• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தினம் ஒரு திருப்பாவை

Status
Not open for further replies.
[h=1]தினம் ஒரு திருப்பாவை[/h][h=1]பாசுரம்- -24[/h][h=1]ஆண்டாள் கிருஷ்ணனைப் புகழ்வது எதற்காகவோ..? #MargazhiSpecial[/h]

p29_21089_19361_21494.jpg

[h=1][/h]ண்டாளின் விருப்பப்படி கிருஷ்ணன் சிங்கத்தைப் போலவே கம்பீரமாக நடந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொள்கிறான். அவன் பின்னே ஆஸ்தான மண்டபத்துக்கு வந்த ஆண்டாளையும் அவளுடைய தோழிகளையும் பார்த்து, 'நீங்கள் என்ன காரியமாக வந்தீர்கள்?' என்று கேட்கிறான். ஆண்டாள் தாங்கள் கேட்கப் போவதை அவன் தரவேண்டும் என்பதால், முதலில் கிருஷ்ணன் புரிந்த லீலைகளைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி அவனுடைய புகழ் பாடுகிறாள். அரசனிடம் பரிசு பெறச் செல்லும் புலவர்கள், அரசனுடைய புகழைப் பாடுவதில்லையா? அதேபோல் ஆண்டாளும் கிருஷ்ணனின் புகழைப் பாடுகிறாள்.
ஆண்டாள், கிருஷ்ணனுக்கு முந்திய அவதாரங்களான வாமனன், ராமபிரான் ஆகிய இருவரும்கூட கிருஷ்ணன்தான் என்று சொல்கிறாள்.

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி!
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி!
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்,
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.


மகாபலி சக்கரவர்த்தி பக்த பிரகலாதனின் பேரன். அதனால், அவன் அசுரனாக இருந்தாலும், தர்ம சிந்தனை உள்ளவனாக இருந்தான். இல்லை என்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன். அதனால் அவனுக்கு கர்வமும் இருந்தது. அவன் ஒரு யாகம் செய்ய விரும்பினான். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும். எனவே, தேவர்களின் வேண்டுகோளின்படி, பகவான் நாராயணன் வாமனனாக அவதாரம் செய்தார். தந்திரமாக மகாபலியிடம் மூன்றடி தானம் கேட்டான். மகாபலியும் தாரை வார்த்து, 'கொடுத்தேன்' என்று சொன்னதும், வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்க, மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான். பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது. எல்லாம் பிரகலாதனின் பேரன் என்ற காரணத்தினால்தான்.


அடுத்ததாக பகவான் ராமபிரானாக அவதரித்து, ராவணனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடுகிறாள். ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கு தன்னுடைய மனைவியான சீதாபிராட்டியையே பிரிந்திருக்க நேரிட்டது. அசுரனான ராவணனிடம் இருந்து உலக மக்களையும் தேவர்களையும் காப்பாற்றுவதற்காக ராவணனை வதம் செய்யவேண்டி இருந்தது. அதற்கு ஒரு காரணமே ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது. இந்த இரண்டு அவதாரங்களும் கிருஷ்ணன்தான் என்று குறிப்பிடும் ஆண்டாள், இந்த அவதாரத்தில் கிருஷ்ணன் புரிந்த லீலைகளைப் புகழ்கிறாள்.

'பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி' என்ற வரியில், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய சகடாசுரனை வதம் செய்த லீலையைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். வாமனன் தந்திரமாக யாசகம் பெற்று மகாபலியை ஒடுக்கினார்; ராமபிரானோ இளைஞராகி, சீதையை மணம் செய்துகொண்ட பிறகு ராவணனை சம்ஹாரம் செய்தார்.


ஆனால், கிருஷ்ணனோ தான் பச்சிளம் குழந்தையாக இருந்தபோதே பூதனையைக் கொன்றான்; சிறு பிள்ளையாக ஆனதுமே சகடாசுரனைக் கொன்றான். பின்னும் கம்சன் அனுப்பிய வத்சாசுரன் கன்றின் வடிவம் கொண்டு வந்தபோது அவனையும் அழித்தான் என்று கிருஷ்ணனின் லீலைகளைக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்படி கிருஷ்ணனின் சம்ஹார லீலைகளை மட்டுமே சொன்னால், அவனுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமே என்று அச்சம் கொண்டவளாக, கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து, இடிமின்னல், அடைமழையில் இருந்து கோகுலத்து வாசிகளைக் காப்பாற்றிய லீலையையும் குறிப்பிட்டுப் புகழ்கிறாள்.

