• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தை புனர்பூசமும் மேலக்கோட்டை திருநாராயணபுரமும்

திருவரங்கத்தில் கிருமி கண்ட சோழனின் ஆட்சி காலம். கூரத்தாழ்வான் எம்பெருமானாரின் உயிரை காக்க தான் காஷாய வஸ்திரங்களை தரித்து கொண்டு ஸ்ரீ பெரிய நம்பிகளுடன் அரண்மனைக்கு எழுந்தருளினார்.

எம்பெருமானாரும், கூரத்தாழ்வானின் ப்ரார்த்தனைபடி வெள்ளை வசத்திரங்களை தரித்து கொண்டு திருவரங்கத்தை விட்டு வெளியேறி, மேல் நாட்டிற்கு எழுத்தருளினார். ( இன்றளவும் ஸ்ரீபெரும்புதூர் எம்பெருமானார் உற்சவத்தில், ஆறாவது திருநாளில் வெள்ளை சாற்றுபடி வைபவமாக நடைபெறுகிறது).

மேல் நாட்டின் அரசனான, விட்டலதேவராயனின் பெண்ணை பிசாசு ஒன்று பிடித்திருக்க, எம்பெருமானார் தன்னுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் அதை போக்கியருளினார். மேலும் அரசனை திருத்தி பணிகொண்டு "விஷ்ணுவர்த்தனராயன்" என்று திருநாமம் சூட்டினார்.

இப்படி எம்பெருமானார், தொண்டனுரில் வாழ்ந்திருந்த சமயம், தன்னுடைய இருப்பில் இருக்கும் "திருமண்" செலவழிந்து போக, மூன்று நாட்கள் அதை நினைத்து உண்ணாமல் இருந்தார். தொண்டனூர் அருகே இருக்கும், புராணங்களால் புகழப்படும் "நாராயணாத்ரி" மலையை நோக்கி கொண்டேயிருந்தார்.

மூன்றாவது நாள் கனவில் திருநாராயண ப்பெருமாள் எம்பெருமானார் கனவில் தோன்றி, " எம்பெருமானாரே கவலை கொள்ள வேண்டாம். யதுகிரி சிகரத்தில் உம்முடைய வரவு பார்த்து காத்திருக்கிறோம். உம்முடைய திருவுள்ளத்திற்கு உகப்பான திருமணையும் கொடுக்கிறோம். உடனே புறப்பட்டு வாரும்" என்றார்.

துகிலெழுந்த எம்பெருமானார், தான் கண்ட கனவை அங்கிருந்த அனைவருக்கும் தெரிவித்தார். விஷ்ணுவர்த்தனராயனை வரச்செய்து, தான் கனவில் கண்ட காட்சியை விளக்கினார். அரசனும் காடுகளை வெட்ட செய்து, நாராயணாத்ரிக்கு வழியும் அமைத்தான்.

எம்பெருமானாரும், யதுகிரி மலையேறி வேத புஷ்காரணியையடைந்து, நீராடினார். அங்கு முன்பு தத்தாத்ரேயர் காஷாயங்களை தரித்தவிடத்தில், தானும் காஷாயங்களை தரித்து, எம்பெருமான் இருக்கும் இடம் காணாமல் துடித்து, அந்த வருத்தினால் உறக்கமும் கொண்டார்.

மறுபடியும் கனவில் தோன்றிய திருநாராயணப் பெருமாள் எம்பெருமானார் கனவில் தோன்றி, " எம்பெருமானாரே! கலங்க வேண்டாம். நாம் கல்யாண புஷ்கரணியின் தென் மூலையிலே சம்பகவனத்தின் அருகே மேல் கிழக்குத் தென் பக்கத்தில் வளர்ந்த திருத்துழாய் மரத்தின் கீழே ஒரு புற்றிலே இருக்கிறோம். நாம் உமக்கு அடையாளமாக இவ்விடம் தொடக்கி நாமிருக்கும் புற்றின்வரை கீழே கிடக்கும் திருத்துழாய் கொழுந்துகளே குறியாக வாரும்" என்று சாதித்தார்.

