கேட்கும் வரம் கிடைக்கும் - புரட்டாசி மாதம்

பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்யமாக வைக்க காரணமான கதை.

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்குதல் சிறப்பு. நாம் கேட்கும் வரம் கிடைக்கும்.

திருமாலிருஞ் சோலை அழகரிடம் ஆண்டாள்,"மாதவா! என் மனதுக்கு பிடித்த அரங்கனே !எனக்கு மணவாளனாக வந்தால் 100 அண்டா வெண்ணையும் ,100அண்டா அக்காரவடிசலும் உனக்கு நைவேத்யமாக தருகிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் .அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியமாக்கி கொண்டார்.

ஆண்டாள் தான் வேண்டி கொண்டதுபோல் வெண்ணையும்,அக்காரவடிசலும் பகவானுக்கு கொடுத்தாரா? என்ற சந்தேகம் 300ஆண்டுகளுக்கு பிறகு யதிராஜரான ராமானுஜருக்கு வந்தது.உடனே,மகான் 100அண்டா வெண்ணையும்,100அண்டா அக்காரவடிசலும் நைவேத்யம் செய்து அழகரை ஆராதித்து,ஆண்டாள் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.அதனால் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது,வாசலுக்கே ஓடிவந்து, "வாருங்கள் !அண்ணா! நம் கோவிலுக்கு" என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.ஆண்டாளைவிட ராமானுஜர் வயதில் குறைந்தவராக இருந்தாலும் ,ஆண்டாள் அண்ணா! என்று அவரைக்கூப்பிட காரணம், ஒரு தங்கைக்கு செய்யவேண்டிய கடமையை அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தனக்கு செய்ததால்தான்.

இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்திற்கு ஒருமுறை இந்த சம்பவம் மிகச்சிறப்பாக அக்காரவடிசல் பிரசாதத்துடன் கொண்டாடப்படுகிறது.

பக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு, மந்திரம் சொல்லி,பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்து விடுவதில்லை.நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு,மனம்,மெய் ,வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தியாகும்.

அனைத்து ஜீவராசிகளிடம் அன்பு வைத்தால், பகவானின் அனுக்கிரகத்தை எளிதில் அடையலாம்.
 
Back
Top