இப்படியெல்லாம் லீலைகள் புரிந்தவனே, கிருஷ்ணா! உன்னைப் போற்றுகிறோம். பகைவர்களை வெர்றி கொள்ளும் உன்னுடைய ஆயுதமான சுதர்சனத்தையும் போற்றுகிறோம். நாங்கள் இப்படி உன்னைப் பாடிப் புகழ்வது எதற்கு என்பது உனக்குத் தெரியாதா என்ன? நாங்கள் எதை வேண்டி வந்திருக்கிறோமோ அதைத் தட்டாமல் எங்களுக்குத் தரவேண்டும் என்கிறாள் ஆண்டாள்.


அப்படி ஆண்டாள் கேட்டதைத் தந்துவிட்டானா கிருஷ்ணன்?

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்
Source: http://www.vikatan.com/news/spirituality/77232-andal-thiruppavai-twenty-fourth-devotional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 25
கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை! #MargazhiSpecial


311077gif_20143_22259.jpg

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஒருவழியாக சமாதானம் ஆகி, ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணன். தாங்கள் கேட்டுக்கொண்டபடியே சிங்காசனத்தில் அமர்ந்துகொண்ட கிருஷ்ணனிடம். ஆண்டாள் நல்லவர்களை ரட்சிப்பதற்காகவும், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காகவும் எடுத்த இந்த அவதாரத்தில், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காக கிருஷ்ணன் புரிந்த லீலைகளைக் குறிப்பிட்டுப் போற்றுகிறாள். கிருஷ்ணனுக்கு சேவை செய்வதையே பெரிதாக நினைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் விரும்புவது எது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும் என்பதால், அதைத் தட்டாமல் தரும்படிக் கேட்டாள். ஆனால், கேட்டதும் கொடுப்பவன் என்று போற்றப்படும் கண்ணன், ஆண்டாள் கேட்டதை உடனே கொடுத்துவிடவில்லை. எனவே ஆண்டாள் தொடர்ந்து, கிருஷ்ணன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியும் என்று பாடுகிறாள். அப்படிப்பட்ட கிருஷ்ணன் தாங்கள் வந்திருக்கும் நோக்கம் நிறைவேறவேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


சிங்காசனத்தில் கன கம்பீரமாக அமர்ந்திருக்கும் கிருஷ்ணனின் அவதார ரகசியத்தை இப்படிப் புகழ்கிறார்கள்.

கிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் ராமபிரான் கோசலைக்கு மகனாகப் பிறந்தாலும், அவன் வளர்ந்தது என்னவோ கைகேயியின் பிள்ளையாகத்தான்.பார்ப்பவர்கள் எல்லோருமே ராமன் கோசலைக்குப் பிள்ளையா இல்லை கைகேயிக்குப் பிள்ளையா என்று குழம்பும்படி ராமன் முழுக்க முழுக்க கைகேயியின் மகளாகவே வளர்ந்து வந்தான்.

அதேபோல், கிருஷ்ணனுக்கும் ஒருத்தி மகனாய் பிறந்து மற்றொருத்திக்குப் பிள்ளையாக வளரும் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும். அதைத்தான் ஆண்டாள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள்.

ஆனால், ராமன் தான் பிறந்த அரண்மனையிலேயே கைகேயியின் அரவணைப்பில் வளர்ந்தான். கிருஷ்ணனோ கம்சனின் அரண்மனைச் சிறையில் பிறந்தான். பிறந்த உடனே தந்தை வசுதேவரால் கோகுலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நந்தகோபரின் மாளிகையில் விடப்பட்டான்.


தேவகிக்கு மகனாக இரவுப் பொழுதில் சிறைக் கொட்டடியில் பிறந்த கிருஷ்ணன், அதே இரவில் கோகுலத்துக்குச் சென்றது ஏன்?

