கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப&

Status
Not open for further replies.
வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
வாய்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
18. தேக காந்தி

வாயு தேவன் விரும்பினான் மனதார
வாசு தேவன் போன்ற தேக காந்தியை.

ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.

காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.

“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”

வாயு தேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசு தேவனை ஆராதனை செய்தான்;

வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.

தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேககாந்தியை.

வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!

பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,

வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
அகஸ்தியர்

அரிய தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைக் காணப் பொதிகையில்.

பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”

வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.

“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!

மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
வலம் வருவாய் மலையின் மகிமை கூறி!

தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”

ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;

வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.

சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Status
Not open for further replies.
Back
Top