அருந்ததி ராய் - எழுத்தாளர் ஜெயமோகன்
அருந்ததி ராய் என்ற பேரை நீங்கள் முதன்முதலாக எப்படி கேள்விப்பட்டீர்கள்? 1996 ல் அவருடைய வெளிவராத நாவலுக்கு, ஆம் முதல்நாவலுக்கு, ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் ஐந்து லட்சம் பவுண்டுகள் [மூன்றரைகோடி ரூபாய்] முன்பணமாக கொடுத்தது என்ற ஆங்கில ஊடகச் செய்திகள் வழியாகத்தான் இல்லையா?. ஆம், மணிமுடியும் வெற்றிச்சிரிப்புமாக ,உக்கிரமான விளம்பரவேகம் மூலம் நம் முன் வந்து நின்றவர்தான் அருந்ததிராயும்
இந்திய மக்களைப்பற்றி இந்தியரால் எழுதப்பட்ட அவரது இலக்கியப்படைப்பு இங்கே உள்ள வாசகர்களாலும் விமர்சகர்களாலும் வாசிக்கப்பட்டு விரும்பப்பட்டு ,விவாதிக்கப்பட்டு, செய்தியாக ஆகவில்லை. மாறாக அந்தப் பெருந்தொகை பற்றிய சேதி மீண்டும் மீண்டும் ஊடகங்களில் பேசப்பட்டு பிரமிப்புகள் உருவாக்கப்பட்டு அருந்ததிராய் பிரபலப்படுத்தப்பட்டார்.
அதன்பின்னர் நாவல் வெளிவந்தது. நாவல் உடனடியாக இந்தியாவில் உருவாக்கியது ஏமாற்றத்தையே. இந்திய மொழிகளில் அதைவிட பலமடங்கு நுட்பமும், அழகும், விரிவும் கொண்ட ஆக்கங்களை வாசகர்கள் வாசித்திருந்தார்கள். இந்தியமொழியிலும் வாசிக்கும் எந்த வாசகர்களிடமும் இன்றுவரை அந்நாவல் எந்த பாதிப்பையும் உருவாக்கவில்லை. மகத்தான வங்க நாவல்களுடன் அதை ஒப்பிடுவதே கஷ்டம். ஆனால் நியூயார்க் டைம்ஸ், கார்டியன் முதலிய அமெரிக்க ஊடகங்கள் அந்நாவலை ஒரு இந்தியகிளாசிக் என்று சொல்லிப் பிரச்சாரம்செய்தன. அதை இந்தியாவின் இலக்கிய அடையாளமாக முன்வைத்தன.
அந்நாவல் எந்த அலையையும் இங்கே உருவாக்காத நிலையில் அந்நாவலுக்கு 1996 ஆம் வருடத்துக்கான புக்கர் விருது வழங்கப்பட்டது. அச்செய்தி மூலம் உடனடியாக அந்நாவல் மீண்டும் இந்திய ஊடகங்களில் தூக்கிப்பிடிக்கப்பட்டது. அந்நாவல் ஆழமற்றது என்று தேர்ந்த விமர்சகர்கள் மீண்டும் மீண்டும் இந்திய ஊடகங்களில் சுட்டிக்காட்டியும்கூட இந்திய ஆங்கில ஊடகங்களின் இதழாளர்கள் அதைப்பற்றித் தொடர்ச்சியாக எழுதி அதை நிலைநாட்டினார்கள்.
இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் அருந்ததி ராய் அளவுக்கு செயற்கையாக தூக்கி நிறுத்தப்பட்ட எந்த எழுத்தாளரும் இல்லை என்றே சொல்லமுடியும். அத்தனை பேசப்பட்டும்கூட அருந்ததி ராயின் நாவல் முக்கியத்துவம் பெறவில்லை. அதன் இந்திய மொழி மொழியாக்கங்கள் கடுமையான ஏளனத்தை பெற்றுத்தந்தன, ஆகவே அருந்ததி மேற்கொண்டு இந்திய மொழிகளில் இந்நாவல் மொழியாக்கம்செய்யப்படவேண்டியதில்லை என்றே முடிவெடுத்தார். [தமிழில் குப்புசாமி மொழியாக்கம் செய்த முழுமையான கைப்பிரதி அருந்ததி ராய் அனுமதியளிக்காததனால் அப்படியே இன்னும் இருக்கிறது]
மேலைநாட்டு இலக்கிய விமர்சகர்களில் பலர் இந்நாவல் ஆழமற்றது,செயற்கையான கருத்துக்களாக கட்டமைக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார்கள். இணையத்தில் தேடினாலே பல கட்டுரைகளை காணமுடியும். புக்கர் பரிசுக்குழுவில் இருந்த விமர்சகர் கார்மர் கலிலி [Carmen Callil ] கூட இந்நாவலை தாங்கிக்கொள்ள முடியாதபடி ஆழமற்ற ஒன்று என்று சொன்னது அன்றே இங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால் மேல்நாட்டு வாசகர்கள் முன் இத்தனை தீவிரமான பிரச்சாரத்துடன் எந்த இந்திய நாவலும் முன்வைக்கப்பட்டதில்லை. அவர்கல் கவனத்துக்கு வந்த முதல் இந்தியநாவல். அவர்கள் அறியாத இந்திய அன்றாட வாழ்க்கையின் சித்திரம் அதில் இருந்தது. ஆகவே நாவல் அங்கே ஒரு பெரிய வணிக வெற்றியாக அமைந்தது.