தேவகிக்கு எட்டாவது பிள்ளை பிறக்கும் நேரத்தை தேவகியைவிடவும் கம்சன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தான். பிறந்த உடனே அவனைக் கொன்றுவிடவேண்டுமே என்ற எண்ணம்தான் காரணம். தேவகிக்கோ, கிருஷ்ணன் பிறக்காமல் இருந்தாலே நன்றாக இருக்குமே என்ற தவிப்பு. பிறந்து அவன் கம்சன் கையால் மாள்வதை விடவும், பிறக்காமல் இருப்பது நல்லது அல்லவா?

தேவகியின் அச்சத்தைப் போக்குவதைப் போல், கிருஷ்ணன் தான் பிறக்கும்போதே, சங்கு சக்ரதாரியாக தெய்விகத் தன்மையுடன் காட்சி தந்தான். தான் செய்த தவப்பயனாக தெய்வமே தனக்குப் பிள்ளையாகப் பிறந்தது கண்டு தேவகி அளவற்ற ஆனந்தம் கொண்டாள். அதன் பிறகு தேவகி கேட்டுக்கொள்ளவே, தெய்விகம் மறைத்து, தேவகியின் குழந்தையாகக் காட்சி தந்தான்.

பின்னர், அசரீரி வாக்குப்படி வசுதேவர் குழந்தையை எடுத்துக்கொண்டு கோகுலத்துக்குச் சென்றார். நந்தகோபரின் மாளிகையில் அப்போதுதான் பிரசவித்திருந்த யசோதையின் பெண்குழந்தையை தான் எடுத்துக்கொண்டு, கொண்டு சென்ற கிருஷ்ணனை யசோதையின் அருகில் படுக்க வைத்துவிட்டுத் திரும்பினார்.


இப்படியாக, பிறந்த உடனே தன்னைக் கொல்லவேண்டும் என்று நினைத்த கம்சனின் ஆசையை நிராசையாக்கிவிட்டான். பிறகு தன்னை அழிக்கப் பிறந்த தேவகியின் எட்டாவது மகன், கோகுலத்தில் வளர்கின்றான் என்று கேள்விப்பட்டு, அவனால் பிற்காலத்தில் தனக்கு ஏற்படப்போகும் அழிவை சகித்துக்கொள்ள முடியாமல், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கிருஷ்ணன் அழித்துவிட்டதைத் தெரிந்துகொண்டான். இதனால், கிருஷ்ணன் கம்சனின் வயிற்றில் தீயாகச் சுட்டான். ஆனால், தன்னை சரண் அடைந்தவர்களிடமோ அவன் மிகுந்த அன்பு செலுத்துபவன். இப்படியெல்லாம் கிருஷ்ணனைப் போற்றும் ஆண்டாள், தேவகி புரிந்துகொண்டதைப் போலவே தானும் தன் தோழியர்களும் கிருஷ்ணனை தெய்வ அவதாரம் என்று புரிந்துகொண்டதாகவும் ஆண்டாள் கூறுகிறாள். எனவே தாங்கள் விரும்பும் மேலான செல்வம் அனைத்தையும் அருளுமாறும் வேண்டிக் கொள்கிறாள். அந்த மேலான செல்வம் எது?

- க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்
Source: http://www.vikatan.com/news/spirituality/77233-andal-thiruppavai-twenty-fifth-devotional-hymn.art
 
[h=1]தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 26
கிருஷ்ணனிடம் ஆண்டாள் கேட்பது என்ன? #MargazhiSpecial[/h]ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் கேட்டுக்கொண்டபடி ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்ட கிருஷ்ணன் அவர்களிடம், ''நீங்கள் வேண்டுவது என்ன?'' என்று கேட்கிறான். ஆண்டாள் தானும் தன்னுடைய தோழிகளும் மார்கழி நீராடி நோன்பு இருக்கவேண்டும் என்றும் அதற்குத் தேவையான சாதனங்களை கிருஷ்ணன் அருளவேண்டும் என்றும் கேட்கிறாள்.



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன,
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே,
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையவனே,
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலி னிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.


'கிருஷ்ணனாக அவதரித்த திருமாலே, நீலநிற மணியைப் போன்ற மேனி நிறம் கொண்டவனே, கிருஷ்ணா! நீ எங்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்பதை இன்று நாங்கள் அறிந்துகொண்டோம். ஒன்றும் அறியாத பெண்களாகிய எங்களிடம் நீ வைத்திருக்கும் அன்பு எங்களை பூரிப்பு அடையச் செய்கிறது. நாங்கள் மார்கழி நீராட வந்திருக்கிறோம். எங்களுக்கு மார்கழி நீராட்டத்துக்குத் தேவையான சாதனங்களை நீ தந்தருளவேண்டும்' என்று வேண்டுகிறாள்.

