திருவெம்பாவை

Status
Not open for further replies.
திருவெம்பாவை

1cdcd554-8481-4ee6-82f0-7b7771850f7d_S_secvpf.gif



திருவருள் சத்தியை வியந்து மாணிக்கவாசகர் பாடியது திருவெம்பாவை. இது திரு-எம்-பாவை எனப் பிரிக்கப்படும். திரு என்பது அருள், எம் என்பது எங்கள், பாவை என்பது சித்திரப் பதுமை போன்ற பெண் எனப்பொருள்படும். திருவெம்பாவை மார்கழித் திருவாதிரைக்கு முந்திய ஒன்பது தினங்களிலும் நடைபெறும். திருவாதிரை நாளோடு முற்றுப்பெறும்.

இந்த பத்து நாட்களும் தேவாலயங்கள், மடாலயங்களிலும் பிற இடங்களிலும் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை எத்தகைய சிறப்பு வாய்ந்ததோ அங்ஙனமே திருவாதிரைக்கு சிதம்பரம் சிறந்ததாகும். மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள்.

தை முதல் ஆனி முடிவுள்ள காலம் பகல். ஆடி முதல் மார்கழி இறுதியாகவுள்ள காலம் இரவு. இரவு காலத்துள் இறுதியானது மார்கழி. இது தேவர்களுக்கு விடியற்காலம். இக்காலத்திலே சந்தியாவந்தனம் பூஜை, வழிபாடு முதலியன செய்தல் தேவர்களுக்கு பிரீதியாகும். இக்காரணம் பற்றியே மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை நீராடி ஆலய வழிபாடு செய்து வருகின்றனர்.

இக்காலத்தில் சிவாலயங்களிலே ஒரு காலப் பூசை மேலதிகமாக செய்யப்பட்டு வருகின்றது. சங்கு சேமக்கல ஒலியுடன் கிராம நகர வீதிகளில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஓதி வருவார்கள். பூஜை முடிந்த பின்னர் புராண படனம் செய்வர். மார்கழி மாதம் தமிழ்நாட்டில் தாங்க முடியாத குளிர் மக்களை தாக்கும் காலம்.

திருவாசகம் என்னும் தேனினையளித்த மணிவாசக பெருமான் குருந்தமர நிழலில் இருந்தருளிய குருநாதரிடம் ஞானதீட்சை பெற்ற பின்னர், பல தலங்களை தரிசித்து திருவண்ணாமலையை அடைந்தார். அக்காலம் மார்கழி மாதமாகும். தீப தரிசனத்திற்கு செல்லும் (கன்னிப்) பெண்கள் தம் தோழியரை நீராட வரும்படி கேட்கின்றார்கள்.

இவர்களுக்கிடையில் பல ருசிகரமான சம்பாஷனைகள் நிகழ்கின்றன. தூய நீராடி அழகான மலர்சூடி, எல்லோரும் ஒன்றுகூடி சென்று அவன் புகழ் பாடி பரவி நிற்கும் ஆனந்த காட்சியை கண்டார். அடியார்களோடு கூடி இறைவனை வணங்கி இன்பம் துய்க்கவும் விரும்பினார். அந்த இன்ப விழையே திருவெம்பாவையாகும்.

அழிக்கப்பட்ட உலகத்தை மீளவும் படைக்க தொடங்கும் சிவசக்திகளின் செயலாக இது அமைந்துள்ளது. திருவெம்பாவையில் குறிக்கப்பட்ட சக்திகள் ஒன்பது. அவை:- மனோன்மணி, சர்வபூததமனி, பலப்பிரதமணி, பலவிகரணி, கல்விகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என்பனவாகும்.

ஆன்மாவானது மலமாகிய இருளிலே கிடந்துழலாமல் திருவருளில் படிந்து பரிபாகத்தையடைதல் வேண்டும் என்பதே திருவெம்பாவையின் தத்துவ பொருளாகும். அதிகாலையில் விழித்தால் புத்திக்கு தெளிவும், சரீரத்திலுள்ள சுத்த நரம்பிலிருக்கும் ரத்தத்திற்கு பரிசுத்தமும், பித்த தணிவும், வாத பித்த சமனமும் உண்டாகும்.

மந்திரங்கள் பலவற்றுள்ளும் துயிலுணர்த்தும் மகா மந்திரமாய் விளங்குவது திருவெம்பாவை. எப்போதுமே உறக்கத்திற்கு பேர்போனவர்கள் நம் தமிழ் மக்கள். அத்தகைய உறக்கத்திலிருந்து தட்டியெழுப்புவதற்காகவுமே இதனை மணிவாசகர் அருளினார் எனவும் கூறலாம். ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், மணிவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சியும் தமிழ்நாட்டு வீதிகள், தெருக்கள், வீடுகள் தோறும் கணீரென முழங்கிய காலம் ஒன்று உண்டு.

இடைக்காலத்து இந்நிலைமை சோர்வடைந்து இக்காலத்து மறுமலர்ச்சியடைந்தது மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டினையும், ஊன்றிக்கடைப்பிடித்தல் அவசியம். தமிழ்ப்பண்பு, அன்புணர்ச்சி, கற்புநிலை, ஒழுக்கம், உயர்நிலை, உயிர்நிலை, சமரசவாழ்வு, ஆத்மஞானம் யாவும் இதனால் நிலைபெறும்.


???????????? - ?????????? ?????????
 
Status
Not open for further replies.
Back
Top