அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

Status
Not open for further replies.
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் - 613 501, தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 5- இரவு 9 மணி. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 3- இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

Ph:91- 4362- 267740.

T_500_533.jpg



தல சிறப்பு:

இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பொது தகவல்:

பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோயில் அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வெளிமண்டபம் கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது. சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது.

மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன. இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும். புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

பிரார்த்தனை


அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும். இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.

தவிர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் , கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள்,உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் , உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்.

தலபெருமை:

சுயம்பு அம்மன் : மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.

விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன். அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.

உள்தொட்டி நிரப்புதல் : அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.


குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது

இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோயில் இது.

தல வரலாறு:

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.


Mariyamman Temple : Mariyamman Temple Details | Mariyamman- Punnainallur | Tamilnadu Temple | ??????????
 
Status
Not open for further replies.
Back
Top