அகில உலகத்தையும் நடுங்கச் செய்வதுபோல் முழங்கக்கூடியதும் கிருஷ்ணனின் கையில் இருந்து நீங்காமல் இருப்பதுமான பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் வேண்டும் என்று கேட்கிறாள்.



இந்த இடத்தில் அகோபில மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் ஒரு விளக்கத்தை தம்முடைய திருப்பாவை விளக்கவுரையில் கிருஷ்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையில் நடப்பதாக ஓர் உரையாடலைக் குறிப்பிடுகிறார்.

'பூஜாகாலத்தில் ஊதுகிற சங்கொலி சந்தோஷகரமாகத்தான் இருக்கவேண்டும். அப்படி ஆனந்தகரமாக சப்திக்கிற சங்கங்கள் என்று கேட்காமல் நடுங்கும்படி சப்திக்கிற சங்கங்கள் வேண்டும் என்கிறீர்களே. அதிலும் ஞாலத்தை எல்லாம் நடுங்கும்படி சப்திக்கிற சங்கங்கள் என்கிறீர்களே. எதற்காக அம்மாதிரியான சங்கங்கள்?'

''கிருஷ்ணா! உனக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை எதற்காக அப்படிப்பட்ட சங்கங்களைக் கேட்கிறோம் என்றால், ஸத்யம் சதேந விக்நாநாம் ஸஹஸ்ரேண ததா தப: விக்நாயுதேந கோவிந்தே ந்ருணாம் பக்திர் நிவார்யதே ஒருவன் எந்த சமயத்திலும் எதற்காகவும் பொய் சொல்லுகிறதில்லை என்று சங்கல்பம் செய்துகொண்டு அப்படியே பொய் சொல்லாமல் நடந்துகொண்டு வந்தானேயானால் அவனுக்கு நூறு விதமான இடைஞ்சல்களை உண்டு பண்ணி அந்த விரதத்தை மாற்றிப் பொய் சொல்லும்படி செய்துவிடுகிறார்கள் தேவர்கள்'' என்று சொல்கிறாளாம் ஆண்டாள்.

மேலும் பறை முதலான வாத்தியங்களையும் ஆண்டாள் கேட்கிறாள். கோல விளக்குகளும், கொடிகளும் தேவை என்று கேட்கிறாள்.

கிருஷ்ணன் தான் சிறு பிள்ளை என்று சொல்லி, கேட்டதை எல்லாம் தர மறுத்துவிட்டால் என்ன செய்வது? எனவேதான் ஆண்டாள், 'ஆலினிலையாய்' என்று அழைத்து கிருஷ்ணனுடைய தெய்விகத் தன்மையை உணர்த்துகிறாள்.


பிரளயத்தின்போது உலகமெல்லாம் வெள்ளத்தில் மூழ்கியபோது, அனைத்து தேவர்களையும், உயிர்களையும், அகில அண்ட சராசரங்களையும் வயிற்றில் சுமந்துகொண்டு, ஆலிலையின் மேல் கிருஷ்ணன் படுத்திருக்கும் கோலமே ஆலிலை கிருஷ்ணனின் அழகு திருக்கோலம். இந்த அற்புதக் காட்சியை மார்க்கண்டேயருக்கு திருவில்லிபுத்தூரில் திருமால் காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணனுக்குச் சொல்லும் ஆண்டாள், 'கிருஷ்ணா! பிரளய காலத்தில் அகிலம் அனைத்தையும் உன்னுள் அடக்கி பாதுகாக்கும் வல்லமை படைத்தவன் நீ. எனவே நாங்கள் கேட்பதை எல்லாம் கண்டிப்பாக உன்னால் தரமுடியும் என்று ஆண்டாள் கேட்கிறாள்.

