• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அப்பருடன் 60 வினாடி பேட்டி

Status
Not open for further replies.
அப்பருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-அப்பர் தேவாரத்திலிருந்து)

வாகீசரே, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற வரியுடன் பதிகம் பாடியவுடம் உமது தீராத சூலை நோய் திர்ந்தது. உமது பணிதான் என்ன?

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே

‘கொலவெறி’ யானையை உங்கள் மீது பல்லவ மன்னன் ஏவிவிட்டானே, எப்படி சமாளித்தீர்கள்?

சுண்ணவெண் சந்தனச்சாந்தும் சுடர் திங்கட் சூளாமணியும்
....................................................
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை

இதைப் பாடியவுடம் மத யானை உங்களை வலம் வந்து வணங்கியதை உலகமே அறியும். மனிதகுலத்துக்கு ஒரு அறைகூவல் விடுத்தீர்களோ?
மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

பெற்றோர்கள் மருள்நீக்கியார் என்றும், சம்பந்தர் அப்பரே என்றும், சிவ பெருமான் நாவுக்கரசு என்றும் அழைத்தனர். கடும் விதியையும் தூக்கி எறியலாம் என்று பாடினீரா?

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டிசைப்ப
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சில பாடச் செங்கன் விடை ஒன்றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வினையைக் கழற்றலாமே.

சமணர்களின் சொற்கேட்டு மகேந்திர பல்லவ மன்னன் உம்மை சுண்ணாம்புக் காளவாயில் போட்டபோது என்ன பாடினீர்?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

அற்புதம் பல செய்த பெரியாரே, இதைப் பாடியவுடன் அந்த வெப்பம் எல்லாம் தணிந்து வெளியே வந்தீர். கல்லைக் கட்டி உம்மைக் கடலில் போட்டானே, அப்பொழுது என்ன செய்தீர்கள்?
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே

திரு அங்க மாலைப் பாடலில் எல்லா உடல் உறுப்புகளையும் சொல்லி பாடல் செய்தீர். மற்றொரு பதிகத்தில் பழமொழி ஒவ்வொன்றையும் வைத்து பாடல் செய்தீர்.ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை வைத்து பாடல் செய்தீர்.நால்வரில் உம் பாட்டில்தான் அதிக தமிழ் மணம் வீசுகிறது.

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்

கங்கைகொண்ட சோழபுர வெளிப் பிரகார புற நடராஜர் சிலை, உம் பாட்டில் உள்ளது போலவே சிரிக்கிறாரே!
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

மனமே படகு, அறிவே துடுப்பு, கோபமே சரக்கு, நமது செருக்கே பாறை என்று உருவகப்படுத்தி பாடினீர்களே, அது என்ன பாட்டு?
மனம் என்னும் தோணி பற்றி மதி என்னும் கோலை ஊன்றி
சினம் என்னும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது
மதனெனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணா
துனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தர் சொன்னார்.
துன்பமில்லாமல் வாழ முடியுமா?

துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பனாயிடும் ஆனைக்கால் அண்ணலே
“நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

“ஞாலம் நின் புகழே மிக வேண்டும்” என்று சிவனைப் பாடிய நீங்கள் யார் யாரை வணங்குவீர்கள்?

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் ஏகாந்தர் அல்லாராகில்
அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

“தோன்றாத் துணைவன்” என்றும் “நினைப்பவர் மனம் கோயிலாகக்கொண்டவன்” என்றும் “ஞானப் பெரும் கடலுக்கு ஓர் நாவாய்” என்றும் சிவனை அற்புதமாக வருணித்த வள்ளலே, கோவில் கோவிலாகச் சென்று செடி கொடிகளை அகற்றி உளவாரப் பணி செய்த உத்தமரே, சிறுவயது விளையாட்டிலும், இளம் வயது காதலிலும் கழிகிறது என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் பாடியதை-------

பாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்ட்டீச் சுரத்துளானே

புனித நீராடலால் மட்டும் பலன் இல்லையா?

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு குமரித் துறை ஆடில் என்
ஓங்கு மாகடல் ஓத நீராடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே

நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை நீவீர் பாடியதன் மூலம் மாணிக்கவாசகர் உங்கள் மூவருக்கும் முன் வாழ்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்கள். “சங்கரா செய போற்றி” என்ற வரிகள் மூலம் ஆதி சங்கரரும் உங்களுக்கு முந்தியவர் என்பதைக் கூறிவிட்டீர்கள். கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் என்பதால் நீவீர் ஜீவன் முக்தர் என்பதையும் எங்களுக்குக் காட்டிவிட்டீர்கள். உங்களைப் பல கோடி முறை வணங்கி வழிபடுகிறோம்.

(மேலும் இருபது பெரியார்களுடன் 60 வினாடிப் பேட்டிகள் உள்ளன. படித்து இன்புறுக)

*************************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top