• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இந்துக் கடவுள்களின் கடற்படைத் தாக்குதல&#

Status
Not open for further replies.
இந்துக் கடவுள்களின் கடற்படைத் தாக்குதல&#

ஆதி காலத்தில் கடற்பயணத்துக்கு ஊறுவிளைவித்த கடற் கொள்ளையர்களை இந்துக் கடவுள்களான கந்தனும் கண்ணனும், விஷ்ணுவும் தாக்கி அழித்தனர். இது தவிர அகத்தியர், அர்ஜுனன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது கடற்கொள்ளையர் என்ற பெயரைப் பயன்படுத்தாமல் காலகேயர்கள், நீவாடகவசர்கள், சகரர்கள், பாஞ்சஜன அசுரர்கள் என்ற பல பெயர்கள் படுத்தப்பட்டன. இந்த அசுரர்கள் அனைவரும் கடலை உறைவிடமாகக் கொண்டவர்கள். இவ்வாறு அழிக்கப்பட்டவர்களில் சூரபத்மனும் ஒருவன்.

இது தொடர்பான விவரங்களைப் பார்ப்பதற்கு முன், கடலுக்கும் இந்துக்களுக்கும் உள்ள தொடர்புகளைக் காண்போம். இந்துக்களும் கடலும் இணை பிரிக்க முடியாதவர்கள். கடலைக் கடைந்துதான் அமிர்தம் எடுத்தனர். விஷ்ணுவின் முதல் மூன்று அவதாரங்கள் கடல் தொடர்பானவை. மச்சாவதாரம், கூர்மாவதாரம்,வராஹாவதாரம் ஆகிய மூன்றும் அசுரர்களை அழிக்க வந்தவை. கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்ட வேதம் முதலிய பொக்கிஷங்களை மீட்கவே வராக அவதாரம். அதாவது கடலில் வெகு தூரத்தில் உள்ள தீவில் ஒளித்து வைத்ததை கடலுக்கு அடியில் என்று கூறுகின்றனர். விஷ்ணுவின் வீடே பாற்கடல்தான். கடலில் ஆதிசேஷனில் படுத்துக்கொண்டே உலகைக் காக்கிறார்.

பாற்கடல், அவதாரங்கள் இவைகளை எல்லாம் உருவகங்கள், உவமைகள் என்று கொண்டாலும் கூட கடல் என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்ததால்தான் அதை வைத்து முக்கியக் கதைகள் உருவாயின. நாராயணன் என்னும் சொல்லில் உள்ள நீர் என்ற சொல் தமிழிலும் கிரேக்கத்திலும் உண்டு. கப்பல்(SKap=Skip=ship), கலம் (galleon), நாவ (Navy, Naval) ஆகிய தமிழ், சம்ஸ்கிருத சொற்களே ஐரோப்பிய மொழிகளில் பலவிதமாக உருமாறின.

இது தவிர வேதத்தில் மிக முக்கியமான குறிப்புகள் உள்ளன. வருணன் என்பவனே கடல் தெய்வம் என்பதை ரிக்வேதமும் தொல்காப்பியமும் கூறும். 100 துடுப்புகள் உள்ள கப்பலையும் கடலில் தத்தளித்த பூஜ்ய என்பவனை அஸ்வினி தேவர்கள் மீட்டதையும் வேதம் குறிப்பிடுகிறது. சிந்து சமவெளி முத்திரையில் ,அஜந்தா ஓவியத்தில், பார்ஹுத் சிற்பத்தில், சாதவாஹனர் காசுகளில் கப்பல் படத்தைக் காணலாம்.

காளிதாசர் நாடகத்திலும், அர்த்தசாஸ்திரத்திலும் கப்பல் வணிகர் சொத்து தொடர்பான விதிகள் பற்றிப் பேசுகின்றனர். தமிழ் சங்க இலக்கியத்தில் ஏராளமான கடல் வணிகக் குறிப்புகளும் பருவக்காற்று பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. காளிதாசனின் மேகதூத காவியமும் சங்கப் பாடல்களும் பருவக் காற்றூ துவங்கியவுடன் காதலர்கள் கடற்பயணம் முடிந்து பொருள் ஈட்டி வருவதை தெளிவாகக் கூறுகிறது. சோழ மன்னன் கரிகாலன் கடற் காற்றைப் பயன் படுத்தி கடலில் ஆதிக்கம் செலுத்தியதைப் புறனானூற்றுப் புலவர் பாடுகிறார். சுருக்கமாகச் சொன்னால், இந்து மகா சமுத்திரம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்தியர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது.

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் பல தீவுகளை வென்று புகழ் கொடி நாட்டினர். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி ஒரு கடல் பயணத்தில் உயிர் இழந்தான். பாண்டியன் ஸ்ரீமாறன் வியட்நாமில் முதல் அரசாட்சியை நிறுவினான்.
சமுத்திர குபதனின் பெயரிலேயே சமுத்திரம் என்ற சொல் இருப்பதைக் காணலாம். இந்தியாவின் இருபுறங்களிலும் உள்ள கடல் பகுதியில் முழுக்க முழுக்க குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதை இது காட்டுகிறது.

கடற்கொள்ளையர்கள் மண்டை ஓடும் கத்தியும் போட்ட கொடியைப் பயன்படுத்துவர். பல்லவ மன்னர்கள் பரமேச்வர வர்மன், நந்தி வர்மன் முதலிய பல மன்னர்கள் இது போன்ற கட்வாங்க கேதுவைக்/ கொடியைப் பயன்படுத்தினர். ஒருவேளை சேரன் செங்குட்டுவன் போல அவர்களும் கடற் கொள்ளையர்களை நிர்மூலம் செய்ததன் அடையாளமாக இதை வைத்திருந்திருக்கலாம்.