-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்


[FONT=&quot]Source: http://www.vikatan.com/news/spirituality/77386-andal-twenty-sixth-thirupavai-devotional-hymn.art[/FONT]
 
[h=1]தினம் ஒரு திருப்பாவை
பாசுரம்-27
கிருஷ்ணனை பாடிப் பெறும் பரிசுகள் என்ன? #MargazhiSpecial[/h]
'கூடாதாரை வெல்லும் சீர்கோவிந்தா' என்று ஆண்டாள் கிருஷ்ணனின் பிரபாவத்தைப் புகழ்கிறாள். கூடாரை என்பதற்கு பகைவர்கள் என்று அர்த்தம் இல்லை. பகைவர்களை வெல்வது என்பது கிருஷ்ணனுக்கு சர்வசகஜம் என்பதால், ஆண்டாள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. தன்னை விரும்பாதவர்களையும் விரும்பும்படி அவர்களுடைய மனதை வெற்றிகொண்டு விடுவானாம். ஆனால், அவனை விரும்பாதவர்கள் பரம உத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி உத்தமமான குணம் கொண்டவர்களின் மனங்களை கிருஷ்ணனே ஆட்கொண்டுவிடுவான். எனவேதான் அவன் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன் என்கிறாள் ஆண்டாள்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


கிருஷ்ணன் ஆண்டாள் கேட்கும் சங்குகள், பறைகள் அனைத்தையும் தந்துவிட்ட பிறகு, வேறு ஏதேனும் வேண்டுமா என்று கேட்கிறான்.
ஆண்டாளும் அவளுடைய தோழிகளும், கிருஷ்ணனைப் பலவாறாகப் புகழ்கிறார்கள். பின்னர் நோன்பை பூர்த்தி செய்த பிறகு தாங்கள் அனுபவிக்கப்போகும் சுக சௌகர்யங்களைப் பட்டியல் இடுகிறாள். அந்த சுக சௌகர்யங்களும்கூட கிருஷ்ணன்தான் அருளக்கூடியவன் என்றும் ஆண்டாள் கூறுகிறாள்.


'கூடாதாரை வெல்லும் சீர்கோவிந்தா' என்று ஆண்டாள் கிருஷ்ணனின் பிரபாவத்தைப் புகழ்கிறாள். கூடாரை என்பதற்கு பகைவர்கள் என்று அர்த்தம் இல்லை. பகைவர்களை வெல்வது என்பது கிருஷ்ணனுக்கு சர்வசகஜம் என்பதால், ஆண்டாள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. தன்னை விரும்பாதவர்களையும் விரும்பும்படி அவர்களுடைய மனதை வெற்றிகொண்டு விடுவானாம். ஆனால், அவனை விரும்பாதவர்கள் பரம உத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி உத்தமமான குணம் கொண்டவர்களின் மனங்களை கிருஷ்ணனே ஆட்கொண்டுவிடுவான். எனவேதான் அவன் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன் என்கிறாள் ஆண்டாள்.

தாங்கள் அவனைப் பாடித் துதிப்பதனால் பெறப்போகும் பயன்களை அடுத்தடுத்த வரிகளில் பட்டியல் இடுகிறாள் ஆண்டாள்.
'கிருஷ்ணா, உன்னைப் புகழ்ந்து பாடி, உன்னுடைய அருளால் நாங்கள் பெற இருக்கும் பரிசுகள் என்னென்ன தெரியுமா? நாடே புகழும்படியாக நீ அருளும் கைவளைகளையும், தோள்களுக்குத் தகுந்த தோள்வளைகளையும் அணிந்துகொள்வோம். மேலும் உன்னுடைய புகழைப் பாடக்கேட்ட எங்கள் காதுகளுக்கு நீ அருளும் தங்க வைரத்தோடுகளையும் அணிந்துகொள்வோம். அதற்கு பிறகு வண்ணமயமான பட்டாடைகளை உடுத்திக்கொள்வோம். இத்தனையையும் நாங்களாக அணிந்துகொள்ளமாட்டோம். நீயும் நப்பின்னையும்தான் எங்களுக்கு அணிவிக்கவேண்டும். மேலும் எங்களுடன் நீயும் நப்பின்னையும் சேர்ந்து, பால் சோறு முழுகும்படி நெய் சேர்த்து, பாலும் நெய்யும் முழங்கை வரை வழிய வழிய உண்ணவேண்டும்' என்கிறாள்.

