ஏரி காத்த இராமன்

ஏரி காத்த இராமன்

கலோனெல் லையோனெல் ப்ளேஸ் (Colonel Lionel Blaze) என்னும் ஆங்கிலேய அதிகாரி 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார்.


அவருக்கு நம்முடைய பழக்க வழக்கங்கள் அறவே பிடிக்காது.


அர்ச்சை (சிலை) வழிபாடு செய்யும் பக்தர்களை பைத்தியக்காரர்கள் என்பது அவர் எண்ணம்.


ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது.


அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி இருக்கும் சிறிய கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும்படி வேண்டிக் கொண்டனர்.


அந்த அதிகாரி உடனே மக்களிடம், ”நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.


அங்குள்ளோரும், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் இராமன் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.


”ஓஹோ.. அப்படியா? இராமன் என்று ஒருவன் இருந்தால் அதை எல்லாம் செய்யட்டும் பார்ப்போம்” என்று கிண்டலாகச் சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி.


மக்களும் ￰இராமனை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.


நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.


வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.


ஏரியின் கரை மீது உயரமான இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் மிக அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கணம், ஒரே கணம் தான் அந்தக் காட்சியைக் கண்டார். அடுத்த கணம் அவர்கள் மறைந்து விட்டார்கள்.


அவ்வளவுதான். அந்த அதிகாரியின் உடல் நடுங்கியது. உள்ளம் கலங்கியது. ஊர் மக்கள் மடையர்கள் இல்லை; அவர்கள் தெய்வமும் வெறும் கல் இல்லை என்று உணர்ந்து கொண்டார். அவர்கள் வழக்கப்படியே கீழே விழுந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, நள்ளிரவு நேரத்தில் தான் கண்ட காட்சியை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் இராமனின் பக்தராகவும் ஆனார்.


ஸ்ரீ தாயார் சன்னதியை புதிதாகக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார்.


நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வேட்டிலும் பதிப்பித்தார். “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது” என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்க முடியும்.


மதுராந்தகம் ஏரி
ஏரி உடையாமல் காத்ததால் இவர் ’ஏரி காத்த ராமர்’ என்று அழைக்கப்படுகிறார்.


இது பொதுவாக கூறப்படும் வரலாறு! இதற்க்கு முன்னமே மதுராந்தகம் இராமனுக்கு "ஏரி காத்த இராமன்" என்ற பெயர் ஏற்பட்டது.


எப்படி ? எந்த காலத்தில் ஏற்பட்டது ? அடுத்த பதிவில் நமது ஸ்ரீ வைஷ்ணவ பெரியோர்களின் விளக்கத்தோடு காண்போம்...


பிள்ளைலோகம் இராமானுசன்
 
திருமங்கையாழ்வார் காஞ்சி திருஅட்டபுயகரம் எம்பெருமானை மங்களாசாசனம் செய்ய சென்றார். எம்பெருமானின் அழகில் காதல் கொண்டார் ஆழ்வார்.


தன்னிலை போய், பெண் நிலையாக மாறினார்.


எம்பெருமான் ஒரு பெரியவர் தன் எதிரே வந்து தோன்றி, தான் பரகால நாயகியாக பாசுரம் விண்ணப்பிக்கும் நிலை.


"திரிபுரம் மூன்று எரித்தானும்" என்று பதிகம் ஆரம்பமாயிற்று!


எம்பெருமான் தானும், நரசிங்க உருவாகவும், மாவலி வேள்வியில் மண் அளந்த வாமனனின் உருவாகவும், காளமேகத்தின் நிறமான கருமை கண்ணனாகவும், பரமபதத்தில் உள்ள பரமபதநாதனாகவும், பெருங்கடலாகவும் எம்பெருமான் தானும் சேவை சாதிக்க ஆழ்வாரும் பாசுரம் மேலே அருளிச்செய்தார்.

இதிலே நாம் எம்பெருமான் பெருங்கடலாக சேவை சாதித்த நிலையை எடுத்து கொள்வோம்.


திருமங்கையாழ்வார், " நீண்ட மலைகளும், மாமணியும், மலர்மேல் மங்கையும், சங்கமும் தங்குகின்ற,அலைகடல்" என்று அருளிச்செய்கிறார்.


கடலை போன்றே, எம்பெருமானின் நிறமும் நீர்மை நிறைந்தபடியால் கருமையாகவே உள்ளது.


கடலில் மலைகள் இருக்குமா போலே, எம்பெருமானின் திருத்தோள்களும் நீண்ட மலைகளை போலவே உள்ளது. (இன்றளவும் கடலுக்கு அடியில், மலைகள் உள்ளதை ஆராச்சியாளர்கள் சொல்வதை கொண்டு அறிகிறோம்)


கடலில் ரத்தினங்கள் இருக்கும், இங்கும் “குரமாமணிப்பூண்” எனப்பட்ட ஸ்ரீகௌஸ்துபத்தையுடையவன் எம்பெருமான்.


கடலைக் கடைந்தபோது அதில் இருந்து பிராட்டி அவதரித்தாள் என்பது வரலாறு. இதனால் மலர்மங்கை தங்கப்பெற்றது கடல். எம்பெருமானும், அகலகில்லேன் இறையும்மென்று அலர்மேல் மங்கையுறை மார்பன்.


சங்குக்கு உறைவிடம் கடல். எம்பெருமானும் இடக்கையில் சங்கமுடையான். ஆக இப்படிகளாலே கடலைப் போன்றுள்ளவன் எம்பெருமான்.


ஆக,பெருங்கடல் போன்ற எம்பெருமானை நாம் அடைய முடியுமா ? பெருங்கடலின் நீரை நம்மால் பருக முடியுமா ?


கடலில் நீராடும் முன்பு, நம்மை ஆசமனம் செய்ய சொல்கிறார்கள். அப்போது நாம் பருகும் நாம், அது தொண்டையில் உள்ளே செல்ல நாம் எவ்வுளவு கஷ்ட படுகிறோம் ?


இப்படி உப்பின் தன்மை நிறைந்த, கடல் நீரை நாம் எப்படி சுவைப்பது ? பார்ப்போமே அடுத்த பதிவில்....


பிள்ளைலோகம் இராமானுசன்.
 
Back
Top