அயன் ராஜபார்ட் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா & சுந்தராம்பாள் ...!!!
- திரு. செங்கோட்டை ஸ்ரீராம்
4
1921 லிருந்தே கிட்டப்பா தேசீய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அதற்கு அடையாளமாக கதர் உடுத்தத் தொடங்கினார். 1921 இல் திலகரின் நிதிக்காகவும் 1923 இல் மதுரையில் கதர் நிதிக்காகவும் 1924 இல் திருநெல்வேலியில் தேச பந்து தாசிடம் கட்சிக்காகவும் 1930 சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் அவர் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். உப்பு சத்தியாக்கிரகத்துக்காக அவர் தம் பேனாவை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் ஏலம் விட அக்காலத்திலேயே அது 50 ரூபாய்க்கு ஏலம் போனது. அவர் நடித்த ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் காந்தி குல்லாயுடன் காந்திஜிக்கு பிரியமான ""ரகுபதி ராகவ ராஜாராம்'' பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
விதி விளையாடத் தொடங்கியது.
"கிருஷ்ணலீலா நாடகத்தைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறியும் கேட்காமல் சுந்தராம்பாள் அந்த நாடகத்தைக் காணச் சென்றதால் கிட்டப்பா கோபித்துக் கொண்டு சென்று விட்டார்'' என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. இருவருக்குமிடையே கருத்து வேற்றுமைகள் மெல்ல மெல்ல தலைதூக்கின. இடைவெளி அதிகமாயிற்று.
எதிர்பாராத சில சூழல்கள், கிட்டப்பாவிற்கு ஏற்பட்ட சில தவறான நட்புகள், சில புதிய பழக்கவழக்கங்கள், இருதரப்பிலும் ஏற்பட்ட சில வீண் பிடிவாதங்கள் போன்றவை ஒன்று சேர்ந்து அவர்களிருவரையும் பிரித்து விட்டது.
1926 இல் கிட்டப்பாவின் தாயார் மறைந்தார். 1927 இல் தமையனாரும் தாயாரைப் பின் தொடர்ந்தார். 1928 இல் தன் ஒரே குழந்தையைப் பறி கொடுத்தார். அவருக்காகவே வாழ்கின்ற சுந்தராம்பாளும் அருகில் இல்லை. அடி மேல் அடி! இவ்வாறு நாடக மேடையில் ஈடு இணையற்ற பாடகராக, அயன் ராஜபார்ட் நடிகராகத் தளராது நின்று செயலாற்றிய அம்மாபெரும் நடிகர் வாழ்க்கைப் போராட்டத்தில் தளர்ந்து நின்றார். மனிதர்கள் தோற்ற இடத்தில் விதி வென்றது.
1932ஆம் ஆண்டு இறுதியில் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் கிட்டப்பா செங்கோட்டையில் தங்கியிருந்த போது நடந்த நிகழ்ச்சியொன்றை நேரில் கண்டு வியந்த திரு. ஏ.எஸ். நாராயணன் இந்தச் செய்தியைச் சொன்னார். இவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருபவர். (வயது 98ஐக் கடந்தவர். சென்னை மந்தைவெளியில் வசித்துவருகிறார்.)
""நடராஜர் கோயில் இருக்கின்ற ஊர்களில் மார்கழி திருவாதிரையன்று சுவாமிக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அதில் எங்கள் ஊரும் ஒன்று.
""1929 & 1933களில் கிட்டப்பா வருடந்தோறும் தனி சிரத்தை எடுத்து நாதசுர வித்துவான்களையெல்லாம் வரவழைத்து உத்ஸவத்தைச் சிறப்பிப்பது வழக்கம். வழக்கம் போல் 1932 உத்சவத்தன்றும் ஊர்வலம் வந்தது. பச்சை சாத்தி சப்பரம் ஊர்வலமாகச் சென்று மத்தியானம் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தது. கிட்டப்பாவும் இருந்தார். அந்த வேளையில் கிட்டப்பா பாட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தோம். மறு நிமிடம் பாடத் தொடங்கினார்.
""முதலில் ""பட முடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனும் விருத்தமும், தொடர்ந்து ""மார்கழி மாதம் திருவாதிரை நாள் ""பாடலும் பாடி முடிந்ததும் நாடக ஸ்டேஜில் விழுவதுபோல் சுவாமி முன் வீழ்ந்தார். ஒரே ஆஹாகாரம்! எங்களுக்கெல்லாம் சிதம்பரம் நடராஜப் பெருமாளின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உணர்வே ஏற்பட்டது'' & என்றார் நாராயணன்.
இறைவனின் சன்னிதானத்தில் நின்று கொண்டு ""ஐயனே! படமுடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனக் கதறினாரென்றால் அது கடந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் உள்ளக் குமுறலாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. அனேகமாக அதுதான் செங்கோட்டையில் அவர் பங்கு கொண்ட கடைசி நிகழ்ச்சி.
