக்னல்' ஆகும்.

கொஞ்சம் வெய்யில் கண்டால், மினி உடை ஆரம்பம்;
கொஞ்சம் பசங்கள் சட்டையே போடாது வருவார்கள்!

எவரும் எந்த உடை பற்றியும் கவலைப் படுவதில்லை;
சிலரே புடவை கண்டால், விநோதமாகப் பார்க்கிறார்!

சில நேரங்களில் புடவையில் வெளியே சென்றால்,
சில குழந்தைகள் வந்து கட்டிக் கொண்டு சிரிக்கும்!

:high5:தொடரும் .......
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 11

வார விடுமுறையில் லக்ஷ்மி கோவில் தரிசித்து,
நேரே உடுப்பி உணவு விடுதிக்குச் செல்ல எண்ணம்.

காலை ஆறு மணிக்கு வந்த மகனைப் பாதித் தூக்க
வேளையில் எழுப்பி, கோவிலுக்குச் சென்றோம்.

014%20boston%20temple.jpg


சுவாமி தரிசிக்கும் முன், கால் கழுவ SINK உள்ளது;
மாமிகள் புடவை, 'கோட்டு' அணிந்து கொள்கிறார்!

கோவில் வாயில் பெரிய இரும்புக் கதவாக இருக்க,
கோவில் பூசாரி, பஞ்சகச்சம், ஸ்வெட்டரில் இருக்க,

தரை முழுவதும் 'கிரானைட்' போட்டு மினுமினுக்க,
தரை துடைத்துக் கொண்டே ஒரு பெண் அங்கிருக்க,

சுவாமி சன்னதிகள் அனைத்தும் அலங்காரம் மிளிர,
சுவாமி ஐயப்பன், பிள்ளையார், ஸ்ரீலக்ஷ்மி, முருகன்,

வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், நவகிரஹம் என்று
சங்கடம் தீர்க்கும் கடவுளர், அருளுகின்றார் அங்கே!

ஒரு மணி நேரமாய் பாலாஜி அலங்காரம் தொடர,
மறு முறை தரிசிக்கலாமென, வெளியே வந்தோம்.

உடுப்பி உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டோம்;
எடுத்தது எதுவானாலும், சுமார் பத்து டாலர் ஆகும்!

என்னவரின் US வாழ் நண்பரும் எங்களுடன் வர, அவர்
தன்னுடைய வகை அந்தச் சாப்பாடு எனச் சொல்லி,

உணவுடன் இரண்டு லஸ்ஸி தம்ளர்கள் ஆர்டர் செய்ய,
தனக்கு ஒன்று எனச் சொன்ன என்னவர், அதன் புளிப்பு

கண்டவுடன், என்னிடம் தள்ளினார் குடிக்கச்சொல்லி!
அண்டப் புளி புளித்தது அது; எனக்கும் சகிக்கவில்லை!

ஒரு பானை நீர்மோர், அறுபத்து மூவர் உத்சவத்தில்,
ஒரு டம்ளர் இதுபோலக் கிடைத்தாலே, கலக்கலாம்!

ஒருவரும் தொடாததால், லஸ்ஸி செலவு வீண்தான்.
ஒருவாறு உணவு முடித்து, இனிய இல்லம் வந்தோம்!

:car:தொடரும்.....
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 12

இந்தியாவிலிருந்து வந்த பசங்கள், இந்த ஊர் பகலும்
இந்தியவின் பகலும் என எல்லா நேரமும் 'பிஸி'தான்.

இந்தியாவிலிருந்து வந்த எனக்கோ இந்த ஊர் இரவும்,
இந்திய இரவும் என எப்போதும் அரை மயக்கம்தான்!

அக்கா மகனும் BOSTON நகரில் படிப்பதால், அவனை
எக்காரணம் காட்டியேனும், அடிக்கடி பார்ப்பதுண்டு.

அவன் ஸ்டயிலாகக் காய்கறி அரிவது கண்டு, நான்
அவன் ஸ்டயிலைக் காப்பி அடிக்க, விரலில் காயம்!

தந்தை 'விரல்களை அறுவை சிகிச்சை நிபுணர்போல,
சிந்தையில் எண்ணி, பாதுகாக்க வேண்டும்' என்பார்!