கிருஷ்ணனின் அனுக்கிரகத்தினால் அவனுடனே சேர்ந்துவிட்டதைக் குறிக்கும்படி கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் என்று கூடியிருந்து சுக சௌகர்யங்களை அனுபவிப்போம் என்கிறாள் ஆண்டாள். திருப்பாவையில் இந்த பாசுரமானது கூடிவராத நற்காரியங்களையும், கூடி வரச்செய்வது. அதன் காரணமாகவே இந்த பாசுரத்துக்கு உரிய நாளில் ஆலயங்களில் கூடாரவல்லி வைபவம் நடைபெறுகிறது.

திருப்பாவையில் மிகவும் விசேஷமான இந்தப் பாசுரத்தைப் பாராயணம் செய்தால், திருமணம் கூடி வராதவர்களுக்கு திருமணம் கூடி வருவதாக தொன்றுதொட்டு நிலவிவரும் பக்திபூர்வமான நம்பிக்கை. மேலும் நமக்கு எதிரிகள் என்று யாருமே இருக்கமாட்டார்கள்.


-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77501-andal-thiruppavai-twenty-seventh-devotional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை

பாசுரம் - 28

குறைவொன்றும் இல்லை யாருக்கு? #MargazhiSpecial

'கூடாரை வெல்லும்' பாசுரத்தில் கிருஷ்ணனின் அருளால் தாங்கள் பெற்ற பரிசுகளை பட்டியலிடும் ஆண்டாள், தாங்கள் கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் கூடி இருந்து, நெய்கலந்த பால்சோற்றை சாப்பிடப்போவதாகச் சொல்கிறாள். பின்னர், இப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல், கிருஷ்ணனை ஆயர்குலச் சிறுவன் என்று நினைத்து, ஒருமையில் அழைத்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், மிக்க அன்புடனே வேண்டியதைத் தந்த கிருஷ்ணனின் அன்பைப் போற்றுகிறாள்.

கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்,
குறைவொன்று மில்லாத கோவிந்தா, உன்றன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது,
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்,உன்றன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


'பசுக்களை மேய்வதற்காக காட்டுக்கு அழைத்துச் சென்று, பசுக்களை மேயவிட்டு, அங்கேயே மற்றவர்களுடன் கூடி உண்ணும் ஆயர்குலத்தில் பிறந்த அறியாத சிறுமிகள் நாங்கள். திருமாலின் அவதாரமான உன்னை நாங்கள் பெற்றது எங்களுடைய பூர்வபுண்ணியம்தான். நாங்கள் உன்னிடம் கேட்ட கைவளையும், தோள்வளையும், தோடும் எல்லாம் எங்களுக்குப் பெரிதல்ல. குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் நீ என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்' என்கிறாள். ஆண்டாள் திருப்பாவையின் அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் கோவிந்த நாமத்தைக் கூறுகிறாள்.

27-வது பாடலில் 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'
என்றும்; இந்தப் பாசுரத்தில் 'குறைவொன்றும் இல்லாத கோவிந்தன்' என்றும்; அடுத்த பாடலில் 'இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா' என்றும் மூன்று பாசுரங்களில் தொடர்ந்து கோவிந்த நாமத்தைக் கூறுகிறாள்.

கோவிந்தன் என்றால் பசுக்களைக் காப்பவன் என்று பொருள். இங்கே பசுக்கள் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களாகிய நம்மைத்தான். ஆக, பசுக்களாகிய நம்மையெல்லாம் கடைத்தேற்றுவதற்காகவே, பகவான் கிருஷ்ணனாக அவதரித்தான்.
'அப்படி ஆயர்குலத்தில் பிறந்த எங்களைக் காப்பாற்றுவதற்காக வைகுந்தத்தில் இருந்து இறங்கி எங்கள் கோகுலத்தில் எங்கள் மத்தியில் ஆடியும் பாடியும் திரிந்த உன்னை, அறியாத சிறுவன் என்று நினைத்த நாங்கள், உன்னை ஒருமையில் அழைத்தும், நீ எங்களிடம் துவேஷம் கொள்ளாமல், எங்களிடம் அன்பு கொண்டு நாங்கள் கேட்டதையெல்லாம் அருள் செய்தாய். இப்படியான பிரேமையை எங்களிடம் வைத்திருக்கும் உன்னை நாங்கள் இந்த கோகுலத்தில் பெறுவதற்கு புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும்.