1933 மார்ச். கிட்டப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று. சென்னையில் டாக்டர் பி. ராமராவிடம் சிகிச்சை மேற்கொண்டார். அதன்மூலம் குடல் வெந்திருப்பதும் ஈரல் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. மயிலாப்பூரில் தனி வீடெடுத்துத் தங்கி சிகிச்சை பெற்றார். என்ன தோன்றியதோ... யாரிடமும் கூறாமல் திடீரெனப் புறப்பட்டு செங்கோட்டைக்கு வந்து விட்டார். சிறிது காலம் திருநெல்வேலியில் மாமனார் வீட்டிலும் அதன்பின் சந்திர விலாஸ் மாடி அறையிலும் தங்கினார்.
1933 ஆகஸ்டு 25. அவருக்கு 27 வயது நிறைவு பெறும் நாள். அதன் நினைவாகத் தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் திருநெல்வேலி இந்து கல்லூரிக்காக இலவசமாக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்தார்.
செப்டம்பரில் திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் மயங்கி வீழ்ந்தார். அப்பொழுது அருகில் சுந்தராம்பாள் இல்லை. அன்று அவருடன் நடித்தவர் பிற்காலத்தில் திரையுலக நடிகையாக விளங்கிய m.k. விஜயாள்.
அக்டோபரில் திருமங்கலத்தில் இரண்டு இலவச நாடகங்களை நடத்திக் கொடுத்தார். அதோடு அவரது நாடக வாழ்வின் இறுதித் திரைச் சீலையும் வீழ்ந்தது!
கடுமையான வயிற்றுவலி. டாக்டர் அனந்த நாராயணன் சிகிச்சையளித்தார். சிறிது நிவாரணம் கிடைத்தது. சீரண சக்தியை இழந்து அவதிப்பட்டார்.
1933 டிசம்பர் 2, சனிக்கிழமை பகல் 12 மணி. மீண்டும் வலி. எந்த சிகிச்சைக்கும் அது கட்டுப்படவில்லை. 28 வயதுக்குள் தம் கணக்கை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டு விட்டார்.
அந்த தினம் &
சங்கீத தேவதை வெள்ளாடை உடுத்திய தினம்! தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள நாடக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று குமுறி அழுதார்கள்.
அவர் மறைந்தபோது அவரது இரு மனைவியரும் அருகிலில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
கிட்டப்பா இறந்தபோது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு 25 வயது.
அன்றுமுதல் துறவுக்கோலம்தான்! உடம்பில் வெள்ளாடை. நெற்றியில் வெண்ணீறு. கழுத்தில் துளசி மணிமாலை. உதட்டில் முருகனின் திருநாமம். தம் 25வது வயதிலேயே காலம் அவரைத் துறவியாக்கி விட்டது. அன்றுமுதல் அவர் பால் அருந்துவதில்லை. சோடா குடிப்பதில்லை. சத்துணவு ஏதுமில்லை. நகை அணிவதில்லை. ஆண்களுடன் நடித்ததில்லை. அமாவாசை தோறும் காவிரியில் குளிக்கத் தவறியதில்லை. கலையுலகம் கண்டிராத மிகப்பெரிய சாதனை!
கிட்டப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சுந்தராம்பாள் செங்கோட்டையில் அன்னதானம் அளித்தார்.
கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடித்த பல நாடகங்களும் இன்பியல் நாடகங்களாகவே இருந்த போதிலும் அவர்கள் வாழ்வு மட்டும் துன்பியல் நாடகமாகவே முடிந்தது!
""வீட்டில் அவர் ஒரு நாளும் சாதகம் செய்ததில்லை. ஜென்மாந்திர சாதகம் அவருக்கு. இனி இந்த லோகத்தில் அந்த மாதிரி சாரீரம் யாருக்கும் வராது'' என்பார் சுந்தராம்பாள்.
நாடக மேடையில் அவர் ஒரு பாட்டைப் பாடியபின் யாராவது ""ஒன்ஸ்மோர்'' கேட்டால் கிட்டப்பா பாட மாட்டார். அது அவர் இயல்பு. ஆனால் சுந்தராம்பாள் பாடுவார். அப்பாடல் டூயட்டாக இருந்தால் கிட்டப்பாவும் பாடித் தானே ஆக வேண்டும். எனவே வேறு வழியின்றிப் பாடுவார். பாடியபின் உள்ளே சென்றதும் சுந்தராம்பாளைத் திட்டுவார். இவ்வாறெல்லாம் இருந்தாலும், சுந்தராம்பாள் சிறிது உடல் நலமின்றி படுத்திருந்தால் அவரருகில் உட்கார்ந்து கொண்டு, ""சுந்தரம்! நீ என்னை விட்டுப் போய் விடுவாயோ?'' எனக் கண் கலங்குவார். அவர்களுடைய சங்கீதமும் தெய்வீகம். காதலும் தெய்வீகம்!