சூரபத்மன் கடற்கொள்ளையனா?

தேவர்களை சிறைவைத்த குற்றத்திற்காக சூரபத்மன் என்ற அசுரனைக் கந்தன் என்னும் முருகன் கொன்றதாக கந்த புராணம் கூறும். அவன் கடலில் மாமரமாக நின்றான் என்பது, ஒரு தீவில் மாமரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்தான் என்பதைக் குறிக்கும். இறுதியில் அவனது ஆட்கள் சரண் அடைந்து சமரசத்தை நாடவே அவனது சின்னமான சேவலையும் மயிலையும் முருகன் தனது கொடியில் பொறித்தான் என்றும் கூறுவர்.

சூரபத்மன் கடலில் பல சட்ட விரோத, தர்ம விரோத செயல்களைச் செய்த கடற்கொள்ளையன் என்பதை உறுதி செய்யும் விதத்தில் வேறு ஒரு எடுத்துக் காட்டு சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் வருகிறது. எப்படி மாமரம் சூரனுக்குக் காவல் மரமாக விளங்கியதோ அதே போல கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட கடற்கொள்ளையர்களை சேரன் செங்குட்டுவன் அடக்கியதைப் பதிற்றுப் பத்துப் பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் விரிவாகக் காணலாம்.

கடலைக் “குடித்த” அகத்தியர்

அகத்தியர் கடலைக் குடித்தவுடன் அசுரர்கள் வெளியே வந்தனர் என்றும் அவர்களை தேவர்கள் கொன்றனர் என்றும் புராணங்கள் கூறும். இதன் பொருள் அகத்தியர் தலைமையில் பெரும் கடற்படைத் தாக்குதல் நடந்தது. உடனே அரக்கர்கள் ஓட்டம் பிடித்தனர் என்பதே. அகத்தியரும் கவுண்டின்யரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து அரசர்களின் ஆட்சிக்கு வழிவகுத்தனர். விருத்திராசுரன் என்பவன் தலைமையில் காலகேயர்கள் அட்டூழியம் செய்யவே விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர் கடல் பொறியியலில் வல்ல அகத்தியனைத் தேடிப் போகும்படி கூறவே தேவர்கள் அகத்தியர் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.

இரண்யாக்ஷன் என்ற அசுரனைக் கொன்று கடலுக்கடியில் அவன் ஒளித்துவைத்த செல்வங்களை விஷ்ணு கொண்டுவந்தார். இந்த வராக அவதாரக் கதையும் கடற்கொள்ளையருக்கு எதிரான போராட்டத்தையே குறிக்கும்.

அர்ஜுனன் துவாரகைத் துறைமுகத்துக்கு அருகில் வாலாட்டி வந்த நீவாடகவசர்களை ஒழித்தான் என்று பாரதமும் பாகவதமும் பேசும்.இந்த வகைக் கடற்கொள்ளையர்கள் இந்தியப் பெருங்கடல் முழுதும் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி இருக்க வேண்டும். ஏனெனில் ராவணன் கூட அவர்களுக்குப் பயந்து அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டதாகப் புராணங்களில் படிக்கிறோம்.

அகத்தியர் காலகேயர் என்னும் கடல் அசுரர்களை ஒழித்தார். கிருஷ்ணர் பாஞ்சஜனா என்ற கடற்கொள்ளையர்களை அழித்து பாஞ்சஜன்யம் என்ற சங்கை கையில் வைத்துக் கொண்டார். பாண்டவர் ஒவ்வொருவரும் ஒரு விஷேச சங்கு வத்திருந்ததை கீதையின் முதல் அத்தியாயத்தில் காணலாம். எப்படி முருகன் சேவலையும் மயிலையும் சின்னமாக வைத்தாரோ அதே போல கண்ணன் பாஞ்சஜன்யத்தை கொள்ளையரை ஒழித்த நினைவுச் சின்னமாக வைத்துக் கொண்டான். கண்ணனின் ஆசிரியர் பெயர் சாந்தீபனி. அவருடைய மகனை பாஞ்சஜனன் கடத்தி கடலுக்குக் கொண்டு போகவே கண்ணன் அந்த அசுரனைத் தாக்கினான்.
பகீரதன் கதையில் வரும் சகரர்கள் 60,000 பேரை அழித்த கதையையும் இப்படிக் கருதலாம். இவை எல்லாவற்றிலும் கடல் சம்பந்தப் பட்டு இருப்பதைக் கவனிக்க வேண்டும். நிலத்தில் இருந்த அசுரர்கள் வேறு, கடலில் இருந்த கடற் கொள்ளையர் வேறு என்பது காலகேயர், நீவாடகவசர், பாஞ்சஜனாக்கள், சாகரர் என்ற சிறப்புப் பெயர்களால் தெள்ளிதின் விளங்கும். சங்கசூடன் என்ற பெயருள்ள சங்கு அசுரனும் தாக்குதலில் இறந்ததை புராணங்கள் விளக்குகின்றன.

ராமாயணத்தில் சுவர்ண த்வீபம், யவனத்வீபம் ஆகியனவும், புராணங்களில் ஏழு அல்லது ஒன்பது தீவுகளும் சொல்லபட்டுள்ளன. இனி வருங்காலத்தில் வேத, உபநிஷத, புராண, இதிஹாசங்களில் வரும் அசுரர்களை 1.நில அசுரர்கள், 2.நீர் அசுரர்கள், 3.வான அசுரர்கள் என வகைப் படுத்தி ஆராய்ந்தால் புதுப்புது உண்மைகள் வெளியாகும்.

*******************************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top