எம்பெருமானாரும் கனவு கலைந்தவாறே, அங்கு கீழே கிடந்த திருத்துழாய் கொழுந்துகளை பின்தொடர்ந்தவாறே, கனவில் எம்பெருமான் சாதித்தவிடத்தில், திருத்துழாய் மரமிருக்க, அதனடியில் தண்டனிட்டு, அதன் புற்றை நீக்கியபோது,

பஹுதாந்ய ஸம்வத்ஸரம், தை மாதம், சுக்ல பக்ஷ சதுர்தசியும், வியாழக்கிழமையும் கூடிய புனர்பூச நக்ஷத்திரத்தில் திருநாரணன் சேவை சாதித்தான்.

மங்கள வாத்தியங்கள் முழங்கின! இது சமயம் பரமபதமோ என்று தோற்றியது!

எம்பெருமானார் தாமும்,

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன்திகழு நேமி யொளிதிகழுஞ் சேவடியான்
வான்திகழுஞ் சோதி வடிவு

என்ற பாசுரத்தை அருளிச்செய்தார்.,

இங்கு எம்பெருமானார் திருநாரணன் என்கிற பகலை கண்டார், அவன் தான் திருநாராயணபுரத்தில் உறையும் திருநாரணன், எவ்வண்ணம் கனவில் எம்பெருமான் சேவை சந்திப்பதாக சொன்னானோ, அவ்வண்ணமே இங்கு அவனை கண்டார். அவனின் நீல மயமான திருமேனியை கண்டார். அவனை கண்டதோடு மட்டுமல்லாது, அவனின் அடையாளமான திருவாழியாழ்வானை கண்டார். அவனையுடைய திவ்யமயமான திருவடியை கண்டார்.

இவ்வாறு அவனை கண்டவாறே, அவனுக்கு பல்லாண்டு, அவனுடைய அடியார்களான திருவாழியாழ்வானுக்கும், பாஞ்சசன்னியயாழ்வானுக்கும் பல்லாண்டு பாடினார்.

எம்பெருமானின் திருமேனியழகை விவரிக்கும், பரமாசார்யரான ஆளவந்தாரின் ஸ்தோத்திரங்களை அவன் முன்பே அருளிச்செய்தார்.

ஆனந்த கூத்தாடினார். கண்களில் தாரை தரையாக கண்ணீர் மல்கியது. தகப்பனாருக்கு, மகன் பிறந்தால் எப்படி சந்தோஷோத்தமடைவானோ, அத்தகைய ஆனந்தம் கொண்டார் எம்பெருமானார். கண்டுது சாதாரண பிள்ளையில்லையே, சம்பத் குமாரனாயிற்றே!

தனக்கு எவ்வண்ணமாக கனவில் எம்பெருமான் சேவை சாதித்தனோ, அவ்வண்ணமே இருப்பதாய் விஷ்ணுவர்த்தனராயனுக்கு சொல்லி அனுப்பினார். மூன்று நாட்கள் எம்பெருமானுக்கு பாலால் திருமஞ்சனம் செய்வித்தார்.

எம்பெருமானார் மாறன் அடிபணிந்து உய்ந்தவராகையாலே, நம்மாழ்வாருக்கு எம்பெருமானார் பரம ஹித புத்திரராகிறார். தகப்பனாரின் சொத்தை மகன் கைக்கொள்ளுமா போலே, திருவாய்மொழியின் ஈன்ற தாய் சடகோபன், அதனை வளர்த்த தாய் எம்பெருமானார். ஆகையாலே, ஐஸ்வர்ய கைவலயங்களை விடுவித்து, "திருநாரணன் திருவடியே உபாயம், உபேயமாகும்" என்கிற "ஒரு நாயகமாய்" பதிகத்தை திருநாரணனுக்கு சமர்ப்பித்தார்.

