அனுமன் ஜெயந்தி

praveen

Life is a dream
Staff member
நம் புராணங்கள், ஏழு பேரை, சிரஞ்சீவிகள் (என்றும் நிலைத் திருப்போர்) எனக் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் அனுமன்!
சுயநலமற்ற சேவையால் அனுமனும், அண்ணனாக இருப்பினும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணம் செய்ததில் மகாபலி...

இறைவன் மீது கொண்ட பக்தியினால், எமனையே வென்ற மார்க்கண்டேயரும், மகாபாரதம் எனும் அழியாக் காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்கள் நீங்க அருள்வதால், வியாசர்... தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஏற்று, தாயையே கொன்றதால் பரசுராமரும், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் வீரத்தைக் காட்டி, உயிர் விட்டதால், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும், சிரஞ்சீவி என்னும் நிலையை அடைந்து, காலம் கடந்தும் வாழ்கின்றனர்.

இந்த ஏழு பேர்களில் அனுமனே உயர்ந்தவர். காரணம், சுயநலமின்மை! மனிதர்கள் யாராக இருப்பினும், சுயநலம் என்பது, ஒரு சதவீதமாவது இருக்கத்தான் செய்யும். ஆனால், யாரென்றே தெரியாத ராமனுக்காக, எந்த கைம்மாறும் எதிர்பாராமல், உதவி செய்தவர் அனுமன்.
இதனாலேயே, இலங்கையிலிருந்து தான் மீண்டு வந்ததற்கு அனுமனே காரணம் என, ராமபிரானிடம் நன்றியுடன் குறிப்பிட்டாள் சீதை. பட்டா பிஷேகத்தன்று தனக்கு உதவிய எல்லாருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார் ராமர்.

அப்போது சீதை, 'பிரபு... அனுமனுக்கு ஏதாவது செய்து, நம் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும்...' என்றாள்.
தான் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி, சீதையின் கையில் கொடுத்து விட்டு, மவுனமாக இருந்தார் ராமர். சீதையும், ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவளாய், 'பிரபு... முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்...' என்றாள்.

'பராக்கிரமம், புத்தி, பணிவு யாருக்கு பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு...' என்றார் ராமர். உடனே, அனுமனிடம் முத்தாரத்தைக் கொடுத்தாள் சீதாதேவி.

மனைவி பக்கத்தில் இல்லாத துயரம் மட்டும் தான் ராமனுக்கு! ஆனால், சீதையோ, கணவரைப் பிரிந்ததுடன், காமுகனான ராவணனிடமும் சிக்கி அவதிப்பட்டு, தன் உயிரை விடவும் துணிந்தாள். அத்தருணத்தில் வந்து சேர்ந்தார் ஆஞ்சநேயர்.

திடீரென பொழிந்த மழையால், பட்டுப்போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ, அதுபோல் இருந்தது சீதைக்கு, அனுமனின் இலங்கை வரவு. அவர், லோகமாதாவான திருமகளின் துன்பத்தை போக்கி, நம்பிக்கை தந்தார்.

சில வீடுகளில், கணவர் பாசமாக இருந்தாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, கணவனை பிரிந்து வாழ்வர் சில பெண்கள். அத்தகையோரின் கண்கண்ட கடவுள் அனுமன். அவரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னியருக்கு ராமனைப் போன்ற கணவர் அமைவர்.

அனுமன் ஜெயந்தியன்று அவரை வணங்கி நல்லருள் பெறுவோம்!
 
Back
Top