• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காஞ்சியில் கண்ணன்:

காஞ்சியில் கண்ணன்:

====================

பெரியாழ்வார் தன்னுடைய மெச்சூது பதிகத்தில்(முதல்திருமொழி ) கண்ணன் ஆய சிறுவர்களோடு கோகுலத்தில் விளையாடிய பொழுது அவர்களை பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி விளையாடியதை அழகாக உரைத்திருப்பார். அந்த பதிகத்தின் முதல் பாசுரத்தின் முடிவு
' * அன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் ' என்று பாடியிருப்பார்..

அவர் குறிப்பிட்ட
' அன்று பாரதம் கை செய்த அத்தூதன் ' ஐத்தான் இன்று காணப்போகிறோம். காஞ்சி மாநகரிலே ஸ்ரீ ஏகம்பரேஶ்வர சன்னிதி சமீபத்திலே ஸ்ரீ பாண்டவதூதன் ஆக விஶ்வருப கோலத்தில் கோவில் கொண்டுள்ளான்
ஸ்ரீ கிருஷ்ணன் .

ஆலயத்தின் பெயர் : ஸ்ரீ பாண்டவதூத பெருமாள் திருக்கோவில்.
ஊர் : திருப்பாடகம் (காஞ்சிபுரம் நகரில் உள்ளது ஆனால் திருப்பாடகம் என்று குறிப்பிடப்படுகின்றது)
மூலவர் : ஸ்ரீ பாண்டவதூதன் (ஸ்ரீகிருஷ்ணன்: இரண்டு திருக்கரம்: அமர்ந்த திருக்கோலம்)
தாயார்: ஸ்ரீ ருக்மிணி பிராட்டி (4 திருக்கரம், அமர்ந்த திருக்கோலம் )
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்.

பேயாழ்வர்,பூதத்தாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் என 4 ஆழ்வார்களால் பாடப்பட்ட கண்ணன்.

நம் பாரததேசத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணின் இரண்டு விதமான திருக்கோலங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன:

1) ஸ்ரீ கிருஷ்ணனின் விஶ்வருபம்- இது காஞ்சியின் பாண்டவதூத ஆலயத்தில் 30 அடி உயரத்தில் ஶிலாரூபத்தில் அருள் பாலிக்கின்றான்.

2) ஸ்ரீ கிருஷ்ணன் வயது முதிர்ந்த கோலத்தில்(வெள்ளைமீசையோடு)- மனைவி-மக்கள்-பேரன்-அண்ணன் (மனைவி ருக்மிணி, புத்ரன் ப்ரத்யும்ணன், பேரன் அநிருத்தன், அண்ணன் பலராமன்) என குடும்ப ஸஹிதமாக சென்னை திருவல்லிக்கேணியில் காக்ஷி தருகிறான் .

மேற்கூறிய இந்த இருவிதமான கண்ணனின் திருக்கோலம் இந்திய தேசத்ததில் வேறு எங்கும்மில்லை.

ஸ்தலபுராணம்:
----------------------------

இங்கே ஸ்ரீ கிருஷ்ணனை பாண்டவர்களின் தூதனான கோலத்தை சங்கல்ப்பித்து ஆவாஹனம் செய்திருக்கிறார்கள்.
அதுபோலவே மூலவிக்ரஹத்தையும் வடித்துள்ளார்கள். ஆக இந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணமாக கொண்டது நாம் எல்லோரும் அறிந்த மஹாபாரதத்து சம்பவம் தான்.

துர்யோதனாதிகளிடம் பகடையில் தோற்ற பாண்டவர்கள் வானவசம்+அக்ஞாதவாசம் மேற்கொண்டு முடிக்கிறார்கள். அவர்களது வாசம் முடிந்ததும் அவர்களுக்குரிய பங்கைப்பெற விரும்பி ஸ்ரீ கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்து கௌரவ ஸபைக்கு தூதனாக அனுப்புகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணனை அவமதிக்க எண்ணிய துர்யோதனன் ஸபையோரை கண்ணனுக்கு மர்யாதை அளிக்காது இருமாப்புடன் அமர்ந்திருக்க ஆணையிடுகிறான். ஆனால் கண்ணபிரான் சபையில் வந்ததும் தங்களையும் அறியாது ஸபையோர் எழுந்து கண்ணனை வணங்கினர். துர்யோதனனுக்கு ஆத்திரம் பொங்கியது. ஸபையோர் வணக்கததை ஏற்றுக்கொண்டு ஸபையில் அமர்ந்தான் கண்ணபரமாத்மா. துர்யோதனனிடம் பாண்டவர்களின் உரிமையுள்ள பங்கை கோரினான். செருக்கு நிறைந்த துர்யோதனன் போட்டியில் தோற்று பொருளை இழந்தவர்களுக்கு பங்கு கேட்க என்ன உரிமை உண்டு என்று ஆணவத்தோடு வினவினான். இதைக்கேட்ட பரமாத்மா 'சரி விடு, அவர்களுக்கு சொந்தமான ராஜ்யத்தின் பாதியையாவது கொடு' என்றார். துர்யோதனன் மறுத்தான். கண்ணபிரான் ' சரி பாதி ராஜ்யம் வேண்டாம், 5 ஊர்களையாவது கொடு ' என்றார் அதற்கும் மறுத்துவிட்டான் துர்யோதனன். பொறுமையுடன் பரமாத்மா மீண்டும் கேட்டார் ' சரி 5 ஊர் வேண்டாம், 5 வீடையாவது கொடு ' என்று கேட்டார் அதற்கு துர்யோதனன் " 5 வீடல்ல, 1 வீடல்ல ஏன் ஊசி முனை அளவுள்ள நிலமுங்கூட கொடுக்கமாட்டேன் " என்று ஆணவமாக கூறினான். கண்ணபிரான் சபையை விட்டு புறப்பட கிளம்பிய பொழுது ஆத்திரம் நிறைந்த துர்யோதனன் அஹங்காரத்தோடு தன் சேவகர்களுக்கு கட்டளையிட்டான் " இந்த ஆயனை (மாடுமேய்ப்பவனை) கயிற்றால் கட்டி சிறையில் தள்ளுங்கள் " என்றான். ஜகதீஶ்வரனான ஸ்ரீகிருஷ்ணனை சாதாரண மாநுடனாய் எண்ணி அவனை கயிற்றால் கட்டிவிடலாம் என்று எண்ணிவிட்டான் அற்ப துர்யோதனன். கயிற்றோடு வீரர்கள் நெருங்கியதும்
" ஸர்வேச்ரவரனான ஸ்ரீகிருஷ்ணன் நெடிதுயர்ந்து ஆகாசத்திற்கும் பூமிக்கும் நடுவே விஶ்வரூபியாகி வியாபித்து நின்றான். துர்யோதனாதிகள் மிரண்டு போயினர். விதுரர், பீஷ்மர் போன்ற மஹநீயர்கள் பரமபுருஷனான ஸ்ரீகிருஷ்ண பகவானின் விஶ்வரூப தர்சனத்தை கண்டு தொழுதனர். துர்யோதன சபையில் இங்கணம் பகவான் நல்லோருக்கும், தீயோர்க்கும் விஶ்வரூப தர்சனம் அளித்தார். பின்பு சாதாரண மாநுஷ உடல் தரித்து " போர் நிச்சயம் நிகழும் " என்று கூறிவிட்டு சென்றார் கண்ணபிரான்.

