உறையூர் சேர்த்தி சேவை

வைணவ தலங்களில் முதன்மையாகத்திகழும் ரங்கநாதர் திருத்தலமாம் ஸ்ரீரங்கத்தில் பங்குனி மாதம் நடைபெறும் "ஆதி பிரம்மோற்சவம்' விபீஷணனால் தொடங்கப்பட்டது

இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு நம்பெருமாள் செல்லும்போது புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி கொடுப்பார்.

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார்.பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் சேவை சாதிப்பார்கள்.

ஆதி பிரம்மோற்சவ விழாவில் தாயாரையும் பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

பரந்தாமன்தான் பரம்பொருள். எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தால் கூட, இந்த ஒரு நாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டிற்கொருமுறை, அருள்பாலிப்பது அற்புதமான ஒரு நிகழ்வு. இந்த நாள் ஒரு இனிய நாள்..! பரிவு பொங்கும் பெருநாள்..! கற்பகத்தரு போன்று வேண்டியது நல்கும் நன்னாள்..! இதனை நன்கறிநதவர் உடையவர். இந்நாளில்தான் அவர்தாம் இயற்றிய, ஸ்ரீரங்க்கத்யம், வைகுண்டகத்யம், சரணாகதி கத்யம் ஆகிய ஒப்பற்ற மூன்று இரத்தின பாமாலைகளை திவ்யதம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, திருப்பாதங்கள் சரணடைந்து, தமக்கு பரமபதம் பிரார்த்தித்து, கிடைக்கப்பெற்றார்.

இந்த உற்சவமானது, பெரிய பெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகின்றது. கமலவல்லித் தாயாரின் அவதார நட்சத்திரமான பங்குனிஆயில்யம் (6ம் திருநாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9ம் திருநாள்) பெரியபிராட்டியாரோடு சேர்த்தி கண்டருளியும், தம்மைதரிசிப்பவர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையுடனும், அன்பு மிகுந்து அருள்பாலிக்கும், வேண்டிய வரமெல்லாம் நல்கும், ஒரு கருணைமிக்க உற்சவம். இந்த திருநாளின்போது, திவ்யதம்பதிகள் சூக்கும்மாக நமக்கு சிலவிஷயங்களைத் தெளிவுப்படுத்துகின்றனர். இது இன்றளவும் நமக்கு ஏற்புடைதயதாகயுள்ளது. இதனை நாமறிந்து வாழ்வோமானால் என்றும் நன்மையுண்டு.

அவையாவன.... என்னதான் கருத்து வேறுபாடுகள் கணவன், மனைவிக்குள் ஏற்பட்டாலும், யாரேனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன்மீண்டும் இணைதல் வேண்டும். பிரிவு ஒன்றே தீர்வு எனக் கருதவேண்டாம். முடிந்தவரை பொறுமை காட்ட வேண்டும். சான்றோர்கள் அறிவுரையை ஏற்க வேண்டும். இதனை நம்மாழ்வாரின் அறிவுரையினைத் தாயார் ஏற்று, நம்பெருமாளுடன் சேர்த்தி கண்டருளுவதின் மூலம் நமக்கெல்லாம்உணர்த்துகின்றார்.
அனைவரிடத்திலும் அன்பாகயிருக்கவேண்டும். எப்போதும் குற்றமேக் காணக்கூடாது. கோபித்தல் கூடாது.

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே..!
பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே..!
 
Back
Top