பின்பு கல்யாண புஸ்கரணியின் வட மூலையில், எம்பெருமானார் த்ரிதண்டத்தாலே கீறப் பாலாறுபோலே திருமண் குவியல் பெருகியது. எம்பெருமானாரின் குறையும் தீர்ந்தது.

அரசனை அழைத்து, திருநாரணனுக்கு கோயில் அமைக்க செய்தார். ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாத்வத சம்ஹிதையாலே ஸ்ரீரங்கராஜ பட்டர் திருக்கையாலே ப்ரோக்ஷணம் தொடக்கமான திருப்ரதிஷ்டையும் செய்துவைத்தார்.

இன்றளவும் "தை புனர்வசு" உற்சவம் திருநாராயணபுரத்தில் மிக சிறப்பாக கொண்டப்படுகிறது. இந்த உற்சவம் நம்மை எம்பெருமானார் காலத்திற்கு கொண்டு செல்கிறது.

விடியற்காலையில் எம்பெருமானருக்கு திருமஞ்சனம் நடைபெற்று, எம்பெருமானார் அன்று மட்டும் திருமண்காப்பு சாற்றிக்கொள்ளாமல் கல்யாணி புஷ்கரணிக்கு மிகுந்த வேகத்துடன் புறப்பாடு கண்டருவார். பின்பு, கல்யாணி புஷ்கரணியின் கரையில் திருமண்காப்பு சாதித்து கொள்வார். அங்கு திருப்பாவை, ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னம், எம்பெருமானாரின் கத்யத்ரயம் ஆகியவை நடைபெறும்.

பின்னர் அங்கிருந்து, எம்பெருமானார் திருநாரணன் சன்னதிக்கு புறப்பாடு கண்டருளி, திருநாரணன் முன்பே எழுத்தருள்வார். அன்று மட்டும், எம்பெருமானார் திருநாரணன் சன்னதிக்கு எழுத்தருளியவுடன் , ஸ்வாமியின் திருமுன்பே திருநாரணனுக்கு விஸ்வரூபம் நடைபெறும்.

ஏனைய தினங்களில், திருநாரணனுக்கு சுப்ரபாதம் அருளிச்செய்வார்கள். ஆனால், இன்றைய தினம் மட்டும், திரை விலக்கியவுடன், எம்பெருமானனுக்கு கற்பூர ஆரத்தியாகும் சமயம், எம்பெருமானார் அன்று அருளிச்செய்த "பகல் கண்டேன்" என்கிற பாசுரம் அடியார்களால் அருளிச்செய்யப்படும். அதனை தொடர்ந்து, "திருப்பல்லாண்டு" அருளிச்செய்து, ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னத்தில் எம்பெருமானின் வடிவழகை கூறும் ஸ்தோத்ரங்களும் அருளிச்செய்யப்படும்.

எம்பெருமானாருக்கு மரியாதைகள் செய்யப்பெற்று, எம்பெருமானார் திருநாரணன் சன்னதி குலசேகரப்படி முன்பு எழுந்தருள்வார். அதனை தொடங்கி, எம்பெருமானுக்கு செய்யும் நித்தியபடிகள் எம்பெருமானார் திருமுன்பே நடைபெறும்.(படத்தில் கண்டவாறே) இரவு எம்பெருமான் சயனம் முடிந்த பின்பே, எம்பெருமானார் சன்னதிக்கு எழுத்தருள்வார்.

இத்தகைய வைபவத்தை நாமும் "தை புனர்வசு" தினத்தன்று திருநாராயணபுரத்தில் அனுபவிக்கலாமே!

சரித்திர ஆதாரம்: ஸ்ரீ ராமாநுஜார்ய திவ்யசரிதை - ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர்

திருநாராயணபுரத்தில் இப்போதும் நடைபெறும் வைபவத்தை விளக்கிய திருநாராயணபுரம் அனந்தாண்பிள்ளை ஸ்ரீ நரசிம்மப்ரியன் Narasimha Priyan திருவடித்தாமரைகளில் தலையல்லால் கைமாறிலேனே.
 

Latest ads

Back
Top