மேற்கூரிய ஸ்ரீமத் மஹாபாரத ஸம்பவத்தையே ஸ்தலபுராணமாக கொண்டுள்ளது இவ்வாலயம். பாண்டவர்களின் வாரிசான பரீக்ஷித்து ஶுகப்ரஹமத்தின் அநுக்ரஹம் கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் விஶ்வரூபத்தை கண்டான் ,பரீக்ஷித்துவின் மகனான ஜனமேஜயனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் விஶ்வரூபத்தை காண வேண்டும் என்று ஆசை பிறந்தது. வைஶம்பாயணரின் அறிவுரையின் படி காஞ்சி நகரில் "அச்வமேதம் " யக்ஞம் புரிந்தான். வேள்வியின் பயனாக ஸர்வேச்ரவரனான ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவதூதனாக கௌரவஸபையில் காட்டிய விஶ்வரூபத்தைஅவனுக்கு மீண்டும் தர்சிக்க காட்டினார். இந்த நிகழ்வின் நினைவாகவே ஆலயம் எழுப்பப்பட்டது.
பாண்டவர்களுக்கு தூதனாக சென்று, ஸபையில் விஶ்வரூபம் காட்டிய ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருக்கோலமே சங்கல்பிக்கப்பட்டு இவ்வாலயத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளது. அதே படிதான் மூலவிக்ரஹமும் அமைந்துள்ளது.

ஸ்ரீ மூலவர் :
------------------------

இந்த ஆலயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கௌரவ ஸபையில் எடுத்த விஶ்வரூப திருக்கோலத்தில் விளங்குவதால் பகவானின் மூல ஶிலாவிக்ரஹம் 30அடி உயரமுடையது. மிகப்பெரியது.
(நான் மேலே கூறியது போல இவ்வளவு பெரிய ஸ்ரீகிருஷ்ணனின் திருவுருவம் இந்தியாவில் வேறெங்கும் ஆராதிக்கப்படுவதில்லை) பகவான் இடது காலை தரையில் தொங்கவிட்டு வலது காலை இடது தொடையில் வைத்தும், இரண்டு திருக்கைகளில் வலது திருக்கரத்தை
" அபயஹஸ்தமாக " பக்தனிடம் ' நான் இருக்கிறேன்- பயப்படாதே ' என்று காட்டும் விதமாக அருள்கிறான், அவனது இடது திருக்கரம் கீழ்நோக்கி " தன் திருப்பாதங்களை சரணடை " என்று குறிக்கும் வண்ணம் கொண்டு அமர்ந்துள்ளான். இவ்வாறாக மிகப்பெரிய உருக்கொண்டு அபயஹஸ்தத்தோடு கால்மேல்கால் இட்டு திருமேனி முழுக்க தைலக்காப்போடு அமர்ந்திருக்கிறான் ஸ்ரீ பாண்டவதூதன். அடியவர்களும் மஹாபாரதத்திலே பகவான் காட்டிய விஶ்வரூபத்தையே காண்கிறோம் என்று பக்தியோடு ஸ்ரீ பாண்டவதூதனை தொழுகிறார்கள்.

தாயார் :
---------------
ஸ்ரீகிருஷ்ணனின் மணவாட்டியான ருக்மிணி பிராட்டியே இவ்வாலயத்தில் தனி சன்னிதியில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றாள். 4 கரங்களோடு மேலிரு கைகளில் தாமரையேந்தி கீழிரு கரங்கள் அபயவரதஹஸ்தம் காட்டி அருள்கின்றாள். ஸ்ரீ பாண்டவதூதனோடு கொலுவீற்றிருக்கிறாள் ஸ்ரீருக்மிணி தாயார்.

நம் வாழ்வில் ஒரு முறையேனும் பகவானின் இந்த விஶ்வரூப தர்சனத்தை கண்டு தொழுதிடவேண்டும். எத்தனை ஜன்மா எடுத்தாலும் பகவானின் விஶ்வரூப தர்சனத்தை காணல் என்பது இயலாதது, ஆகவே அந்த கருணாமூர்த்தியாம் கண்ணன் நமக்காக காட்டிடும் விஶ்வரூப திருக்கோலத்தை காஞ்சிமாநகரில் கண்டு தொழுதிடுவோம்.
ஸ்ரீ பாண்டவதூதன் பாதம் பணிவோம்.

॥ ஸ்ரீருக்மிணி நாயிகா ஸமேத ஸ்ரீ பாண்டவதூத பரப்ரஹ்மணே நமோநம: ॥
 

Latest ads

Back
Top