• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...

பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

1. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

2. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்

3. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.

4. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

5. சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

6. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்

7. பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.

8. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

9. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

10. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

11. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

12. தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

13. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

14. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

15. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

16. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

17. பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

18. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

19. 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.

20. இந்த திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும், திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும் ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று சுந்தபுராணம் கூறுகிறது.

21. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

22. திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.

23. சிவ-பார்வதி திருமணக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம். கன்னிகள் விரதமிருந்து இப்படி தரிசித்தால் விரைவில் திருமணம் கூடுவதுடன் நல்ல கணவன் கிடைத்து இனிமையான வாழ்வும் அமையும்.

24. பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

25. இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவி யான சரஸ்வதியையும் பெற்றார்.

26. பங்குனி உத்திரம்
நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

27. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற உள்ளது.

28. அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

29. உவமையற்ற வில்வீரன் அர்ஜுனனுக்கு பல்குணன் என்ற திருநாமம் உண்டு. இது பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் வந்த பெயர்.

30. ஊன் உறக்கமின்றி கண் இமையால் நம்மைகாக்கும் இமையவர்கள் என ஸ்ரீதாயாரும், பாற்கடல் பள்ளி கொண்டோனும் போற்றும் நாள் பங்குனி உத்திரம். உத்திரம், தாயாரின் திருநட்சத்திரம்.

31 பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்னன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.

32. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.

33. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.

34. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.

35. திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
 

Latest ads

Back
Top