Tamil Brahmins
Page 4 of 4 FirstFirst 1234
Results 31 to 32 of 32
 1. #31
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  6,683
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  தினம் ஒரு திருப்பாவை
  பாசுரம் - 29
  கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்! #MargahiSpecial

  கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்த பரமாத்மாவுடன் ஜீவாத்மாவாகிய தான் ஐக்கியமாகிவிடவேண்டும் என்று விரும்பிய ஆண்டாள், அதற்காக புனிதமான மார்கழி மாதத்தில் நீராடி, திருப்பாவை பாடி கிருஷ்ணனை வழிபட விரும்புகிறாள். அவன் அருள் இருந்தால்தானே அவன் தாள் பணியமுடியும். மார்கழி நீராடி அவனைப் பணிய வேண்டுமானால், அவனும் தங்களுக்கு அருகில் இருந்தால்தானே முடியும்? எனவே கிருஷ்ணனையும் எழுப்பி தங்களுடன் யமுனைக்கு வருமாறு அழைக்கிறாள். அதற்கும் முன்பாக தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர்களும் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடலாகப் பாடி அவர்களை எழுப்பி தன்னுடன் அழைத்து வருகிறாள். நிறைவாக கிருஷ்ணனையும் எழுப்பி விட்டாள். கிருஷ்ணனும் அவர்களுக்கு அருள்புரிந்துவிட்டான். மேலும் தன்னை விரும்பி வணங்குவதன் காரணம் என்ன என்றும் கேட்கிறான். அதற்கு ஆண்டாள் சொல்கிறாள்:

  சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
  பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
  பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீ
  குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது,
  இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,
  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடு
  உற்றோமே யாவோம் உனக்கேநா மாட்செய்வோம்
  மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.


  விடிந்தும் விடியாத இந்தக் காலைப் பொழுதில் நாங்கள் உன்னை வந்து எழுப்பி, பொன்போல் பிரகாசிக்கும் உன்னுடைய திருவடிகளை எதற்குப் பணிந்து வணங்குகிறோம் தெரியுமா?


  கோகுலத்து பசுக்களை அவற்றின் பசி நீங்கும்வரை மேய்த்து, அதன் பிறகே உண்ணும் உயர்ந்த குணம் கொண்ட குலத்தில் பிறந்த நீ, எங்களை ஆட்கொள்ளவேண்டும். நாங்கள் உன் திருவடியில் இருந்து சதா காலமும் உன்னை பூஜித்துக் கொண்டு இருக்கவேண்டும்.


  இன்று மட்டும் நீ எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்பதற்காக நாங்கள் மார்கழி நீராடி உன்னை வழிபடவில்லை; என்றென்றும் ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன்னுடனே இருக்கவேண்டும்; உனக்கே நாங்கள் ஆட்படவேண்டும். இதைத் தவிர வேறு எந்த விருப்பமும் எங்களுக்கு இல்லை. அப்படி உன்னில் இருந்து மாறுபட்ட ஒன்றின்மேல் எங்கள் விருப்பம் சென்றால், அந்த விருப்பதைப் போக்கி, என்றும் உன்னிடமே எங்கள் மனம் லயித்திருக்கும்படிச் செய்யவேண்டும் என்று ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.
  கிருஷ்ணன் பரமாத்மா; பூமிதேவியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் ஜீவாத்மா. உலகத்தில் மனிதர்களாகப் பிறக்கும் நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள். நம்மை நம்முடைய புண்ணிய காரியங்களால் ஆட்கொண்டு, நமக்கு மீண்டும் பிறவாத வரம் அருளி, நம்மைத் தன்னுடனே சேர்த்துக்கொள்ளும் இறைவன் பரமாத்மா.

  அந்த பரமாத்மாதான் நாமெல்லாம் உய்யும்படி கிருஷ்ணனாக அவதரித்தார். நம்மையெல்லாம் இறைவனிடம் ஆற்றுப்படுத்த விரும்பி பூமிதேவி ஆண்டாளாக திருவில்லிபுத்தூரில் அவதரித்து, தன்னுடைய பாசுரங்களால் நம்மை பகவானிடம் ஆற்றுப்படுத்துகிறாள்.


  இப்படி ஆண்டாள் நமக்கு அருளிய இந்த திருப்பாவை பாசுரங்களை பக்தியுடன் பாராயணம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றியும் ஆண்டாள் திருப்பாவையின் நிறைவு பாசுரத்தில் அருளி இருக்கிறாள்.
  வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,
  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி,
  அங்கப் பறைகொண்ட வாற்றை, அணிபுதுவைப்
  பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன,
  சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே,
  இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்,
  செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்,
  எங்கும் திருவருள்பெற்று, இன்புறுவ ரெம்பாவாய்.


  திருப்பாற்கடலை அமுதம் வேண்டி கடைந்தபோது, பகவான் நாராயணன்தான் மந்தரமலையைத் தாங்கும் கூர்மமாக அவதரித்தார். அதனால்தான் பகவானை வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறாள். அறிவு பிரகாசிக்கும்படியான முகத்தை உடைய கோகுலத்து சிறுமியர்கள், கிருஷ்ணனாக அவதரித்த கிருஷ்ணனிடம் சென்று, அவன் திருவருளைப் பெறவேண்டி, திருவில்லிபுத்தூரில் பட்டர்பிரான் (பெரியாழ்வார்) மகளாக துளசி வனத்தில் தோன்றிய கோதை (ஆண்டாள்) சொன்ன இந்தத் தமிழ்மாலை முப்பதையும் நாள் தவறாமல் பாராயணம் செய்பவர்கள், செல்வத்தின் இருப்பிடமான திருமகளைத் தன் மார்பில் குடியிருக்கப் பெற்ற திருமாலின் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று இன்பமுடன் வாழ்வார்கள் என்கிறாள். தேனினும் இனிய பாசுரங்களால் பரந்தாமனின் புகழ் பாடி நம்மையும் பகவானிடத்தே ஆற்றுப்படுத்திய சுடர்க்கொடி ஆண்டாளின் திருவடிகளைப் பணிவோம்.
  -க.புவனேஸ்வரி

  நன்றி : சக்தி விகடன்

  Source: http://www.vikatan.com/news/spiritua...ional-hymn.art
 2. #32
  Join Date
  Oct 2013
  Location
  coimbatore
  Posts
  1,024
  Downloads
  49
  Uploads
  1

  1 Not allowed!
  nice sharing... thank you
  அரனே என்று தொழ
  அருமைகளை நிறைக்கும்
  அரனே! மனதில் உளனே !!
  அரணாய் அனைவரையும் கா !!
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 4 of 4 FirstFirst 1234

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •