• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காரடையான் நோன்பு நோற்கும் முறையும், சொல்ல வேண்டிய ஸ்லோகோமும்

காரடையான் நோன்பு நோற்கும் முறையும், சொல்ல வேண்டிய ஸ்லோகோமும்....

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு. சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.

இந்தாண்டுக்கான காரடையான் நோன்பு 15.03.19, பங்குனி 1, வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

காரடையான் நோன்புக்கான பூஜை செய்யவேண்டிய நேரம் - அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை.

காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்?

இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.

இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.

மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும்.

பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது "உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்' என்று வேண்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். "மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்....? அத்துனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.

ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?

சங்கல்ப ஸ்லோகம்....

மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்

மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

தியானம்..

ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்

புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே

தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.

நோன்புச்சரடு மந்திரம்...

தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'

காரடையான் நோன்பிற்கு சாவித்திரி விரதமென்ற பெயருண்டு. ஏன் என்று தெரிய வேண்டுமா?

காரடையான் நோன்பு பிறந்த கதை

"சாவித்ரி பாடம்'' என்ற கர்ண பரம்பரைப் பாட்டு ஒன்றில் இந்த நோன்பு தோன்றிய வரலாறும் அதன் மகிமையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்தைப் பெறுகிறாள். பின்பு பக்தி சிரத்தையுடன் பல காலம் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய, கணவன் அச்வபதியும் விடாமல் காயத்ரி ஜெபத்தையும் செய்ய அதன்படியே அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

"சாவித்ரி' என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடைகிறாள். விதி வசமாய் ஒருமுறை சாவித்ரி, சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. அப்போது அவன் கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். அவன் தன் பெற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் வரித்து விடுகிறாள்.

அவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதிக்கிறார். இந்த நிலையில் நாரதர் சாவித்ரியிடம் வந்து, "அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் காலகதி

அடைந்து விடுவான். எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்'' என்று உபதேசிக்கிறார். எனினும் சாவித்ரியும் தன் தந்தையிடம் மன்றாடி சத்யவானையே மணக்கிறாள்.

நாரதர் சொன்னபடியே சத்தியவான் காட்டில் விறகு வெட்டி வரச் சென்று அங்கு தன் கோடரியால் காலை வெட்டிக் கொண்டு கீழே சாய்கிறான். யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு செல்கிறான். அவனை விடாமல் பின் தொடர்கிறாள் சாவித்ரி. தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல
வேண்டாமென்று யமனிடம் மன்றாடி வேண்டுகிறாள். சாவித்ரியின் மன உறுதியையும், பதிவிரதா பக்தியின் மேன்மையையும் உணர்ந்த யமதர்மராஜன் அவளுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்கிறான்.

"தர்மபிரபுவே... என் கற்புக்குப் பங்கம் வராமல் எனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வரம் தாரும்'' என்கிறாள். யமனும் "இவ்வளவுதானே தந்தேன்'' என்று அவள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டான். அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே அவள் கேட்டபடி குழந்தைகள் பிறக்கும்?

யமதர்மராஜனுக்கு இப்போது சத்தியவானின் உயிரைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், சத்தியவானை உயிர்ப்பித்துவிட்டு மறைகிறான்.

சாவித்ரி செய்த அந்த நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலர் இதை, "ஸம்பத் கௌரீ'' பூஜை என்றும் சொல்கிறார்கள். எது

எப்படியோ... இந்த மாசி, பங்குனி நோன்பு நம் தேசத்தில் எல்லாச் சுமங்கலிகளாலும் புராண காலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது...
 

Latest ads

Back
Top