35. காலம் கடந்த ரயில்!
(நேரிசை ஆசிரியப்பா)
’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
காலம் கடந்தும் ரயிலின்
ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.
அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
அணுகில் ஆடும் அசைபடம் என்றே
வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?
--ரமணி, 04/11/2015
*****