• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

39 Unknown Facts about Manakula Vinayagar

மணக்குளவிநாயகர் பற்றிய தகவல்கள்

1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது.

2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

3. புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு. புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

4. 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

5. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின் , இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

6. 1923-ம் ஆண்டு வாக்கில் புதுவையில் அச்சுகாபி விருத்தினி என்ற பத்திரிகையை ஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு புதுச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.

புதுச்சேரியைச் சேர்ந்தபெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமிபொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.

பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த முண்டாசுக் கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார்.

மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படியெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலே யர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.

8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக் காரர்கள் என 5 வெளிநாட்ட வர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.

9. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.

11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்ம மரபினர், யாதவர்கள், சேனைத் தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்து இனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

14. கருவறையில் தொள்ளைக்காது சித்தர் அரூப முறையில் பூஜைகள் செய்வதாகக்கூறப்படுகிறது.

15. விநாயகர் இந்து மதக் கடவுளாக இருந்தாலும், சுற்றுவட்டார, வெளிநாட்டு கிருத்துவ, முஸ்லிம் பயணிகள் கூட அதிகளவில் இங்கே வருவது வழக்கம். மணக்குள விநாயகரின் அருள்பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

16. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.

17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ்பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.

18.மணக்குள விநாயகர் மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும்பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

19. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

21. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.

23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசம் 5 கிலோ தங்கத்தில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

26. கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை புவனேச கணபதி என்றும் சொல்கிறார்கள்.

27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

28. விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

29. உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.

30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.

33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.

34. மாதந்தோறும் சங்கடஹரசதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

36. திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.

38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.

39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

தரிசனம் நேரம்

காலை 5.45 முதல் 12.30 மணி வரை.

மாலை 4.00 முதல் 09,30 மணி வரை.

விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது.
 

Latest ads

Back
Top