ஊடகங்கள் மூலம் அருந்ததி ராய் இலக்கியவாதியாக இங்கே அடையாளம்பெற முடியவில்லை. ஆனால் அவரது முகம் மட்டும் பிரபலமடைந்தது. அவரைப்பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. அருந்ததி அரசியல் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். முதலில் நர்மதா அணைக்கு எதிராக மேதாபட்கர் நடத்திவந்த போராட்டங்களில் தானே சென்று பங்கெடுத்தார். நீடித்த, முறையான காந்திய போராட்டமாக இருந்த அந்த போராட்டத்தை ஊடகப்போராட்டமாக ஆக்கியதே அவரது பங்களிப்பு. அதன்பின் மதச்சார்பின்மைக்காக, அதன்பின் இடதுசாரி தீவிரவாதிகளுக்காக, கடைசியாக இப்போது கார்ஷ்மீர் பிரிவினைக்காக போராடுகிறார்
அருந்ததியின் போராட்டங்களை சாதாரணமாக பார்த்தாலே அவை எப்படிப்பட்டவை என்பது புரியும். மேதா பட்கர் நடத்தும் போராட்டங்கள் போல அவை மக்களை திரட்டி நடத்தப்படுபவை அல்ல. அருந்ததிக்கும் மக்களுக்கும் எந்த வகையான தொடர்பும் இல்லை. அவர் எப்போதும் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ஒரு கிளர்ச்சியுடன் வலியச் சென்று சேர்ந்துகொள்கிறார். அந்தக்கிளர்ச்சியை சார்ந்து ஓர் ஊடக அலையை உருவாக்குகிறார். எப்போதும் ஆங்கில ஊடகங்களில் இடம்பெறுவது மட்டுமே அவரது நோக்கம். அவரது போராட்டங்கள் அனைத்துமே ஊடகங்களுக்கு தீனி போடுவதாக மட்டுமே அமைகின்றன. அவர் ஆதரிக்கும் அமைப்புகள் தங்களுக்கு ஊடக முக்கியத்துவம் கிடைப்பதற்காக மட்டுமே அவரை பயன்படுத்துகின்றன. மேதா பட்கரும் அதே பிழையைச் செய்தார்.
சென்ற பதினைந்தாண்டுகளில் அருந்ததி ராய் மேலைநாடுகளின் பல தரப்புகளால் கொண்டாடப்படுகிறார். அவருக்கு எந்த இந்திய இலக்கியமேதைக்கும் அளிக்கப்படாத அங்கீகாரங்களும் விருதுகளும் அளிக்கப்படுகின்றன. பல்கலைகளில் அவர் பேருரைகள் ஆற்றுகிறார். இந்த பரிசுகளின் பின்புலங்கள் எல்லாமே ஆச்சரியத்துக்குரியவை. உதாரணமாக 2004ல் அருந்ததி ராய்க்கு ’சிட்னி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டது, அகிம்சையை பிரச்சாரம்செய்தமைக்காக! அவர் அப்போது நக்சலைட்டுகளையும் காஷ்மீர் ஆயுதப்போராட்டத்தையும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார்!