தான் இசை வாசித்து மகிழ்வதை விட, அதிகமாக
நான் இசைப்பதைக் கேட்டு மிக ரசித்து மகிழ்வார்!

நல்ல வேளை சின்னக் காயம்தான்; கிடார் வாசிப்பை
நல்ல வேளை விடாது, தினமும் தொடர முடியும்.

இட்லி மாவு RAISE ஆவதும், தயிர் செய்வதும்தான்,
இந்த ஊரில் மிகவும் கஷ்டமான செயல்கள் ஆகும்.

அரைத்த மாவும், தயிர் ஊற்றிய பாலையும் எடுத்து
அடுத்த பத்து மணி நேரம் OVEN ல் வைத்து விட்டு,

அதன் விளக்கை மட்டும் போட்டால், நாம் நினைத்த
பயன் கிடைக்கும்; மாவும் தயிரும் மிகச் சிறக்கும்!

என்னதான் நாம் புது உணவுகள் பழகினாலும், நம்ம
பண்ணும் சாம்பாரும், அவியலும் நாக்கு கேட்கிறது!

வேலைக்குச் செல்லும் பல பெண்கள், அடுப்படியில்
வேலை அதிகம் செய்வதில்லை, நேரக் குறைவால்.

வாரக் கடைசியில் பெரிய அடுக்குகளில் சமைத்து,
வார நாட்களில் 'மைக்ரோவேவ்' செய்து உண்பார்!

:hungry:தொடரும்...........
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 13

காலையில் நீராடி சுவாமிக்கு விளக்கேற்றி, சமையல்
வேலையை ஆரம்பிக்குமுன் 'மட்டிப்பால்' ஏற்றினேன்!

அடுப்படி வேலையில் மூழ்கியபோது, உச்ச ஸ்தாயியில்
திடுக்கென ஊதியது, பெரிய 'சைரன்' ஒன்று! என்னவர்

ஒருபுறம் தூக்கம் கொஞ்சமும் கலையாது படுத்திருக்க,
மறுபுறம் இருந்த மகனை, பதறியவாறு எழுப்பினேன்!

'ரோபோ' போல ஒரு பார்வை பார்த்துவிட்டு, 'அம்மா!
ஏதோ 'VACUUM CLEANER' பக்கத்து வீட்டில் போடறா!' என

சொல்லி, உறக்கம் தொடர, வாசலிலே அழைப்புமணி!
துள்ளியவாறு பயந்து சென்று கதவைத் திறக்க, அங்கு

கோட்டு அணிந்த ஆறு பெரிய அளவு FIRE BRIGADE நபர்கள்!
"WHAT AAZH YA COOKIN' ?", என்று ஒரு பச்சைக்கண் வினவ,

சப்த நாடியும் ஒடுங்க, பலமுறை SORRY சொன்னேன், அந்த
சத்தம் கேட்டு எவரும் எழுந்து வராதபடி; உள்ளே சென்று,

மட்டிப்பால் பெட்டியைக் கொண்டு வந்து காட்டி, மீண்டும்
மட்டிப்பால் ஏற்றவே மாட்டேன் என உறுதியளித்தேன்!

எல்லோரும் பச்சைக் கண்ணைத் தொடர்ந்து சென்றுவிட,
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லி மகிந்தேன்!

பாதி ஊதுபத்தியை எடுத்து, அதை மட்டும் ஏற்றி வைத்து,
மீதி நாட்களில் சுவாமி வழிபாடு நடந்தது, அன்றிலிருந்து!

நான் கண்ட ஒரு திரைப் படத்தில், இதே போல சைரன்-
தான், இந்தியப் பெண்ணைப் படுத்துவது போல் வரும்!

:pray2:தொடரும்................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 14

சுடு தண்ணீர்க் குளியல் என்ன சுகமாய் இருக்கிறது!
சுடு தண்ணீர், LOW VOLUME நீரில் செட் செய்துவிட்டு,

லிவரைக் கொஞ்சம் தள்ளி மித வேகத்தில் குளித்து,
லிவரை முழுதும் தள்ளி அதி வேகத்தில் அடித்தால்,

ஆஹா! இதல்லவோ சுவர்க்கம் என எண்ணும் மனம்;
ஆஹா! இந்தக் குளியல் சென்னையில் கிடைக்காதே!