'ஆனால், நாங்கள் முன் பாசுரத்தில் உன் அருளால் பெற்ற பரிசுகள் எல்லாம் பரிசுகளே இல்லை' என்று சொல்லும் ஆண்டாள், மார்கழி நீராடி கிருஷ்ணனின் அருளால் பெறக்கூடிய மேன்மையான பரிசு என்று எதைச் சொல்கிறாள் என்றால், கிருஷ்ணனுடனே ஐக்கியமாகிவிடும் பேரானந்த நிலையைத்தான்.

இந்தப் பிறவி என்பது முடிந்துவிடக்கூடியது. கிருஷ்ணனும் அவதாரக் காலம் முடிந்ததும் உடலைத் துறந்து வைகுந்தத்துக்குச் செல்லவேண்டியவன்தான். அப்படி கிருஷ்ணன் வைகுந்தம் செல்லும்போது, அவனுடனே தாங்களும் வைகுந்தத்துக்குச் சென்று பகவானுடைய திருவடி நிழலிலேயே இருக்கவேண்டும் என்பதைத்தான் ஆண்டாள், மார்கழி நீராடி தாங்கள் கடைப்பிடிக்கும் பாவை நோன்புக்கு உரிய பரிசு என்று கூறுகிறாள்.

ஆண்டாளின் இந்தப் பாசுரத்தில் உள்ள குறைவொன்றும் இல்லாத கோவிந்தா என்ற வரிக்கு, அகோபிலம் மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் வெகு அழகாக ஒரு விளக்கம் அருளி இருக்கிறார்.

'கிருஷ்ணன் ஶ்ரீவைகுந்தத்தில் இருக்கும்போது குறைவொன்றும் இல்லாதவனாக இருந்தாயோ அப்படியே ஆயர்குலத்தில் உதித்தபோதும் குறைவொன்றும் இல்லாதவனாக இருக்கிறாய். உலகத்தில் உள்ள ஆயர்குலத்தைக் காட்டிலும், கோகுலத்தில் உள்ள ஆயர்குலம் மிகவும் மேன்மை பெற்றது. உன்னுடைய திருவடிகளில் சஞ்சலமற்ற பக்தியை உடைய ஆயர்குலப் பெண்களைப் பெற்றெடுத்த குலம் அல்லவா கோகுலத்து ஆயர்குலம்?! இந்த ஆயர்குலத்தில் வந்து தோன்றியதால் எந்த ஒரு குறைவும் உனக்கு வராது' என்று ஆண்டாள் கூறுகிறாள்.

ஆண்டாள்
தன்னை கோகுலத்து ஆயர்குலப் பெண்ணாக பாவித்துக்கொண்டதால், கோகுலத்தைப் பெருமைப்படுத்திக் கூறுகிறாள்.
-க.புவனேஸ்வரி


நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77598-andal-thiruppavai-twenty-eighth-devotional-hymn.art
 
தினம் ஒரு திருப்பாவை
பாசுரம் - 29
கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்! #MargahiSpecial

கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்த பரமாத்மாவுடன் ஜீவாத்மாவாகிய தான் ஐக்கியமாகிவிடவேண்டும் என்று விரும்பிய ஆண்டாள், அதற்காக புனிதமான மார்கழி மாதத்தில் நீராடி, திருப்பாவை பாடி கிருஷ்ணனை வழிபட விரும்புகிறாள். அவன் அருள் இருந்தால்தானே அவன் தாள் பணியமுடியும். மார்கழி நீராடி அவனைப் பணிய வேண்டுமானால், அவனும் தங்களுக்கு அருகில் இருந்தால்தானே முடியும்? எனவே கிருஷ்ணனையும் எழுப்பி தங்களுடன் யமுனைக்கு வருமாறு அழைக்கிறாள். அதற்கும் முன்பாக தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர்களும் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடலாகப் பாடி அவர்களை எழுப்பி தன்னுடன் அழைத்து வருகிறாள். நிறைவாக கிருஷ்ணனையும் எழுப்பி விட்டாள். கிருஷ்ணனும் அவர்களுக்கு அருள்புரிந்துவிட்டான். மேலும் தன்னை விரும்பி வணங்குவதன் காரணம் என்ன என்றும் கேட்கிறான். அதற்கு ஆண்டாள் சொல்கிறாள்:

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநா மாட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.