இந்தியாவில் எழுத்தாளர்கள் சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டதே இல்லையா? இரு உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று இலக்கியமேதையான டாக்டர் சிவராம் காரந்த். தொண்ணூறு வயது வரை சமூகப்போராளியாக விளங்கியவர் அவர். சூழியல் சார்ந்த போராட்டங்களைத் தலைமை வகித்து நடத்தியவர். இன்னொருவர் மகாஸ்வேதா தேவி. ஐம்பது வருடங்களாக வங்காள ஆதிவாசிகளான லோதாக்கள் மற்றும் ஷாபாக்களுக்காக அவர் பெரும்பணியாற்றி வருகிறார். இந்திய அரசு ஆதிவாசி நிலங்களைத் தொழிற்சாலைகளுக்குக் கொடுப்பதற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார்
இவர்கள் எவருக்கும் இல்லாத முக்கியத்துவம் இந்த ’ஒரேநாவல் அற்புத’த்துக்கு மட்டும் ஏன் வருகிறது? எதற்காக இவரை மட்டும் இந்தியாவின் ஒரே இலக்கியவாதியைப்போல, இந்தியாவின் ஒரே சமூகப்போராளியைப்போல இந்திய ஆங்கில ஊடகங்கள் சித்தரிக்கின்றன? இந்த இடத்துக்கு அருந்ததி ராய் எப்படிச் சென்றார்? அவர் ஏறிச் செல்லவில்லை. அவரை தூக்கி அங்கே அமர்த்தினார்கள். இந்திய ரசனைமீதும் இந்திய அரசியல் மீதும் அவர் நிறுவப்பட்டிருக்கிறார்.
நம்முடைய இலக்கிய ரசனையை நாமே தீர்மானித்துக்கொள்ளக்கூடாதா என்ன? ஐந்தாயிரம் வருட இலக்கிய மரபுள்ள ஒரு தேசத்தின் இலக்கியக்குரல் எது என தீர்மானிக்க அதற்கு உரிமை இல்லையா என்ன? அதை மேலைநாட்டு ஊடகங்களும்,இலக்கியவணிகர்களும் தீர்மானித்து நம் மீது சுமத்த வேண்டுமா என்ன? நம்முடைய இலக்கியப்படைப்பை நாம் வாசித்து விவாதித்து ரசித்து முடிவெடுத்தபின்னர் அதை அல்லவா நம் இலக்கியமாக அன்னியர் வாசிக்க வேண்டும்?
ஆரோக்கிய நிகேதனமும் [தாராசங்கர் பானர்ஜி] கோதானமும் [பிரேம்சந்த்] பாதேர்பாஞ்சாலியும் [விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய] அப்படி இந்திய இலக்கியங்களாக ஆனவை. அவை அடையாத முக்கியத்துவம் இந்த நூலுக்கு எப்படி வந்தது? இது எப்படி நம் இலக்கிய முகமாக ஆக முடியும்? இந்த எளிய கேள்வியைக்க்கூட நம் ஊடகங்கள் கேட்டுக்கொள்வதில்லை. நம் இளைய தலைமுறைக்கு எழுத்தாளர், போராளி என்றால் அருந்ததி ராய் என்றாகிவிட்டிருக்கிறது
யார் அதைச் செய்தார்கள்? எதற்காக? இந்தியாவின் இலக்கியங்களாக மேலைநாடுகள் எந்தெந்த நூல்களை அங்கீகரித்துள்ளன என்று பார்த்தாலே ஒரு பொதுவான சித்திரம் எளிதில் கிடைக்கும். அருந்ததிராய் முதல் அரவிந்த் அடிகா வரை அந்த பொதுத்தன்மையைப் பார்க்கலாம். அவை இந்தியப் பண்பாட்டின் மீது அழுத்தமான கறை ஒன்றை பூசக்கூடியவை. இந்தியாவின் இன்றைய நிலையை விமர்சிப்பதைச் சொல்லவில்லை. இந்திய அமைப்பை எதிர்ப்பதையும் சொல்லவில்லை. சமூக அமைப்புமீதும் மரபு மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்காமல் சமகால இலக்கியம் உருவாவதில்லை. இந்நாவல்கள் முன்வைப்பது அதை அல்ல.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கிறித்தவ இறையியலாளரும், தத்துவவாதியுமான ஆல்ஃப்ரட் சுவைட்சர் சொன்னார். ’இந்தியா தத்துவத்திலும் இலக்கியத்திலும் பல வெற்றிகளை அடைந்துள்ளது. ஆனால் அதன் சிந்தனையும் பண்பாடும் ஒட்டுமொத்தமாகவே ஒழுக்கரீதியான, தார்மீக ரீதியான குறைபாடுகள் கொண்டவை’ இந்த கோணத்தையே கிறித்தவ அமைப்புகள் ஐரோப்பாவில் பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த கோணத்தை ஏற்று மேலும் பிரச்சாரம்செய்யும் நாவல்களை மட்டுமே சராசரி மேலைமனம் ஏற்கிறது.