கிட்டப்பாவுக்கு 4 கட்டை சுருதி. சில வேளைகளில் 5 கட்டையிலும் ஏன் 6 கட்டை சுருதியிலும் அனாயாசமாகப் பாடுவார். அதே வேளையில் சுந்தராம்பாளின் மத்திம சுருதிக்கும் பாடுவார். சங்கீத வித்துவான்களுக்குத்தான் அந்த நுட்பம் புரியும். திருச்சி கோவிந்தசாமி பிள்ளை, காஞ்சீபுரம் நாயனாபிள்ளை, மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், அரியக்குடி ராமானுஜய்யங்கார், திருவாவடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை போன்ற வித்துவான்களையெல்லாம் அனேகமாக கிட்டப்பா நடிக்கும் நாடக அரங்கின் முதல் வரிசையில் காணலாம். அவர்கள் வருவது நாடகம் பார்ப்பதற்காக அல்ல, கிட்டப்பாவின் வியக்க வைக்கும் அமர கானத்தைக் கேட்பதற்காக!
ஒருமுறை நாடகத்தில் கிட்டப்பாவின் சங்கீதத்தைக் கேட்ட ஒருவர், ""நல்லவேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகக் கொட்டகைக்குள் நுழையாமல் சங்கீத மேடைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ எங்கள் கடையைக் கட்டியிருப்போம்!'' என்று வெளிப்படையாகவே கூறினார். இப்படிக் கூறியவர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்.
முதன்முதலில் ""எவரனி'' எனும் கீர்த்தனையை இசைத் தட்டில் பதிவு செய்தவர் இதே ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்தான். பின்னர் எதிர்பாராத விதமாக கிட்டப்பா பாடிய ""எவரனியை'' அவர் கேட்டிருக்கிறார். உடனே தாம் பாடியதற்காகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, தாம் பாடிய ""எவரனி'' இசைத் தட்டு வெளிவராமலும் தடுத்து விட்டார். கிட்டப்பாவின் ""எவரனி'' முத்தையா பாகவதரை அந்த அளவுக்குக் கவர்ந்திருந்தது.
வேறு யாராவது ஒருவர் பாடிய பாடலை ஒருமுறை கேட்டாலே போதும், அடுத்த விநாடியில் அதனை அப்படியே திரும்பப் பாடும் திறனைப் பெற்றிருந்தார் கிட்டப்பா. ஒருமுறை பியாரேசாகேப் பாடிய கமாஸ்ராகப் பாடலொன்றை அவர் கேட்டார். அன்றைய இரவு நாடகத்தில் அதே பாணியிலேயே அப்பாடலைப் பாடியதைக் கேட்ட பியாரே சாஹேப் கிட்டப்பாவை பாராட்டியதோடு ஒரு தங்கச் செயினையும் பரிசாக அளித்தார்.
1924 இல் வடநாட்டு இசை மேதை பண்டித விஷ்ணு திகம்பரர் சென்னையில் தங்கியிருந்த பொழுது கிட்டப்பா வின் பேகடா ராக ஆலாபனையைக் கேட்டுக் கண்ணீர் மல்க மெய்மறந்து நின்றிருக்கிறார். கிட்டப்பாவின் தெய்வீக இசை ஞானத்துக்குச் சான்று பகர இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். இந்துஸ்தானி பாடகர் புரபசர் கணேஷ் பிரசாதும் அமெரிக்க இசை விற்பன்னர் ஈச்சிம் என்பவரும் கிட்டப்பாவின் இசையில் மயங்கியவர்களுள் சிலர். இவ்வாறு நாடக மேடையில் தூய கர்நாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமை கிட்டப்பாவுக்கு உண்டு. அவருடைய ""கோடையிலே இளைப்பாற்றி'' எனும் வள்ளலாரின் விருத்தமும் ""காயாத கானகத்தே'' எனும் வள்ளி நாடகப் பாடலும் ""எவரனி'' எனும் கீர்த்தனையும் சாகாவரம் பெற்றவையாக இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன.
இவ்வாறு சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த நாடக நடிகராகவும் ஒப்புயர்வற்ற சங்கீத மேதையாகவும் அப்பழுக்கற்ற தேசீய வாதியாகவும் திகழ்ந்தவர் அமரர் எஸ்.ஜி. கிட்டப்பா.
தாம் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த அவருக்கு, இங்கு நினைவில்லமோ மணிமண்டபமோ எதுவும் கிடையாது. தற்போது அவர் அளித்த இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது ஒரு வாசக சாலை (ஸ்ரீமூலம் திருநாள் வாசகசாலை). அதிலாவது, அவருடைய பழைய புகைப்படங்களோ, இசைத்தட்டுகள் எவரிடமாவது இருந்தால் அவர்களிடம் இருந்து பெற்றோ ஒரு நினைவில்லம் அமைக்கலாம். கிட்டப்பாவின் நினைவுகளை வருங்காலத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியாக இது அமையும். கலை உலகுக்குக் கைகொடுக்கும் தமிழக அரசு, ஆவன செய்தால் நாடகவுலகுக்கும் சங்கீத உலகுக்கும் செய்யும் மாபெரும் தொண்டாகவும் அது அமையும்!
- முற்றும் -
கோடான கோடி நன்றிகள் : திரு. செங்கோட்டை ஸ்ரீராம் !!!