தினம் கடைக்கு நடந்து சென்று ஷாப்பிங் செய்தோம்;
தினம் நடைப் பயிற்சியும் செய்தது போல இருக்கும்.

மகனைத் தொந்தரவு செய்யாது பொருள் வாங்கலாம்;
அவனைக் காசுக்கு மட்டும் தொந்தரவு செய்யலாம்!

இன்னும் கிலோ கணக்கு வராமல், பவுண்டு கணக்கு;
இன்னும் மனக் கணக்குத் தெரியாது, மிஷின் கணக்கு!

பெரிய பையாக எடுத்தால், மிகவும் குறைந்த விலை;
சிறிய அளவுக்குக் கொஞ்சம் அதிகம் ஆகும் விலை!

போஸ்டில் DVD சினிமாக்கள் கிடைப்பதால், நாங்கள்
வீட்டில் இருந்தபடியே சினிமாக்களைப் பார்த்தோம்!

தேர்வு செய்து அனுப்பிய லிஸ்ட்டில் இருந்து, ஒன்று
பார்த்து, திருப்பி அனுப்பியதும், அடுத்தது கிடைக்கும்.

தமிழ் சினிமாக்கள் DVD யாக அதிகம் காணவில்லை;
தமிழ் சினிமாக்கள் அரங்குகளிலும் அதிகம் இல்லை!

மகனின் நண்பன் கொஞ்சம் தெலுங்குப் படங்களை
அவன் வீட்டிலிருந்து கொண்டுவந்தான்; ரசித்தோம்!

:couch2:தொடரும்..............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 15

சீருந்து வாங்கினால் சைக்கிள் தூங்கும்; நடை குறையும்;
சீருந்து வாங்காதிருக்க, மகன் சொன்ன காரணம் இது!

அலுவலகம் அருகில் இருந்ததால், அதுவே வசதிதான்!
அவனுடலும் ஆரோக்கியம் காக்க, இது ஒரு வழிதான்!

நாங்கள் பேருந்தில் செல்லுவதைப் பழகிக்கொண்டு,
எங்கள் ஊர் சுற்றலையும் ஆரம்பிக்க நினைத்தோம்!

பஸ் ஸ்டாப் செல்ல சுமார் இரண்டு நிமிட நடைதான்;
பஸ் வரும் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை!

நாம் உள்ளே ஏறணும், தானியங்கிக் கதவு திறந்ததும்;
நாம் காசு போடணும், அங்குள்ள பெட்டியில் - இதைச்

சென்னையில் செய்தால், பசங்கள் 'வித் அவுட்' தான்!
என்ன நிறுத்தமாயினும், எழுபத்தி ஐந்து சென்ட்தான்;

நம்பிக்கை பயணிகள் மேல் அதிகமாக வைக்கிறார்கள்;
நம்பிக்கை தரும் வகையில், அவர்களும் நடக்கிறார்கள்.

'HARVARD SQUARE' நிறுத்தத்தில் இறங்கிச் சுற்றினோம்;
ஹாயாக அங்கு 'ஜன்னல் ஷாப்பிங்' மட்டும் செய்தோம்!

017%20HARVARD%20SQUARE.jpg


'பாம்பே க்ளப்' என்று நம்ம ஊர் சாப்பாட்டுக்கு உணவகம்;
பாம்பே சாப்பாடு மட்டுமின்றி, மற்ற வகைகளும் உண்டு!

காய்கறிகளுடன் வேறு கறியும் அருகிலே இருப்பதால்,
போய் தட்டில் எடுக்கும்போது, கொஞ்சம் கலக்குகிறது!

தோசை, பூரி, சப்பாத்தி எனப் பலவித சிற்றுண்டிகளும்,
ஆசையாய் உண்ண, உணவு வகைகளும் பற்பல உண்டு.

அளவில்லாத சாப்பாடு கிடைக்கிறது, எட்டு டாலருக்கு;
அளவில்லாத மகிழ்ச்சி அடைவர், சாப்பாட்டுப் பிரியர்!

சாப்பிட்டு முடித்து, 'ஸ்டார் மார்கெட்'டில் வந்து இறங்கி,
சாப்பாடு தயாரிக்கப் பொருட்கள் சில வாங்கி வந்தோம்.

:popcorn:... Photo courtesy: Internet
தொடரும்........
 
Back
Top