இந்தியாவை மனிதப்பண்பில்லாத காட்டுமிராண்டிகளின் தேசமாக நெடுங்காலம் முன்வைத்து ஐரோப்பாவில் பிரச்சாரம்செய்தன கிறித்தவ அமைப்புகள். மதமாற்றத்துக்கான நிதியை பெறுவதே நோக்கம். இன்று அந்தப்பிரச்சாரம் செல்லுபடியாகாது. ஆகவேதான் சுவைட்சரின் நிலைபாட்டை எடுக்கின்றன. அருந்ததி ராய் மட்டுமல்ல அனேகமாக மேல்நாட்டில் வணிகவெற்றிபெறும் நாவல்கள் அனைத்துமே இந்த சாராம்சம் கொண்டவை.
பல நாவல்களில் இந்த விஷயம் பூடகமாக இருக்கும். இந்தியப் பண்பாடு சார்ந்த பற்றுள்ள, வேருள்ள ஒரு கதாபாத்திரம் பலவிதமான அறச்சிக்கல்களை அடையும், தன்னை அவற்றில் இருந்து விடுவித்துக்கொள்வதற்காக இந்தியப்பண்பாடு சார்ந்த கட்டுகளை கைவிட்டு ’சுதந்திரமான’ மனிதனாக பரிணாமம் கொள்ளும். இதை மேற்குக்கும் கிழக்குக்குமான போராட்டம் என்பது போன்ற பல பாவலாக்கள் வழியாக அந்நாவல்கள் சொல்லும்.
அருந்ததி ராய் இந்தவகையான பூடகப்படுத்தல் கூட செய்யவில்லை. அந்நாவல் நேரடியாகவே இந்தியப் பண்பாடு மீதான நுண் தாக்குதல்களினால் ஆனது. இந்தியப்பண்பாடு ஒட்டுமொத்தமாகவே மனித சமத்துவம் அற்றது, ஆகவே அறமற்றது என அந்நாவல் மீண்டும் மீண்டும் பேசுகிறது. மேலைநாட்டு பண்பாட்டுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் மையக்கதாபாத்திரம் இந்தியப் பண்பாட்டின் ’அழுக்கி’ல் இருந்து மீறி மானுட சமத்துவம் நோக்கிச் செல்கிறது.
இந்திய சிந்தனை மேல் மேலை ஊடகங்களால், அந்த ஊடகங்களை ஆளும் அதிகார சக்திகளால் சுமத்தப்பட்டிருக்கும் அருந்ததி ராயின் அரசியல் என்ன? நேரடியாகவோ அப்பட்டமாகவோ அவர் அதை முன்வைப்பதில்லை. இந்தியாவின் அறிவுஜீவிகள் பொதுவாக அங்கீகரிக்கும் அத்தனை அரசியல் சரிநிலைகளுடன் கலந்து நுட்பமாக அதை செயல்படுத்தி வருகிறார். அவரை மிகவிரிவாக பகுப்பாய்வுசெய்துதான் புரிந்துகொள்ள முடியும்.
அவரது நிலைப்பாடுகள், வாதங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அவர் ஒரு கலகக்காரர், புரட்சிக்காரர் என்ற சித்திரமே உருவாகிறது. இதை நம்பும் இடதுசாரிகள் அவர் முதலாளித்துவ ஊடகங்களின் சிருஷ்டி என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அவரை இன்று வரை தூக்கி நிறுத்தி இருப்பது அவருக்கு இருக்கும் ‘உலகப்புகழ்’ என்ற மாயை. அந்த மாயையை உருவாக்கியவை மேலை ஊடகங்கள்.
அருந்ததி ராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு. ஏன்? இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். அருந்ததி எந்நிலையிலும் சீனாவுக்கோ மிஷனரிகளுக்கோ எதிரான எதையும் சொல்வதில்லை. இவ்விரு சக்திகளும் வடகிழக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பரவி இடதுசாரி தீவிரவாதமாக மாறியிருக்கிறது. அருந்ததி இந்த இரு சக்திகளின் ஊடகமுகம்.
ஆம், அருந்ததியை முதலில் ‘உலகப்புகழ்’ பெறச்செய்து, பின் நம் மீது சுமத்தி, நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச் சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும். அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்