விடிந்தும் விடியாத இந்தக் காலைப் பொழுதில் நாங்கள் உன்னை வந்து எழுப்பி, பொன்போல் பிரகாசிக்கும் உன்னுடைய திருவடிகளை எதற்குப் பணிந்து வணங்குகிறோம் தெரியுமா?


கோகுலத்து பசுக்களை அவற்றின் பசி நீங்கும்வரை மேய்த்து, அதன் பிறகே உண்ணும் உயர்ந்த குணம் கொண்ட குலத்தில் பிறந்த நீ, எங்களை ஆட்கொள்ளவேண்டும். நாங்கள் உன் திருவடியில் இருந்து சதா காலமும் உன்னை பூஜித்துக் கொண்டு இருக்கவேண்டும்.


இன்று மட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்பதற்காக நாங்கள் மார்கழி நீராடி உன்னை வழிபடவில்லை; என்றென்றும் ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன்னுடனே இருக்கவேண்டும்; உனக்கே நாங்கள் ஆட்படவேண்டும். இதைத் தவிர வேறு எந்த விருப்பமும் எங்களுக்கு இல்லை. அப்படி உன்னில் இருந்து மாறுபட்ட ஒன்றின்மேல் எங்கள் விருப்பம் சென்றால், அந்த விருப்பதைப் போக்கி, என்றும் உன்னிடமே எங்கள் மனம் லயித்திருக்கும்படிச் செய்யவேண்டும் என்று ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.
கிருஷ்ணன் பரமாத்மா; பூமிதேவியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் ஜீவாத்மா. உலகத்தில் மனிதர்களாகப் பிறக்கும் நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள். நம்மை நம்முடைய புண்ணிய காரியங்களால் ஆட்கொண்டு, நமக்கு மீண்டும் பிறவாத வரம் அருளி, நம்மைத் தன்னுடனே சேர்த்துக்கொள்ளும் இறைவன் பரமாத்மா.

அந்த பரமாத்மாதான் நாமெல்லாம் உய்யும்படி கிருஷ்ணனாக அவதரித்தார். நம்மையெல்லாம் இறைவனிடம் ஆற்றுப்படுத்த விரும்பி பூமிதேவி ஆண்டாளாக திருவில்லிபுத்தூரில் அவதரித்து, தன்னுடைய பாசுரங்களால் நம்மை பகவானிடம் ஆற்றுப்படுத்துகிறாள்.


இப்படி ஆண்டாள் நமக்கு அருளிய இந்த திருப்பாவை பாசுரங்களை பக்தியுடன் பாராயணம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றியும் ஆண்டாள் திருப்பாவையின் நிறைவு பாசுரத்தில் அருளி இருக்கிறாள்.




வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி,
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன,
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே,
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்,
எங்கும் திருவருள்பெற்று, இன்புறுவ ரெம்பாவாய்.


திருப்பாற்கடலை அமுதம் வேண்டி கடைந்தபோது, பகவான் நாராயணன்தான் மந்தரமலையைத் தாங்கும் கூர்மமாக அவதரித்தார். அதனால்தான் பகவானை வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறாள். அறிவு பிரகாசிக்கும்படியான முகத்தை உடைய கோகுலத்து சிறுமியர்கள், கிருஷ்ணனாக அவதரித்த கிருஷ்ணனிடம் சென்று, அவன் திருவருளைப் பெறவேண்டி, திருவில்லிபுத்தூரில் பட்டர்பிரான் (பெரியாழ்வார்) மகளாக துளசி வனத்தில் தோன்றிய கோதை (ஆண்டாள்) சொன்ன இந்தத் தமிழ்மாலை முப்பதையும் நாள் தவறாமல் பாராயணம் செய்பவர்கள், செல்வத்தின் இருப்பிடமான திருமகளைத் தன் மார்பில் குடியிருக்கப் பெற்ற திருமாலின் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்கிறாள். தேனினும் இனிய பாசுரங்களால் பரந்தாமனின் புகழ் பாடி நம்மையும் பகவானிடத்தே ஆற்றுப்படுத்திய சுடர்க்கொடி ஆண்டாளின் திருவடிகளைப் பணிவோம்.
-க.புவனேஸ்வரி

நன்றி : சக்தி விகடன்

Source: http://www.vikatan.com/news/spirituality/77685-andal-thiruppavai-twenty-nineth-devotional-hymn.art
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top